Sunday, January 20, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 3

அதிகாலையிலேயே கிளம்பியிருந்ததால், அதுவும் லைட்டாகத்தான் சாப்பிட்டு இருந்ததால், எல்லோரும் பசியாக இருந்தார்கள். கைவசம் சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்தாலும், வழியில் ஒரு உணவகத்தைப் பார்த்ததால், வண்டியை அங்கேயே போட்டோம்.

பெரிதாக ஒன்றும் இல்லை. சாலட் வாங்கினோம். ஜில்லென்று இருந்தது. ஒருவழியாக முடித்தோம்.

அங்கே சின்சியராக சாப்பிட்டுக்கொண்டிருந்த மூத்த தம்பதியினர்...


சாப்பிட்டு விட்டு கிளம்பிய வழியில் ’பைசன்’ என்றழைக்கப்படும் அமெரிக்க எருமை மாடுகளைப் பார்த்தோம். கூட்டமாக நின்று மேய்ந்துக்கொண்டிருந்தது. வண்டியை விட்டு இறங்கி, அருகே சென்று பார்த்தோம். பார்க்க சாதுவாகத்தான் இருந்தது. இருந்தாலும், புதுவகை மிருகத்தை முதல்முறையாக நேரில் பார்க்கும்போது, கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. எப்ப, என்ன பண்ணும் என்று யாருக்கு தெரியும்? ரொம்பவும் அருகே சென்றால் தாக்கும் என்றார்கள். அசைவதே டெரராக இருக்கும் போது, தாக்குதலா?


பயணத்தை மேலும் உள்ளே தொடர, தேடி வந்த ஊற்றுகள் ஒவ்வொன்றாக வந்தது.  தேங்கி கிடந்த தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது, நீர் குமிழிகளுடன். விதவித அளவுகளில் சுற்றும் முற்றும் அந்த வட்டாரம் எங்கும் கொதித்துக்கொண்டிருந்தது. சல்பர் வாடை தூக்கலாகவே இருந்ததால், குழந்தைகளை அருகே அழைத்து செல்லவில்லை.


1800களில் இந்த பகுதிகளில் பழங்குடியினர் மட்டுமே புழங்கினர். அமெரிக்கர்கள் நடமாட்டம் கிடையாது. வேட்டையாட செல்லும் சிலர், இது போன்ற ஊற்றுகளை கண்டு, வெளியே வந்து சொல்லும்போது, யாரும் எதையும் நம்பவில்லையாம்.

நினைத்துப் பாருங்கள்... இப்பவே நம்ப முடியவில்லை. குகை போல் சில இடத்தில் இருந்து புகை வருகிறது. களிமண் போன்ற இடங்கள் பொங்குகிறது. இப்பவாவது பரவாயில்லை. ஏதாவது அறிவியல் காரணங்கள் சொல்லுகிறார்கள். முழுமையாக புரியவில்லை என்றாலும் நம்பி தொலைக்க முடிகிறது. இப்படி தானே அறிவியல் படித்தோம்?


இருந்தாலும், எனக்குள்ளே ஒரு டவுட் இருந்துக்கொண்டே தான் இருந்தது. முதன்முறையாக நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்தபோது, நாசா வெளியிட்ட போட்டோக்களை, பல்வேறு காரணங்களை சொல்லி டகால்டி என்பார்களே? அதுபோல், இங்கேயும் சுற்றுலா வருமானத்திற்காக ஏதாவது டகால்டி வேலை செய்கிறார்களோ என்று எனக்குள்ளே டவுட். அப்படியெல்லாம் ஏமாற்ற மாட்டார்கள் என்று பிறகு எனக்கு நானே சமாதானம் செய்துக்கொண்டேன்!!! :-)


சில நேரம் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், தொடர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தால், கொஞ்சம் நேரத்திலேயே சலிப்பு ஏற்பட்டுவிட்டது. பார்த்துக்கொண்டிருப்பதே மட்டும் ஆச்சரியத்தை குறைப்பது இல்லை. எப்படி இது உருவாகிறது என்று தெரிந்துக்கொள்வதும் ஆச்சரியத்தைக்குறைத்து புரிந்துக்கொள்ள உதவும். முன்பே சொன்னது போல், இந்த நிலப்பரப்பின் கீழே உஷ்ணமான ஒரு எரிமலை உறங்கிக்கொண்டு இருக்கிறது. மேலே இருந்து பாறைகளின் இடைவெளி மூலம் உள்ளே செல்லும் நீர், உஷ்ணத்தால் சூடாகி, மேலே எழும்ப, அங்கே உருவாகும் அழுத்ததால், மேலும் வேகத்துடன் பீறிட்டுக்கொண்டு, பூமியின் மேற்பரப்பிற்கு வந்து சேர்கிறது. வரும் வழியில் மண் சேர்ந்துக்கொள்ள, சில இடங்களில் களிமண் கொதிக்கிறது.

