Friday, January 27, 2012

ஆந்திராவில் விஜய்

தெலுங்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவ்வப்போது தமிழக-ஆந்திர சினிமா விவகாரங்களை பகிர்ந்துக்கொள்வோம்.

தமிழில் வருவதில் பெரும்பாலான படங்கள் தெலுங்கில் சுட சுட டப் செய்யப்பட்டு விடுவதால், அவர்களுக்கு தமிழ்ப்படங்களைப் பற்றி தெரிந்திருக்கும். ஹீரோக்களை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.

ரஜினிக்கும், கமலுக்கும் எப்போதும் அங்கு மார்க்கெட் இருக்கும். தற்போதுள்ள ஹீரோக்களில் சூர்யா, கார்த்தி, ஜீவா ஆகியோருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. கஜினிக்கு பிறகு சூர்யாவின் அனைத்துப்படங்களும் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. கார்த்திக்கும் அப்படியே. ‘எனக்கு தெலுங்கு ஆடியன்ஸ் தான் பிடிக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு, இவருக்கு ஆந்திர மார்க்கெட் மீது கண். ’கோ’ தான் சென்ற வருடத்தின் உண்மையான ஹிட் என்றார் ஆந்திர நண்பர். அதற்கு பிறகு, ஜீவா நடித்த எல்லா படங்களையும் டப் செய்து வெளியிட்டுயிருக்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. நண்பன் வரை தமிழிலும் அவர் படம் எதுவும் தேறவில்லையே?

விஜய் படங்களோ, அஜித் படங்களோ அங்கு எடுபடுவதில்லை. அஜித்தின் கடைசி சூப்பர் ஹிட்டான ‘மங்காத்தா’, தமிழ் மீடியாக்களில் ஆந்திராவிலும் சூப்பர் ஹிட், சூப்பர் ஹிட் என்று சொல்லிக்கொண்டிருந்த போது, விசாரித்து பார்த்தேன். ப்ளாப் என்றார்கள்.

விஜய் படங்களை நியாயப்படி பார்த்தால் டப்பே செய்யக்கூடாது. முடியாது. எப்படியும் அங்கிருந்து தான், ரீமேக் செய்திருப்பார்கள். இருந்தாலும், சில படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுமாம். பார்த்துவிட்டு வந்து காமெடி செய்வார்கள்! (இந்த விஷயத்தில் தற்சமயம் இருக்கும் ஹீரோக்களில், கேரளத்தில் விஜய் தான் முன்னணி)

கீழிருக்கும் இந்த படத்தை கூர்ந்து கவனித்தாலே, விஜய்யின் தற்போதைய தெலுங்கு மாஸ் பற்றி தெரிந்துவிடும்!அலுவலகத்தில் எங்கள் அணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, விஜய் பற்றியோ, அவருடைய படங்கள் பற்றியோ பேச்சு வந்தால், ஒருவர் விடாமல் அனைவரும் கிண்டல், நக்கல் என்று இறங்கிவிடுவார்கள். என்னை தவிர. ஆனால், யாருக்கும் நான் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேனா, அல்லது, நானும் வேறு மாதிரி நக்கல் செய்கிறேனா என்று தெரியாது. எனக்கும் கூட!

அன்று தெலுங்கு நண்பன் (ஸ்நேகிதுடு) ஆடியோ வெளியீடு பார்த்துவிட்டு, ‘இனி ஆந்திராவில் விஜய்க்கும் ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்துவிடுவார்கள்’ என்று சொல்லி அவர்களை கடுப்பேற்றிக்கொண்டிருந்தேன். உள்ளுக்குள், “அய்யய்யோ! இதுவும் நடக்குமா?” என்று அவர்கள் நினைத்துக்கொண்டாலும், “ஷங்கருக்காக ஓடினாலும் ஓடலாம்” என்று சொல்லிக்கொண்டார்கள்.

ஜென்டில்மேனுக்கு பிறகு வந்த எல்லா ஷங்கர் படங்களுக்கும், அங்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை வந்த எல்லா ஷங்கர் படங்களும், அங்கு சூப்பர் ஹிட். தமிழில் ப்ளாப்பாகிய ‘பாய்ஸ்’ கூட தெலுங்கில் ஹிட். ‘அந்நியன்’ - தமிழை விட தெலுங்கில் பெரிய ஹிட். “முதல் முறையாக ஷங்கர் படம், தெலுங்கில் ப்ளாப்பாக போகிறது. அதுவும் விஜய்யினால்” என்று சொல்லிக்கொண்டார் தெலுங்கு நண்பர். நான் விடுவதாயில்லை. “உங்களுக்கு இன்னொரு மாஸ் ஸ்டார் தமிழ் நாட்டில் இருந்து கிடைத்துவிட்டார். என்ஜாய்” என்று வாழ்த்து தெரிவித்தேன்.

இந்த இடத்தில், இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். தெலுங்கு ஆடியன்ஸின் ரசனை, முழுக்க மாஸ் சம்பந்தப்பட்டது. கார்த்தியின் ‘தெலுங்கு ஆடியன்ஸ் பிடிக்கும்’ பேச்சில் கூட சொல்லியிருந்தார். தெலுங்கு ரசிகர்கள், எல்லா காட்சிகளிலும் கைதட்டி, விசிலடித்து ரசிப்பார்கள் என்று. (நல்லவேளை, கார்த்திக்கு ’பிடிக்குமளவுக்கு’ தமிழ் ரசிகர்கள் நடந்துக்கொள்ளாதது, நல்ல விஷயம் தான்!). நானும் இதுபற்றி, தெலுங்கு நண்பரிடம் ’அப்படியா?’ என்று விசாரித்தப்போது, ‘ஆமாய்யா!’ என்று சலித்துக்கொண்டார். விஜய்காந்த் டாப்பில் இருக்கும் போது, ‘நான் தமிழ் படங்களில் மட்டும் தான் நடிப்பேன்’ என்று சொன்னாலும், அவர் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மவுஸ் இருந்ததாம். குறிப்பாக, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்.

அதனால், விஜய்க்கான ஆந்திரா கதவு எந்நேரமும் திறந்துக்கொள்ள தயாராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. தளபதிக்கு தான் அதை தட்டி திறப்பதில் ஆர்வம் இல்லை போலும்! தமிழ்நாட்டு முதல்வரானாலே போதும் என்று நினைக்கிறாரோ என்னமோ! ஆந்திர முதல்வர், இந்திய பிரதமர் போன்ற பதவிகளைப் பற்றியெல்லாம் அவருடைய ரசிகர்கள், எஸ்.ஏ.சந்திரசேகரின் காதில் போட வேண்டும். (அப்படியாவது நாமெல்லாம் தப்பிப்போமா என்று பார்ப்போம்!)

நேற்று காரில் வந்துக்கொண்டிருந்த போது, தெலுங்கு நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். “இன்று ஸ்நேகிதுடு ரிலீஸ் ஆகிறது. ஷங்கர் படங்களிலேயே இதற்கு தான், ஆந்திராவில் எதிர்பார்ப்பு கம்மி. எல்லாம் விஜய்யால்”.

நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன். “பாருங்க. இன்றையில் இருந்து விஜய்க்கு ஆந்திராவில் எப்படி மாஸ் கூடுதுன்னு பாருங்க”.

பார்க்கலாம். விஜய்யின் ஆந்திர மாஸ் என்னவாகிறது என்று.

.

2 comments:

Sridharan said...

Venkat prabhu (via twitter) : Watched nanban in Telugu!!! Super response in Hyd!! Hearing super reports!!....

HotlinksIN.cm said...

விஜய்யின் நண்பன் தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகள்....