Monday, July 23, 2012

ஷங்கர் vs ராஜமௌலி

தமிழ் தெலுங்கு படங்களை தொடரும் ரசிகர்களுக்குள் தற்போது எழுந்திருக்கும் கேள்வி. ஷங்கர் - ராஜமௌலி, இவர்களில் யார் பெஸ்ட்?

ஷங்கரை நமக்கு நன்றாக தெரியும். ராஜமௌலியை இப்போது தெரிந்திருக்கும். இருந்தாலும், கொஞ்சம் பேக்ரவுண்டுடன் ஆரம்பிப்போம்.
இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதுக்கட்டத்தில் தான் இருக்கிறார்கள். ராஜமௌலி சினிமாவுடன் சம்பந்தமுள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர். ஷங்கருக்கோ, அப்படி எந்த பின்புலமும் இல்லை. இருந்தாலும், ஷங்கரின் முதல் படம், ராஜமௌலியின் முதல் படம் வருவதற்கு எட்டு வருடங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது.

இருந்தாலும், அதன் பிறகு வேகமாக ஷங்கரின் பட எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் ராஜமௌலி. ஷங்கர், இதுவரை பதினொரு படங்களை இயக்கி இருக்கிறார்.  ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்திருப்பவை, ஒன்பது படங்கள். ஷங்கர் அளவுக்கு படமெடுக்க நேரமெடுக்காதது, இதற்கொரு காரணம்.

சக்சஸ் ரேட் என்று பார்த்தால், ராஜமௌலி தான் முன்னணி என்று சொல்ல வேண்டும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி படங்களே. ஷங்கர் கணக்கில் இரண்டு தோல்வி படங்கள் இருக்கின்றன. ஷங்கர் ஹிந்தியில் இயக்கிய தமிழ் முதல்வனின் ரீமேக்கான ‘நாயக்’கும், அதன் பிறகு தமிழில் இயக்கிய ‘பாய்ஸு’ம் ஷங்கருக்கு தோல்வியை காட்டிய படங்கள். இதில் பாய்ஸ் தெலுங்கில் வெற்றியே.

வெற்றி முதலில் இருந்தே இருவருக்கும் கிடைத்தாலும், வெற்றியின் பலனை முதலில் இருந்தே அனுபவித்தது ஷங்கர் தான். மூன்று படங்களுக்குள் இந்தியா முழுக்க அறிந்த இயக்குனராகியவர், ஷங்கர்.  ஆனால், மூன்று படங்களுக்கு பிறகு தான், ராஜமௌலி நல்ல இயக்குனராக அறியப்பட்டார்.

திறமைக்கான அங்கீகாரம், படத்தின் வெற்றியில் கிடைத்தாலும், இயக்குனரின் பங்காக ராஜமௌலி பெற்றது குறைவே. தனக்கான அங்கீகாரத்தை பெறவே, சில படங்களை அவர் எடுக்க வேண்டி இருக்கிறது. காமெடியனை ஹீரோவாக, ஈயை ஹீரோவாக என அவரது சில முயற்சிகள், இதற்கே போய்விடுகிறது.

ஷங்கர் அப்படியில்லாமல், ஆரம்பத்தில் இருந்தே சிறந்த இயக்குனராக மக்களிடமும், மற்ற மொழி திரைத்துறையினரிடமும் அறியப்படுகிறார். இதற்கு சில காரணங்களை கூறலாம். ரசிக கூட்டம் இல்லாத அர்ஜூன், பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்களை வைத்து ஆரம்ப ஹிட் கொடுத்து, பிறகு ரஜினி, கமல், விக்ரம் போன்றவர்களை இயக்கிய படங்களிலும் ஷங்கருக்கான எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் அதை பெருமளவு பூர்த்தி செய்தார். ராஜமௌலிக்கோ, ஏழு படங்களுக்கு பிறகு இதை நிருபிக்க வேண்டி வந்தது. அழுத்தமாக நிருபித்தும் விட்டார்.