அங்கு எடுத்த சில வீடியோக்கள். (முதல் வீடியோவில் சில பெர்சனல் வசனங்களை கட் செய்ய வேண்டி இருந்ததால், ஆங்காங்கே சத்தம் வராது)இவ்வகை இடங்கள் இயற்கை அதிசயம் மட்டுமே. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், இதை தாண்டி போகும் வழியெங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.


பிறகு, சில அருவிகளைப் பார்த்தோம். சில அருவிகளைப் பார்த்தோம் என்று சொல்வதற்கு பதில், ஒரு அருவியை வெவ்வேறு கோணங்களில் பார்த்தோம் என்று சொல்லலாம். அந்த பாயிண்ட், இந்த பாயிண்ட் என்று சொல்லி வெவ்வேறு இடங்களில் நின்று பார்த்தோம். சில இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டி இருந்ததால், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடக்க வேண்டி இருந்ததால், களைப்பால் அந்த இடங்களுக்கு செல்லும் எண்ணத்தை கழட்டி விட்டோம். பேச்சிலர் கும்பலாக இருந்தால், ஏறி குதித்து அங்கு இங்கு என்று சென்று இருக்கலாம்.


இந்த அருவிதான், யெல்லோஸ்டோனில் அதிகளவில் படமெடுக்கப்படும் லொக்கேஷனில் இரண்டாம் இடத்தில் இருப்பது. முதலிடத்தில் இருப்பதை வரப்போகும் பதிவுகளில் ஒன்றில் பார்ப்போம்.

இதையெல்லாம் பார்த்ததில் மதியம் மணி மூன்றாகிவிட்டது. போகும் வழியில் ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட இடவசதி செய்திருந்தார்கள். நிழல் உள்ளே விழாத அளவுக்கு, வளர்ந்த மரங்களால சூழப்பட்ட இடம். ஆங்காங்கே கரடி வரும் ஜாக்கிரதை என்று எழுதியிருந்தார்கள். கரடி வந்தால், அதற்கு உங்கள் உணவை கொடுக்காதீர்கள் என்று எழுதிவைத்து இருந்தார்கள். ’நாங்க ஏன்யா அதுக்கு கொடுக்க போறோம்?’ என்று நினைத்துக்கொண்டோம்.

இந்த வனாந்திர சூழலை, உள்ளே வரும் மனிதர்கள் கெடுத்து வைக்க கூடாது என்பதற்காக பல ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்கள். உதாரணத்திற்கு, இந்த உணவருந்தும் இடத்திற்கு பக்கத்தில் பெரிய இரும்பு கண்டெயினர்களை வைத்திருந்தார்கள். மிச்சமாகும் உணவு, சாப்பிட்ட ப்ளேட்டுகள், குடித்து முடித்த தண்ணீர் பாட்டில்களைப் போட்டு வைப்பதற்கு. மேல்பக்கமாக திறந்து டைட்டாக மூடும் வகையில் இந்த பெரிய குப்பைத்தொட்டிகள் இருந்தது. அதாவது காட்டு மிருகங்களால், திறக்க முடியாதபடி, உணவு வாசம் வெளியே வராதபடி.

