Monday, July 5, 2010

பாரத் பந்த் - இன்று பதிவு கிடையாது!

பெட்ரோல் விலை உயர்வை முன்னிட்டு, எதிர்கட்சிகளால் அறிவிக்கப்பட்டு, மக்களால் கொண்டாடப்பட்டு வரும் பாரத் பந்த்தை முன்னிட்டு இன்று பதிவு எதுவும் கிடையாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

அவ்வளவுதான் சொல்ல திட்டமிட்டு ஆரம்பித்தாலும், இன்னும் சில விஷயங்கள்...

பாஜக அழைப்புவிட்டிருக்கும் பந்த் என்பதால், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் பந்த் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. பெங்களூரில் மெடிக்கல் ஷாப் தவிர இதர கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பேச்சிலர் ரூம்களில் கஷ்டப்பட்டு ஹோட்டல் கண்டுபிடித்து, ரகசியமாக பார்சல் வாங்கி உணவருந்தினார்கள். கிச்சன் வசதி இல்லையென்றால் இவர்களுக்கு வேலை நிறுத்தத்துடன் உண்ணாவிரதமும்.

காலையில் சொற்ப அளவில் பஸ்கள் ஓடிக்கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் ஒன்றையும் காணவில்லை.ஒரு நல்ல விஷயம். எங்குமே சிக்னல் இல்லை. ஞாயிற்றுக்கிழமை கூட ஓயாமல் வேலை பார்க்கும் சிக்னல்கள் இன்று ரெஸ்ட் எடுத்தது. ஆரஞ்ச் விளக்கு மட்டும் கண்ணடித்துக் கொண்டிருந்தது. மையபகுதியான எம்.ஜி. ரோடு பக்கமிருக்கும் சிக்னல்கள் மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது.

ஒரு இடத்தில் சிகப்பு கொடியுடன் ஒரு கோஷ்டியும், இன்னொரு இடத்தில் காவி கொடியுடன் ஒரு கோஷ்டியும் ஆளே இல்லாத ரோட்டில் ஆர்ப்பாட்டிக்கொண்டிருந்தனர்.

போலீஸ் ஆங்காங்கே நின்று கண்காணித்துக்கொண்டிருந்தனர். யாராவது பிரச்சினை செய்கிறார்களா? என்று பார்த்தார்களா அல்லது யாராவது கடையை திறக்கிறார்களா? என்று பார்த்தார்களா என்று தெரியவில்லை.

ஆளே இல்லாத ரோட்டில் பைக் ஓட்டுவது சுகம். அதிலும் இன்று சிறிது நேரம் மழை தூற... வாவ்!

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம். பைக் வேலையை நிறுத்திவிட கூடாதென்று, பந்த் என்றும் கண்டுக்கொள்ளாமல் பெட்ரோல் போட வேண்டியிருந்தது. மடிவாளாவில் இருந்த பெட்ரோல் பங்க் மட்டும் திறந்திருந்ததை கண்டேன்.

கல்வி நிலையங்களுக்கும், பெரும்பாலான நிறுவனங்களும் இன்று விடுமுறை என்று வெள்ளியன்றே அறிவித்துவிட்டார்கள். மீதி நிறுவனங்கள், வாரயிறுதியில் மெயில் அனுப்பியும், மெசேஜ் அனுப்பியும் லீவு விட்டார்கள். சில நிறுவனங்கள் முக்கியமான, தேவையான இன்ஜினியர்களை ஞாயிறு இரவே ஆபிஸ் வந்து படுக்க சொல்லிவிட்டார்கள். பந்த் இந்திய அளவில் தானே? உலகளாவிய வேலை நிறுத்தமாக இருந்திருந்தால், அவர்களுக்கும் விடுமுறை கிடைத்திருக்கும்.

விடுமுறை என்று மகிழ்ச்சியாகவும் இருக்க முடியவில்லை. வரும் சனிக்கிழமை போக வேண்டுமாம். அப்புறம் என்ன வேலை நிறுத்தம்? வேலையை தள்ளி வைத்தல் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வீட்டில் இருந்து என்ன செய்ய? தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி பந்த்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால், சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவிக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளோ, சிறப்பு திரைப்படங்களோ இல்லை.

ஏடிஎம்களுக்கு வேலை நிறுத்தம் இல்லையென்பதால், பணமெடுக்க பிரச்சினை இல்லை. இம்மாதிரி எவ்வளவுக்கெவ்வளவு மனித வேலையை தானியங்கியாக மாற்றுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு வேலை நிறுத்ததால் வரும் பாதிப்பு குறையும்.

இன்று மாலை, பந்த் மாபெரும் வெற்றி என்று சொல்லுவார்கள். ஆனால், பெட்ரோல் விலை? அதே தான். லிட்டர் 58 ரூபாயும் சில்லறைகளும்.

.

7 comments:

Joseph said...

Last part is thool

எட்வின் said...

//இன்று மாலை, பந்த் மாபெரும் வெற்றி என்று சொல்லுவார்கள். ஆனால், பெட்ரோல் விலை? அதே தான். லிட்டர் 58 ரூபாயும் சில்லறைகளும்//

அரசியல்ல இதெல்லாம் சகஜமண்ணே. ஆளுங்கட்சிக்கு கூட்டுறது வேல. எதிர்கட்சிக்கு கத்துறது வேல... அவுங்க என்ன பண்ணாலும் அனுபவிக்க வேண்டியது சாமானியன் வேல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சன் டிவி, கலைஞர் டிவி, கே டிவிக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளோ, சிறப்பு திரைப்படங்களோ இல்லை.

///

ஏதாவது போட்டிருக்கலாம்

ராம்ஜி_யாஹூ said...

அருமையான முறையில் உங்கள் எதிர்ப்பை தேறிவிடு உள்ளீர்கள் அரசிற்கு.

Rs.1.00 குறைப்பேன் என்பார்கள், பாராளுமன்றம் இரு நாட்கள் ஒத்தி வைக்க படும் பின்பு 1.50 குறைப்பார்கள்.

நடை பாதை கடையில் விலை வைத்து பேரம் பேசுவது போலத் தான் இதுவும்.

சரவணகுமரன் said...

நன்றி ஜோசப்

சரவணகுமரன் said...

ஆமாங்க எட்வின்

சரவணகுமரன் said...

பக்கத்து மாநிலங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த தொலைக்காட்சிகள் நிகழ்ச்சி அமைக்க வேண்டும், ரமேஷ்.