Sunday, November 18, 2012

துப்பாக்கி

துப்பாக்கி, இங்கு நேற்று தான் வந்தது. இரண்டே காட்சிகள் தான். அது ஏனோ தெரியவில்லை. விஜய் படங்களின் திரையிடுகள், இங்கு அசிங்கப்படுகிறது. தீபாவளிக்கு வந்திருந்தால், கோவில், இனிப்பு, வடை, வெடி ஆகியவற்றுடன் இந்த படமும் சேர்ந்து என் தீபாவளி முழுமையடைந்திருக்கும்.

---




வெள்ளி இரவு ஒரு காட்சி, ஞாயிறு மதியம் ஒரு காட்சி என இரண்டே காட்சிகள். வீணாப்போன தாண்டவமே, இங்கு ஒரு வாரத்திற்கு மேல் திரையிட்டார்கள். மாற்றானும் அப்படியே. விஜய் படங்களுக்கு ஏன் இப்படி என்று தெரியவில்லை. டிஸ்ட்ரிப்யூட்டர்கள் அப்படி வாய்க்கிறார்களோ? தாண்டவத்தை யூ-டிவியும், மாற்றானை யூரோஸும் வெளியிட்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

---

ஒன்பது மணி காட்சிக்கு, எட்டேக்காலுக்கு கிளம்பி சென்றோம். எப்போதும் பர்ஸில் கார்ட் இருக்கும் என்பதால், பணம் எவ்வளவு இருக்கும் என்று கவனிப்பதேயில்லை. எல்லா இடங்களிலும், கார்ட் ஒத்துக்கொள்வார்கள் என்பதால். இங்கு சென்று பார்த்தால், ஒரு டேபிள் போட்டு, இரு தமிழர்கள் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள். டேபிளில் டிக்கெட் சுருள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கார்ட் கிடையாது, வெளியே இருக்கும் ஒரு கடையில் ஏடிஎம் இருக்கிறது, அங்கு சென்று பணம் எடுத்து வாங்க என்றார்கள். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள், உள்ளே செல்வதற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தார்கள். நான் சென்று எடுத்து வருவதற்குள், க்யூ வளர்ந்திருந்தது.

உள்ளே வேறு ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது போல. க்யூவில் சுமார் இருபது நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இப்படி ஒரு படத்திற்கும் இங்கு நின்றதில்லை. நேரம் ஆக, ஆக, கூட்டம் கூடியது. நல்ல கூட்டம்.

என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வேறு மாநில நண்பர்களும் வந்திருந்தார்கள். மாற்றான் போனபோது அதிர்ச்சி கொடுத்த அந்த தமிழ் பெண்ணும், ஒரு சின்ன பெண்ணுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

தியேட்டர் சுமார் தான். இங்கு தான், அவன் இவன் பார்த்தேன். இம்முறையும் சவுண்ட் அதிகம் வைக்கவில்லை. தியேட்டர் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விஜய், காஜல் அறிமுக காட்சிகளுக்கு நல்ல கைத்தட்டல். உடன் வந்த ஆந்திர நண்பருக்கு ஆச்சரியம். இப்படித்தான் எல்லா தமிழ்ப்படங்களுக்கும் இருக்குமா? என்று வினவினார். யோசித்துப்பார்த்தேன். சூர்யா படங்களுக்கு அப்படி ஒன்றும் கைத்தட்டல் இருந்ததில்லை. அஜித் படங்களுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்.

துப்பாக்கியில் பல காட்சிகளுக்கு, வசனங்களுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருந்தது.உதாரணத்திற்கு, ஐ யம் வெயிட்டிங்கை சொல்லலாம்.

படத்தில் வரும் ஸ்லீப்பர் செல்ஸ் போல சமூகத்தில் நிறைய அன்ட்டி-விஜய் பேன்ஸும் ஊடுருவிவிட்டார்கள். பொதுவாக பார்த்தோமானால், விஜய்யை நக்கல் அடிப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். நேற்று தியேட்டரிலும் அப்படித்தான். எங்களுக்கு பின்னாடி இருந்தவர்கள், ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எரிச்சலாக இருந்தது.