அடுத்ததாக, மாலை நேரத்தில் மம்மொத் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் என்னும் இடத்திற்கு சென்று சேர்ந்தோம். வென்னீர் ஊற்றில் வெளியேறிய நீர் குளிரில் காய்ந்து, கால்சியமாக அடுக்காக ஒருவகை வெளீர் நிறத்தில் இருந்தது. முதலில் பார்த்தபோது, விஷால் நடித்த ’சத்யம்’ படத்தில் ’என் அன்பே’ பாடலில் நயன்தாரா ஆடும் இடம் போல் இருந்தது. ஆனால், அது அடுக்கடுக்காக இருக்கும் ஐஸ் என்று நினைக்கிறேன். இங்கு அதேப்போல் ஆனால் வெப்பத்தால் புகை வந்துக்கொண்டு இருந்தது. இந்த அடுக்குகளின் மேல் ஏறி நடந்து சென்று பார்ப்பதற்கு வசதியாக மரப்பலகைகளால் வழி ஏற்படுத்தி வைத்து இருந்தார்கள். ஒரு ரவுண்ட் சென்று வர ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால், திரும்பவும் களைப்பை நினைத்து அங்கிருந்தே பார்த்துவிட்டு கிளம்பினோம். குடும்பஸ்தனாலே எவ்வளவு கஷ்டம்ப்பா...!!!இந்த இடத்தின் சுற்றுவட்டாரம், ஒரு சின்ன அதேசமயம் செழிப்பான ஊர் போல இருந்தது. இங்கு இருக்கும் அலுவலகர்களுக்கான தொகுப்பு வீடுகள் இங்கே கட்டப்பட்டிருந்தன. இடமும் ரம்மியமாக இருந்தது. ஆங்காங்கே மான்கள் மேய்ந்துக்கொண்டிருக்க, இங்கே வசிப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டோம். அவர்கள் என்ன நினைத்து வாழ்கிறார்களோ?


இந்த இடம் வடக்கு நுழைவுவாயிலுக்கு அருகே உள்ளது. வடக்கு நுழைவுவாயில் இருப்பது, பக்கத்து மாநிலமான மொன்டானாவில். வாயிலின் அருகிலேயே இருக்கும் கார்டினர் என்னும் ஊரில் இரவு தங்குவதற்கு இரு வீடுகளை ஆன்லைனில் புக் செய்திருந்தோம். (குவிஸ் கேள்வி - கார்டினர் பக்கத்தில் நம்மூர் நடிகர் பெயரில் ஒரு ஊர் இருக்கிறது. யார் அந்த நடிகர்? பதில் - லிவிங்ஸ்டன்!!!)

இங்கிருந்து அந்த இடத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், சுடு நீரும், குளிர் நீரும் அந்த ஆற்றில் ஒரு இடத்தில் கலக்கிறது. அந்த இடத்தில் போய் நின்றோம் என்றால், நமது உடலில் ஒரு பக்கம் சுடும், இன்னொரு பக்கம் குளிரும். எப்பூடி?

இருட்டி விட்டதென்றால், நாங்கள் அங்கே குளிக்கவில்லை. நாங்கள் சென்ற அதேசமயம், அங்கு சென்ற, எங்களுக்கு தெரிந்த சில பேச்சிலர்கள் அதில் குளித்து வந்த அனுபவத்தை கூறினார்கள்.

கார்டினர் சென்று சேர இரவாகிவிட்டது. நாங்கள் புக் செய்திருந்த அறைகளைச் சென்று பார்த்தால், நான்கு குடும்பங்கள் அங்கு தங்குவதற்கு வசதியாக இல்லை. ரொம்ப பழையதாகவும் இருந்தது. அதனால், திரும்ப லாட்ஜ் தேட, நல்ல வேளையாக ஒரு இடத்தில் கிடைத்தது.

முன்பு அபார்ட்மெண்ட் வீடாக இருந்ததை விடுதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், ஒரு கிச்சன், ஹால் என்று இரு குடும்பங்கள் தங்குவதற்கு ரொம்ப வசதியாக இருந்தது. அன்றைய தினம் தங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகள் சொதப்பினாலும், ஏதோ நல்ல நேரத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்க, நிம்மதியுடன் தூங்கினோம். ஆன்லைனில் புக் செய்யும் போது, இனி கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவம் அந்த தினம் கிடைத்தது.

.

2 comments:

Ravanan said...

...///கரடி வந்தால், அதற்கு உங்கள் உணவை கொடுக்காதீர்கள் என்று எழுதிவைத்து இருந்தார்கள். ’நாங்க ஏன்யா அதுக்கு கொடுக்க போறோம்?’ என்று நினைத்துக்கொண்டோம்....///Super Boss

மாதேவி said...

அருவி பாய்ந்தோடுவது ரொம்ப அழகாக இருக்கின்றது.

பனி படர்ந்திருப்பதும் நன்றாக இருக்கின்றது.