Tuesday, February 7, 2012

இணைய வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நானும்

முன்பு, டேப் ரிக்கார்டர், எம்பி3 ப்ளேயர், தொலைபேசி, செய்திதாள், தொலைக்காட்சி என்று ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொரு சாதனத்தை உபயோகித்து வந்தோம். இன்றும் வருகிறோம் என்றாலும், பலருக்கு எதற்கெடுத்தாலும் லேப்டாப், இண்டர்நெட் என்றாகிவிட்டது.

இப்பதிவும் இது சம்பந்தப்பட்டது தான்.

---வீட்டில் டிவி இருந்தாலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணும் வகையிலான கேபிள் இணைப்போ, டிஷ் இணைப்போ நான் வைத்திருக்கவில்லை. நம் ஊரில் காணும்வகையிலான ஒரே இணைப்பில் அனைத்து சானல்களும் வரும் வழிவகைகள் எனக்கு தெரிந்து இங்கு இல்லை. இணையத்தில் ஒரளவுக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் காண முடிவதால், அதற்கு மேல் யோசிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்றைய தினம், ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டவுடன், இணையத்தில் காணக்கிடைக்கிறது. இதுவும் ஒருவகையில் பைரஸி தான். ஆனால், இதற்கு தற்சமயம் எந்த எதிர்ப்பும் இல்லை. புதிய திரைப்படங்களை சுட சுட வழங்கும் இணையதளங்களில் தான், இந்நிகழ்ச்சிகளும் வகைவாரியாக சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளைக் காண வழியில்லாதவர்களுக்கு, பெரும்பேறாக இருப்பவை, இத்தளங்கள். ஒருவேளை, இந்தியாவில் இணைய தொழில்நுட்பமும், இணைய உபயோகிப்பும் நல்ல வளர்ச்சியை அடைந்தபிறகு, தொலைக்காட்சி நிறுவனங்கள் அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கும் என நினைக்கிறேன்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பர வருவாய் இருப்பதால், இதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், இது கேபிள் & டிடிஎச் நிறுவனங்களை பாதிக்க, இணைய தொலைக்காட்சி -இந்தியாவில் புது துறையாக காணப்படும்.

நிகழ்ச்சி, நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, அதன் இணைப்புகளை கொடுக்கும் தளங்கள் ஒருபக்கம் என்றால், நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் இணையத்தளங்கள், இன்னொரு பக்கம். உதாரணத்திற்கு, டிஜிடல் ஸ்ட்ரிம்ஸ் என்ற தளத்தை சொல்லலாம். ஏழு டாலருக்கு முப்பது நாட்களுக்கு லைவ்வாக டிவி பார்க்கலாம்.

இது தவிர, ரோக்கு என்றொரு சாதனம் இருக்கிறது. இணைய வழி வீடியோக்களை நமது தொலைக்காட்சியில் காண, இது வழிவகை செய்கிறது. சானல் லைவ் போன்ற தளங்கள் வழங்கும் தொலைக்காட்சி இணைப்பினை, இதன் மூலம் பெறலாம். கொஞ்சம் செலவு அதிகமாகும் என்றாலும், இணைய இணைப்பும், டிவியும், இந்த டப்பாவும் இருந்தால் போதும். கணினி இல்லாமல், இணையம் மூலம் டிவி, டிவியில் பார்க்கலாம்.

தற்சமயம் வரும் ப்ளு-ரே ப்ளேயர்களில், இணையத்துடன் இணைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால், யூ-ட்யூப் போன்ற தளங்களை இதன் மூலமே டிவியில் பார்த்துக்கொள்ளலாம்.

அப்புறம், கூகிள் டிவி என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. இப்படி போய்க்கொண்டே இருக்கும் போல! அதனால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

----

ஏதோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நான் தற்சமயம் பார்த்து வரும் தொலைக்காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பற்றி சொல்ல வந்தேன்.

பெரும்பாலான சமயம், புதிய தலைமுறையை அவர்களது தளத்தில் பார்த்து வருகிறேன். எனக்கு பிடித்திருக்கிறது. நம்மூருடன் தினசரி தொடர்பில் இருக்க, உதவிகரமாக இருக்கிறது. தரமான செய்திகளை, லைவ்வாக, முக்கியமாக இலவசமாக தருவதால், பாராட்டுக்கள்.

நேர்பட பேசு, புது புது அர்த்தங்கள் போன்ற நிகழ்ச்சிகள் காணக்கூடிய நேரத்தில் வருவதால், அடிக்கடி பார்ப்பேன். கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு, நண்பேண்டா போன்றவை காண விருப்பப்பட்டாலும், நேர சிக்கல் காரணமாக காணமுடிவதில்லை.

சனிக்கிழமையானால், அது இது எது. ஞாயிறானால், நீயா நானா, வாங்க சினிமா பத்தி பேசலாம், நாளைய இயக்குனர் போன்றவை பார்ப்பேன். திங்கள்கிழமை, மதன் டாக்ஸ்.

இது தவிர, பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்ப்பேன். அவ்வளவு தான்.

நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், அவற்றை இணையம் வழி காண, உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை பகிரலாம்.

.

8 comments:

haji mohamed said...

எல்லா சானல்களும் இலவசமாக பார்க்க http://livetvchannelsfree.in/ktv.html,கலைஞர் டிவி பார்க்க http://best-ptc-india.blogspot.com/2012_02_01_archive.html
அன்புடன்
ச.ஹஜ்ஜி முஹம்மது

haji mohamed said...

எல்லா சானல்களும் இலவசமாக http://livetvchannelsfree.in,கலைஞர் ட்வ் இலவசமாக பார்க்கhttp://best-ptc-india.blogspot.com/2012_02_01_archive.html
அன்புடன்
ச.ஹஜ்ஜி முஹம்மது

கவி அழகன் said...

Supper keep it up

Vetirmagal said...

அருமையான டிப்ஸ்! நன்றி.

ஆங்கில படங்கள் கணினியில் பார்க்க வழி உண்டா என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

ANBUTHIL said...

very good tips

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி ஹஜ்ஜி முஹம்மது.

சரவணகுமரன் said...

நன்றி கவி அழகன்

சரவணகுமரன் said...

நன்றி வெற்றிமகள்