Thursday, March 5, 2009

இயக்குனர் நாடித்துடிப்பு - கே.எஸ்.ரவிக்குமார்

ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த இயக்குனர்களால், ரசிகர்கள் ரசிக்கும்வகையிலான படங்களைக் கொடுக்க முடிவதை போல், இயக்குனர்களின் நாடித்துடிப்பை ரசிகர்கள் அறிந்து கொண்டால், எவ்வித தவறான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவ்வியக்குனர்களின் படங்களை ரசிக்க முடியும். இப்பதிவு, தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனநிலையை அதிகம் புரிந்து கொண்டதாக கூறப்படும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரைப் பற்றியது.

ரவிக்குமாரின் அப்பா பெரிய தொழிலதிபர். உதவி இயக்குனராக இருந்த காலத்தில், ரவிக்குமார், அப்போது இருந்த மற்ற உதவி இயக்குனர்கள் போல பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவில்லை. பைக்கில்தான் ஷூட்டிங் ஸ்பாட் வருவாராம். உதவி இயக்குனராக இருக்கும்போதே ஒரு பாக்டரி ஆரம்பித்தார். இயக்குனராக வெற்றி பெற முடியவில்லையென்றால் அந்த தொழிலை தொடரலாம் என்ற எண்ணம். துரதிஷ்டவசமாக, இந்திய தொழில் துறை ஒரு தொழிலதிபரை இழந்தது. பட வாய்ப்பு கிடைக்க தொடங்கிய உடனே, பாக்டரிக்கு பூட்டு போட்டு விட்டார்.

வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதின் முக்கியத்துவம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனாலேயே, படம் வெற்றி பெற என்ன தேவையோ, அதையே தொடர்ந்து செய்து வருகிறார். தயாரிப்பாளரின் வருமானத்தை முக்கியமாக கருதி படங்களை இயக்கி வருகிறார்.

இவர் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இவர் எந்த படத்தில் பணியாற்றினாலும் அந்த படம் வெளிவராதாம். புது வசந்தம் படத்தில் இவர் இணை இயக்குனர். அந்த படத்தில் தான் அவரும் விக்ரமனும் முதலும் கடைசியுமாக இணைந்து பணியாற்றியது. விக்ரமன் ரவிக்குமாருக்கு சீனியர் என்றெல்லாம் கிடையாது. சௌத்ரிக்காக ரவிக்குமார் பணியாற்றிய படம் அது. அந்த படத்தில் நடிக்கும் போது சார்லி ரவிக்குமாரை கவனித்து விட்டு அவர் மேனேஜரிடம் சொன்னாராம், ‘ரவிக்குமார் ஒர்க் பண்ற படம். ஒழுங்கா சம்பளத்தை முதலிலே வாங்கிடு’. மனுசனுக்கு எவ்ளோ கோபம் வரும்? அந்த கோபம் தான் மனுசனை வெற்றியை நோக்கி தள்ளிவிட்டிருக்கிறது.

இவருடைய முதல் படமான ’புரியாத புதிர்’ ஒரு திரில் படம். ஒரு கன்னட படத்தை பார்த்து ஆர்.பி.சௌத்ரி ரவிக்குமாரை ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லியிருக்கிறார். அவரும் ஆர்வத்துடன் செய்து கொடுத்திருக்கிறார். அவரிடமே, படத்தை இயக்க சொல்லியிருக்கிறார் சௌத்ரி. ரவிக்குமாரோ, இது சரி வராது என்றிருக்கிறார். சௌத்ரியோ பிடிவாதமாக படத்தை இயக்க சொல்லி வற்புறுத்தி, இயக்கினால்தான் அடுத்த பட வாய்ப்பு என்றிருக்கிறார். அடுத்த படம் என்பதற்காகவே அவர் இயக்கிய முதல் படம், புரியாத புதிர். படம் தியேட்டர் ரிலீஸில் தோல்வி என்றாலும் சன் டிவி ரிலீஸில் வெற்றிதான்.

