Sunday, October 7, 2012

வால்ட் டிஸ்னி இசையரங்கம்

பாதியில் நிற்கும் இந்த பதிவின் தொடர்ச்சி.

லாஸ் ஏஞ்சல்ஸ் பயணப்பதிவு தொடரை தொடர்ந்து வாசித்து வந்தவர்கள் மன்னிக்கவும்.

தொடர்ச்சியாக வேறு சில பயணங்கள் இருந்ததால், ஒரு பெரிய இடைவெளி.

டென்வரில் பனிக்காலம் தொடங்கிவிட்டது. இனி வெளியே செல்வது, மிகவும் சொற்பமாக தான் இருக்கும். அதனாலேயே, அனைத்து பயணங்களையும் எல்லோரும் பனிக்காலம் வருவதற்கு முன்பே முடித்துவிடுவார்கள். நாங்களும் அப்படியே.

சரி. லாஸ் ஏஞ்சல்ஸ் பயணத்தை தொடரலாம்.

---

மெஷின்கள், கணினிகள் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகிறது, முட்டாளாக்குகிறது என்பது அவை இல்லாவிட்டால் நமக்கு தெரிகிறது. கால்குலேட்டர் பக்கம் இல்லாவிட்டால், சின்ன கணக்கு போடக்கூட எப்படி சிரமப்படுகிறோம்?

அமெரிக்க வணிக கடைகளில் ஒரு விஷயத்தை நான் அடிக்கடி கவனிப்பேன். உதாரணத்திற்கு, ஒரு கடையில் 9 டாலர் 12 செண்ட்களுக்கு ஏதேனும் வாங்குகிறேன் என்றால், நான் பத்து டாலர் கொடுப்பேன். உடனே, கல்லாவில் இருப்பவர், கணினியில் வரவு பத்து என்று அடிக்க, அது மிச்சம் 88 செண்ட்கள் என்று காட்டும். நான் நம்மூரில் கொடுப்பது போல, சில சமயங்களில் பத்து டாலரும், 12 செண்ட்களும் கொடுப்பேன். ரவுண்டாக மீதி 1 டாலரை எதிர்பார்த்து. இப்படி நான் கொடுத்தால், அவ்வளவுதான். கடைக்காரரின் ரியாக்‌ஷனை பார்க்க வேண்டுமே? ஏன், இவன் இப்படி கொடுத்தான்? எதற்கு? என்று புரியாமல், அதை கணினியில் உள்ளீட்டு, பிறகே மீதி 1 டாலர் கொடுக்க வேண்டும் என்ற கணக்கு புரிந்து தருவார்கள். அந்தளவு கணினியை சார்ந்து இருக்கிறார்கள்.

எதற்கு இதை சொல்கிறேன் என்றால், நானும் ஜிபிஎஸ்ஸை எந்தளவு சார்ந்து இருக்கிறேன் என்பதை யுனிவர்சல் ஸ்டூடியோஸில் இருந்து திரும்பும் போது புரிந்துக்கொண்டேன்.

திடீரென்று ஜிபிஎஸ் செயலிழக்க, என்னால் கொஞ்சம் தூரம் கூட காரை செலுத்த முடியவில்லை. உடனே, வண்டியை ஓரங்கட்ட... எமர்ஜென்சி சமயம் மட்டுமே ரோட்டின் ஓரம் இங்கே வண்டியை நிறுத்தலாம்... என்பதால், அதற்கு அடுத்து வந்து எக்ஸிட் எடுத்து, ஒரு கடையோரம் நிறுத்தி, ஜிபிஎஸ்ஸை சரி செய்தேன். ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. எதற்கோ ஹேங்காகிவிட்டது. ஜஸ்ட், ரீ-ஸ்டார்ட் பிரச்சினை.

சைனா டவுண் செல்ல நேரமாகிவிட்டது. அங்கு தெருவே வெறிச்சோடி இருக்க, அங்கிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினோம். இரவு உணவுக்கு, பிஸ்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.

---

மறுநாள் காலை, நாங்கள் சென்ற இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதிக்கு. அங்கு இருக்கும் டிஸ்னி கன்சர்ட் ஹாலை, புகைப்படங்களில் பார்த்து அசந்துபோயிருக்கிறேன். அதனால், அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு சென்றேன்.

நகரின் மையப்பகுதியில் எது சாலை, எது கட்டிடம் என்றே தெரியாத வகையில் எல்லாம் மாறி மாறி வந்தது. பாதாளத்தில் இருக்கும் பார்க்கிங் தளங்கள் மட்டும் ஏழு.



இசைக்கச்சேரிகள் நடத்தப்படும் இந்த ஹால், வால்ட் டிஸ்னியின் மனைவி கொடுத்த நன்கொடையால் கட்ட தொடங்கப்பட்டது. ஸ்டீல் கொண்டு அமைத்தது போல் ஒரு ஸ்டைல். நாங்கள் சென்ற அன்று, உள்ளே அழைத்து சென்று காட்டப்படும் டூர் இல்லையென்பதால், உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.



வெளிப்புற அழகே, நிறைந்த திருப்தியை கொடுக்க, அப்படியே சாலையில் ஒரு வாக் சென்றோம். நகரின் மையப்பகுதி என்பதால், பெரிய பெரிய வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்து இருக்க, சாலையோ பெரியளவில் ட்ராபிக் நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்தது.



பக்கத்தில் இருந்த பூங்காவில், ஒரு பெரிய நீரூற்று இருந்தது. பக்கத்திலேயே ஒரு காபி ஷாப். அருகே இருந்த கட்டிடங்களில் வேலைப்பார்க்கும் பணியாளர்கள், இங்கே வந்து இளைப்பாறிக்கொண்டு இருந்தார்கள்.




பள்ளிக்கூடம் இருக்கும் தினத்தில், நாம் லீவ் போட்டு விட்டு, யாராவது ஸ்கூலுக்கு போவதை பார்க்கும்போது, ஒரு உணர்வு வருமே? அதேப்போன்ற ஒரு உணர்வு, அங்கிருந்தவர்களைப் பார்க்கும்போது எனக்கு தோன்றியது.







அந்த சாலையில் இருந்த ஒரு ஆபிரகாம் லிங்கன் சிலைக்கு பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். அந்த சிலையை படமெடுக்க நான் செல்ல, என்னை கண்ட அவர் அந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டார். பிறகு, நான் அங்கிருந்து நகர, அந்த சிலையை சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் ஏதோ எழுத தொடங்கினார். லிங்கனுடன் ஏதோ தொடர்புக்கொண்டது போல் இருந்தார்.



சிறிது நேரம், அங்கிருந்துவிட்டு, பிறகு சண்டா மோனிகா கடற்கரைக்கு கிளம்பினோம்.

.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் சிறிது நாட்களில் இங்கும் கணினி சார்ந்து இருக்கும் நிலைமை முழுமையாக வந்து விடலாம்...

வியக்க வைக்கும் படங்கள் + தகவல்கள்... நன்றி...

சரவணகுமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்