ஷங்கரின் புகழுக்கு என்னென்ன காரணங்கள் என்று பார்க்கலாம். சமூக பிரச்சினை சார்ந்த கதைகள், பேண்டஸி கலந்த சுவாரஸ்யமான திரைக்கதை, கதைக்கேற்ற நடிகர்கள், நடிகர்களுக்கேற்ற காட்சியமைப்புகள், காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என சரிவிகிதத்தில் கமர்ஷியல் மசாலா, இவையனைத்திற்கும் மேல் புதிய தொழில்நுட்பங்களை சரியாக கையாள தெரிந்த முதல் இந்திய இயக்குனர் என்று ஷங்கரை கூறலாம். புது புது தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் என தமிழர்கள் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

இதில் ராஜமௌலி எவ்வாறு வேறுபடுகிறார்? இவர் படங்களின் கதையும், அதற்கு இவர் அமைக்கும் திரைக்கதைகளும் சுவாரஸ்யமானவையே. அனைத்துமே சரிவிகித மசாலா கொண்டவையே. ஆக்‌ஷன் காட்சிகள், இவருடைய கைவண்ணத்தில் இன்னும் ஸ்பெஷலானவை. ஹைப்பை கொஞ்ச கொஞ்சமாக கூட்டி, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மட்டுமில்லாமல், சுற்றியிருக்கும் அனைவரின் உணர்ச்சிகளையும் காட்சியில் கொண்டு வந்து, பார்க்கும் ரசிகனை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவதில் ராஜமௌலி வித்தகர். இவருடைய சமீபகால திரைப்படங்களில், தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.

சரி, இனி யார் எதில் முந்துகிறார்கள், சரிகிறார்கள் என்று பார்ப்போம். ஷங்கரின் ப்ளஸ் என்று சமூக பிரச்சினை சார்ந்த கதை & திரைக்கதையம்சத்தை தேர்ந்தெடுக்கும் திறனை சொல்லலாம். ஆனால், இதுவே இவருடைய மைனஸ் என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஒரே விதமான கதை/திரைக்கதை என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. அதற்கு அவரை மட்டும் குறைச்சொல்ல முடியாது. அவர் எடுக்கும் வேறுவிதமான கதையம்சம் கொண்ட கதைகள், சமூக நீதி போதனை கதைகள் கொண்ட படங்கள் அளவு வெற்றி பெறுவதில்லை. நிச்சய வெற்றி வேண்டி அவரும் வெற்றி பாதையையே தேர்ந்தெடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

ராஜமௌலி படங்கள் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கமர்ஷியல் மசாலா திரைப்படங்களே. சினிமாவில் நீதி சொல்ல வேண்டுமா? என்றால் அவசியமில்லை எனலாம். ஆனால், என்னை பொறுத்தவரை ஷங்கர் படங்கள் நாட்டில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து அட்லீஸ்ட் படம் பார்த்த ஒரிரண்டு நாட்களோ,  குறைந்தது படம் பார்க்கும் 3 மணி நேரத்திலோ சிந்திக்க தூண்டுபவை. இதனாலேயே, ரெகுலர் சினிமா ரசிகர்கள் தவிர மற்றவர்களின் கவனத்தை கவருபவை ஷங்கரின் படங்கள்.

ராஜமௌலி ப்ளஸ் என்ன? ஷங்கர் போல அல்லாமல், வேறு வேறு விதமான கதைகள். அனைத்தும் கமர்ஷியல் கதைகள் தான் என்றாலும், ரசிகனை கட்டிப்போடும் திரைக்கதை சூட்சமத்தை கொண்டவை. தொழில்நுட்பத்தை கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் ராஜமௌலி முன்னிலை பெறுகிறார். பிரமாண்ட செட், கலக்கல் கிராபிக்ஸ் எல்லாம் ஷங்கர் பெரும்பாலும் பாடலுக்கு மட்டுமே பயன்படுத்துவார். (எந்திரன் விதிவிலக்கு) ராஜமௌலியோ, தொழில்நுட்பம் தேவைப்படும் கதைகளிலேயே, தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஷங்கரின் தொழில்நுட்ப கூட்டணியும் பிரமாண்டமானவை. அன்றைய தேதியின் டாப் தொழில்நுட்ப கலைஞர்களை கூட்டணிக்கு அமைத்துக்கொண்டு, அவர்களின் பெஸ்ட்டை திரைக்கு கொண்டு வருவார். ராஜமௌலியோ, எப்போதும் ஒரே கூட்டணி. இதில் எது சரி, எது சிறப்பு என்று கூற முடியாது. ரசிகனுக்கு கிடைக்கும் ட்ரீட்டை கொண்டு மதிப்பிட்டால், நான் ஷங்கர் பக்கம்.

