Tuesday, May 25, 2010

மாஞ்சா வேலு

"படத்துக்கு போலாமா?”

“ம். போலாம்.”

“என்ன படம்?”

“கனகவேல் காக்க”

“டேய்! என்னடா ஆச்சு உனக்கு? கரண் படத்துக்கா?”

“ஆமாடா. படத்துக்கு வசனம் ஒரு எழுத்தாளர். அதான். நல்லா இருக்குமேன்னு... நீ என்ன சொல்ற?”

”மாஞ்சா வேலு போலாம்.”

“அடப்பாவி!”

“மலை மலை டீம். அந்த படம் நல்லா இருந்தது. அதுக்கு தான்”

இவ்வளவு நாள், அந்த டீம் மட்டும் தான் அதை வெற்றிப்படம் என்று சொல்லி வருகிறார்கள் என்று நினைத்தேன். இப்பொழுது இன்னொருவனையும் பார்த்தேன். நான் கூட, சமீபத்தில் டிவியில் பார்த்தேன். சந்தானம் காமெடி நன்றாக இருந்தது. ஆனாலும், எதையும் முடிவெடிக்கவில்லை. பெங்களூரில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் ரிலீஸாகும் போது, இரண்டு படங்கள் இரு இரு காட்சிகளாக ஒரே திரையரங்கில் வெளியாகும். நாம் எந்த படம் பார்க்கலாம் என்று ஆபரேட்டர் முடிவெடுக்கட்டும் என்று கிளம்பினோம்.

ஆபரேட்டர் முடிவு செய்தது - மாஞ்சா வேலு. போஸ்டரைப் பார்த்துவிட்டு, நண்பன் சொன்னான்.

“கவலைப்படாதே! இந்த படத்துக்கும் ஒரு எழுத்தாளர் தான் வசனம்.”

வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர்.

---



படத்தில் எனக்கு பிடித்தது - நடிகர்கள் தேர்வு. தொண்ணுறில் வந்த படத்துக்கு, தேர்வு செய்தது போல். ஹீரோ அருண் விஜய். அவருக்காக தான் இந்த படமே. அவருக்கு அண்ணன் - கார்த்திக். அப்பா - விஜயக்குமார். வில்லன் - சந்திரசேகர். கிளைமாக்ஸில் வரும் டிஜிபி - பிரபு. நீண்ட இடைவெளிக்கு பிறகு, ராவணனில் ஒன்று சேர்கிறார்கள் பிரபு-கார்த்திக் என்ற எதிர்ப்பார்ப்பை தள்ளிவிட்டு விட்டு இது வெளியாகிவிட்டது. ராவணன் கூட இந்த படத்தையும் சேர்த்து சொல்வது காலக்கொடுமை என்றாலும், ராவணனில் கார்த்திக் செய்திருப்பதை விட முக்கியமான கேரக்டராக இது இருக்கிறது என்று சொல்லிவிடலாம். எல்லாம் மணிரத்னத்தின் மேல் நம்பிக்கை தான்.

ரொம்ப நாள் கழித்து, கார்த்திக்கை பார்ப்பதால் ப்ரெஷாக இருக்கிறது. மனிதர் போலீஸ் வேடத்தில் அதிரடியாக இண்ட்ரோ கொடுக்கிறார். ’ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா...’ பாடலுக்கு அதே ஸ்டெப்ஸ் போடுகிறார். கார்த்திக் ஏன் இன்னும் ஹீரோவாக நடிக்கவில்லை என்று தோன்றும்படி அவரை காட்டியிருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். ஆனால், ஜோடியாக அனுஹாசனை போட்டு கார்த்திக்கை கொஞ்சம் வயதானவராக காட்டிவிட்டார்! ரொம்ப புத்திசாலித்தனமாக கார்த்திக் கதாபாத்திரத்திற்கு ‘சுபாஷ் சந்திர போஸ்’ என்று பெயர் வைத்துள்ளார். ம்... நடத்துங்க... படத்தின் ஆறுதலான ஒரே விஷயம் - கார்த்திக். நல்லவேளை, நிறைய காட்சிகளில் வருகிறார்.

அருண் விஜய்யை அதிர்ஷ்டமில்லாதவர் என்று சொல்லக்கூடாது. கலைக்குடும்பத்தில் பிறந்திருக்கிறார். அதைவிட பெரிய அதிர்ஷ்டம். இம்மாதிரி படத்தை பிரமாண்டமாக எடுக்க, ஒரு சூப்பர் மாமனார் கிடைத்திருக்கிறார். அருணும் என்னலாமோ செய்து பார்க்கிறார். ஒண்ணும் தேற மாட்டேங்கிறது. இதில் ரஜினி போல், விஜய் போல் எல்லாம் நடித்திருக்கிறார். எல்லாமே ஒரு மாதிரி செயற்கையாக இருக்கிறது.

சந்தானம் - கஞ்சா கருப்பு - மனோகர் - சிங்கமுத்து கூட்டணி, இரண்டு இடங்களில் தியேட்டரை குலுங்க வைத்திருக்கிறது. மனோகரை ரெடிமெட் அடுப்பாக யூஸ் பண்ணும் இடத்திலும், நாடோடிகள் பாணியில் (சம்போ சிவ சம்போ) ஷகிலாவை அஸாம் லாரியில் ஏற்றி அனுப்பும் இடத்திலும்.

ஹீரோயினை எங்க பிடித்தார்கள் என்று தெரியவில்லை. படம் சும்மாவே இருட்டாக தெரிந்தது. இவர் ரொம்ப இருட்டாக தெரிந்தார். ஒளிப்பதிவு ப்ராப்ளமா, தியேட்டர் ப்ராப்ளமா என்று தெரியவில்லை. நான் முதலில் பார்த்த போது, காமெடி நடிகர் சாமுக்கு ஜோடி நடிகை என்று நினைத்தேன்!

இயக்குனர் தீவிர முருக பக்தர் போல. எல்லா படங்களிலும் வேல்’லையே காட்டுகிறார். படம் வேகமாக இருக்க வேண்டும் என்பதற்காக வசனங்கள் வேகமாக பேசப்படுகிறது. காட்சிகள் வேகமாக மாறுகிறது. கதாபாத்திரங்கள் வேகமாக ஓடுகிறார்கள். இது எல்லாவற்றையும் விட வேகமாக, அடுத்தது என்ன என்று ரசிகர்களுக்கு தெரிந்துவிடுகிறது!

படம் முடிந்தப்பிறகு, நண்பன் சொன்ன தீர்ப்பு - “மலை மலை அளவுக்கு இல்லைடா”. என்னது, அந்த அளவுக்கு கூட இல்லையா? பின்ன, அத பெஞ்ச்மார்க்கா வைச்சு படமெடுத்தா? அதே சமயம், இந்த படம் வெளியான நாளில் உலக அளவுல வெளியான ’பட்டங்கள்’ (Kites) படத்துக்கு ’மாஞ்சா’ பரவாயில்லை’ன்னு ரெண்டும் பார்த்தவுங்க சொல்றாங்க!

.

3 comments:

Anonymous said...

நல்லா இருக்கா? இல்லையா?

சதீஸ் கண்ணன் said...

அய்யயோ... திரும்ப (அருண்)விஜய் படமா... கடைசியா தியேட்டர்ல போய் பார்த்த மூன்று படங்களும் செம மொக்க. தியேட்டர் பக்கம் போறதுக்கே பயம்மா இருக்குதுபா..

சரவணகுமரன் said...

சதீஸ் கண்ணன்,

நான் இப்ப தான் அருண் விஜய் படத்த தியேட்டர்ல போயி பார்க்குறேன்.