---

இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கம்மியே. இந்த வருட பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் தோல்வி, ஒரு காரணம். விஜய், முருகதாஸ் மேலான அவநம்பிக்கை, இன்னொரு காரணம். படத்தின் வெற்றிக்கு, இக்காரணங்களும் காரணமே.

முருகதாஸ் புத்திசாலித்தனமான காட்சிகள் அமைத்திருக்கிறார் என்று சொல்ல ஆசைத்தான். கொஞ்ச நாள் போகட்டும். இது எந்த இங்கிலிஷ் படம் என்று யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தால் சொல்கிறேன்.

காவலனுக்கு முன்பு வந்த ஐந்து விஜய் படங்களை, படம் வந்த போது, ஹிட் என்றார்கள். முடிவில், ஐந்தும் தோல்வி என்றார்கள். காவலன், வேலாயுதம், நண்பன் வந்த போது நிஜமாகவே நன்றாக இருந்ததாக சொன்னார்கள். முடிவில், ரிசல்ட் ஆவரெஜ் என்றார்கள். இது என்னவாகுமோ?

கூகிள் பாடல் என்னை பொறுத்தவரை ஹிட் சாங். தினமும் கேட்கும் பாடல். என்னுடன் அலுவலகம் வரும் மற்ற மொழி நண்பர்களுக்கும் பிடித்த பாடல்.

படம் எனக்கு பிடித்திருந்தது. க்ளைமாக்ஸ் தவிர. முருகதாஸ் படங்களில் ரமணா தவிர அனைத்து படங்களிலும், க்ளைமாக்ஸ் சுமார்தான். படங்களின் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சிகள் கொடுக்கும் விறுவிறுப்புக்கு, ஈடுக்கொடுக்க முடியாததாக இருக்கும். இதுவும் அப்படியே.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மற்றவர்கள் போல் வித்தியாச கோணங்களில் வித்தை காட்டாமல், காட்டப்படும் காட்சிகளில் டீடெயிங்கில் வித்தை காட்டியிருக்கிறார்.

ஹீரோவின் பணியை தவிர, வேறெதற்கும் சம்பந்தமில்லாமல், இறுதியில் போடும் டெடிக்கேஷனுக்கு ஏமாந்து திரையரங்கில் கைத்தட்டினார்கள். முருகதாஸ் நினைத்தது நடந்துவிட்டது. ஜாலியாக போய் ஹிந்தி படமெடுப்பார்.

விஜய்யின் ட்ராக் சேஞ்ச் முடிவு, நல்ல பலன்களை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் தொடர் வெற்றிகள் கொடுக்க வாழ்த்துக்கள்!!! படம் வெளிவரும் அன்று, இங்கு திரையிட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்.

---

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஒரு தீபாவளி நிகழ்ச்சியில் விஜய்யும், முருகதாஸும் கலந்துக்கொண்டார்கள். விஜய்யை பற்றி முருகதாஸுடன் கேட்டபோது, வழக்கம் போல் எல்லோரும் சொல்வதை சொன்னார். முடிவில் ஒரு பஞ்ச் வைத்தார்.

“விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். ஷாட் எடுக்கும் போது, வேறு மாதிரி, காட்சிக்கு ஏற்றாற்ப்போல் துள்ளலுடன் இருப்பார். எது பெர்ஃபார்மன்ஸ் என்றே தெரியாது.”

கடைசி வரியை சொன்ன போது, முருகதாஸை பார்த்து  விஜய் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார் பார்க்கணும். சூப்பர்...

 
.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செம ஹிட்....

ரசனையான விமர்சனம்...
tm1

vijayscsa said...

அருமை விமர்சனம்

USல் கூட ஆன்லைன் டிக்கெட் இல்லையா

சரவணகுமரன் said...

நன்றி தனபாலன்...

சரவணகுமரன் said...

இந்த படத்துக்கு டென்வர்ல இல்லை, விஜய்