Wednesday, June 2, 2010

பழைய புத்தகக்கதை

இந்த காலத்து அக்காக்கள் போல அல்ல, அந்த கால அக்காக்கள். வார பத்திரிக்கைகளை படித்துவிட்டு தூக்கி எறியாமல், தங்களுக்கு பிடித்த தொடர்கதையை, வார வாரம் புத்தகத்தில் இருந்து கிழித்து எடுத்து, சேர்த்து வைத்து விட்டு, முடிவில் இவர்களே எந்த பதிப்பகத்தின் துணையும் இல்லாமல் பைண்டிங் செய்து ஒரு நாவல் தயாரித்துவிடுவார்கள். இவர்கள் தொகுத்து வைத்த கதை நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, அந்த புத்தகத்தில் இருக்கும் துணுக்குகள், ஜோக்குகள், அரைகுறை பேட்டிகள், விளம்பரங்கள் போன்றவை பெரும் சுவாரஸ்யத்தை கொடுக்கும். அவ்வப்போது எடுத்து பார்வையை மேயவிட்டு விட்டு வைத்துவிடலாம்.

இது போல் தயாரித்த புத்தகத்தில், பல வருடங்களுக்கு முன்பு ‘உடல் உயிர் ஆனந்தி’ கதை படித்தது நினைவில் இருக்கிறது. பிறகு, நெடுங்காலத்திற்கு இம்மாதிரி புத்தகங்கள் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் ஒரு நண்பர், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்தை’ இப்படி கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பழைய புத்தகக்கடையில், தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தப்போது, சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’ கதை இந்த வடிவத்தில் கிடைத்தது. இந்த கதை கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், யாரோ உருவாக்கி வைத்திருந்த பொக்கிஷமாக இது கிடைத்தது அதைவிட பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆனந்த விகடனில் தற்போது பழைய படைப்புகளை ‘பொக்கிஷம்’ என்று வெளியிடுகிறார்கள் அல்லவா? அப்படியென்றால், இதுவும் பொக்கிஷம் தானே? இந்த பொக்கிஷத்தை தற்போதைய விகடனை விட குறைவான விலைக்கு வாங்கினேன்.



கதை - திரைத்துறையில் பணியாற்றும் சில மனிதர்களைப் பற்றியது. புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கீழே இருந்து சல்லேன்று மேலே செல்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள், ஒரு சீனில் தலைக்காட்டுவதற்கு கடக்கவேண்டிய சங்கடங்கள், நேர்மையான முயற்சிக்கு விளையும் முடிவு என செல்லுலாய்ட் உலகை கவனித்து சுஜாதா எழுதிய இந்த கதை வெளிவந்த ஆண்டு - 1979. சினிமா உருவாக்கத்தில் பணிபுரிபவர்களின் வெவ்வேறு பிரச்சினையை பேசுகிறது இக்கதை. நான் பிறப்பதற்கு முன்பே, இந்த கதை வந்துவிட்டாலும், தற்போது தான் வாசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால், பல படங்களில் இந்த களத்தை பார்த்துவிட்டதால், கதையில் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை.

இந்த கதைக்கான படங்களை ஜெயராஜ் வரைந்திருக்கிறார். என்ன சொல்லி வரைய சொன்னார்களோ? எல்லா வாரமுமே, ஓவியங்கள் ஒரு ’டைப்’பாகத்தான் இருக்கிறது. வெறும் படங்களை மட்டும் பார்த்தால், புஷ்பா தங்கதுரை எழுதிய கதைக்கு வரைந்து போல் இருக்கிறது. அந்த வார பகுதியில் ‘தூங்கினாள்’ என்று ஒரு வார்த்தை இருந்தால் போதும். ஏடாகூடமான பொஸிசனில் தூங்கினாற்போல் படம் வரைந்துக்கொடுத்திருக்கிறார் ஓவியர். சில இடங்களில் படத்தை பார்த்துவிட்டு வாசிக்கும்போது, இவர்களே படத்திற்கேற்ப எழுத்தாளரை ஒரிரு வாக்கியங்களை சேர்க்க சொல்லியிருப்பது போல் தோன்றியது.



