Sunday, May 2, 2010

தியேட்டர் - 2

டூரிங் டாக்கீஸில் இருந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வரை பார்த்திருக்கிறேன். நான் பார்த்து அதிசயித்த முதல் தியேட்டர் - தூத்துக்குடியில் இருந்த சார்லஸ் தியேட்டர்.

இந்த தியேட்டர் 1970 இல் கட்டப்பட்டது. நான் நினைவு தெரிந்து பார்த்த காலத்தில், இந்த தியேட்டர் தனது வயோதிக காலத்தில் இருந்தது. அது கட்டப்பட்ட காலத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கும் என்று என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்கிறது. ஏனெனில், அது ஒரு அரண்மனை போல் வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது.



தென் தமிழகத்தின் முதல் தியேட்டரா என்று தெரியவில்லை. அப்படியே இல்லாவிட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் அப்பகுதியில் இருந்திருக்கும். திரையரங்கை பார்ப்பதே அதிசயம் என்ற காலத்தில், இது போல் கட்டப்பட்ட திரையரங்கு எத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்?

இந்த தியேட்டரின் முன்பகுதியில் ஒரு தோட்டம். முன்பகுதியில் இருந்து சாய்வான நிலையில் மேல்நோக்கி பால்கனி உயரத்திற்கு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து இதில் நீர் பாய்ந்துக்கொண்டிருக்கும். மைசூர் பிருந்தாவன் நினைவுக்கு வருகிறதா? அது பார்த்திருக்காவிட்டால், ‘குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே’ நினைவுபடுத்துக்கொள்ளுங்கள். அதனுடைய சிறிய மாடல். பால்கனியில் இருந்து தியேட்டரின் வெளியே வர, இதன் இடையே படிகள் அமைத்திருப்பார்கள்.

நான் சென்ற காலத்தில் ‘இருக்கிற தண்ணி பிரச்சினையில் இது வேறயா?’ என்று வழிந்தோடும் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.

இந்த தியேட்டரில் இருப்பது போல் பால்கனியை எங்கும் பார்த்ததில்லை. பொதுவாக, பால்கனி திரையின் நேர் எதிர் பக்கம் இருக்கும். இங்கும் அந்த பால்கனி உண்டு. அது தவிர, இரு பக்கமும் இரு சிறு பால்கனிகள் உண்டு.



எல்லாம் பெஞ்ச், சேர் என்றாலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று சாதாரணமாக பெயர் வைத்துவிடவில்லை. DUKES, MARQUESS, KINGS CIRCLE. இவைதான் இங்கு இருக்கும் வகுப்புகளின் பெயர்கள். அதுபோல், எந்த ஒரு விஷயத்தையும் சாதாரண கட்டிட வடிவமைப்பில் கட்டவில்லை. வட்டமாக சுற்றி சுற்றி செல்லும் படிக்கட்டுகள், வேலைப்பாடுகளுடன் தூண்கள். ஏன், குப்பைத்தொட்டி கூட ராஜா காலத்து மாடலில் தான் இருக்கும்.

இது நான் கேள்விப்பட்டது. இந்த தியேட்டரை கட்டிய சமயம், அதன் உரிமையாளரிடம் படம் வாங்கி திரையிட பணம் இல்லை. தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொண்டு, திரையரங்கைக் கட்டியிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பணம் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கும் அப்படத்தை வெளியிடுவதில் சிரமம் இருந்தது. படம் வெளியாகி பெரும் வெற்றி. அந்த திரைப்படத்திற்கு வந்த கூட்டத்தின் வரிசை நெடுந்தொலைவுக்கு நின்றது. படத்தில் வசூலான பணத்தை கொண்டு, அந்த கடனை உரிமையாளர் திருப்பி கட்டினார்.

