Friday, August 31, 2012

யுனிவர்சல் ஸ்டுடியோவில் ஒரு வாக்

சென்ற பதிவின் தொடர்ச்சி.

டால்பி தியேட்டரையும் மெழுகு மியூசியத்தையும் பார்த்துவிட்டு, யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு கிளம்பினோம்.

போகும் வழியிலேயே பாப்பாவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டோம். டிஸ்னிலேண்ட்டில் ஒவ்வொரு பார்க்கிங் தளத்திற்கும், ஒரு கார்ட்டூன் கேரக்டர் பெயர் வைத்திருந்தது போல், இங்கு யுனிவர்சலின் ப்டைப்புகளில் வரும் கேரக்டர் பெயர்களும், படப்பெயர்களும் வைத்திருக்கிறார்கள்.சிட்டி வாக் என்னும் ஷாப்பிங் ஏரியாவை கடந்து உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. இங்கே படம் பார்க்க தியேட்டர்களும் இருக்கின்றன.


இந்த சிட்டி வாக் ஏரியாவை கடந்து செல்லும் ஒரு இடத்தில், தரையில் இருந்து தண்ணீர் பீச்சியடிக்க, அதில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.ஒவ்வொரு முறை தண்ணீர் மேலெழும்பி வரும்போதும், அங்கிருந்த குழந்தைகளிடம் எழும் உற்சாகத்திற்கு அளவேயில்லை. பார்க்கும் நமக்கும் சலிப்பேயில்லை.இங்கே நிறைய உணவகங்கள் இருந்தாலும், அச்சமயம் எங்களுக்கு பசிக்கவில்லையென்பதால், உள்ளே நுழைந்துவிட்டோம்.யுனிவர்சல் ஸ்டுடியோஸ், அமெரிக்காவின் பழமையான சினிமா தயாரிப்பு நிறுவனம். பல பேர் கைமாறி தற்சமயம் என்பிசி வசம் இருக்கிறது, யுனிவர்சல் ஸ்டுடியோஸ்.

தீம் பார்க்குடனான இந்த ஸ்டுடியோ திறக்கப்பட்டது, 1964இல். இவர்கள் தயாரித்து பெரிய ஹிட்டான படங்களை மையமாக வைத்து,  இங்குள்ள விளையாட்டுகளை அமைத்துள்ளார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸை ‘எண்டர்டெயின்மெண்ட் கேபிடல் ஆப் வேல்ர்ட்’ என்று சொல்ல, யுனிவர்சல் ஸ்டுடியோஸை ‘எண்டர்டெயின்மெண்ட் கேபிடல் ஆப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிறார்கள்.

உள்ளே எக்கச்சக்க கூட்டம். ஒவ்வொரு இடத்திலும் வெயிட் செய்ய, எவ்வளவு நேரமாகும் என்பதை காட்டும் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே இருக்கின்றது. அதை பார்த்தால், இன்னும் கடுப்பாகும். 15, 30, 45 நிமிடங்கள் என்றிருக்கும்.மர்லின் மன்றோ மாதிரி இருக்கும் பெண்ணுடன் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள கியூ கட்டி நின்றார்கள்.

வெயிட்டிங் டைமே இல்லாதது, இந்த ஹாரர் ஹவுஸ் தான். லட்சணம் புரிந்திருக்குமே? மனைவி, குழந்தை வராமல், நான் மட்டும் உள்ளே சென்றேன்.நல்லவேளை, எனக்கு முன்னால் இரு ஜோடிகள் சென்றுக்கொண்டிருந்ததால், அவர்களை அப்படியே பாலோ செய்து போய்க்கொண்டிருந்தேன். நல்ல இருட்டு. தனியே சென்று இருந்தால், தடவி தடவி தான் போக வேண்டி இருந்திருக்கும்.

ஆங்கில பேய் படங்களில் வரும் அம்சங்கள் எல்லாம் இருந்தது. ஆங்காங்கே, கொடூரமான மேக்கப்பில் இருக்கும் ஆசாமிகள், கையைப் பிடித்து இழுக்க, உள்ளே கொஞ்சம் கிலியாக தான் இருந்தது.

தவிர, எனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஜோடிகள் கொஞ்சம் காமெடி செய்துக்கொண்டு வர, எனக்கு நல்ல என்டர்டெயின்மெண்டாக இருந்தது.

ஒரு அறையில் டம்மி பிணங்களை ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி தொங்கிவிட்டிருந்தார்கள். முன்னால் சென்றிருந்த ஆண், சட்டென்று அப்படி ஒரு டம்மி பொணத்தை கட்டிப்பிடிக்க, எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. வெளியே வரும் வரை, நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே வந்தேன்.

ஒரு செங்குத்தான உயர்ந்த அறையில், கோர முக மேக்கப்பில் ஒருவர் கையில் கோடாலியுடன், எல்லோரையும் விரட்டி விரட்டி வெட்ட வந்தார். அனைவரும் பயந்து ஓட, எங்களுக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஒரு இளம்பெண், அவரையே முறைத்து பார்க்க, அவரோ ஏதேதோ செய்து பயமுறுத்த முயன்றுக்கொண்டிருந்தார்.

