Friday, November 2, 2012

லேப்டாப் ஸ்க்ரீன் - சாண்டி

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு சுபயோக தினத்தில், என் மனைவி போன் பேசி விட்டு அதை திறந்திருந்த லேப்-டாப்பின் கீ-போர்ட் மீது வைத்து விட்டு, வேறு வேலையில் மூழ்க, எங்க வீட்டு பாப்பா ஏதோ அவளுக்கு இருக்கும் கொஞ்சுண்டு தெம்போடு, லேப்-டாப்பை கொஞ்சம் வேகமாக மூட, லேப்-டாப் ஸ்கிரீன் பணால். முதல் போணியே, நல்ல பெரிய போணிதான்.



மேலே எதுவும் தெரியவில்லை. ஆன் செய்தால், உள்ளே இருக்கும் எல்ஈடி ஸ்க்ரீன் க்ரக் விட்டிருப்பது தெரிந்தது. பாதிப்பு ஸ்க்ரீனுக்கு மட்டும் தான் என்று தெரிந்தது. அதை தவிர, இந்த லேப்டாப்பை வைத்து, நான் பார்க்கும் பல வெட்டி வேலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது!!!

என்ன செய்யலாம் என்று யோசித்து, இணையத்தில் விசாரித்ததில், பக்கத்திலேயே ஒரு சர்வீஸ் சென்டர் இருப்பது தெரிந்தது. நல்ல திறமையான ஆள் தான் என்று வாசித்த ரீவ்யூஸ்களும் சொல்லியது. சரி, அவரிடம் எடுத்து சென்று கேட்போம் என்று சென்றேன்.

லேப்டாப்பை கொடுத்துவிட்டு, இதை சரி செய்ய எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். லேபர் சார்ஜ் எவ்வளவு ஆகும் என்று வேண்டுமானாலும் சொல்கிறேன். எந்த ஸ்க்ரீன் இதற்கு சரிபடும் என்பதை திறந்துப் பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும் என்றார்.

சரி, லேபர் சார்ஜ் உங்களுக்கு எவ்வளவு என்று கேட்டதற்கு தொண்ணூறு டாலர் என்றார். எச்சில் முழுங்கிவிட்டு, இந்த ஸ்க்ரீன் குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டேன். HP ஒரிஜினல் இருநூறு, முன்னூறு ஆகும். அதைபோல் வேறு நிறுவன பாகம் என்றால், எண்பதில் இருந்து நூற்றியம்பது வரை இருக்கும் என்றார்.

கூட்டி கழித்து பார்த்ததில் இருநூறு டாலருக்கு குறைவில்லாமல் வேட்டு வைக்க ரெடியாக இருப்பது தெரிய வந்தது. அவரை சொல்லி குற்றம் இல்லை. இங்கு இப்படி தான். சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் கதைதான்.

சில நாட்களுக்கு முன்பு, இப்படி தான் இன்னொரு சம்பவம். நண்பர் ஒருவர் ஆன்லைனில் எது எங்கு எப்ப சீப்பாக கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் ஒரு வாட்சைக்காட்டி, இது 20 டாலர் தான். வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். நமக்கு அச்சமயம் அது தேவையாக இருந்ததால், வாங்கிவிட்டேன்.

பார்சல் வீடு வந்த பிறகு, கையில் போட்டு பார்க்கும் போது தான் தெரிந்தது. செயின் நீளமாக இருந்தது. எனது கைக்கு சரியாக இருக்க வேண்டுமானால், இரண்டு இணைப்புகளைக் கழட்ட வேண்டியிருந்தது.

நம்மூர் பக்கம் என்றால் மசூதி பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸிற்கு சென்றால், நிறைய வாட்ச் ரிப்பேர் பார்க்கும் கடைகள் இருக்கும். சரி செய்ய சொன்னால், 10 ரூபாய் கேட்பார்கள். இங்கே, 10 டாலர்கள் கேட்பார்களாம். பக்கமிருந்த ஒரு கடையில், நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தான் 15 டாலர் கொடுத்து இதுபோல் சரிசெய்திருந்தாராம்.

என்னடா, இது வம்பா போச்சே! என்று நினைத்துக்கொண்டேன். பின்ன, 20 டாலர் வாட்சிற்கு, 15 டாலர் செலவு செய்து ரிப்பேர் கூட இல்லை, செயினை சரி பண்ணுவதா என்று வேறு வழிமுறைகளை யோசித்தேன்.

இருக்கவே இருக்கிறது, யூ-ட்யூப் என்று அதில் இந்த வேலையை எப்படி செய்வது என்று பார்த்தேன். சின்ன குண்டு பின், கத்தி போன்றவற்றை வைத்தே, இதை சரி செய்ய வழிமுறைகள் சொல்லி நிறைய வீடியோக்கள் இருந்தன. நாலைந்து வீடியோக்கள் பார்த்து, நானே சரிசெய்துவிட்டேன். போலவே, நண்பர் அவருடைய காருக்கான லைட்டை யூட்யூப் வீடியோ பார்த்தே மாற்றினார்.