அந்த படத்தின் தோல்வியில் அவர் கற்ற பாடம், திரில் படங்கள் ஒரு சிறு பிரிவையே கவரும். ஒரு படம் வெற்றியடைய வேண்டுமென்றால் பெருவாரியான மக்களை சென்றடைய வேண்டும். அனைவரையும் கவர வேண்டும் என்றால் நகைச்சுவையும் செண்டிமெண்டும் அவசியம். அவர் அன்று கற்ற பாடத்தை இன்று வரை செயல்படுத்தி வருகிறார்.

அதன் பின்பு, சரத்குமார் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்க, ரவிக்குமார் இயக்கிய படம், ‘சேரன் பாண்டியன்’. அதில் ஆரம்பித்தது அவர் வெற்றி பயணம். கிராமத்து படங்கள் எடுப்பதில் எக்ஸ்பர்ட் ஆனார். கிராம படங்கள் மட்டுமில்லாமல், எல்லா வகையான படங்களும் எடுத்தார். படம் வெற்றியடைகிறதோ இல்லையோ, கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுப்பதில்லை.

அவருடைய பத்தாவது படமான நாட்டாமை அவருக்கு மெகா ஹிட் பம்பர் பரிசை அளித்தது. அந்த படத்தின் வெற்றி, அவருக்கு ரஜினியை வைத்து முத்து படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது. முத்து, ரவிக்குமாரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக ஆக்கியதோடு மட்டுமில்லாமல், ரஜினியையும் ஜப்பான் வரை கொண்டு சென்றது. ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவதையே வாழ்நாள் சாதனையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் மத்தியில், ரஜினியை வைத்து இரண்டு படங்கள் இயக்கியது மட்டுமில்லாமல், அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆனார், ரவிக்குமார்.

ரவிக்குமார் போன்ற கமர்ஷியல் இயக்குனரை ரஜினி நம்புவது பெரிய விஷயமில்லை. சினிமாவின் ஒவ்வொரு இடுக்கையும் அறிந்து வைத்திருப்பவரும், தமிழ் சினிமாவின் பெருமையாக இருக்கும் கமலும் நம்புவது, கண்டிப்பாக ரவிக்குமாரின் சாதனை. அவ்வை சண்முகியில் ஆரம்பித்து தசாவதாரம் வரை நான்கு படங்கள் கமலை வைத்து இயக்கியிருக்கிறார். என்னதான் தசாவதாரம் வெற்றியில் கமல் பிரமாண்டமாக முன்னணியில் இருந்தாலும், பின்னணியில் ரவிக்குமாரின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் வெற்றியின் மேல் பெரும்பாலோர் வைத்திருந்த நம்பிக்கைக்கு காரணம், ரவிக்குமார். இந்த படத்தை இதை விட குறைவாக ரவிக்குமாரை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். அதுதான் ரவிக்குமாரின் பலம். ரஜினிக்கு நண்பர் என்றால், கமல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவிக்குமாரை சகோதரன் என்றழைத்தார்.

நடிகர் சரத்குமாரும் இவரும் சினிமாவில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அதனாலயோ என்னவோ, இவர்களது காம்பினேஷன் நன்றாக ஒர்க அவுட் ஆகும். சிறு வயதில், கே.எஸ். ரவிக்குமார் அவருடைய நண்பர்களுடன் ஒரு பெண்ணை டாவடித்திருக்கிறார். இவர்களுக்கு பயந்து பெண்ணின் வீட்டார், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வாட்டசாட்டமான நபரை துணைக்கு பஸ் ஸ்டாண்ட் வரை அனுப்பி இருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் ரவிக்குமாரும் அவர் நண்பர்களும், ’அங்கிள் அங்கிள்’ என்று அந்த ‘வாட்டசாட்டத்துடன்’ பேசியிருக்கிறார்கள். கலாய்த்திருக்கிறார்கள். பின்னாளில் இயக்குனராகி சரத்குமாரை இயக்கி கொண்டிருக்கும்போது தான் அவருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது, அந்த அங்கிள் சரத் தான் என்று. மறுபடியும், கலாய்க்க தொடங்கி விட்டார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என இரு தலைமுறையின் முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்தவர் இவர் ஒருவரே. நடிக்கும் நடிகரை சரியாக, முழுமையாக பயன்படுத்துவார். நன்றாக வேலை வாங்குவார். அஜித் நடித்த வில்லன், வரலாறு, இரண்டு படங்களிலுமே அவரை வித்தியாசமான வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். சிம்பு வளவளவென்று பேசுவார் இல்லையா? அவரை வைத்து எடுத்த சரவணா படத்தில், பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை தேடி செல்வதை பற்றி ஒரு நீளமான வசனத்தை கோவிலில் ஜோதிகாவுடன் பேச வைத்திருப்பார். சிம்பு, ஓவரா பேசியும் மக்கள் ரசித்த காட்சி அது.