இப்படி பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கு, பிற்காலத்தில் வெறுமையானது. முன்னால், கொட்டிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. செடிகள் வளர்ந்திருந்த பகுதியில் ஜல்லியில் கான்கிரீட் போடப்பட்டது. பெரிய திரையரங்கு என்பதால், பராமரிப்பு சிரமம். இது தியேட்டர் அல்ல, குடோன் என்று விமர்சிக்கப்பட்டது. பொதுவாகவே, தூத்துக்குடி திரையரங்குகளில், இருக்கும் சீட் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். இண்டர்வெல் வரை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த தியேட்டரும் புதுப்படங்களின் ஆரம்ப நாட்களில் பாதி தூத்துக்குடியை அடைத்துக்கொண்டு இருக்கும்.

கடைசி வரை அந்த பெஞ்சை மாற்றவில்லை. சிலர் வசதியாக படுத்துக்கொண்டு படம் பார்த்தார்கள். திரைப்படங்களில் இசை வேறொரு கட்டத்தை அடைந்த போது, இத்திரையரங்கின் ஒலி அமைப்பு அதற்கு ஈடுக்கொடுக்கவில்லை. வௌவால்கள் குடியிருக்க தொடங்கின.

ஒரு கட்டத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. வேறொருவர் வாங்கினார். பிறகும், மூடப்பட்டே கிடந்தது. நான் கடைசியாக ‘சேது’ படம் பார்த்ததாக நினைவு. சிறிது காலம் கழித்து, இன்னொரு நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. கால மாற்றத்திற்கேற்ப, திரையரங்கு இடிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது.



அதே சமயம், நாடக கொட்டகையாக இருந்து பெரிய மாற்றங்களில்லாமல் தியேட்டராகிய பாலகிருஷ்ணா இன்னமும் புதுப்படங்களுடன் தனது சேவையை தொடர்கிறது. டிடிஎஸ், சேட்டிலைட் ப்ரொஜக்‌ஷன் என காலத்திற்கேற்ப மாறினாலும், கொஞ்சம் ஓரமாக உட்கார்ந்தால் திரையை மறைக்கும் இரும்பு தூண்கள் இன்னமும் இங்கு உண்டு.

நீங்களும் ஸ்பெஷல் திரையரங்குகள் பற்றிய உங்கள் அனுபவங்களை, சுவையான தகவல்களை இங்கு பதிவு செய்யலாம்.

(தொடரும்)

.

27 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன இப்ப சார்லஸ் தியேட்டர் இல்லையா? மினி சார்லஸ் கூட இல்லையா? நான் அங்கதான் நட்சத்திர நாயகன், VIP படம் பார்த்தேன். பாலக்ருஷ்ணா நான் எட்டாவது படிக்கும்போது திறந்தார்கள். காரனேசன், கிளியோபட்ரா எல்லாம் இருக்குதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கள் ஊரில் (கோவில்பட்டி) சத்யபாமா என்று ஒரு திரை அரங்கம் இருக்கிறது. நான் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது "சூர்யவம்சம்" வெளியானது. தொடர்ந்து 25 நாள் பார்த்தேன். பின் தொடர்ந்து 25 படங்கள் அதே திரை அரங்கில் (படம் மாற மாற ) பார்த்தேன்.

ரட்சகன் படம் வரும்போது இது DTS இசைக்கு மாறியது. படத்தில் கதாநாயகன் வரும்போது ஸ்க்ரீன் சுற்றி கலர் கலர் விளக்குகள் எரியும். இங்கு படம் பார்ப்பதே தனி சுகம்.

வேலுசாமி
நம்ம ஊர் ராசா
சூர்யவம்சம்
லவ் டுடே
ரட்சகன்
நான் இருவர் நமக்கு இருவர்
மூவேந்தர்
தர்மா
ஜீன்ஸ்
இந்தியன்
நீ வருவாய் என
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
அடிமைப்பெண்

என தொடர்ந்து 25 படங்கள். மிச்ச படங்களின் பெயர் நியாபகம் இல்லை.

கானா பிரபா said...

மிகவும் ரசித்தேன்

Ananya Mahadevan said...