லேப்டாப்பிற்கு இது போல் ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்தேன். நான் அந்த லேப்டாப்பை வாங்கியது, சுமார் 500 டாலருக்கு. இப்ப, ரிப்பேர் செய்ய கேட்பது, சுமார் 200 டாலர். எனக்கு தெரிந்த ஒருவர் சமீபத்தில் தான், 350 டாலர் கொடுத்து, ஒரு நல்ல லேப்டாப் வாங்கியிருந்தார். 200 டாலருக்கு ரிப்பேர், 350 டாலருக்கு புது லேப்டாப் என்று ஒரு ’நீயா நானா’ உள்ளூக்குள் ஓடியது.

சரி, யூ-ட்யூப் பார்ப்போம் என்று பார்த்தால், இதே மாடல் லேப்டாப்பை திறந்து ஸ்க்ரீனை சரி செய்ய பல பேர் வழி சொல்லுகிறார்கள். லேப்டாப் கழுத்தில் கத்தியை வைக்க தைரியம் வந்தது.

இரண்டு மூன்று வீடியோக்கள் பார்த்துவிட்டு, அது போலவே ஸ்க்ரூக்களை கழட்டினேன். ஸ்க்ரீனையும் கழட்டி பார்க்க முடிந்தது. அந்த மாடல் எல்ஈடி ஸ்க்ரீனை, இணையத்தில் தேடினேன். நாற்பது-ஐம்பது டாலருக்கு கிடைத்தது. ஆன்லைனில் ஆர்டர் கொடுக்க, மூன்று நாட்களில் வீடு வந்து சேர, அதை லேப்டாப்பில் இணைக்க, இதோ லேப்டாப் ரெடி!!! ஒரு பதிவும் ரெடி!!!

நான் எழுதுவதற்கு இடையூறாக எத்தனை தடங்கல்கள்? அதையெல்லாம் முறியடித்து, அதை வைத்தே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

யூ-ட்யூப் புரட்சி வாழ்க!!! நூற்றியம்பது டாலரை தண்டம் அழாமல் காப்பாற்றியதற்கு யூ-ட்யூப்பிற்கு நன்றி. யாருப்பா அது? சிறு தொழில்களை, யூ-ட்யூப் அழிக்கிறது என்று போராட்டம் பண்றது?!!!

---

நியூயார்க் பக்கம் சுழற்றியடித்த சாண்டியால், நியூயார்க் பங்கு சந்தை இரு தினங்களாக மூடபட, அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் எனக்கு.

பங்குசந்தை சம்பந்தமான மென்பொருள் செயலிகளை பராமரித்து/மராமத்து செய்து வருவதால், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சினைகள். இதுவரை இந்த மாதிரி ஆனதே இல்லை என்பதால், புதிது புதிதாக சரித்திரத்தில் இதுவரை பாராத பிரச்சினைகள். அந்த லட்சணத்தில் செயல்பட்டன, அந்த செயலிகள்.

இரண்டு நாட்களாக நிறைய வேலை செய்தும், ஒரு கஸ்டமர் அனுப்பியிருந்த இரண்டு மியூச்சுவல் பண்ட் ஆர்டர்கள் எக்ஸ்சேஞ்ச் போய் சேரவில்லை. ஒருநாள் கழித்தே அனுப்ப முடிந்தது. ஆனாலும், அந்த கஸ்டமருக்கு மகிழ்ச்சி. அடுத்த நாள், மார்க்கெட் ஏறியிருந்தது. லாபம் என்பதால், கம்ப்ளையிண்ட் எதுவும் இல்லை. நாங்கள் தப்பித்தோம்.

 
.

5 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உண்மையயை சொன்னதற்கு மிகவும் நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Ponchandar said...

யுட்யூப் சொல்லிக் கொடுத்த படி நானே என்னுடைய HTC-ன் ஸ்க்ரீனை மாற்றினேன். ப்ளாக்பெரியின் ட்ராக்கிங் பாலை சுத்தம் செய்து மறுபடி மாட்டினேன். தரமான உபகரணங்கள் மட்டும் வேண்டும்..

கிரி said...

சரவணன் கலக்கிட்டீங்க.. நானும் YouTube பார்த்து லேப்டாப் க்கு செய்து இருக்கிறேன். :-)

இது மாதிரி எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவதால் தான்.. இவர்கள் விலையை உயர்த்தி விட்டார்களோ! :-)

அமுதா கிருஷ்ணா said...

வாட்சுக்கும்,லேப்-டாப்பிற்கும் தண்டம் அழுகாமல் அசத்திட்டீங்க.நெட்டால் நல்ல உபயோகம் தான்.

சேலம் தேவா said...

கூகிளாண்டவர் வாழ்க...யூட்யூப் வாழ்க...அந்த வீடியோக்களை தரவேற்றியவர்கள் வாழ்க..வாழ்க.. :)