Friday, April 13, 2012

என்ன செய்ய போகிறார் கலாநிதி மாறன்?

சுபாஷ் சந்திராவின் ஜீ டிவி தான், இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல். ஆரம்பத்தில் அவருடைய சானல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது, ஸ்டாரின் சாட்டிலைட்டில். ஸ்டார், அப்பொழுது ’மீடியா சாம்ராட்’ முர்டாக் வசம் இல்லை. முர்டாக் வசம் வந்த பின்பும், ஜீயும் ஸ்டாரும் ஒன்றாகவே சில காலம் இருந்தது.



ஹிந்திக்கு ஜீ, ஆங்கிலத்திற்கு ஸ்டார் என்ற ஒப்பந்தத்தை ஸ்டார் மீறிய காரணத்தால், இரு நிறுவனமும் பிரிந்தது. முட்டல் ஆரம்பித்தது, அதன் பின்பு தான்.

ஸ்டார் ஹிந்தி நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பல காலம் ஆகியும், ஜீ டிவியை விட பின் தங்கியே இருந்தது. ஜீ டிவியின் நிகழ்ச்சிகளே, டாப் டென் வரிசையில் வரிசை கட்டி நின்றது. எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கும் முர்டாக்கிற்கு இந்திய நிலையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆத்திர ஆத்திரமாக வந்தது.

அச்சமயம் ஒருமுறை அவர் இந்தியா வந்திருந்த போது, இந்திய ஸ்டாரில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமீர் நாயரும், பீட்டர் முக்ரஜா தயார் செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை முர்டாக்கிடம் போட்டு காட்டினார்கள்.

“Who wants to be a millionaire?" என்ற பெயரில் பிரிட்டன் போன்ற நாடுகளில் பிரபலமான நிகழ்ச்சியின் ஹிந்தி வடிவம் அது. ‘கௌன் பனேகா லக்பதி’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.

விளம்பரத்தை அமைதியாக பார்த்துவிட்டு, முர்டாக் கேட்டார்.

“ஒரு லட்சம் என்றால் எவ்வளவு?”

டாலரில் சொன்னார்கள்.

“கம்மியா இருக்குதே!”

“இல்லை... இந்தியாவில் ஒரு லட்சம் என்றால் பெருசுதான்” தயங்கிய படி சொன்னார்கள்.

“இருந்துட்டு போகட்டும். இன்னும் பெருசா... கேட்டா வாயை பொளக்குற மாதிரி அமௌண்ட கூட்டுங்க!”

“பத்து லட்சம்’ன்னு மாத்திரலாமா, சார்?” டவுட்டுடன் கேட்டார்கள்.

“பத்தாது. நூறு லட்சம். ஒரு கோடியா ஆக்கிடுங்க”

ஒரு கோடியா?!!!

கேட்டவர்கள் வாயை பிளந்தார்கள்.

“இது தான் வேண்டும். இது பற்றி கேள்விபடுகிறவர்கள், அனைவரும் இப்படிதான் ஆச்சரியத்தில் வாயை பிளக்கவேண்டும்” என்று திருப்தியுடன் சொல்லிவிட்டு கிளம்பினார் முர்டாக்.

ஹிந்தியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான தினம் முதல், ஸ்டாருக்கு ஏறுமுகம்.ஜீ டிவிக்கு இறங்கு முகம்.  பட படவென்று ஸ்டார் டிவி முன்னணிக்கு சென்றது. ஜீ படு பாதாளத்திற்கு சென்றது. இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்தே, அதன் இடைவெளியில் விளம்பரப்படுத்தப்பட்டு, பல ஸ்டார் டிவி நிகழ்ச்சிகள் பிரபலமானது.

பிறகு, ரொம்ப காலத்திற்கு பிறகு, பல வகை முயற்சிகளுக்கு பிறகு,பல நிறுவன மாற்றங்களுக்கு பிறகு, ஜீ தலை தூக்க ஆரம்பித்தது. அது என்ன, தற்போதைய நிலை என்ன என்பதையெல்லாம் தெரிந்துக்கொள்ள ஆர்வமிருந்தால் தேடி தெரிந்துக்கொள்ளவும். சுபாஷ் சந்திராவைப் பற்றி தெரிந்துக்கொள்ள, சொக்கன் எழுதிய “சுபாஷ் சந்திரா - ஜீரோவிலிருந்து ஜீ டிவி வரை” வாசித்து தெரிந்துக்கொள்ளவும்.

இதே போன்ற நிலை தான், தற்சமயம் தமிழ் சாட்டிலைட் சேனல் உலகிலும். கலாநிதி என்ன செய்ய போகிறார்?

.

