Friday, July 8, 2011

தெலுங்கு சினிமா

ஒரு நண்பருடன் தினமும் காரில் அலுவலகம் செல்ல, அவர் போகும்போதும் வரும்போதும் தினமும் தெலுங்கு பாடல்களையே போட, எனக்கு அந்த நாட்களின் போது, தெலுங்கு சினிமாவே கதியானது. அந்த காரில் வரும் மற்ற நண்பர்களும், ஆந்திராக்காரர்கள். ஆந்திரா அரசியல் ரொம்ப டல்லாக செல்வதால், முழு பேச்சும் - சினிமாதான். இவர்களுடன் பேசி பேசி, தெலுங்கு சினிமா ரொம்ப நெருக்கமாகிவிட்டது.அவர் விரும்பி கேட்பது, மாடர்ன் இசையை. தேவி ஸ்ரீ பிரசாத், மணிசர்மா போன்றோர் படங்களில் பொதுவாக மாடர்ன் இசை தான் இருக்கும். அப்படியே ஏதேனும் கிராமிய வாடை கொஞ்சம் அடித்தாலும், பாட்டை மாற்றிவிடுவார்.

சமீப காலங்களில் தமன் பல தெலுங்கு படங்களில் இசை அமைத்து வருகிறார். தமிழில் இன்னமும் சின்ன படங்களுக்கே இசையமைத்து கொண்டிருப்பவர், தெலுங்கில் இசையமைப்பது எல்லாம் பெரிய பேனர்களுக்கு தான். இது எப்படி என்பது என் தெலுங்கு நண்பரின் சந்தேகம். ஒருவேளை கண்டசாலாவின் பேரனாக இருப்பதாலா என்று கேட்டுக்கொள்வார். ஆனால், எல்லா படங்களிலும் ஒரே மாதிரி இசையமைக்கிறார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

நாகர்ஜூனா நடித்த ரகடாவில், இந்த பாடல் எனக்கு பிடித்திருந்தது.இப்படி காரில் கேட்கும் பாடல் ஏதேனும் மனதில் இருந்தால், வீட்டில் வந்து வீடியோ பார்ப்பேன். மனைவி என்னை ஒரு மாதிரியாக பார்ப்பாள்.

நாகர்ஜூனாவின் பையன் நடித்த 100% லவ் படத்தில் வரும் இன்பக்சுவேஷன் பாடலும் என்னை கவர்ந்தது. அட்னன் சாமி பாடியது. தமிழ் படங்களில் உதித் நாராயண் பாடும் போது வரும் குற்றசாட்டுக்கள், தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியது அல்ல. ஆந்திராவிலும் உண்டு.இந்த பாடலில் அட்னன் சாமி தெலுங்கை கொலை செய்திருக்கிறார் என்றார் நண்பர். கேட்டு பாருங்கள். அவர் ஆங்கிலத்தையும் கொலை செய்வார் போலும். ப்ளஸ் என்பதை எப்படி சொல்கிறார்?

அதேப்போல், வாரிசுகளின் சினிமா ஆதிக்கம் அங்கேயும் அதிகம் தான் போலும். நாகர்ஜூனா மகன், சிரஞ்சீவி மகன் என்று அங்கேயும் அப்படிதான். மகதீரா என்ற ஹிட்டைக் கொடுத்த ராம் சரண், கமர்ஷியல் ரூட் மட்டுமே போதும் என்றில்லாமல், வேறு மாதிரியும் ட்ரை பண்ணுவோம் என்று பொம்மரில்லு பாஸ்கர் இயக்கிய ஆரஞ்ச் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படம் பப்படம். இந்த படத்தில் நடித்த ஜெனிலியாவைப் பற்றி சொல்லும்போதெல்லாம், நண்பருக்கு கோபத்தில் முகம் சிகப்பாகும்.

மகதீராவின் இயக்குனர் ராஜமௌலி தான், தற்போது தெலுங்கின் டாப் இயக்குனர். தொடர்ந்து எட்டு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறார். தற்போது, ஈ’யை ஹீரோவாகப் போட்டு ஈகா என்றொரு படம் எடுத்து வருகிறார். சண்டைக்காட்சிகளை எடுப்பதில் வல்லவர் என்றும், மணிரத்னம், ஷங்கர் போன்று ஒரு brand'ஆக உருவாகிவருகிறார் என்றும் நண்பர் சொன்னார்.

மகதீரா தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனப்பிறகு, அதன் நிலவரத்தைப்பற்றி கேட்பார். தெலுங்கு மீடியாவில் அப்படம் வெற்றிப்பெற்றுள்ளதாக வந்துள்ள செய்திகளை சொன்னார். சும்மா சொல்லுவாங்க என்றேன்.

அதன் பிறகு எனக்கு சந்தேகம் வந்தது. சில டப் செய்யப்பட்ட தமிழ்ப்படங்களும் தெலுங்கில் பெரும்வெற்றி என்பார்களே? உண்மைதானா என்று? கேட்டதற்கு உண்மை என்றே சொன்னார். ரஜினிக்கு பெரிய மாஸ் உண்டென்றார். கமல் ரசிகர்களும் இருக்கிறார்களாம். ஆனால் இந்தியனுக்கு பிறகு கமல் படம் எதுவும் தெலுங்கில் பெரிதாக ஓடவில்லை என்றார்.

தெலுங்கு பாடல்களைக் கேட்கும் போது, அவர் அந்தந்த படங்களைப் பற்றி சொல்வார். நிறைய படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கும். மற்ற மொழிகளிலும் ஆகியிருக்கும். தெலுங்கில் ரெடி படம் பிரம்மானந்தத்தின் காமெடியால் மட்டுமே ஓடியதாகவும், தமிழ் (உத்தமப்புத்திரன்), கன்னடம் (ராம்), ஹிந்தி (ரெடி) எதிலும் அப்படி ஒரு காமெடி நடிகர் இல்லாததால், எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றும் கூறினார். தொடர்ந்து, இப்படி கேட்க கேட்க, தெலுங்கு கதையாசிரியர்கள் தான் நன்றாக கதையெழுதுவார்களோ? என்றே தோன்றிவிட்டது. சில நாட்கள் கழித்து, அவருடைய போனை காரில் இணைக்க முடியாததால், என்னுடைய போனை இணைத்து, எனது மொபைலில் இருக்கும் தமிழ் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தோம்.

காரில் வரும் மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக, தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ்ப்படங்களின் பாடல்களாக போடுவேன். கஜினி, எந்திரன், சிங்கம், மன்மதன் அம்பு, ஈரம், ஆயிரத்தில் ஒருவன், பையா, விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன் என்று லிஸ்ட் ரொம்ப பெருசு. இப்ப, கிட்டத்தட்ட அனைத்து தமிழ்ப்படங்களும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுவிட்டதாக அவர்களுக்கு தோன்றிவிட்டது.

---

அப்புறம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட சிங்கம், இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அதன் ட்ரெய்லர் இங்கே. ஆக்‌ஷன் காட்சிகள், செம காட்டமாக வந்திருக்கிறது..