சாதாரணமாகவே, விளம்பரங்களை விரும்புபவன் நான். அதாவது, விளம்பரங்களைப் பார்க்க பிடிக்கும்! அப்போது வந்த விளம்பரங்களில் இருந்த நிறுவனங்கள் பல இப்போது இல்லை. இருக்கும் நிறுவனங்கள் நிறைய மாற்றங்களுடன் இருக்கிறது. அன்று HMV நிறுவனம் 514 ரூபாய்க்கு ரெக்கார்டு ப்ளேயர் விற்றிருக்கிறது. இன்று ஸ்ரேயாவை வைத்து விளம்பரம் செய்யும் தூத்துக்குடி விவிடி எண்ணெய் நிறுவனம், அன்று யாரோ அடையாளம் தெரியாதவரை வைத்து விளம்பரம் செய்திருக்கிறது. நிறைய மாத்திரை விளம்பரங்கள் காணக்கிடைக்கிறது. சிவராஜ் வைத்தியசாலையின் சித்த வைத்திய மேதை தமிழகமெங்கும் போகும் சுற்றுப்பயணத்திட்ட விளம்பரம் அன்றும் இருந்திருக்கிறது. தற்போது, இவருடைய மகன் தந்தையின் பாதையில் செல்கிறார்.

வாரா வாரம் ’ரெட்டைவால் ரெங்குடு’, ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’, ’வீட்டு புரோக்கர் புண்ணியகோடி’, ’சிரிப்புத்திருடன் சிங்காரவேலு’ போன்ற கேரக்டர்களை வைத்து தனது கார்ட்டூன் மூலம் ஜோக்குகளை விளாசி தள்ளியிருக்கிறார் மதன். இந்த கேரக்டர்கள் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு தீம் வைத்து தனது கார்ட்டூனால் ஜோக்கடித்திருக்கிறார். இவருடைய ஜோக்குகள் வெறும் கார்ட்டூனாகவோ, அல்லது ஓரிரண்டு வரிகளுடன் வருகிறது. இரண்டையுமே சேர்த்து பார்த்தால் தான் புரிகிறது. சிரிப்பும் வருகிறது. உ.ராஜாஜி என்ற வாசகர் எழுதியிருந்த ஜோக்,

“லேடி டைப்பிஸ்டோட நான் திருப்பதிக்கு போன விஷயம் எப்படியோ ஹெட் கிளார்க்குக்கும் மானேஜருக்கும் தெரிஞ்சு போச்சு...!’

“ஐயையோ! அப்புறம்?”

“குடைஞ்சு எடுத்துட்டாங்க... எனக்கு எங்கே லட்டு... எனக்கு எங்கே லட்டுன்னு!”


அடுத்தது, துணுக்குக்களை பார்ப்போம். சாலவாக்கம் கே.சுந்தர் என்ற வாசகர் எழுதியிருந்த துணுக்கு.

”செங்கல்பட்டு அங்கமுத்து திரையரங்கத்தில் 1978-ம் ஆண்டு தீபாவளி அன்று தப்புத்தாளங்கள், தாய் மீது சத்தியம், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய 3 படங்கள் 2 காட்சிகள் வீதம் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. மறுபடி இந்த வருடப்பொங்கலை முன்னிட்டு 12-ந் தேதியிலிருந்து அவள் என் உயிர், ஆயிரம் வாசல் இதயம், பவுர்ணமி நிலவில் ஆகிய 3 படங்கள் ஒரே நாளில் 2 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டன. இது போல் வேறெங்காவது 3 திரைப்படங்கள் ஒரே தியேட்டரில் வெளியாகியிருக்கின்றனவா?”

இப்ப மூன்று படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவதே பெரிசு. இதில் ஒரு தியேட்டரில் என்பது ஓவரு. வேண்டுமானால், முப்பது தியேட்டரில் ஒரு படம் ரிலீஸாகும். இருந்தாலும் கே.சுந்தருக்கு அவர்களுக்கு தியேட்டர் பற்றி எழுதும் தொடரில் எனக்கு தெரிந்த பதிலை சொல்லுகிறேன்!

