Tuesday, August 3, 2010

டெல்லி”போன வாரம் பூனே போனது போல், இந்த வாரம் டெல்லி...” என்று கேட்பதற்குள் தலையாட்டிவிட்டேன். டெல்லி, ஒண்ணும் புரியாத வயசில் போனது. அவ்வப்போது நண்பர்களுடன் கேட்பேன். ’அந்த பக்கம் ஒரு ட்ரிப் போடுவோம்’ என்று. அதுவா வாய்க்கும்போது விட முடியுமா? பூனேயில் சொதப்பியதுபோல் டெல்லியில் ஆகிவிடக்கூடாது என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொண்டேன்.

ஆபிஸ் வேலைக்கு ரெண்டுநாள். நமக்கு ஒருநாள் என்பது ப்ளான். எதையும் ’ப்ளான்’ பண்ணி செய்யணும் இல்லையா?

இம்முறை இண்டியன் ஏர்லைன்ஸில் அனுப்பிவைத்தார்கள். அதில் பணிபுரியும் பாட்டிமார்களை காண ஆர்வமுடன் இருந்தேன். கிங்பிஷர் இளஞ்சிட்டுக்கள் பயணிகள் பெட்டிகளை தூக்கிப்போட்டு பந்தாடுவார்கள். பாட்டிகள் ஐடியாக்கள் மட்டும் கொடுத்தார்கள். பயணிகளும் அவர்களை துன்புறுத்தவில்லை. முதியோர் வன்கொடுமை சட்டம் பாய்ந்துவிட்டால் என்ன செய்ய? இந்த பாட்டிகள் இளம் வயதிலேயே பணியில் சேர்ந்து இப்போது வயதாகிவிட்டதா, இல்லை இந்த வயதில் தான் பணியில் சேர்கிறார்களா?

இம்முறை இரவு பயணம். மேலிருந்து பார்க்கையில், சோடியம் விளக்குகளால் நகரங்கள் தங்க துணுக்குகளாய் மினுமினுத்தது.

உடன் வந்திருந்த சிங் என்னை டாக்ஸியேத்தி ஹோட்டல் அனுப்பிவிட்டு பிறகு சென்றான்.

கிரேட்டர் நொய்டா செல்ல வேண்டியிருந்தது. உண்மையில் டெல்லி என்று சொல்லியிருக்கக் கூடாது. டெல்லிக்கு பக்கத்து ஊர். உபி மாநில ஹைடெக் நகரம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணம். வழியில் டிரைவர் ஹிந்தியில் ஏதேதோ கேட்டார். பெப்பப்பே என்ற எனது தொடர் பதில்களால், அதற்கு பிறகு எதுவும் கேட்கவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் அவருக்கும் வழி தெரியவில்லை. ஹோட்டலுக்கு போன் போட்டு, மொபைலை டிரைவருக்கு கொடுக்க, அவராகவே ஒரு முடிவுக்கு வந்தார்.

போகும் வழியில் CNG ஸ்டேஷனில் கேஸ் அடைத்துக்கொண்டார். இந்திரப்ரஸ்தா என்று பல இடங்களில் கடை திறந்து வைத்திருந்தார்கள். க்ரேட்டர் நொய்டாவில் அதில் தான் வண்டி ஓட்ட வேண்டுமாம்.

இரவு குளிர்ச்சியாக இல்லாமல், கதகதப்பாகவே இருந்தது. பெங்களூரில் போட்ட ஜெர்கின், வெக்கையை கூட்டியது. மழைக்கு பயந்து இதை சுமந்து சென்றேன். நல்லவேளை அடுத்த தினம் காலை, நான் எடுத்துசென்ற குடை, ஜெர்கின் போன்றவற்றுக்காகவே மழை பெய்தது.

மதியத்திற்கு மேல் மழை நிற்க, வேலையும் சீக்கிரம் முடிய, வெளியே செல்வது என்று முடிவானது. சென்னையில் இருந்து வந்த இரண்டு பேர் அங்கு நண்பர்களாக, ஒன்றாக எல்லோரும் வெளியே கிளம்பினோம். உடன் வந்த சிங், ஒரு சிங் தோழனை பிடித்துக்கொண்டு அவன் வழியில் சென்றான். இனம் அதனதன் இனங்களோடு சேர்ந்துக்கொண்டது.

எங்கெங்கு சென்றோம் என்பதை வரும் நாட்களில் சொல்கிறேன்.

.

2 comments:

BalHanuman said...

கலக்குங்க. எனக்குப் பிடித்ததே கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாத சரளமான உங்கள் நடை தான்.... இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

சரவணகுமரன் said...

நன்றி BalHanuman