Saturday, October 11, 2014

பணியிடத்து ஃபன் - 2


டீம் பிரச்சினையை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். கரப்ட் (corrupt) ஆன பேக்கப்பை (backup) சரி செய்ய போராடிக்கொண்டிருந்தார்கள். இதை சரி செய்ய முடியாமல் போனால் என்ன செய்வது? என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். கூடவே வயிறு பசித்ததால், இந்த பிரச்சினையுடன் டின்னரை எப்படி ஹேண்டில் செய்வது என்றும் உப யோசனை.

எவ்வளவு நேரம் தான் போனிலும், லேப்டாப்பிலும் இருப்பது? அட, பிரச்சினையை தீர்க்க இது ரெண்டு மட்டும் தானே தேவை? நம்ம வீட்டுல இருந்தா என்ன? நண்பர் வீட்டுல இருந்தா என்ன? சட்டையை போட்டுக்கொண்டு கிளம்பினேன். மற்ற நண்பர்களையும் கிளம்பி வர சொல்லியாச்சு. அலுவலக இணைப்பில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நண்பர் வீட்டிற்கு கிளம்பினேன்(னோம்).

போகும் வழியில் இன்ஸ்டால் பிரச்சினையை சமாளிக்கும் வழிகள் யோசனைக்கு வந்தன.



டெஸ்ட் சூழலில் இருக்கும் வெர்ஷனையும் எடுத்து போட முடியாது. ஒவ்வொரு சூழலிலும் அப்ளிகேஷனை நிறுவும் போது (deploy), அச்கூழலுக்கேற்ப மென்பொருள் கட்டமைக்கப்படும் (configuration). உதாரணத்திற்கு, இங்கிருக்கும் அப்ளிகேஷன் பரிசோதனைக்கூட தரவுத்தளத்துடன் (test  database) இணைக்கப்பட்டிருக்கும். இதுபோலவே மற்ற இணைப்புகளும் இருக்கும். இந்த வெர்ஷனை எடுத்து ப்ரொடக்ஷனில் போட்டால், சரியாக வேலை செய்யப்போவதில்லை. சரி செய்ய முயற்சிக்கலாம். அவ்வளவு தலையை கெடுக்க கூடாது. படிப்பினை - சரியான பேக்கப் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நண்பர் வீட்டில் உணவு தயார். மராட்டிய நண்பர் அவர். மதுரைக்கு வாக்கப்பட்டு இருந்தார். அவருடைய மனைவி வளர்ந்தது எல்லாம், மதுரையில். சாம்பார், சிக்கன் குழம்பு, கேசரி என்று தயார் செய்து ரெடியாக இருந்தது. கிச்சனில், அவருடைய மனைவியார் ரவா தோசை வார்த்து சுட சுட வழங்கி கொண்டிருந்தார். ஏற்கனவே வந்திருந்த மற்ற நண்பர்கள், ஜோதியில் ஐக்கியமாகி இருந்தார்கள்.

அலுவலக பிரச்சினை இன்னமும் தீரவில்லை. என் யோசனை தொடர்ந்தது. Development சூழலில் இருந்து, திரும்பவும் அப்ளிகேஷனை உருவாக்கலாமா (application build)? அதாவது, இரு மாதங்களுக்கு முன்பு செய்து செயலை திரும்ப செய்வது.

மணி எட்டரை. அணியிடம் கருத்து கேட்டேன். இன்னொரு பிரச்சினையை சொன்னார்கள். அது என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு, அலுவலகத்தில் இருக்கும் கணிப்பொறிகளில் இயங்குதளத்தை மேம்படுத்தி இருந்தார்கள் (operating system upgrade). விண்டோஸ் எக்ஸ்பியில் இருந்து விண்டோஸ் 8க்கு. இது நடந்தது வெகு சமிபத்தில். அதே வாரத்தில். விண்டோஸ் எக்ஸ்பியில் build செய்ய முடிந்த அப்ளிகேஷனை விண்டோஸ் 8இல் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சினை என் காதுக்கும் வந்தது. அப்போது இது பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. எப்படியும் சரி செய்ய முடியும். மெதுவாக பிறகு அடுத்த வாரத்தில் சரி செய்யலாம் என்று இருந்துவிட்டோம். இப்போது அது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. படிப்பினை - எந்த பிரச்சினையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அந்தந்த பிரச்சினையை அவ்வப்போது தீர்த்துவிடவேண்டும்.