வாரப்பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் என்பதே காணாமல் போனபிறகு, இந்த காலத்து அக்காக்கள் எங்கு சென்று இப்படி கதை தொகுத்து புத்தகம் போட முடியும்? அவர்களும் சீரியல், ப்ளாக், பேஸ்புக் என்று பிஸியாகிவிட்டார்கள். எனக்கு சில சமயம் தோன்றும். ஏதேனும் கட்டுரை தொடரை, இப்படி தொகுத்து வைக்கலாம் என்று. பிறகு எப்படியும் இவர்களே தொகுத்து புத்தகம் போடுவார்கள், அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்று என்னுடைய சோம்பேறித்தனத்தால் விட்டுவிடுவேன். நானும் தொடர்ந்து விகடனோ, குமுதமோ வாங்குவதில்லை. தொடராக வரும்போது நினைத்து வைத்துக்கொண்டு, பிறகு புத்தகங்கள் வந்தபோது சிலவற்றை வாங்கியிருக்கிறேன். சில கட்டுரை தொடர்கள், பிடிஎப் வடிவத்திலும் எனக்கு கிடைத்துள்ளது. இருந்தாலும், பைண்டிங் செய்யப்பட்ட தொகுப்பு போல் வருமா?

குறைந்துக்கொண்டே செல்லும் இந்த பழக்கம், கூடிய விரைவில் காணாமல் போகக்கூடும். வளர்ந்து வரும் இணைய வசதிகள், அதற்கு ஆவண செய்யும்.

.

10 comments:

Unknown said...

என் மாமா ஒருத்தர் வார இதழ்களில் இப்படி சேகரித்து ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் வைத்திருந்தார்..

R Suresh said...

குமரன் ,இதே மாதிரி நான் சுஜாதா வின் ரத்தம் ஒரே நிறம் வாங்கினேன் .நீங்கள் சொன்னைதை போல விலை தற்போதைய விகடனை விட குறைவாய்.

அந்தப் புத்தகம் வெகு நாட்கள் கலித்து மறு பதிப்பு ஆனது,விலையும் மிக அதிகமாய் !

செ.சரவணக்குமார் said...

சூப்பர். மிக அருமையான பதிவு நண்பரே. வார இதழ்களில் வரும் தொடர்கதைகளை பைண்ட் செய்யும் பழைய அக்காக்கள் கண் முன் வந்து போகின்றனர். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை இப்போது படித்தாலும் அலுக்காது. துள்ளலான அவரது நடையும் நமக்குப் பிடித்தமான திரையுலகப் பின்புலமும் நிறைந்திருக்கும் அந்த நாவல் எனக்குப் பிடித்த ஒன்று.

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா.

ராமலக்ஷ்மி said...

நானும் அப்படி ஒரு அக்காதான்:)! எண்பதுகளில் வெளிவந்த பல தொடர்களை ‘கடை’யில் கொடுத்து பைண்ட் செய்து வைத்திருந்தேன்.

//’ரெட்டைவால் ரெங்குடு’, ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’, ’வீட்டு புரோக்கர் புண்ணியகோடி’, ’சிரிப்புத்திருடன் சிங்காரவேலு’//
இவர்களை மட்டுமே கொண்டே தொகுப்பும் உண்டு:)!

நல்ல பகிர்வு.

பழ. கார்த்தீஸ்வரன் said...

//ஒரு பழைய புத்தகக்கடையில், தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தப்போது, சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’ கதை இந்த வடிவத்தில் கிடைத்தது. இந்த கதை கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், யாரோ உருவாக்கி வைத்திருந்த பொக்கிஷமாக இது கிடைத்தது அதைவிட பெரிய மகிழ்ச்சியாக இருந்தது// அந்த காலத்து அக்காக்களை கண் முன் நிறுத்துகிறது உங்கள் பதிவு...

பகிர்வுக்கு மிக்க நன்றி !

சரவணகுமரன் said...

ஓ! உங்க மாமாவும் இப்படி தொகுத்திருக்கிறாரா, செந்தில்? கொடுத்து வைத்தவர் நீங்கள்.

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ்

சரவணகுமரன் said...

மிக்க நன்றி சரவணக்குமார்

சரவணகுமரன் said...

நன்றி ராமலக்ஷ்மி அக்கா :-)

சரவணகுமரன் said...

நன்றி பழ. கார்த்தீஸ்வரன்