Sunday, July 10, 2011

பாபநாசம்

என்னுடைய பால்ய கால நண்பன் ஒருவன் பேசினால், சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டே இருப்போம். டைமிங்கில் பின்னுவான். பள்ளி காலம் வரை ஒன்றாகவே சுற்றி வருவோம். கல்லூரிக்காலத்திற்கு பிறகு, நான் ஊர் செல்லும் போது மட்டும் சந்தித்து பேசுவோம். அவனுக்குள் ஒரு காதல் இருந்தது. கல்யாணம் பற்றி யோசிக்காத, சந்தோஷ தருணங்களை மட்டுமே கொண்ட காதல் அது. எல்லாம் நன்றாகவே சென்றுக்கொண்டிருந்தது.

ஒருமுறை நான் ஊர் சென்ற போது, அவன் ஆஸ்பத்திரியில் இருந்தான். அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷனுக்காக. அப்பெண்டிசிடிஸ் தானே? என்று பெரிதாக எங்களுக்குள் எந்த வருத்தமும் இருக்கவில்லை. அச்சமயம் நான் ஊரில் இருந்தவரை, மதியம் ஆஸ்பத்திரி சென்று அவனிடம் பேசிக்கொண்டிருப்பேன். வயிற்றில் வலி கடுமையாக இருந்தாலும், சிரித்து பேசிக் கொண்டிருப்போம்.

அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், அவனுடைய அம்மா ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். இந்த அப்பெண்டிசிடிஸ் தவிர, அவனிடம் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறதாம். ஏதோ மருத்துவ பெயரில் ஒரு நோயைச் சொன்னார்கள். ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரிக்கும் சிறுநீரகம், சிறுநீருடன் கழிவுகளை மட்டும் அனுப்பாமல், ரத்தத்தில் இருக்கும் உடலுக்கு தேவையான சமாச்சாரங்களையும் சேர்த்து அனுப்பும் குறைப்பாடு சம்பந்தப்பட்டது. என்னால் இதற்கு மேல் அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இப்பிரச்சினைக்கு மூலக்காரணம் என்று எதுவும் கிடையாது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத என் நண்பனுக்கு இப்பிரச்சினை வந்தது - கொடுமையானது.

அதன்பிறகு, ஏகப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்றார்கள். பத்திய உணவு மட்டுமே சாப்பிட்டு, மாத்திரைகள் எடுத்துக்கொண்டான். அவனுடைய அப்பாவின் ரிட்டயர்மெண்ட் பணம், மருத்துவத்திற்கே செலவானது. பின்பு, சென்னைக்கு குடி மாறினார்கள். பயணம் செய்ய முடியாததால், வேலைக்கும் அவனால் செல்ல முடியவில்லை.

எப்போதாவது போன் செய்வேன். அந்நிலையிலும் ஏதேனும் ஜோக் சொல்லி சிரிப்பான்.

ஒருநாள் அதிகாலை எங்கள் குருப்பில் இருக்கும் இன்னொரு நண்பன் போன் செய்தான். அதிகாலை போன், எப்போதும் கெட்ட செய்திகள் தான் கொண்டு வருமோ, என்னமோ! நான் தூக்கக்கலக்கத்தில் இருந்து சுதாரிப்பதற்குள், அந்த செய்தியைச் சொன்னான்.

அவன் இறந்துவிட்டான்.

---

எல்லாம் முடிந்து ஒரு வருடத்திற்குள், அவனுடைய குடும்பத்தில் சில காரணங்களுக்காக அவனுடைய தம்பிக்கு திருமணம் நிச்சயித்தார்கள். என் நண்பனுக்கு பிடித்த பாபநாசத்தில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள்.

அவனுக்கு ஏன் பாபநாசம் பிடித்தது என்று தெரியவில்லை. ஊரில் இருக்கும் போது, அடிக்கடி செல்வான். என்னுடைய மற்ற நண்பர்களும், அவனுடன் சென்றிருக்கிறார்கள். கடைசிக்காலத்திலும், அங்கு செல்ல விருப்பப்பட்டிருக்கிறான். ஆனால், ஆசை நிறைவேறவில்லை.

---

கல்யாணத்திற்கு முந்திய தினம், நான் பாபநாசத்தில் இறங்கிய போது, மணி பதினொன்று இருக்கும். கோவில் முன்னாடி தான், பஸ் ஸ்டாப். அந்நேரத்திற்கு யாருமே இல்லை. முன்னமே வந்து தங்கிய நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொன்னேன்.

லாட்ஜ் போன்ற ஒன்றில் அறைகள் எடுத்து தங்கியிருந்தார்கள். அறைகள் அனைத்தும் மட்டமாக இருந்தது. ஆனால், யாருக்கும் எதுவும் குறையாக தெரியவில்லை. இரவு வெளியே வராதீர்கள். காட்டு பன்றிகள் வரும் என்று வாட்ச்மேன் எச்சரித்திருந்தார். அறைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அன்றும் அவனைப் பற்றி தான் எங்கள் பேச்சு இருந்தது. இரவு நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

---

காலையில் திருமணம், கோவிலுக்கு அருகே இருக்கும் ஒரு மண்டபத்தில் நடந்தது. கோவிலுக்கு சென்று வந்து, திருமணத்தில் கலந்துக்கொண்டோம்.அங்கு ஒரு இறுக்கமான சூழலே இருந்தது. யாரும் சிரித்துக்கொள்ளவில்லை. கொண்டாட்ட மனவுணர்வு எங்கும் இல்லை. அப்படி ஒரு திருமணத்தை நான பார்த்தது கிடையாது.கலந்துவிட்டு வீடு திரும்பினோம்.

---

அங்கு எடுத்த புகைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், ஒரு இறுக்கமான உணர்வே தெரிகிறது. பசுமை, பழமை, நீரோட்டம், ஆட்டின் பார்வை என எல்லாவற்றிலும் சோகம் தெரிகிறது. இது எனக்கோ, எங்களுக்கோ மட்டுமானதாக இருக்கலாம். இதோ, அவை உங்கள் பார்வைக்கும்..

4 comments:

ஆர்வா said...

என்ன சொல்றதுன்னே தெரியலை.. ஆனா அந்த நண்பனோட நினைவுகளின் வலி எனக்குள்ளும் இன்னும் தாக்கிக்கொண்டு இருக்கிறது..

முரளிகண்ணன் said...

அந்த வலி ஊமை வலியாகவே இருக்கும். பகிர்ந்துகொள்கிறேன்

Anonymous said...

sorry about your friend. :(

Kartheeswaran said...

Romba Valichuchu inatha pathivai vasittha pothu... Nanbarkalin maraivu yenpathu nichayam vethanaikkuriyathu...