The rise and fall of an empire படிச்ச மாதிரி ஒரு பீலிங்கி. :( வருத்தமா இருந்தது. ரொம்ப கலையுணர்வுடன் கட்டப்பட்ட தியேட்டர் இப்படி ஆயிடுச்சேன்னு கஷ்டமா இருந்தது. கடைசியில் ஒரு பெருமூச்சு. நீங்களும் எந்த அளவுக்கு பிரமிச்சு இருந்தா இப்படி ஒரு கட்டுரை எழுதி இருப்பீங்கன்னு என்னால ஊகிக்க முடியுது.
காலத்தின் கோலம்.
இப்படி எல்லாம் கூட பதிவு போட முடியும்ன்னு தெரிஞ்சுக்கறேன். நானும் முடிஞ்ச வரைக்கும் யோசிச்சு தொகுத்து இப்படி ஒரு பதிவு போட்டுடறேன்.. கமெண்டுல எல்லாம் போட்டா பத்தாது. :) மெதுவா அப்படியே தொடர் பதிவு ஆக்கிடலாமே?What say? :P

thamilmagan said...

நன்கு ரசித்து எழுதிஉள்ளீர்கள் , நான் சார்லஸ் திரைஅரன்ங்கில் 2 படம் மட்டுமே பார்த்து இருக்கிறேன்.. என் தந்தை அத் தியேட்டரை பற்றி நிறைய கூறியிருக்கிறார்.. அவர் சொல்லும் போது பரம்மிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்... ஆசியாலயே மிகபெரும் திரைஅரங்கு..அதன் பிறகு தான் மதுரை தங்கம் கட்டீனார்கள்.. அத் திரை அரங்கிற்க்கு வராத அன்றைய சினிமா நட்சதிரங்களே கிடையாது. எப்பொழுதும் மக்கள் கூட்டம் என்று களை கட்டிய இடம் ... இன்று இருந்த இடம் தெரியாமல் போனதை காலதின் கோளம் என்று சொல்வதை விட வேறு என்ன செய்ய..என் தந்தையுடன் நானும் சேர்ந்து கன்னீர் வடிக்கிறேன்....

ஜூடு கோமஸ் said...

மிகவும் வருத்தமான செய்திதான்.
மினி சார்லஸ் இப்போதும் உள்ளது. சார்லஸ் தியேட்டர் மிக அதிக அளவு இருக்கைகளை உடையது. அதுதான் அதன் பலவீனமே. மிகப் பெரிய தியேட்டராதலால் அதன் பராமரிப்பும் கேள்விக்குறியானது.

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல பதிவு சரவணகுமரன். தூத்துக்குடியில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றபோது சார்லஸ் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறேன். வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு அரண்மனையின் தோற்றம் இருப்பது கண்டு வியந்திருக்கிறேன்.

நன்றி பகிர்வுக்கு.

செ.சரவணக்குமார் said...

@ ரமேஷ்
ஆம் ரமேஷ், கோவில்பட்டி சத்யபாமா திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு அலாதியான‌ அனுபவம். நானும் நிறைய படங்கள் சத்யபாமாவில் பார்த்திருக்கிறேன்.

INDIA 2121 said...

VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

சரவணகுமரன் said...

ரமேஷ், இப்ப சார்லஸ் தியேட்டர் கிடையாது. மினி சார்லஸ் இன்னும் இருக்கிறது.

என்னது, பாலகிருஷ்ணா நீங்க எட்டாவது படிக்கும் போது திறந்தாங்களா? இருக்காதே, ரொம்ப முன்னாடி இருந்தே இருக்குதே?

காரனேசனில் பல காலமாக பிட்டு படங்கள் ஓடுகிறது. கிளியோபட்ராவில் புதுப்படங்கள்.

சரவணகுமரன் said...

ரமேஷ்,

சத்யபாமா கேள்விப்பட்டுயிருக்கிறேன்.

“சூர்யவம்சம்” - 25 தடவையா? நல்ல படம் தான். நீங்க சரத் ரசிகரோ?

ஸ்க்ரீன் சுற்றி கலர் கலர் விளக்குக்கள் பார்த்திருக்கிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி கானா பிரபா

சரவணகுமரன் said...

நன்றி அநன்யா... நீங்களும் பதிவாவே போடுங்க.

தொடர்பதிவு’ன்னு சொல்லி கம்பெல் பண்ண வேண்டாமே’ன்னு தான்.

சரவணகுமரன் said...

