Thursday, August 5, 2010

டெல்லி - அக்ஷர்தம்

நொய்டாவில் இருந்து டெல்லி செல்லும் வழியில் அக்ஷர்தம் இருக்கிறது. உலகின் பிரமாண்டமான இந்து கோவில் என்ற வர்ணனைகளுடன் வந்த மெயில் புகைப்படங்களை பார்த்து அசந்து போயிருந்தேன். அதற்காகவே போயிருந்தேன்.

அங்கே சென்றதும் முதல் ஏமாற்றம் - கேமரா உள்ளே எடுத்து செல்ல கூடாதாம். அது மட்டுமல்ல, பாதுகாப்பு காரணம் என்று சொல்லி பர்ஸை தவிர எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். உடல் முழுவதையும் தடவி பார்த்து, உள்ளே அனுப்புகிறார்கள்.பொருட்களை கொடுக்கும் இடத்தில் அங்கிருந்தவர் ‘நாம்?’ என்று கேட்க, நண்பர் அவருடைய பெயரை சொன்னார்.

“எப்படி பாஸு, உங்களுக்கு ஹிந்திலாம் தெரியுது?”

“யோவ்! ஹிந்தி கத்துக்க ஆரம்பிக்கிற எல்லோருக்கும் தெரியுறது இதுதான்யா - ‘துமாரா நாம் க்யா ஹே?’”

---

செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு சிலையையும் நின்று பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது. பக்தி, ஆன்மிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கலாரசனை இருந்தால் கண்டிப்பாக சென்று வரலாம்.நாம் பழங்காலத்து சிற்பங்களை பார்த்து அதிசயித்திருப்போம். முன்னோர்களின் திறமைகளை கண்டு ஆச்சர்யப்பட்டிருப்போம். ஆனால், தற்காலத்தில் உள்ள சிற்பக்கலைஞர்களுக்கு அவ்வாறு தங்கள் திறமையை காட்ட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அக்ஷர்தம் - அப்படி திறமையை காட்ட அமைந்த வாய்ப்பு என்று சொல்லலாம்.

நடுவே அமைந்திருக்கும் கூடத்தில் நடுநாயகமாக இருப்பவர் சுவாமி நாராயண் என்பவர். இவர் சாமி அல்ல. சாமியார். இவரை சுற்றி இன்னும் சில சாமியார்களும், அவர்களை சுற்றி ராமர், கிருஷ்ணர் போன்ற சாமிகளும் இருக்கிறார்கள். பாருங்க, சாமிகளோட நிலைமை அவ்வளவுதான்!

இந்த கூடத்தின் மேலே இருக்கும் டிசைன்களை பார்த்தால், வாயை பிளக்காமல் இருக்க முடியாது. அழகாக வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் என்று முடித்துவிடாமல் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணங்கள், பாய்ச்சப்பட்டிருக்கும் விளக்குக்கள் என மேலும், மேலும் மெருக்கேற்றியிருக்கிறார்கள்.

குறிப்பாக யானை சிற்பங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். யானை நிற்கும் கோணத்திற்கேற்ப, அதன் உடல் பாகங்களின் அசைவுகள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் யானை அதன் ஒரு காலை தூக்கி நிற்பது போன்ற சிற்பத்தில், காலுக்கு மேலே உள்ளிருக்கும் எலும்பு சிறிதளவு தோலைத்தள்ளியபடி இருக்குமாறு காட்டியிருந்தார்கள். அபாரம்.

---

கோயிலைப் பற்றி சின்ன கையேடு, புகைப்பட ஆல்பம் போன்றவற்றை ஒரு பெண் விற்றுக்கொண்டிருந்தார். நான் ஒன்று கேட்க, என் முகத்தை பார்த்து விட்டு,

”பிராந்திய மொழிகளிலும் இருக்கிறது, வேண்டுமா?” என்றார்.

சரியென்று சொல்லி, செம்மொழியில் வாங்கி வந்தேன்.

---

முப்பரிமாண படம், படகு பயணம், தோட்டம், உணவகம் என ஒரு தீம் பார்க்கிற்கு உரிய அனைத்து சங்கதிகளும் இருக்கிறது. நேர நெருக்கடியால் எல்லாவற்றுக்கும் செல்ல முடியவில்லை.

இவையனைத்தும் இங்கு இருப்பதால் தான், இது ‘உலகின் மிக பெரிய கோவில்’ என்று கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கிறது. இவைகளை கணக்கில் சேர்க்காவிட்டால், நம்மூர் மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆகியவை தான், இந்த சிறப்புக்கு தகுதியாக இருக்கும் என ஒரு பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இவை பற்றி மேலும் விவரங்களுக்கு,

ஆங்கில விக்கி
தமிழ் விக்கி
கோவிலின் அதிகாரபூர்வ தளம்

---

இங்கிருக்கும் டாய்லெட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். எதற்கு? பக்திமணம் கமழவேண்டும் என்பதற்கா? அது அங்கிருக்கும் வாடையுடன் கலந்து, ஒரு புதுவித நறுமணத்தை தந்துக்கொண்டிருந்தது.

என்னுடன் வந்த நண்பர், கோவிலைக் கண்டு ஆச்சரியப்பட்டதை விட வேறெதையோ கண்டு ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தார். அடிக்கடி எதையோ பார்த்து, “என்ன தான் சாப்பிடுவாங்களோ?” என்று சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று கேட்டால் தலையை குனிந்துக்கொள்வார்.

கோவில் எங்கும் சுத்தம்
என் மனதில் மட்டும் அசுத்தம்


என்று கவிதை மாதிரி எதையோ சொல்லி, ’புரிகிறதா?’ என்று வேறு கேட்டுக்கொண்டார்.

---

அடுத்ததாக ‘இந்தியா கேட்’ போகலாம் என்று ஒரு நண்பர் ஐடியா கொடுக்க, வெளியே வந்து ஒரு போலிஸ்காரர் துணையோடு ஆட்டோ பிடித்தோம்.எவ்ளோ தூரம், எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் தெரியாமலேயே சும்மானாச்சுக்கும் பேரம் பேசினோம். அறுபது ரூபாய் என்று முடிவாகி, இந்தியா கேட்டுக்கு படையெடுத்தோம்.

(தொடரும்)

.

6 comments:

Unknown said...

இரவில் கண்ணை அள்ளும் ஒளியுடன் காணவேண்டும் இக்கோவிலை....

துளசி கோபால் said...

நல்லா இருக்குதுங்க உங்க பதிவு. தொடர்ச்சிக்குக் காத்திருக்கேன்.

கொசுவத்தி ஏத்திட்டீங்களே!

நேஅம் இருக்கும்போது கொஞ்சம் பாருங்க.http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_16.html


http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_19.html

பழ. கார்த்தீஸ்வரன் said...

மீண்டும் ஒரு நல்ல பதிவு... மிகவும் யதார்த்தமான எழுத்துநடை என்னை வசீகரித்தது... உங்களது தொடர்சிக்காக காத்ருக்கிறேன்...!

நான் சென்ற பெப்ரவரி மாதம் சென்ற போது எனக்கு இதுபோல் ஒரு இடம் இருப்பது தெரியாமல் போய்விட்டது...
அடுத்தமுறை நிச்சயம் சென்று பார்த்துவிடுவது என உறுதி பூண்டுள்ளேன்...

சரவணகுமரன் said...

நேரமில்லாததால் இரவில் காண முடியவில்லை. அடுத்த பார்க்கலாம், கலாநேசன்.

சரவணகுமரன் said...

நன்றி துளசி அம்மா... உங்களுடையதை முன்பே படித்திருக்கிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்