ம்ஹும். அந்த பெண் அசரவேவில்லை. நடக்காமல் நின்று முறைக்க ஆரம்பித்துவிட்டார்.

கோர முக காரருக்கு என்ன செய்ய என்று தெரியாமல் உள்ளே சென்றார். சரிதான் என்று அந்த பெண் வெளியே நடக்க ஆரம்பித்தார். அதுதான் வெளியே செல்லும் வழி. திடீரென்று அந்த வழிக்கு பக்கத்தில் இருக்கும் சிறு கேப்பில் இருந்து கோரமுககாரர் வர, அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த இளைஞி பயத்தில் வெளியே ஓடினார். ‘தட் இஸ் ஏ குட் ஒன்’ என்றான் அவளுடன் வந்த இளைஞன்.


பிறகு, ஷ்ரெக் 4D என்றொரு ஷோ நடந்துக்கொண்டிருந்தது. ஒரு 3டி கண்ணாடி கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். அது ஒரு திரையரங்கம். திரையரங்கத்திற்கு உள்ளே விடுவதற்கு முன் ஸ்ரெக் முன்கதையை சொன்னார்கள். பிறகு, உள்ளே விட்டு படத்தைப் போட்டார்கள்.

ரெகுலரான 3டியுடன், உட்கார்ந்திருந்த சேரை ஆட்டி, முன்சீட்டின் பின்பக்கத்தில் இருந்து நம் முகத்தில் தண்ணீர் தெளித்து, நம் சீட்டின் மேற்பக்கத்தில் இருந்து காற்றடித்து, மேலிருக்கும் லைட்களை அவ்வப்போது போட்டு 4டி எபெக்ட் கொடுத்தார்கள்.

உதாரணத்திற்கு, படத்தில் வரும் ஒரு கேரக்டர் திரையில் துப்பினால், நம் முகத்தில் தண்ணீர் இருக்கும். திரையில் வண்டி ஓடினால், நமது சீட் ஆட தொடங்கும். யாராவது வேகமாக திரும்பினால், நமது கழுத்தில் காற்றடிக்கும். மின்னல் வெட்டினால், மேலே இருக்கும் விளக்கு பட்டென்று ஒளிர்ந்து, கண் கூச வைக்கும்.  இப்படி ஒரு அனுபவம் புதிதாக இருந்தது. படம் கொஞ்ச நேரம் தான். அதற்கு காத்திருந்த நேரம் தான் அதிகம்.

 
 வெயிலும் அதிகம் தான். நம்மூரில் கல்யாண வீட்டில் பன்னீர் தெளிக்க ஒரு மெஷின் வைத்திருப்பார்களே? அதேப்போல், குளிர்ந்த நீரை தெளிக்கும் ஃபேன்களை பல இடங்களில் வைத்திருந்தார்கள்.
 

 

 

 இங்கு வாட்டர் வேர்ல்ட், யுனிவர்சல் அனிமல் ஆக்டர்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

 

 
 அனிமல் ஆக்டர்ஸ் நிகழ்ச்சியில் எடுத்த சில வீடியோக்களை, அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

.
 

7 comments:

கிரி said...

//நல்லவேளை, எனக்கு முன்னால் இரு ஜோடிகள் சென்றுக்கொண்டிருந்ததால், அவர்களை அப்படியே பாலோ செய்து போய்க்கொண்டிருந்தேன். நல்ல இருட்டு. தனியே சென்று இருந்தால், தடவி தடவி தான் போக வேண்டி இருந்திருக்கும்.//

:-))

சரவணகுமரன் நீங்க தனியா வேற போனேன்னு சொல்றீங்க.. அங்கே போய் பயப்படுற மாதிரி நடித்து பக்கத்துல இருக்கிற ஃபிகரை கட்டிப்பிடிக்கலையே ;-)

//ம்ஹும். அந்த பெண் அசரவேவில்லை. நடக்காமல் நின்று முறைக்க ஆரம்பித்துவிட்டார். //

ஒருவேளை அவர் அந்தப்பெண் முகத்தைப் பார்த்து பயந்து விட்டாரோ!! :-))

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு முறை தண்ணீர் மேலெழும்பி வரும்போதும், அங்கிருந்த குழந்தைகளிடம் எழும் உற்சாகத்திற்கு அளவேயில்லை. பார்க்கும் நமக்கும் சலிப்பேயில்லை.

nice..

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும் பதிவும் அருமை...

(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... (Edit html and Remove Indli Widget) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

சரவணகுமரன் said...

கிரி,

இருட்டுல யார் ஆண், யார் பெண் என்றே தெரியவில்லை. நடிக்கிறேன்னு யாரையாவது கட்டிப்பிடிச்சு, அது உண்மையிலேயே எனக்கு பயத்தை ஏற்படுத்துவிட கூடாதே!!! :-)

சரவணகுமரன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி

சரவணகுமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

இண்ட்லி பட்டையை நிறுத்திவைத்துவிட்டேன். தகவலுக்கு நன்றி. :-)

Unknown said...

சார் உங்க ப்ளாக்குல ஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவும்,மறக்காமல் தெரிவிக்கவும்,இல்லையேல் தொடர்பு கொள்ளவும் ஈமெயில் மூலம்.

star9688@gmail.com