இவர்களுக்கு இருக்கும் மொழி தாண்டிய வரவேற்ப்பை பார்க்கலாம். ஷங்கருக்கு  முதல் படத்தில் இருந்தே தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முதல் படமே, ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டது.  அனைத்து படங்களுமே இந்திய அளவில் கவன ஈர்ப்பு பெற்றவை. ராஜமௌலியின் பெரும்பாலான படங்கள், மற்ற மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டாலும், இயக்குனராக அவர் அறியப்படுவது தற்சமயமே. ஷங்கர் படங்கள், அதிகமாக டப் செய்யப்படுகின்றன. ராஜமௌலி படங்கள், அதிகமாக ரீ-மேக் செய்யப்படுகிறது. இதை எப்படி கூறலாம் என்றால், மொழி தாண்டிய ரசனைக்குரிய அம்சங்கள் ஷங்கர் படங்களில் அதிகமாக இருக்கிறது எனலாம். அல்லது, ஷங்கர் படங்களை ரீ-மேக் செய்வது சிரமம் என்றோ, ஷங்கர் படங்கள் மற்ற மொழிகளுக்கு பொறுத்தமில்லாதது என்றோ கூறலாம். பொறுத்தமில்லாதது என்று என்னால் சொல்ல முடியாது.

ஒரு முடிவுக்கு வரலாம். யார் பெஸ்ட்? இந்த கேள்வி அவசியமில்லாதது என்றாலும், இப்படி ஒரு கேள்வி வந்தால்,  அதற்கு பதிலளிக்கும் முயற்சியே இப்பதிவு. இதுநாள் வரை, இருவரும் வெவ்வேறு களங்களில் இருந்ததால், இப்படி ஒரு கேள்வியை எழவில்லை. தற்போது, ராஜமௌலியும் ஷங்கரின் ஏரியாவான கிராபிக்ஸ் கலந்த பேண்டஸி கதைகளை எடுத்து தள்ளுவதால், இக்கேள்வி எழும்பியுள்ளது. கேள்விக்கான காரணமே, ஒரு வகையில் பதிலை சொல்லுகிறது. ஷங்கர், இந்த ஏரியாவில் முன்னோடி. ராஜமௌலி தற்போது ரேஸிற்கு வந்திருக்கிறார்.

இந்த களத்திலோ, அல்லது பொதுவான இயக்கத்திலோ, யார் சிறந்தவர் என்றால் அதற்கு இன்னும் சிறிது காலம் நாம் பொறுக்க வேண்டும்.

அதே சமயம், நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.  உழைப்பில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளதவர்கள் இருவரும். அவரவர் மொழி கமர்ஷியல் திரையுலகில், நம்பர் ஒன் இவர்கள் இருவரும். உடன் பணியாற்றியவர்கள் அனைவரும் மறுக்காமல் கூறுவது, இவர்கள் இருவரும் எந்நிலையிலும் தரையில் கால் பதித்தபடி இருக்கும் நல்ல மனிதர்கள்.

நீங்க என்ன சொல்றீங்க?

.

20 comments:

ஜெட்லி... said...

எனக்கு எந்திரன் ஷங்கர் படம் பார்த்த திருப்தி குடுக்கல....
'ஐ' படத்துல தெரிஞ்சுடும்....

கிஷோகர் said...

நியாயமான வாதம்! ஆனாலும் எனது ஓட்டு ராஜமௌலிக்கு தான்! காரணம் ஷங்கர் ஒரு "கொப்பி கற்" ( அது பாடலாகட்டும் சரி அல்லது காட்சிகளிலாகட்டும் சரி) , ஆனால் இது வரை நான் அறிய ராஜமௌலி மீது அது போன்ற எந்த விதமான குற்றச்சாட்டும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்பது அவரது ஒரு பிளஸ்!