இந்த பிரச்சினையை எல்லாம் ஒரு பெரிய கை இருந்தால் சரி செய்து விடலாம். இப்போது இன்ஸ்டால் அணியில் இருப்பது எல்லாம் ஜூனியர்கள். Tech  lead ஆக இருப்பவர், அன்று வேறு ஏதோ வேலை இருப்பதால் போன்காலில் ஜாயின் பண்ணவில்லை. அவரை அழைத்து பார்த்தாலும், தொடர்பு கொள்ளமுடியவில்லை. இப்படியெல்லாம் பிரச்சினைகள் இதற்கு முன்பு வந்ததில்லை. படிப்பினை - இச்சமயங்களில் எக்ஸ்பர்ட், தொடர்பு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அனைவரும் சாப்பிட்டு முடிந்ததால், நானும் சாப்பிட உட்கார்ந்தேன்.

விண்டோஸ் 8 பிரச்சினையும் கடினமானதாக இருந்தது. இருந்தாலும், அணியினர் முயன்று கொண்டிருந்தார்கள். நான் தோசை சாப்பிட்டுக்கொண்டே, அடுத்த வழியை யோசித்துக்கொண்டிருந்தேன். இந்தியாவில் இருக்கும் அணியினரின் கணிப்பொறிகளில் இன்னமும் விண்டோஸ் எக்ஸ்பி தான். ஆனால் அவர்கள் அலுவலகம் வர இன்னும் நேரமாகும். இந்தியாவில், பூனேயில் எப்பவும் அலுவலகத்துக்கு சீக்கிரம் வரும் ஒரு பெண்ணிற்கு போன் செய்தேன். கிளம்பி கொண்டிருப்பதாக சொன்னார். வழக்கத்திற்கு முன்பு இன்னும் சீக்கிரமாக வருமாறு சொன்னேன்.

அந்த பெண் அலுவலகம் வந்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை வந்தது. இப்போது இன்ஸ்டாலை சோதிக்கும் பயனாளி, அலுவலகத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது. எவ்வளவு நேரம் தான் அவர் அலுவலகத்தில் இருப்பார்? பத்து மணிக்கு தான் கிளம்ப வேண்டும் என்று சொன்னார். அவர் கிளம்பி விட்டால், வேறு யார் இதை சோதிப்பது? அவர் சோதித்து ஒப்புதல் கொடுக்காவிட்டால், இந்த இன்ஸ்டால் முடியாது.

அதே சமயம், ஒரு முடிவான நேரம் இல்லாமல் அவரை அப்படியே காத்திருக்க வைக்கவும் முடியாது. சரி, ஒன்பதரை வரை பார்ப்போம். அந்த நேரத்து நிலையை பொறுத்து ஒரு முடிவு எடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த பிளானை எல்லாம் எனது இயக்குனருக்கு ஒரு போன் போட்டு சொன்னேன். அவரும் நம்பி வேறு வழியில்லாததால் ஒத்துக்கொண்டார்!!!

ஒன்பதரைக்கு முன்பே பூனே பெண் அலுலலகம் வந்தார். இந்தியாவில் மணி ஒன்பது ஆகவில்லை. மடமடவென build  செய்தார். அந்த வெர்ஷனை எங்களுக்கு அனுப்பினார். நாங்கள் அந்த வெர்ஷனை முதலில் பரிசோதனை சூழலில் சோதித்தோம். வெற்றி.

அடுத்ததாக ப்ரோடக்ஷனில் நிறுவினோம். அலுவலகத்தில் இருந்த பயனர் குழு உறுப்பினர் சோதிக்க தொடங்கினார். மணி பத்தை தாண்டியது. போன் லைன் அமைதியாக இருந்தது.  பத்து பத்துக்கு முடித்து எல்லாம் சரியாக இருப்பதாக சொன்னார். ஹையா!!! ஜாலி!!!!

கேசரி சாப்பிட்டுவிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு போனை வைத்தேன். அடுத்த நாள் அலுவலகத்தில் படிப்பினைகள் செயல் திட்டங்களாக உருவெடுத்தது.

.

No comments: