Wednesday, April 22, 2015

மியாமியில் கொஞ்சம் ஓய்வு


முந்தைய கென்னடி ஸ்பேஸ் செண்டர் பதிவின் தொடர்ச்சி.

கடந்த இரண்டு தினங்களாக, ரொம்ப திட்டமிட்டு, விரட்டி விரட்டி சென்றதால் நன்றாகவே டயர்ட் ஆகி இருந்தோம். அதனால் மியாமியில் எவ்வித டைட் பிளானும் இல்லாமல், சாவகாசமாக சுற்றலாம் என்று ப்ளான் செய்திருந்தோம். அதாவது, ப்ளான் வேண்டாம் என்று ஒரு ப்ளான்!!

மியாமி என்றாலே நீலநிற கடல் பரப்பும், வெளீர் மணல் பரப்பும் கொண்ட பீச் தானே மன பிம்பத்தில் வரும்? அதனால், அச்சூழலை அனுபவிப்பது மட்டும் தான், முதல் குறிக்கோளாக இருந்தது. அது என்னமோ, கடல் என்றாலே ஒரு நெருக்கம் வந்துவிடுகிறது.காலையில் போர்ட் லாடெர்டெயில் ஹோட்டலில் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடும்போது பார்த்தவரை, அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரும் தாத்தா-பாட்டிகளே. பேகலும் ஜூஸும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். வெளியில் மழை பொழிய தொடங்கியிருந்தது.

போகும் வழியெங்கும் மழை அதிகரித்திருந்தது. ஐயய்யோ! இன்றைய ப்ளான் சொதப்பல்ஸா என்று நினைத்துக்கொண்டே, மியாமி பீச்சை நெருங்கும் போது, அங்கே மழையே இல்லை. ஆனால், எப்போது வேண்டுமானால் பெய்ய தொடங்கும் போல் இருந்தது.எங்களை கடலையோட்டிய பெரும் உயர கட்டிடங்கள் வரவேற்றது. நாங்கள் முதலில் செல்ல நினைத்தது - சவுத் பீச். அது நகரத்தை ஒட்டி இருக்கும் தீவு.  சில பாலங்களைக் கொண்டு நகரத்தின் நிலபரப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. சில பெரிய க்ரூஸ் கப்பல்களை போகும் வழியில் காண முடிந்தது.
ஆர்ட் டெகொ எனப்படும் கட்டிடக்கலையில் உருவான கட்டிடங்களை, மியாமியில் பெருமளவில் காணலாம் என்று கேள்விப்பட்டிருந்ததால், அவ்வகை கட்டிடங்களை இருக்கும் பக்கம் காரில் சென்றோம். சிறு சிறு சாலைகளே. மக்கள் நடந்தும், சைக்கிளிலும் பேசி சிரித்து சென்றுக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கோ இருந்து வந்தவர்கள், இவ்வூரில் தங்கள் கதையை பேசி காற்றில் கரைத்துக்கொண்டிருந்தார்கள்.ஓசன் ட்ரைவ் என்னும் சாலையில் நுழைந்திருந்தோம். சாலையோர பார்க்கிங் அனைத்தும் புல். ஒரு பக்கத்தில் வரிசையாக ரெஸ்டாரண்டுகள். வாசலுக்கு வெளியே, குடைகள் அமைக்கப்பட்டு, சாலையோரத்தில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு, மறுபக்கம் இருக்கும் கடலை பார்த்துக்கொண்டும், கடல் காற்றை சுவாசித்துக்கொண்டும் சாப்பிடுவதற்கு ஏதுவான அமைப்பு.

பக்கத்திலேயே ஒரு சிறு சந்தில் நுழைய, அங்கிருக்கும் அரசாங்க பார்க்கிங் கட்டிடம் கண்ணில் பட்டது. முதலாம் தளத்தில் பார்க்கிங் செய்து விட்டு, ஓசன் ட்ரைவ் சாலையோர உணவகங்கள் ஊடே நடந்தோம். நடப்போர்க்கு இருபக்கமும் உணவகத்தில் உண்பவர்கள். அவர்கள் ப்ளேட்டைப் பார்ப்பது டீசண்ட் இல்லையென்றாலும், உள்ளூர் கலாசாரத்தைக் காண இதைவிட சிறந்த வழியில்லையே!!! பெரிய பெரிய கோப்பைகளில் எலுமிச்சை மிதந்த தண்ணீர் போல் காட்சியளித்த திரவம், வோட்காவாக இருக்கலாம். அது பொதுவான அம்சமாக இருந்தது.


சாலைக்கு மறுபுறம் சென்று, கடற்கரைக்குள் நுழைந்தோம். கடலில் இறங்கி, சிறிது நேரம் காலை நனைத்தோம். என் பெண் உடையை மாற்றிக்கொண்டு, உள்ளே இறங்கி, முழுவதுமாக நனைந்திருந்தாள்.


அவ்வளவு கூட்டமில்லை. கடற்கரையில் தரையிலும் படுத்து, சூரிய குளியல் எடுக்கலாம். அங்கு போடப்பட்டிருந்த மர சாய்வு நாற்காலி+படுக்கையிலும் படுத்து அதை அனுபவிக்கலாம். சிலவற்றை மட்டும் விட்டு விட்டு, ஓரிரண்டு பேர்கள்  அந்த படுக்கைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு, பக்கமிருந்த குழந்தைகளுக்கான விளையாட்டுகள் கொண்ட பூங்காவில் சிறிது நேரம் செலவிட்டோம். கடலில் குளித்துவிட்டு வருபவர்கள் குளிக்க, அங்கு திறந்தவெளி ஷவர்கள் அமைக்கப்பட்டு இருந்தது.அருகே இருந்த ஒரு ரெஸ்டாரண்ட்டில், அவ்வப்போது ஒரு இசை கலைஞர் ட்ரம்ஸ் இசையமைக்க, கூட்டம் எல்லாப்பக்கமும் இருந்து கூடியது. உண்மையிலேயே, ஆட்டம் போட வைக்கும் இசை. கேளிக்கை வாழ்வு, ரசனையுடன்.மதியம் ஆகியிருக்க, பசியெடுக்க ஆரம்பித்தது. இவ்வளவு ரெஸ்டாரண்டுகள் இருக்க, எதற்கு செல்லலாம் என்ற யோசனை வந்தது. மொபைலில் ட் ரிப் அட்வைசரில் அட்வைஸ் கேட்டதற்கு, 'விசா-ஓ1 எக்ஸ்ட்ரா ஆர்ட்னரி பிட்ஸா' என்று ஒரு கடையை பரிந்துரைத்தது. நாங்க நின்ற இடத்தில் இருந்து ஒரு மைல் தூரம் இருக்கும். சரி, ஊரை சுற்றி பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று கதை பேசிக்கொண்டு கிளம்பினோம்.

கிட்டத்தட்ட கடைக்கு அருகே வந்துவிட்டோம் என்று மொபைல் சொல்லியது. ஆனால், கடை கண்ணில் படவில்லை. சுற்றி சுற்றி வந்தோம். அட்ரஸில் கொடுத்திருந்த எண் குறிப்பிடப்பட்டிருந்த கட்டிடத்திற்கு முன்புதான் நின்றுக்கொண்டிருந்தோம். ஆனால், அப்படி ஒரு பிட்ஸா கடை இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. ஒருவேளை, கடையை காலி செய்து சென்றிருப்பார்களே? நல்லவிதமாக போட்டிருக்கிறதே! ஒருவேளை, முன்னேறி வேறு இடத்தில் பெரிய கடை போட்டிருப்பார்களோ? என் யோசனை இப்படி. மனைவி முறைத்துக்கொண்டிருக்கிறாள். பசி.

எங்களுக்கு பக்கத்திலேயே இன்னொரு பெண்ணும் அவருடைய பெண்ணும் எங்களைப் போலவே எதையோ தேடுவது போல் இருந்தது.

சரி, கடை பெயர் இல்லாவிட்டாலும், ஒகே, அந்த கட்டிடத்திற்குள் சென்று பார்க்கலாம் என்று நுழைந்தோம். உள்ளே அக்ஸஸ் கார்டு மூலம் அனுமதிக்கும் கண்ணாடி கதவு இருந்தது. ஏதோ ஆபிஸ் பில்டிங் போல. கதவுக்கு பக்கத்திலேயே ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தார். எங்களை தயக்கத்துடன் இருப்பது கண்டு 'பிட்ஸா?' என்றார். நாங்களும் எஸ் என்று தலையை அசைக்க, கதவை திறந்து உள்ளே வழிக்காட்டினார். எங்களைத் தொடர்ந்து அந்த இன்னொரு குடும்பமும் உள்ளே வந்தது.

அது வெகு சிறிய கடை. மொத்தம் ஆறோ எட்டோ சிறு டேபிள்கள். ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது நான்கு சின்ன சேர்கள். ஆனால், கடை முழுவதும் நிரம்பியிருந்தது. மொத்தம் நான்கு பேர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். பட்டப்படிப்பு படித்து, ஏதோ பேஷனில் பிட்ஸா கடை வைத்தது போல இருந்தார்கள்.

10 நிமிடங்கள் வெளியே காத்திருக்க சொன்னார்கள். உட்காரக்கூட வெளியே சேர் இல்லை. நின்றுக்கொண்டு இருந்தோம்.

எங்களுடன் உள்ளே வந்த பெண், சாப்பிட்டு விட்டு வெளியே வந்த ஒரு பெண்ணிடம், சுவைப் பற்றி கேட்டார். அவர் புகழ்ந்துவிட்டு சென்றார். காத்துக்கொண்டு நிற்பது, பெரிதாக தெரியவில்லை.

கிட்டத்தட்ட, அனைவரும் ஆன்லைன் ரிவ்யூஸ் மூலமாகவே வந்திருப்பது தெரிந்தது. இணையம் மூலம் திறமைக்கு கிடைக்கும் பலன் - கண்கூடாக தெரிந்தது.

உள்ளே அழைத்தார்கள். கல்லாவில் இருக்கும் பெண் தான், சர்வ் செய்வதும். சமையலறையில் மூன்று பேர்கள். முன்பு சாப்பிட்டு விட்டு, புகழ்ந்து சென்ற பெண், ஸ்டார் பிட்ஸா என்றொரு வகையை பரிந்துரைத்துவிட்டு சென்றிருந்தார். அதையே ஆர்டர் செய்தோம். விலையும் குறைவும் இல்லை. அதிகமும் இல்லை.இரண்டு மீடியம் சைஸ் இருவகை பிட்ஸாக்கள் ஆர்டர் செய்திருந்தோம். இரண்டுமே நல்ல சுவை. சீக்கிரமே காலியானது.

வெளியே வரும் போது, தேடியலைந்து இன்னும் சிலர் உள்ளே நுழைந்தார்கள்.

அடுத்ததாக சென்றது, கொஞ்சம் பக்கத்தில் இருந்த, கொலோகாஸ்ட் (holocaust) நினைவு சின்னம்.

கொலோகாஸ்ட் என்பது ஜெர்மனியில் நாஜிக்களால் பல லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட இனப் படுகொலை நிகழ்வைக் குறிப்பதாகும். சரி, அதற்கான நினைவு சின்னம் எதற்கு மியாமியில்? ஜாலி பண்ண உலகம் முழுக்க இருந்து வரும் இடத்தில் எதற்கு சோக மண்டபம் என்ற கேள்வியும் எதிர்ப்பும் இவ்விடம் உருவாக எழுந்த முயற்சியின் போதே கிளம்பியது. இதற்கான ஏற்பாட்டை தொடங்கிய, இனப்படுகொலை நிகழ்வில் இருந்த தப்பியவர்கள், அந்த கேள்வியை தான் பதிலாக சொன்னார்கள். அவ்வாறு தப்பிவந்தவர்கள், அதிகம் வசிப்பது இந்த மாகாணப்பகுதி என்பது இன்னொரு காரணம்.அவ்வளவு கொண்டாட்ட மனநிலையையும், ஒரு நிமிடத்தில் மாற்றிவிடும் வல்லமைக்கொண்டது இந்த இடம். தண்ணீருக்கு மத்தியில், ஒரு பிரமாண்ட கை. அந்த கையெங்கும் தப்பிக்க உதவி கேட்கும் கேட்கும் மனிதர்கள். கிட்டே சென்றால், உள்ளே நிறைய பரிதாப உருவங்கள். மனதை நடுங்க வைக்கும் இசை பின்னணியில். சுவரெங்கும் அந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மனிதர்களின் பெயர்கள். வரலாற்றைப் படிக்கும் விருப்பம் இல்லாதவர்களுக்கும், இம்மாதிரி நினைவு சின்னங்கள் தான் வரலாற்றின் கொடூர பக்கத்தை தெரியப்படுத்துவதாகவும், நினைவுப்படுத்துவதாகவும் இருக்கிறது. சொற்பமானவர்களே, இவ்விடத்திற்கு வருகிறார்கள்.பக்கத்திலேயே ஒரு சின்ன பொட்டானிகல் கார்டன் இருக்கிறது. ஆனாலும், நாங்கள் செல்லவில்லை. மெதுவாக நடந்து, பக்கத்தில் இருக்கும் லிங்கன் சாலைக்கு சென்றோம். அது அங்கிருக்கும் பிரபல கடைத்தெரு. நிறைய ரெஸ்டாரெண்டுகள் இங்கும் வழியெங்கும். ஒரு மிட்டாய்கடையில் விதவிதமாக கிடைத்த பல வகை இனிப்பு வகைகளை வாங்கினோம். பிறகு, நினைவு பொருட்களாக சில டீ-சர்ட்கள், காந்த நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பீச்சிற்கு சென்றோம்.
நல்ல காற்று. அவ்வளவாக கூட்டம் இல்லை. பேசிக்கொண்டு மெதுவாக நடந்தோம். பட்டாணி, சுண்டல் இல்லாததது பெருங்குறையாக இருந்தது!!இருட்டத் தொடங்கவே அங்கிருந்து கிளம்பினோம்.

ப்ளோரிடா, கியூபாவிற்கு ரொம்ப பக்கம் என்பதால், இங்கு கியூபாவில் இருந்து வந்த மக்கள் அதிகம். அந்த காரணத்தினால், இங்கு கியூப உணவு அதிகம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அடுத்ததாக இரவு உணவிற்கு ஒரு கியூப உணவகத்திற்கு செல்ல கிளம்பினோம். அது பற்றி அடுத்த பதிவில்.

போவதற்கு முன்...

மியாமியில் மட்டுமே சுற்ற, சில நாட்களை ஒதுக்கலாம். எனக்கு ஒர்லாண்டோ தீம் பார்க்குகளிலே சுற்றி கொண்டிருப்பது போர் என்பதால் மியாமிக்கும் ஒரு நாள் ஒதுக்கி இருந்தேன். ஒரு நாளில் ரொம்பவும் திட்டமிடமுடியாததால்,  அதிகம் அலட்டிக்கொள்ளாமல், மனம் போன போக்கில் அன்றைய தினத்தை அமைத்துக்கொண்டோம். மனதிற்கும், உடலுக்கும் அன்றைய தினம் பெரும் ஓய்வாக இருந்தது. பின்ன, மியாமி செல்வதற்கு ஓய்வுக்கு தானே?

.

No comments: