Thursday, October 23, 2008

நூறுனா சும்மாவா?

எதன் எண்ணிக்கையும் நூறை தொடும்போது, அது சிறப்பாகிறது. நடிகர்களின் படம், படம் ஓடிய நாட்கள், கிரிக்கெட் வீரர்களின் மேட்ச், எடுக்கும் ரன், இவையனைத்துமே நூறை தொடும் போது, இவர்களுக்கும் மகிழ்ச்சி. இவர்களை பிடித்தவர்களுக்கும் சந்தோஷம். கணக்கெடுத்திருந்தால், தசரதனும் நூறாவது மனைவியை மணக்கும் போது, அதிகம் மகிழ்ந்திருப்பான்.நடிகர்கள் நூறாவது படத்தில் நடிக்கும்போது, கொஞ்சம் கவனம் எடுத்து, சிரத்தையாக நடிப்பார்கள். பிரபல நடிகர்களின் நூறாவது படத்தை பார்த்தாலே, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதாநாயகனாக, நூறு படத்தில் நடிப்பது என்பது சாதனைதான். எத்தனை வருடங்களில் நூறை தொட்டார்கள் என்பது அவர்களது திறமையை, திரை வாழ்வை பொறுத்தது.

1935இல் சதி லீலாவதி படத்தின் மூலம் பட கணக்கை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். செஞ்சுரி போட்டது, 33 ஆண்டுகளுக்கு பிறகு, ஒளி விளக்கு படத்தின் மூலம். கலைஞரின் வசனம் பேசி ஆரம்பித்த சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் சதம் மிகவும் சிறப்பானது. படம் - நவராத்திரி (1964). ஒன்பது கதாபாத்திரங்களில் ஆச்சரியம், பயம், அனுதாபம், கோபம், அன்பு, வெறுப்பு, காதல், வீரம், மகிழ்ச்சி என்று நவரசங்களையும் நடிகர் திலகம் காட்டி நடித்த படம், வெளியானது பராசக்தி வந்து 12 ஆண்டுகளூக்கு பிறகு.

சினிமாவுக்கென்றே வாழும் கமலுக்கு நூறு ஒரு பெரிய விஷயமே இல்லை. அறுபதில் நடிக்க ஆரம்பித்த கமல், இருப்பத்தியொரு வருடங்களில் நூறாவது படமான ராஜ பார்வையில் நடித்தார். இதில், கதாசிரியர் கமலும் எட்டி பார்க்க, படத்தை எடுத்தவர் தயாரிப்பாளர் கமல்.

ரஜினியின் நூறாவது படம், அவரது உண்மையான ஆன்மிக ஆர்வத்தை வெளிக்காட்டியது. ரஜினியின் ஆன்மிக குருவை (ராகவேந்திரர்) பற்றிய இப்படத்தை தயாரித்தது அவரின் அறிமுக குரு (பாலசந்தர்). இயக்கியது அவரின் கமர்ஷியல் குரு (எஸ்.பி.முத்துராமன்). நடிக்க வந்து 10 வருடங்களில் இப்படத்தில் நடித்தார். இதிலையும் அவர்தான் ஃபாஸ்ட்டு. பர்ஸ்டு.

விஜயகாந்தும், தனக்கு பிடித்ததும் தனக்கு பொருத்தமான போலிஸ் கதாபாத்திரத்தில் நூறாவது படத்தில் நடித்தார். படத்தின் பெயர் அவருடைய பெயருடன் நிலைத்துவிட்டது. படத்தின் வெற்றி அந்தளவு பிரமாண்டமானது. முதல் படம் "இனிக்கும் இளமை" வெளியானது 1979 இல். "கேப்டன் பிரபாகரன்" வெளியானது 1991 இல்.

இவரளவுக்கு மற்ற நடிகர்களால் நூறாவது படத்தில் வெற்றியை கொடுக்க முடியவில்லை. சத்யராஜின் "வாத்தியார் வீட்டு பிள்ளை" சுமார். சத்யராஜ் தனி கதாநாயகனாக நடித்தது, அவரது அறுபதாவது படத்தில்தான். பிரபுவின் "ராஜகுமாரன் (1994)"னும் சுமார் தான். இவரது முதல் படமான "சங்கிலி" வந்து 12 வருடங்கள் கழித்து இது வந்தது. சரத்குமாரின் "தலைமகன்" வந்ததே எனக்கு நினைவில்லை.

நடிகைகள் குறைந்த வருடங்களில் நடிகர்களை விட அதிக படத்தில் நடித்து விடலாம். ஆனால் நூறு படங்களில் நடிக்கும் அளவுக்கு திரை துறையில் இருப்பது அந்தளவு சுலபமில்லை. அப்படி நடித்தவர்கள், சாவித்திரி (கொஞ்சும் சலங்கை), சரோஜா தேவி (பெண் என்றால் பெண்), கே.ஆர். விஜயா. "முற்றிலும் மாறுபட்ட" கதாபாத்திரத்தில் நூறாவது படத்தில் நடித்தவர் ரோஜா. படம் - பொட்டு அம்மன்.

நடிகைகள் நிலைமை இவ்வாறென்றால் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் செஞ்சுரிகள் அபூர்வமானவை. அவ்வளவாக யாரும் கண்டு கொள்ளாதது. பாலசந்தரின் நூறாவது படம், பார்த்தாலே பரவசம். இதில் அவரது டிவி தொடர்களையும் சேர்த்து கொண்டார்கள். இந்தியா முழுக்க சென்று படம் எடுத்த ராம. நாராயணனின் நூறாவது படம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா. இந்த தலைமுறை இயக்குனர்கள், நூறு படங்கள் இயக்குவது என்பது கஷ்டம்தான். கே.எஸ்.ரவிக்குமார் தொட்டுவிடுவார் என்று நினைத்திருந்தேன். தசாவதாரத்திற்கு பிறகு நம்பிக்கையில்லை. ஹரி மேல் நம்பிக்கை உள்ளது. ஷங்கர் எடுக்க மாட்டார் என்று யார் வேண்டுமானாலும் சத்தியம் செய்வார்கள்.

முன்னணி இசையமைப்பாளர்களால் ஈஸியாக நூறு படங்களில் இசையமைத்து விடலாம். இளையராஜா மூடுபனியிலேயே நெருங்கிவிட்டார்.

குறை பிரசவம் மாதிரி முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்கள் உருவாகும் இந்த காலத்தில், முன்னணி நடிகர்கள் தேர்வு செய்து வருடத்தில் சில படங்களில் மட்டுமே நடிப்பதால், நூறு பட கணக்கை தொடுவதற்கு, முன்பை விட அதிக வருடங்கள் ஆகும். பதினாறு வருடங்களுக்கு முன்பு நடிக்க வந்த விஜயும், அஜித்தும் அடுத்த வருடம்தான் அவர்களது ஐம்பதாவது படங்களில் நடிக்க இருக்கிறார்கள்.


கிரிக்கெட்டிலும் இந்த மாதிரி நூறு சார்ந்த சாதனைகளுக்கு மதிப்பு அதிகம். சச்சினுக்கு நூறு மேல ஆசை அதிகம். உலகத்திலேயே, அதிக தடவை நூறு அடித்தவராச்சே? சர்வன், சங்கக்காரா போன்றவர்கள் தங்களது நூறாவது மேட்ச்சில் நூறு அடித்தவர்கள். நூத்துல நூறு. சாதாரணமாக நூறு அடிக்கும் போதே முக்கியமான வீரர் ஆகிறார்கள், இளம் வயதிலேயே நூறு அடித்தவரும், வேகமா நூறு அடித்தவரான அபிரிடிக்கு, அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும்?


எண்ணிக்கை முக்கியம் இல்லை. தங்கள் பங்களிப்பின் தரமும் அதன் மூலம் அடையும் பெருமையும் தான் முக்கியம் என்றாலும், ஒரு மைல்கல் என்கிற விதத்தில் நூறு சிறப்பானதே.

அப்புறம், இது என்னுடைய நூறாவது பதிவு.

14 comments:

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

//எண்ணிக்கை முக்கியம் இல்லை. தங்கள் பங்களிப்பின் தரமும் அதன் மூலம் அடையும் பெருமையும் தான் முக்கியம் என்றாலும், ஒரு மைல்கல் என்கிற விதத்தில் நூறு சிறப்பானதே//


சிறப்பாய் சொல்லியிருக்கிறீர்கள்!

நூறு வாழ்த்துக்களுடன் இனி அடுத்தடுத்து வரப்போகும் மைல்கல்களின் தொலைவு மிக குறைவே தொடருங்கள் பதிவு பயணத்தை :)))

கிரி said...

//சத்யராஜின் "வாத்தியார் வீட்டு பிள்ளை" சுமார்//

சத்யராஜின் நூறாவது படம் வால்டர் வெற்றிவேல் என்று நினைக்கிறேன்

//அப்புறம், இது என்னுடைய நூறாவது பதிவு//

எதிர்பார்த்தேன் :-) வாழ்த்துக்கள் உங்களின் நூறாவது பதிவிற்கு

சரவணகுமரன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, குடுகுடுப்பை

சரவணகுமரன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ஆயில்யன்

சரவணகுமரன் said...

//எதிர்பார்த்தேன் :-) //

ஹி.. ஹி..

வாழ்த்துக்களுக்கு நன்றி, கிரி

Athisha said...

வாழ்த்துக்கள்..

ச.கு.

பதிவும் நல்லாருந்துச்சி

பாபு said...

வாழ்த்துக்கள் சரவணன்

சரவணகுமரன் said...

நன்றி அதிஷா

சரவணகுமரன் said...

நன்றி பாபு

Anonymous said...

எங்க உங்களுக்கு இது 100 வது பதிப்பா????

மே. இசக்கிமுத்து said...

எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!

சரவணகுமரன் said...

பெயரில்லா,

இது நூறாவது பதிவா? என்று கேட்கறீர்களா?

ஆமாம்.

சரவணகுமரன் said...

நன்றி இசக்கிமுத்து.

தீபாவளியை நன்றாக கொண்டாடினீர்களா?