Monday, January 7, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 2


முந்திய தினம் டென்வரில் இருந்து அதிகாலையிலேயே கிளம்பலாம் என்று ஒரு நண்பர் சொன்னார். ஆனால், அவரை தவிர நாங்கள் அனைவருமே கிளம்ப நேரமாகிவிட்டதால், அந்த நண்பருக்கு எங்கள் மீது கோபம். அவரை சமாதானப்படுத்தும்விதமாக, கோடி லாட்ஜில் இருந்து "காலையில சீக்கிரமே கிளம்புறோம்” என்று நைட்டே வாக்குறுதி கொடுத்துவிட்டு தூங்கியிருந்ததால், நான் காலையிலேயே எழுந்து உலாத்திக்கொண்டிருந்தேன்.

இங்கிருக்கும் லாட்ஜ்களில் காலை பிரெக்பாஸ்ட் இலவசம் என்று சொல்லி பிரெட், பன் போன்ற இனிப்பு வகையறாக்கள் கொடுப்பார்கள். எனக்கு காலங்கார்த்தால, இப்படி இனிப்பு சாப்பிடுவது பிடிக்காது என்றாலும், எதையாவது வயித்துக்கு கொடுக்கணும் என்பதால் மஃப்பின் என்னும் கப் கேக் சாப்பிட்டேன். அதற்கு முன் காபி. இந்த காபியும் அதை இங்கு போடுவதற்கு நான் படும் பாட்டையும் இன்னொரு சமயம் சொல்கிறேன்.அந்த லாட்ஜ், பழமையானது போல இருந்தது. காட்டுக்கு அருகே இருப்பதால், அந்த ஸ்டைலிலேயே வடிவமைத்து இருந்தார்கள். ஆங்காங்கே மான் தலை, கரடி தலை, மான் கொம்பு வைத்து கிலியை கிளப்பினார்கள். அவர்களுக்கு அது அழகுணர்ச்சி!!!ஆறு மணிக்கு கிளம்பிவிட்டோம். அப்போதே சூரியன் வெளிச்சத்துடன் வந்துவிட்டார். யெல்லோஸ்டோன் கிழக்கு நுழைவுவாயிலுக்கு அங்கிருந்து ஒரு மணி நேர பயணம்.போகும் வழியெங்கும் ரம்மியம். மலைகள், நீர்நிலைகள், வளைந்து செல்லும் சாலைகள், ஆங்காங்கே மலையை குடைந்து அமைத்திருந்த Tunnel வழிகள் என காலையிலேயே கண் கொள்ளா காட்சிகள். இதற்கு மேல் மலைகளுக்கு மேல் படர்ந்திருந்த மேகங்கள், கொள்ளை அழகு.கிழக்கு நுழைவுவாயிலை சென்று சேர்ந்த போது, மணி ஏழேகால் இருக்கும். நுழைவு கட்டணம், ஒரு காருக்கு இருபத்தைந்து டாலர்கள். ஒருமுறை வாங்கிவிட்டால் போதும். ஏழு நாட்களுக்கு இந்த வனத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் சுற்றிக்கொள்ளலாம்.இந்த கிழக்கு நுழைவுவாயில் போல, திசைக்கு ஒன்று என இன்னும் மூன்று நுழைவுவாயில்கள் இருக்கின்றது. கிழக்கு மற்றும் தெற்கு நுழைவுவாயில்கள், நாங்கள் இருக்கும் கொலராடோ மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான வயொமிங் மாநிலத்தில் இருக்கின்றது. மற்ற இரண்டு நுழைவுகளும் வேறு இரு மாநிலங்களில் இருக்கின்றது. இப்படி இந்த யெல்லோஸ்டோன் தேசியப்பூங்கா, மூன்று மாநிலங்களிடையே பரந்துவிரிந்து இருக்கிறது.நுழைவு வாயில் இருந்த சாலையில் பனி படர்ந்து, சூரிய ஒளியில் பட்டாசாக இருந்தது. ‘சிலு சிலு வென குளிர் அடிக்குது அடிக்குது’ என பாட தூண்டும் லொக்கேஷன். சில நிமிடங்களில், உள்ளே பயணப்பட தொடங்கினோம்.இந்த பூங்காவிற்குள் ஏரிகள், ஆறுகள், அருவிகள், மலை தொடர்கள், வென்னீர் நீரூற்றுகள் என வெரைட்டிக்கு குறைச்சலே இல்லை.முதலில் ஒரு சின்ன ஏரியைப் பார்த்தோம். அதற்கு பிறகு ஒரு பெரிய ஏரி. குளிர் பரவாயில்லை. விதவிதமாக போஸ் கொடுத்து, ஃபேஸ்புக்கிற்கு போட்டோ எடுத்துக்கொண்டோம்!!!இந்த ஏரியின் பெயர், யெல்லோஸ்டோன் ஏரி. இதற்கு தண்ணீர் வரும் ஆற்றின் பெயரும் யெல்லோஸ்டோனே. இந்த ஆறு கடந்து வரும் பள்ளத்தாக்கில் இருக்கும் மஞ்சள் நிறத்திலான பாறைகளே, இந்த பெயரை ஆறுக்கும், பிறகு ஏரிக்கும், மொத்தத்தில் இந்த பூங்காவிற்கும் சூட்ட காரணம். கடல் மட்டத்தில் இருந்து 2 கி.மீ.க்கு அதிக உயரத்தில் இருப்பதால், வட அமெரிக்காவிலேயே அதிக உயரத்தில் இருக்கும் ஏரி இது என்பது இதன் சிறப்பம்சம்.

யெல்லோஸ்டோனில் ஆச்சரியத்தைக்கொடுக்கும் விஷயம் - இங்கிருக்கும் வென்னீர் நீரூற்றுகள். உலகில் இருக்கும் வெந்நீர் நீரூற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு, இந்த தேசிய பூங்காவிற்குள் இருக்கிறது. இதை இயற்கை அதிசயம் எனலாம். ஏரி பக்கம் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பும் போது, நாங்கள் கண்டதை ஒரு மினி ட்ரெய்லர் எனலாம்.

ஏரியின் பக்கவாட்டில் இருந்து புகை வந்துக்கொண்டு இருந்தது. நம்மூர் என்றால் புரிந்துக்கொள்ளலாம். ஏதாவது குப்பையை எரித்துக்கொண்டு இருப்பார்கள் என்று. இது விசித்திர பூமி என்கிறார்களே!!! ஏதாவது வித்தியாசமாக இருக்குமோ என்று இறங்கி பார்த்தோம்.
புகை தொடர்ந்து அங்கே இங்கே என்று வந்துக்கொண்டிருந்தது. அருகே சென்றால், ஏதோ ரசாயன வாடை.

இந்த யெல்லோஸ்டோன் நிலப்பரப்பே, ஒரு பெரிய எரிமலை வெடிப்பின் விளைவு என்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு பெரிய எரிமலை இந்த பூங்காவின் அடியில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது, அது விடும் குறட்டை சத்தம் தான், மேலே சில அறிவியல் வித்தைகளைக் காட்டிக்கொண்டு இருக்கிறது.  அவ்வப்போது, அது உள்ளே அசைவது தான், மேலே சிறு நிலநடுக்கங்களாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. 6,40,000 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆட்டத்தை காட்டிவிட்டு, தூக்கத்திற்கு சென்ற இந்த ராட்சத எரிமலை, அதற்கு  பிறகு எழவில்லை. எழுந்தால், அடுத்த நாள் பாதி வட அமெரிக்கா இருக்காது என்கிறார்கள். உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது, இந்த யெல்லோஸ்டோன் எரிமலை. ஆனால், அதற்கு வாய்ப்புகள் ரொம்ப கம்மி என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது சரி, அவர்களிடம் கேட்டா எரிமலைகள் வேலை பார்க்கிறது?!!!

இப்படியெல்லாம் கிலி ஏற்படுத்தும் அம்சங்கள், இந்த மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும், வெளியே அது வேறொரு உலகம். கணினி, வேலை, ரிலீஸ், டெட்லைன், இஸ்யூ, பொல்யூசன், கரப்ஷன், பவர்கட், டெரரிஸ்டுகள், ரெப்பிஸ்ட்டுகள் என்று டென்ஷன் கொடுக்கும் உலகிற்கு நேரெதிர் உலகம்.  

பயணத்தை தொடருவோம்.

.

8 comments:

Anonymous said...

Nice.. And i had a question that if U r staying in USA the Continent should be North America.. Some areas U have been mentioned as South American Continent.. Which one is correct..?

சரவணகுமரன் said...

நன்றி அன்பு... திருத்திவிட்டேன்...

அமுதா கிருஷ்ணா said...

சான்சே இல்லை. இயற்கையின் அற்புதங்கள்.

Anonymous said...

Super photos..Enjoy brother...

எண்ணச்சிதறல்கள் said...

சுவாரசியமான பயணக்கட்டுரை சரவணகுமரன். படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.

வழக்கமா தமிழ்மணம் மற்றும் இண்ட்லி மூலமாத்தான் இங்க வருவேன். ரொம்ப நாளா திரட்டிகள் ல உங்க பதிவு எதுவும் தென்படல. எதாவது மிஸ் பண்ணிட்டமோன்னுதான் நேரா வந்தேன்.

நானும் ரொம்ப நாளா யெல்லோஸ்டோன் போகணும்னு நெனச்சுகிட்டு இருகேன். போக முடியல. உங்க கட்டுரை படிக்கவும் போகணும்னு ஆர்வம் அதிகமா ஆயிடுச்சு.

Unknown said...

சுவாரசியமான பயணக்கட்டுரை சரவணகுமரன். படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.

வழக்கமா தமிழ்மணம் மற்றும் இண்ட்லி மூலமாத்தான் இங்க வருவேன். ரொம்ப நாளா திரட்டிகள் ல உங்க பதிவு எதுவும் தென்படல. எதாவது மிஸ் பண்ணிட்டமோன்னுதான் நேரா வந்தேன்.

நானும் ரொம்ப நாளா யெல்லோஸ்டோன் போகணும்னு நெனச்சுகிட்டு இருகேன். போக முடியல. உங்க கட்டுரை படிக்கவும் போகணும்னு ஆர்வம் அதிகமா ஆயிடுச்சு.

Unknown said...

சுவாரசியமான பயணக்கட்டுரை சரவணகுமரன். படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.

வழக்கமா தமிழ்மணம் மற்றும் இண்ட்லி மூலமாத்தான் இங்க வருவேன். ரொம்ப நாளா திரட்டிகள் ல உங்க பதிவு எதுவும் தென்படல. எதாவது மிஸ் பண்ணிட்டமோன்னுதான் நேரா வந்தேன்.

நானும் ரொம்ப நாளா யெல்லோஸ்டோன் போகணும்னு நெனச்சுகிட்டு இருகேன். போக முடியல. உங்க கட்டுரை படிக்கவும் போகணும்னு ஆர்வம் அதிகமா ஆயிடுச்சு.

மாதேவி said...

ஏரிகளும் வானத்து அழகும் அள்ளிக்கொண்டே போகின்றது. சூப்பர்.