Friday, June 11, 2010

தியேட்டர் - 3

ஏதோ ஒரு மருத்துவ இதழில் படித்தது. டிவி பார்க்கும்போது, எட்டு அடி தூரம் தள்ளி இருந்து பார்க்க வேண்டும் என்று. இல்லாவிட்டால், கண் கெட்டுபோய் விடுமாம். அதேபோல், படுத்துக்கிடந்து டிவி பார்க்கவே கூடாதாம். கண்ணுக்கு ஏதும் ப்ராப்ளம் என்றால், கண்ணாடி போட வேண்டி இருக்குமே, அது நம்ம முகத்துக்கு நல்லா இருக்காதே என்ற பயத்திலேயே, அந்த மருத்துவ அறிவுரைகளை ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.

இதனால் பள்ளிக்காலத்தில் தியேட்டர் செல்லும் போது, எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோமோ, அவ்வளவு நல்லது என்று கடைசி வரிசை இருக்கைக்கு செல்லவே விரும்புவேன். அதே சமயம், முதல் நாள் ரஜினி படம் பார்க்கிறேன் என்று கழுத்து வலிக்க முதல் இருக்கையில் இருந்து பார்த்ததும் உண்டு. மற்றபடி, அந்த நேரத்தில் அதிகம் விரும்பியது கடைசி வரிசைகளை. நிறைய பேர் அப்படிதான். இன்னும்.ஆனால், நான் மாறிவிட்டேன். தற்போது, உட்காரவிரும்பும் இடம் - 2/3 என்ற அளவில் ஸ்கிரினில் இருந்து தள்ளியிருக்கும் வரிசையில் நடு சீட். ஸ்கேல் எடுத்து அளந்து உக்காரவிட்டாலும், ஓரளவுக்கு இந்த கணக்கில் தான் உட்காருகிறேன். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

கடைசி வரிசையில் இருந்தால், தலைக்கு மேல் இருக்கும் டிடிஎஸ் ஸ்பீக்கரில் இருந்து வரும் சவுண்ட், அதற்கான எபெக்டை கொடுப்பதில்லை. வரிசையின் ஒரு ஓரத்தில் இருந்தால், அந்த பக்கமிருந்து வரும் சத்தம் சரியான அளவில் வருவதில்லை. இப்படி நடுவே இருந்தால் தான், சரவுண்ட் சவுண்ட்டின் அருமை தெரிகிறது. டிடிஎஸ் வந்த புதிதில், இதையெல்லாம் ரொம்பவும் கவனித்துக்கொண்டு இருப்பேன். சங்கமம் படத்தில் ஒரு கட்டையை பின்னால் எறிவது போன்ற ஒரு காட்சியில், தியேட்டரில் அனைவரும் பின்னாடி திரும்பி பார்த்தார்கள். சில்லறையை சிதறும் காட்சி இருந்தால், வித்யாசாகர் கலக்குவார். சிநேகிதியே, ரன், தூள் - இந்த படங்களில் எல்லாம் சில்லறையை சிதற விட்டு, தியேட்டரை சிலிர்க்க வைத்தார்.

டிடிஎஸ் வந்தபிறகு, தியேட்டர் ஆப்பரேட்டர்கள் தங்கள் திறமையை காட்டும் வாய்ப்பு குறைந்துவிட்டது. முன்பெல்லாம், படம் பார்ப்பதை பெரும் ஆர்வத்திற்குரிய விஷயமாக்குவதற்கு, நான் பார்த்த தியேட்டர்களில் ஆப்பரேட்டர்கள் தங்களால் முடிந்த வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். அரசியல் பஞ்ச் வசனம் என்றால், சவுண்டை கரெக்டாக அந்த இடத்தில் கொஞ்சம் கூட்டி வைப்பார்கள். இது அவரவர் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாறுபடும். எனக்கு பாட்ஷா, கேப்டன் பிரபாகரன், மக்களாட்சி எல்லாம் நினைவுக்கு வருகிறது. அச்சமயம் எழுந்த கைத்தட்டல் எல்லாம் நியாயமாக அந்த ஆப்பரேட்டர்களுக்கு செல்ல வேண்டியது.

பாடல் காட்சி என்றால், நடுவே வரும் இசைக்கு, இரு பக்கமிருக்கும் ஸ்பீக்கரையும் இசைக்க விட்டு விடுவார்கள். பாடகர்களின் குரலுக்கு, ஸ்கீரின் அருகே இருக்கும் ஸ்பீக்கர், இசைக்கு சுற்றி இருக்கும் ஸ்பீக்கர் என பல வித்தைகளை பலமாக காட்டுவார்கள். அதேபோல், சண்டைக்காட்சிகளுக்கு டீஷும், டூஷூம் மட்டும் சைடு ஸ்பீக்கரில் இருந்து வரும். திகில் காட்சிகளைப் பற்றி சொல்லவேண்டாம். சரியான நேரத்தில் சவுண்டை கூட்டி, மக்களை அலறவிடுவார்கள்.

சமீபகாலங்களில் இப்படி எந்தவிதமான வேலைகளையும், அவர்கள் செய்யவேண்டியதில்லாமல் போய்விட்டது. இருந்தும், தங்கள் ஆர்வத்தில் இவ்வாறு செயல்படும் ஆப்பரேட்டர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், இது தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு, சவுண்ட் இன்ஜினியரிங், சவுண்ட் மிக்ஸிங் என பல லேட்டஸ்ட் துறைகள் வந்துவிட்டன. ஸ்லம்டாக் மில்லினியர், ஒரு சுமாரான தியேட்டரில் தான் பார்த்தோம். வானத்தில் பறக்கும் விமானத்தை காட்டும் காட்சி ஒன்றில், முன்னால் வந்து உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த நண்பன், விமானம் பறக்கும் சத்தத்தை கேட்டு, அப்படியே பின்னால் சீட்டில் சாய்ந்தான். அந்த தியேட்டரிலேயே, இப்படி ஒரு சுழல வைக்கும் சவுண்ட் என்பது ஆச்சரியம் தான். ரசூல் பூக்குட்டிக்கு ஏன் ஆஸ்கர் கொடுத்தார்கள் என்று தெரிந்தது.ஒலி அமைப்பு, ரசிகனை சரியாக வந்து சேர, திரையரங்கின் அமைப்பு, ஸ்பீக்கர் அமைந்திருக்கும் நிலை, ஒலி அளவு போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கிறது. ரொம்ப பெரிய தியேட்டராக இருந்தாலும் நல்லதல்ல. ரொம்ப சிறியதாக இருந்தாலும் நல்லதல்ல. அதே போல், ஒலியின் அளவு அதிகமாக இருக்கும் போது, நுண்ணிய இசை துணுக்குக்களை கேட்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. போலவே, குறைவாக இருக்கும் போது, படத்தின் மேலான பீல் குறைந்துவிடுகிறது. இப்படி சரி நிலையில் அமைந்திருக்கும் திரையரங்குகள் குறைவு. உங்களுக்கு தெரிந்த சிறந்த திரையரங்குகளை குறிப்பிடலாம்.

நடுவே உட்கார்ந்து பார்ப்பதற்கு, இன்னொரு காரணம் - ரொம்ப தூரத்தில் இருந்து பார்த்தால், ஹோம் தியேட்டர் எபெக்ட் வந்துவிடுகிறது. அப்புறம் எதுக்கு தியேட்டர் வருகிறோம்? பிரமாண்டமா இருக்கவேண்டாம்? இதனாலேயே, சமயங்களில் இன்னும் கொஞ்சம் முன்னால் உட்கார தோணும்.

இந்த விஷயத்தில் சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் சரியாக இருக்கிறது. திரை பெரிதாக, திரையரங்கின் நீளம் குறைவாக, ஸ்கீரினின் பாதி உயரத்திற்கு சமமான உயரத்தில் அமர்ந்து படம் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது.

நான் இவ்வளவு சொன்னாலும், இன்னும் சிலருக்கு கடைசி சீட்டும், ஓர சீட்டும் விருப்பமானதாக இருப்பதை கண்டுக்கொண்டு தான் இருக்கிறேன். காரணம் தான் தெரியுமே?!

(தொடரும்)

.

12 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் இவ்வளவு சொன்னாலும், இன்னும் சிலருக்கு கடைசி சீட்டும், ஓர சீட்டும் விருப்பமானதாக இருப்பதை கண்டுக்கொண்டு தான் இருக்கிறேன். காரணம் தான் தெரியுமே?!//
அது என்ன சில பேருக்கு, சரவனகுமரனுக்குன்னு சொன்னா என்ன?

ciniposter said...

நல்ல பதிவு

www.ciniposters.com

ciniposter said...

நல்ல பதிவு.அருமை.

வாழ்த்துகளுடன்

bala
www.ciniposters.com

செ.சரவணக்குமார் said...

உணர்ந்து எழுதிய பதிவு.

டி.டி.எஸ் சவுண்ட் சிஸ்டம் வந்த புதிதில் தியேட்டரில் ஏற்பட்ட மாற்றங்களை அழகுற விவரித்துள்ளீர்கள். நானும்கூட அப்படி பின்னால் திரும்பிப் பார்த்தவன் தான். மேலும் தியேட்டர் ஆபரேட்டர்கள் பற்றி சொன்னதும் மிக்க சரியே.

தியேட்டர் ஆப்ரேட்டர்கள் பற்றியும் விரிவாக ஒரு இடுகை எழுதலாம்.

அருமை நண்பரே. தொடருங்கள்.

அன்புடன் நான் said...

நடுநிலையா இருக்கிறது நல்லதுதானே!!!

பகிர்வுக்கு நன்றிங்க.

Unknown said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Unknown said...

இதுல இவ்வளவு இருக்கா?

சரவணகுமரன் said...

யோவ் ரமேஷ்,

என்ன நினைச்சுக்கிட்ட என்னை பத்தி? :-)

சரவணகுமரன் said...

நன்றி சினிபோஸ்டர்

சரவணகுமரன் said...

நன்றி கருணாகரசு

சரவணகுமரன் said...

ஆமா செந்தில்

நட்புடன் ரமேஷ் said...

good on saravanakumar.