அத்தோடு ஷங்கரது கிராபிக்ஸ் சில வேளை எரிச்சலை தரும் ( உதாரணம் எந்திரன் கிளைமாக்ஸ்) . தொடர்ந்து கிராபிக்ஸ் தந்து அலுப்பெடுப்பார் ஷங்கர். சில வேளை அது காட்சியுடன் ஒட்டாமலும் இருக்கும் ! ஆனால் மௌலியின் போக்கு இதுவரை அப்படி இல்லை!

அருமையான பதிவு ! தொடர்ந்து செல்ல வாழ்த்துகிறேன்!

JR Benedict II said...

ஷங்கர் மை சாய்ஸ்.. நல்ல அலசல்

Tamilanban said...

என்னை பொறுத்தவரையில் சங்கர்-ரை விட ராஜமௌலியே சிறந்தவர். சங்கர் இயக்கிய படங்களில் ஜென்ட்டில்மன் முதல்வன், இந்தியன் போன்றவை சிறந்த சமுக பார்வை கொண்டவை, மற்றவை அக்மார்க் மசாலா பெரிய கதாநாயகர்கள் இல்லையென்றால் இந்த படங்கள் கண்டிப்பாக ஓடி இருக்காது. ஆனால் ராஜமௌலி காமெடியனைவைத்து கூட மிக சிறப்பான வெற்றியை பெற்று இருக்கிறார். நிச்சயமாக சங்கர்-ரால் மகதீரா போன்ற படத்தை கொடுக்க முடியாது. எனக்கு தெரிந்து, கல்கியின் 'பொன்னியின் செல்வனை' எடுக்க தகுதியான நபர் ராஜமௌலி தான், எனது விருப்ப இயக்குனரான மணிரத்னம் கூட அல்ல.

ஜானகிராமன் said...

எனக்கு ராஜமௌலியை நான் ஈ படத்தில் தான் தெரியும். இதற்கு முன்பு மகதீரா பார்த்து வியந்திருந்தாலும் அதன் இயக்குனரை பற்றி அறியவில்லை. ஒரு இயக்குனரின் தனித்திறமை, படத்தின் வெற்றியை பற்றியதல்ல. அது தான் இயக்கும் படத்தில் ஒவ்வொறு ப்ரேமையும் நுணுக்கமாக செதுக்கிச் செல்லும் திறனும், பெரிய டீமை ஒருங்கிணைக்கும் பக்குவமும் தான். அந்த வகையில் இருவருமே சிறந்தவர்கள் தான் என்றாலும், இராஜமௌலியை ஒப்பிடும் போது சுஜாதா இல்லாத ஷங்கர் சற்று டொங்கலாகத் தான் தெரிகிறார். ஏ.ஆர்.ரகுமான் இல்லாவிட்டால் இன்னும் மோசமாகிவிடுவார். இராஜமௌலியால் ரஜினியை வைத்து இயக்கமுடியும். ஷங்கரால் அதிகம் அறியப்படாத அறிமுக நாயகர்களை வைத்து இந்த அளவுக்கு ஹிட் கொடுக்கமுடியுமா என்றால் சந்தேகமே... I vote for Rajamauli.

ஜானகிராமன் said...

எனக்கு ராஜமௌலியை நான் ஈ படத்தில் தான் தெரியும். இதற்கு முன்பு மகதீரா பார்த்து வியந்திருந்தாலும் அதன் இயக்குனரை பற்றி அறியவில்லை. ஒரு இயக்குனரின் தனித்திறமை, படத்தின் வெற்றியை பற்றியதல்ல. அது தான் இயக்கும் படத்தில் ஒவ்வொறு ப்ரேமையும் நுணுக்கமாக செதுக்கிச் செல்லும் திறனும், பெரிய டீமை ஒருங்கிணைக்கும் பக்குவமும் தான். அந்த வகையில் இருவருமே சிறந்தவர்கள் தான் என்றாலும், இராஜமௌலியை ஒப்பிடும் போது சுஜாதா இல்லாத ஷங்கர் சற்று டொங்கலாகத் தான் தெரிகிறார். ஏ.ஆர்.ரகுமான் இல்லாவிட்டால் இன்னும் மோசமாகிவிடுவார். இராஜமௌலியால் ரஜினியை வைத்து இயக்கமுடியும். ஷங்கரால் அதிகம் அறியப்படாத அறிமுக நாயகர்களை வைத்து இந்த அளவுக்கு ஹிட் கொடுக்கமுடியுமா என்றால் சந்தேகமே... I vote for Rajamauli.