Sunday, April 1, 2012

அல்வா வரலாறு


முன்பே சொன்னது போல், நான் பார்க்கும்/பார்க்க விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று, புதிய தலைமுறையின் ‘கொஞ்சம் சோறு... கொஞ்சம் வரலாறு...”.
---

நம்மை சுற்றியிருக்கும், அனைத்து விஷயங்களை பற்றிய வரலாறும் முக்கியமானது தான். நம்மை பற்றி, நம் குடும்பத்தை பற்றி, நம் கோவில்களை பற்றி, நம் ஊரைப் பற்றி, நம்மை ஆள்பவர்களை, அவர்களின் அரசியல் பற்றி என அனைத்து வகை வரலாறும் முக்கியம் தான்.

அந்த வகையில், நாம் உண்ணும் உணவைப் பற்றிய வரலாறும் முக்கியம் தான்.

இன்றைய நிகழ்ச்சி - திருநெல்வேலி அல்வாவின் வரலாற்றைப் பற்றியது.

---




அல்வா என்பது ஒரு முகலாய உணவு பண்டம். அது ஒரு அரேபிய பெயர். அரேபியில் அல்வா என்றால் இனிப்பு என்று அர்த்தம். நான் இங்கிருக்கும் அரபிய கடைகளில் அல்வா என்ற பெயரில் இனிப்பு வகைகளைப் பார்த்து, ஆசைப்பட்டு, வாங்கி, சாப்பிட்டு பார்த்து ஏமாந்திருக்கிறேன்.  அவுங்க ஐட்டம் என்றாலும், நம்மாளூங்க கை பக்குவமே தனி தான்.

முகலாயர்கள் ஆண்ட வடக்கில் இருந்து, அல்வா எப்படி தெற்கே திருநெல்வேலிக்கு வந்தது? அதற்கு சொக்கம்பட்டி ஜமீன் தான் காரணம். சொக்கம்பட்டி என்பது தற்சமயம் நெல்லைக்கு பக்கமிருக்கும் ஒரு கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஜமீன், ஒருமுறை வட இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு அல்வாவை சாப்பிட்டு, அதன் சுவைக்கு அடிமையாகி, அந்த ஊர் சமையல்காரரை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு சொக்கம்பட்டிக்கு வந்துவிட்டார்.

அந்த குடும்பம் தான், லாலா குடும்பம். நிஜமோ, பொய்யோ அவர்களின் பெயரில் தான், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இனிப்புக்கடைகளை பலர் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அல்வா செய்வதை காட்டினார்கள். கோதுமையை ஊறவைத்து, அரைத்து, அதில் பாலெடுத்து, அதைக்கொண்டு சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், நெய் சேர்ந்து அல்வா செய்யும் பக்குவம் இருக்கிறதே! அப்பப்பா... இப்படி கஷ்டப்பட்டு செய்யும் உணவு வகைகள் அனைத்தும் டக்கராக தான் இருக்கும்.

பிறகு, பேமஸ் இருட்டுகடையை காட்டினார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர், கூட்டத்தில் முண்டியடித்து சென்று அல்வா வாங்கி வந்து, சாப்பிட்டு காட்டினார்.

ம்ம்ம்ம்... ஆசையாகத்தான் இருக்கிறது!!! எங்கிட்டு போய் சாப்பிடுவது? செய்ற மாதிரி ஐட்டமாக இருந்தா கூட, செஞ்சு சாப்பிடலாம். இது மெகா மகா வேலை.

---

திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருப்பதாலோ, என்னவோ தூத்துக்குடியிலும் அல்வா நன்றாக தான் இருக்கும். சிறுவயதில் கடைதெருவுக்கு செல்லும் போது, எங்க ஊரு லாலா கடையில், ஐம்பது கிராம் அல்வா கேட்டால், சிறிதாக வெட்டிய ஒரு வாழையிலையில் வைத்து தருவார்கள். மக்கள், கையில் வாழையிலையுடன் கடை முன்பு நின்று சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். வாழையிலையுடன் சேர்ந்து அதில் ஒரு சுவை இருக்கும்.

சமீபகாலங்களில் அப்படி யாரையும் பார்க்க முடிவதில்லை.

நான் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு முறை ஊருக்கு வந்து திரும்பும் போது, அல்வா வாங்கி வருவேன். அது தொடர் பழக்கமாகி, நான் ஊர் திரும்பும் போது, எனது பையிற்காக பசங்க காத்திருப்பார்கள்.

வேலைக்கு சேர்ந்த பிறகு, அலுவலக நண்பர்களுக்காக, வாங்கி வருவேன். கூடவே, எங்கூர் மக்ரோனும்.

இங்கே வந்தபோதும் வாங்கி வந்தேன். பக்கத்து அப்பார்ட்மெண்ட் நண்பர், வேறு ஊர் சென்ற பிறகும், நான் ஊருக்கு செல்வது தெரிந்து, அல்வா வாங்கி Fedexஇல் அனுப்பிவிட சொன்னார்.

இப்படி பலருக்கும் அல்வா கொடுத்திருக்கிறேன். (தப்பா நினைச்சிக்காதீங்க!!!)


.