அவர் ஆரம்பக்காலத்தில் எடுத்த படங்களில் பஞ்சாயத்து, தண்டனை, மாலை பறந்து வந்து நாயகன் மேல் விழுவது, தாலி பறந்து சென்று நாயகி மேல் விழுவது போல செண்டிமெண்டாக அமைந்திருந்த காட்சிகள், இளைஞர்களை கவராவிட்டாலும் தாய்குலங்களை பெரிதும் கவர்ந்தது. அதே படங்களில் கவுண்டமணி நடித்திருந்த காட்சிகள் இளைஞர்களை கவர்ந்தது. இப்படி அவர் படங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் பேலன்ஸ்டாக இருக்கும். ஆனால் இன்னமும் அவர் படங்களில் ஒரு கற்பழிப்பு காட்சி வந்துவிடுவது கடுப்பான விஷயம்தான்.

என்னதான் கலவை ஒன்றுப்போல இருந்தாலும், படத்தின் கதை வேறு வேறு மாதிரியாக இருக்க காரணம், கதையை இவர் எழுதுவது இல்லை. படத்தின் மேக்கிங்கும் ஒரே மாதிரி என்று சொல்ல முடியாது. இவர் பலதரப்பட்ட கலைஞர்களுடன் சுலபமாக ஒன்றிணைந்து பணியாற்றுவார். ஒரு படத்தில் தேவா, இன்னொரு படத்தில் வித்யாசாகர், இன்னொன்றில் ரஹ்மான், மற்றொன்றில் யுவன். இளையராஜாவில் இருந்து யுவன் வரை, இப்படி போய் கொண்டே இருப்பார். அதேப்போல் தான் நகைச்சுவை நடிகர்களுடன் பணியாற்றிய விதமும். ஆரம்பத்தில் கவுண்டமணி இவர் படங்களின் ப்ளஸ் பாயிண்டாக இருந்தார். பின்பு, வடிவேலு, விவேக் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. ரமேஷ் கண்ணா கண்டிப்பாக இருப்பார். நாட்டாமை படத்தின் போது, அவர் போட்ட சத்தத்தில், படத்தின் ஒளிப்பதிவாளர் பயந்து ஓடிவிட்டாராம். ரவிக்குமார் எதற்கும் தயங்கவில்லை. கேமராவை அவரே இயக்க ஆரம்பித்து விட்டாராம். படத்தில் அந்த சண்டைக்காட்சி சிறப்பாக வந்திருந்தது.

காட்சி ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காக மோதிர கையால் குட்ட மாட்டார். கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்து விடுவார். சிவாஜி, ரஜினி என்று இரு இமயங்களை ஒன்றாக வைத்து படையப்பா படத்தை இயக்கியது அவரது வாழ்நாள் சாதனை. படையப்பா படத்தில் சிவாஜி படிக்கட்டில் இருந்து வேலுடன் இறங்கி வருவது போல ஒரு காட்சி. விடியகாலை அது. எடுத்து கொண்டிருந்த போது, முக்கால் வாசி படிக்கட்டுகள் இறங்கிய பின்பு தான் பின்னணியில் யாரோ நிற்பதை ரவிக்குமார் கவனித்தாராம். திரும்ப எடுக்க வேண்டுமென்றால் சிவாஜி திரும்பவும் மேலே ஏற வேண்டும். பின்னணியில் ஒரு ஆள் நிற்பதை கவனிக்காத ஒளிப்பதிவாளர் மேல் ரவிக்குமாருக்கு கடும் கோபம். கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டி முடிந்து திரும்பி பார்க்க, அங்கே சிவாஜி பழையபடி மேலே சென்றிருக்கிறார். அதற்கு பிறகு, சிவாஜி ரஜினியிடம் கேட்டிருக்கிறார். ‘எங்கையா இவன பிடிச்ச?’. ரஜினி அதற்கு ரவிக்குமாரை பற்றி விளக்கி சொல்லியிருக்கிறார். இப்போது, ரவிக்குமார் நிறையவே மாறியிருக்கிறார்.

ஒரு படத்தின் கேப்டன் டைரக்டர் என்று சொல்வார்கள். அதற்கு, ரவிக்குமார் ஒரு உதாரணம். பிரச்சினைகளின் போது முன்னால் நிற்பவர்களில் ஒருவர் அவர். சமுத்திரம் படத்தின் மைசூர் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்சினையின் போது முன்னால் நின்று அனைவரையும் வண்டியேற்றி விட்டு, கடைசியாக அந்த இடத்தில் இருந்து வந்தவர் இவர்.

ரிசல்ட் முக்கியம் என்று நினைப்பவர். பாட்ஷா படத்தை காண்பித்து விட்டு, ரவிக்குமாரின் கருத்தை கேட்டு இருக்கிறார் ரஜினி. அப்போது ரவிக்குமார் அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், ரஜினி கவனித்து கொண்டே வந்திருக்கிறார். ”படம் பிரமாதம் சார். தம்பி, தங்கச்சிகள் பெரிசான பிறகும் ஹீரோ இளைஞனா இருப்பது லாஜிக்கலா ஒரு குறை. ஆனா, ரசிகர்கள் அதை கவனிக்க மாட்டாங்க சார்”.

இவரது வளர்ச்சி படிப்படியானது. சிறு கதாநாயகர்களை வைத்து இயக்கத்தை ஆரம்பித்தவர், தமிழின் உச்ச நடிகர்களை சிறப்பாக கையாளுபவர் என்று பெயரெடுக்கும் அளவுக்கு திரையுலகில் முன்னேற்றத்தை கண்டவர். இளைஞர்களுக்கு நகைச்சுவை, பெண்களுக்கு செண்டிமெண்ட் என்று வெற்றி படங்களாக, தவறும் பட்சத்தில், ஆவரேஜ் படங்கள் என கொடுத்து வருகிறார். முத்துராமனுக்கு எப்படி ரஜினியோ, அது போல் ரவிக்குமாருக்கு சரத்குமார். தசாவதார பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது சரத்குமாருடன், ரஜினிக்கு தயார் செய்த ஜக்குபாய் படத்தை இயக்கி வருகிறார். அதற்கு அடுத்தாற் போல், சூர்யா, விக்ரம் என தொடர்ந்து நட்சத்திர படங்கள் வரவிருக்கின்றன.

‘ஏன் இப்படி கமர்ஷியல் படமாக எடுத்து கொண்டு வருகிறீர்கள்?” என்று கேட்டால் அவர் சொல்லும் பதில், “நான் தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள் பலரை கண்டிருக்கிறேன். அவர்கள் முகம் எப்போதும் என் கண் முன்னால் வரும். என்னால் யாரும் அந்த நிலைக்கு வர வேண்டாம். அந்த சூழ்நிலையை நான் உருவாக்க மாட்டேன்.” நல்ல நோக்கம் தானே? புதியதாக தன் முயற்சியை பரிசோதித்து பார்க்கவும், தன் ரசனைக்கு படம் எடுக்கவும் ஏன் இன்னொருவரை பலிகடாவாக்க வேண்டும்?

20 comments:

குப்பன்.யாஹூ said...

very long post, sorry unable to read fully.

But ravikumar made lot of failure movies also. Lot of films have been flops.

He wont rememebr after 5 years.

Rela commercial hit directors are SP Muthuraman, Panchu Arunachalam, Shankar.

வெட்டிப்பயல் said...

Excellent write up... நிறைய உழைச்சிருக்கீங்க போல...

முரளிகண்ணன் said...

அருமை. ரவிக்குமார் படங்களைப் போலவே விறுவிறுப்பு

கணேஷ் said...

பாஸ், எங்கே இருந்து இவ்வளவு மேட்டர் கலெக்ட் பண்ணீங்க.,. அட்டகாசம்..

Anonymous said...

நிறைய தகவல்களுடன் கோர்வையா அழகா தொகுத்து இருக்கீங்க சரவணன்.


இவரது பெரும்பாலான படங்கள் ஒரு டெம்ளேட் மாதிரி தான் இருக்கும். நடிகர்கள் வேணா மாறுவாங்களே தவிர மேட்டர் ஒன்னு தான்.

சொல்லாம இருக்க முடியலை, ஒரு சீன்லயாவது சாதீயத்தை புகுத்தி விடுவார்.

1)நாட்டாமைல வர பஞ்சாயத்து சீன்ல, "ஐயா நாங்க தொட்டு புழங்காத சாதி தான்யா!னு ஒரு வசனம் வரும்.

2)தசாவதாரத்துல கூட உங்கள்ள யாருடா படிச்சவங்க இருக்காங்க?னு அசால்ட்டா ஒரு வசனம் வரும்.

இதெல்லாம் தப்பு தானே?

தயாரிப்பாளர்கள் மட்டும் தான் மனுசங்களா? ஒரு பார்வையாளரின் ரசனையையே, உங்களுக்கு இது தான் பிடிக்கும், இப்படி தான் தருவேன். பாத்தாகனும்!னு குடுக்கற மாதிரி இருக்கு. ஐட்டம் நம்பர் இல்லாம ஒரு படம் எடுக்க மாட்டார்.

ஒரு இயக்குனரா வெற்றி பெற்றிருக்கலாம். ஒரு மனிதரா, ஒரு தகப்பனா, ஒரு பிள்ளையா, ஒரு கணவரா இவர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் ஏராளம்.

ஏதேனும் தவறா நான் எழுதி இருந்தா மன்னிக்கவும்.

Raj said...

//சார்லியை ரவிக்குமாரின் படங்களில் பார்க்க முடியாது.//

தெனாலி படத்துல சார்லி, "கைடு" ரோல்ல நடிச்சிருக்கார் சார்.

Unknown said...

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்- பற்றி இன்னமும் நிறைய விஷயங்கள் சொல்லிகொண்டே போகலாம்...
"பாட்டாளி" படத்தில் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கில் இருந்து ரீ-என்ட்ரி கொடுத்து, படையப்பாவில் "நீலாம்பரி" யாக பெயர் சொல்ல வைத்தது.
"புத்தம் புது பயணம்- ஆனந்பாபு, சித்ரா", "பொண்டாட்டி ராஜ்ஜியம்-சரவணன், ரஞ்சிதா", "புருஷ லட்சணம்-ஜெயராம், குஷ்பூ", "சூரியன் சந்திரன்- ஆனந்பாபு, சரவணன், கீர்த்தனா", "சக்திவேல்-செல்வா, கனகா", "முத்துக்குளிக்க வாரீகளா-விக்னேஷ், சங்கவி"(இந்த பட டைட்டில்-நாகேஷ் பாட்டு-கமல் மாதிரி நாகேஷை அதிகம் ரசித்து பயன்படுத்தியவர் ரவிக்குமார்), "பெரிய குடும்பம், பரம்பரை"- பிரபு, வினிதா", "தர்மச்சக்கரம்-விஜயகாந்த், ரம்பா", "கொண்டாட்டம்- அர்ஜூன், சிம்ரன்", "சிநேக கோஷம்(தெலுங்கு)-சிரஞ்சீவி, மீனா", "சுயம்வரம்-பிரபல நடிகர்கள், நடிகைகள், நடித்து பிரபல டைரக்டர்களை கொண்டது", "பிஸ்தா- கார்த்திக், நக்மா", "மின்சார கண்ணா- விஜய், மோனிகா, சமுத்திரம், தென்னாலி, பஞ்சதந்திரம், பாறை, மற்றும் பல.....................
"கே.எஸ்.ஆரிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய"

Indian said...

Where is the credit for 'Cofee with Anu' program?

சரவணகுமரன் said...

குப்பன்_யாஹூ, இன்னும் கொஞ்சம் சொல்லி ரெண்டு பதிவாத்தான் போடலாம்ன்னு நினைச்சேன். ரொம்ப ஓவரா இருக்கும்ன்னு ஒரே பதிவ நீளமா போட்டுட்டேன்.

தயாரிப்பாளரை காணாமல் போக செய்யும் அளவுக்கு தோல்வி படங்கள் கொடுத்ததில்லை என்று தான் நினைக்கிறேன்.

எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு காலம்தான்.

சரவணகுமரன் said...

நன்றி வெட்டிப்பயல்...

இதெல்லாம் அவர் பல பேட்டிகளில் சொன்னதும், பத்திரிக்கைகளில் வந்ததும்தான்...

சரவணகுமரன் said...

நன்றி முரளிக்கண்ணன்

சரவணகுமரன் said...

கணேஷ், எல்லாம் பத்திரிக்கை செய்திகளிலும், ரவிக்குமாரின் பேட்டிகளிலும் இருந்துதான்...

நன்றி...

சரவணகுமரன் said...

நன்றி ambi...

நீங்கள் சொல்வதும் உண்மைதான்...

நாட்டாமை ஒட்டி வந்த படங்கள் பலவற்றுக்கு ஈரோடு சௌந்தர்தான் வசனம். அவர் வசனங்கள் அப்படித்தான் இருக்கும். அவர் சிம்மராசி என்று ஒரு படம் இயக்கினார். படம் முழுக்க சாதி சாதி என்று தான் இருக்கும். அப்புறம் தசாவதாரம் படத்திற்கு வசனம் - கமல். அதனால் ரவிக்குமார் பொறுப்பில்லை என்று சொல்ல வரவில்லை. ஒரு இயக்குனராக இதை அனுமதித்ததன் மூலம், இதற்கு அவருக்கும் பங்கு இருக்கிறது.

சரவணகுமரன் said...

//ஒரு மனிதரா, ஒரு தகப்பனா, ஒரு பிள்ளையா, ஒரு கணவரா இவர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் ஏராளம்.//

ஏன்??? ஏதாச்சும் கிசுகிசுவா?

சரவணகுமரன் said...

//தெனாலி படத்துல சார்லி, "கைடு" ரோல்ல நடிச்சிருக்கார் சார்.//

ஓ! ஆமாம். தவறான தகவலுக்கு மன்னிக்கவும்...

சரவணகுமரன் said...

ஆகாயமனிதன், நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க... நன்றி...

சரவணகுமரன் said...

Indian,

ஃகாபி வித் அனு மட்டுமல்ல, இன்னும் பல பேட்டிகள் பார்த்து எழுதியதுதான்.

சுட்டி காட்டிய உங்களுக்கும், அவரின் பேட்டிகள் அனைத்திற்கும் நன்றி...நன்றி...நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப நன்றி நண்பா. அப்படியே அவருடைய படங்களின் லிஸ்ட் போட்டால் மிக்க நன்றாக இருக்குமே!

எனக்கு மிகவும் பிடித்த படம்(எல்லாம் பிடிக்கும். ரவிகுமார் படம் நாலே முதல் ஷோ பார்த்துடுவேன். குறைந்தது பத்து தடவையாவது பார்ப்பேன் )

1. புரியாத புதிர்
2. பிஸ்தா
3. நாட்டாமை
4. பாறை
5. பொண்டாட்டி ராஜ்யம்
6. தெனாலி
7. மின்சார கண்ணா
8. நட்புக்காக
9. ஊர் மரியாதை
10. பேண்டு மாஸ்டேர்
11. சேரன் பாண்டியன்
12. எதிரி

நடித்ததில் மிகவும் பிடித்தது கோல்மால், பகைவன்

நடித்த படங்கள்:

1. மதுமதி (நான் பாக்கத்தான் decent ஆனா பச்சை பொறுக்கி dialog famous)
2. பொண்ணு வீட்டுக்காரன்
3. கோல்மால்
4. பகைவன்
5. இன்று முதல் (மிதுன் ஹீரோ)
6. சற்று முன் கிடைத்த தகவல்
7. தலைநகரம்

எனக்கு பிடிக்காத படம்: கொண்டாட்டம். (இது ரவிக்குமாருக்கு கூட பிடிக்காதாம். அவரே சொல்லிருக்கார்)

சரவணகுமரன் said...

ரவிக்குமார், உங்களை ரொம்பவும் கவர்ந்தவர் போலும்?

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி, ரமேஷ்.

ரவிக்குமாரின் படப்பட்டியல், விக்கிபீடியாவில் இருக்கிறதே!

http://en.wikipedia.org/wiki/K._S._Ravikumar

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Romba nanrti nanbaaa