நன்றி தமிழ்மகன். நீங்கள் சொன்னது போன்ற தகவலை தான் எதிர்பார்த்தேன். நன்றி.

சரவணகுமரன் said...

ஆமாம் ஜூடு கோமஸ்

சரவணகுமரன் said...

நன்றி செ.சரவணக்குமார்

dharma said...

Dear Saravanan,
My cousin sent me the link to your blog,it brought back good old memeories of my childhood.
I was born and brought up there and Charles theatre was the only outing those days other than Roche park.
It was a superb piece of architecture, of a time gone by so impressive for a small sleepy town that Tuticorin was.
The family who owned the theatre Missiers' were well known to us.
I remember seeing Thiruvilayadal, Pannakkara veetu penn, Shanthi Nilayam and so many old movies there sitting in the Balcony and enjoying a Lov'o at the landing canteen then.
It was built in the early 60s and not 1970 as I remember seeing very old and good movies there.
Anyway nice to read your article.
L.Dharmasamvardhini(Gowri).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னது, பாலகிருஷ்ணா நீங்க எட்டாவது படிக்கும் போது திறந்தாங்களா? இருக்காதே, ரொம்ப முன்னாடி இருந்தே இருக்குதே?//

1991 or 1992 வருடம் ஒரு புது திரை அரங்கு திறந்தார்கள். நான் ஹாஸ்டல்(கால்டுவெல் ஸ்கூல்). தூத்துக்குடி நண்பர்கள் அந்த திரை அரங்கில் படம் பார்த்துவிட்டு வந்து சொன்னாங்க. அப்ப அந்த திரை அரங்கின் பெயர் என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி சே.சரவணகுமார். எனக்கு மிகவும் பிடித்த தியேட்டர் சத்தியபாமா. முதலில் அதன் பெயர் நாராயணசுவாமி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//“சூர்யவம்சம்” - 25 தடவையா? நல்ல படம் தான். நீங்க சரத் ரசிகரோ?//

அது வீம்புக்கு பார்த்தது. ஸ்கூல் படிக்கும்போது வெளியில் எங்கும் போகமுடியாது. கல்லூரி வந்ததும் ஒரு குஷியில் பார்த்தது. அப்புறம் சரத்குமார் ரசிகராகி தொடர்ந்து...

சூர்யவம்சம்
ஜானகிராமன்
மூவேந்தர்
நட்புக்காக
பாட்டாளி
சின்னதுரை
ராஜஸ்தான்
பாறை
ஒருவன்
அரசு
தோஸ்த்
என தொடர்ந்து பார்த்தது..

வால்பையன் said...

சார்லஸ் தியேட்டரில் தான் உள்ளே வெளியே படம் பார்த்தேன்!

சரவணகுமரன் said...

நன்றி கௌரி மேடம்.

தகவலுக்கு மிக்க நன்றி.

சரவணகுமரன் said...

//1991 or 1992 வருடம் ஒரு புது திரை அரங்கு திறந்தார்கள்.//

ரமேஷ், அது கே.எஸ்.பி.எஸ். கணபதி கலையரங்கம்.

சரவணகுமரன் said...

வாங்க வால்பையன்

Venkatachalam said...

இப்போது புது கட்டிடம் அழகாக இருந்தாலும் அந்த இடத்தில் சார்லஸ் தியேட்டர் இல்லாதது வருத்தமாக உள்ளது.

Unknown said...

MINI CHARLES Theatre sold-out to the same DSF Group, probably a Multiplex is coming-up there along with DSF Shopping mall.
Ditto Mascarenhas

S.Lankeswaran said...

எங்கள் ஊர் வவுனியாவில் ரோயல் திரையரங்கு என்று ஒன்று இருந்தது. சிறுவயதில் ரஜனியின் காளி திரைப்படம் பார்த்த ஞாபகம் இன்றும் மனதில் இருக்கின்றது. இன்று அது ரோயல் கார்டின் என்ற பெயரில் உணவகமாக மாறிவிட்டது. அதைப்பற்றிய பதிவு ஒன்றினை எனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன் பாருங்கள்.
http://vavuniyatamil.blogspot.com/2008/10/blog-post_31.html