திண்டுக்கல் தனபாலன் said...

இருவரையும் ஒப்பிட்டு நல்லதொரு அலசல்...
முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவர் சிறந்தவர்..
இருவரின் போட்டியால் நல்ல திரைப்படங்கள் கிடைத்தால் சரி !
நன்றி. (த.ம. 3)
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Anonymous said...

என் வாக்கு ராஜமௌலிக்கே. சங்கர் சமூக அக்கறை கொண்ட படங்களை எடுக்கிறார் என்பது, தப்பும் தவறுமாக அடித்தட்டு மக்களுக்கு தெரியாததை (உண்மையல்லாதவற்றை) காட்டுகிறார் என்று வேண்டுமானால் கூறலாம். அதனாலயே எனக்கு சங்கர் விரும்பமான இயக்கனர் கிடையாது (ஒப்பீட்டுக்கு முன்பே இக்காரணத்தால் எனக்கு அவர் விரும்பமான இயக்கனர் கிடையாது). தயாரிப்பாளர்கள் காசு வீணாக போவது என்பது சங்கரிடம் மிக மிக அதிகம். ராஜமௌலி தேவையில்லாமல் செலவு செய்பவர் அல்ல (தயாரிப்பாளருக்கு செலவு குறைவு). ராஜமௌலியை விட அவரிடம் திறமை குறைவு என்பதால் அல்ல, இன்னும் திறமையை சரியாக அவர் வெளிப்படுத்தியதில்லை. ஏ. ஆர். ரகுமான், ஐஸ்வர்யா பச்சன் இல்லாவிட்டால் அவர் இந்தியா முழுவதும் தெரிந்து இருப்பாரா என்பது பெருத்த ஐயத்திற்கு உரிய கேள்வி.

சரவணகுமரன் said...

வாங்க ஜெட்லி...

சரவணகுமரன் said...

நன்றி கிஷோர்.

தெலுங்கு சினிமா ரசிகர்கள், ராஜமௌலி மேல் சில குற்றசாட்டுக்கள் வைப்பதுண்டு. அதாவது, ஒன்றும் இல்லாத கதையை, ஒன்றிரண்டு காட்சிகளால் தூக்கி நிறுத்தி வெற்றியடைகிறார் என்பது ஒரு பிரிவினரின் குற்றசாட்டு. இத்தனை வெற்றி படங்கள் கொடுத்தும், அதில் ஒன்றும் க்ளாஸிக் என்று சொல்ல முடியாதபடி இருப்பது, அவர் மீதான மற்றொரு குற்றசாட்டு. அதாவது, படம் வெளிவந்து ஒரு ஆண்டிற்கு பிறகு, அதை திரும்ப காண்பது என்பது முடியாத விஷயம் என்கிறார்கள்.

ஷங்கரின் எந்திரன் இறுதி காட்சி கிராபிக்ஸ் எரிச்சலை கொடுத்தது என்பதில் நானும் உடன்படுகிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி ஹாரி பாட்டர்

சரவணகுமரன் said...

உண்மைதான் தமிழன்பன்.

பழைய அரச காலத்தை கண்முன் கொண்டு வந்து ராஜமௌலி நிருபித்திருக்கிறார்.

மணிரத்னமோ, அதை சமூக கதையாக மாற்றி தான் எடுப்பார்.

ஷங்கருக்கு அம்மாதிரி கதைகளில் விருப்பம் இருக்காது என்று நினைக்கிறேன்.

சரவணகுமரன் said...

ஜானகிராமன்,

ஷங்கர் பெரிய நாயகர்களை வைத்து ஹிட் கொடுப்பது, அவருடைய பலமா, பலவீனமா? ராஜமௌலி, இன்னும் உச்சநடிகர்களை வைத்து படம் இயக்கியதில்லை. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா போன்றவர்களும் தேக்கத்தில் இருந்த போதே, ராஜமௌலி இயக்கத்தில் நடித்து உச்சிக்கு சென்றனர்.

ராஜமௌலி, உச்சத்தில் இருக்கும் நடிகர்களை வைத்து எப்படி ஹேண்டில் செய்வார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சரவணகுமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

சரவணகுமரன் said...

பிரமாண்டமாக எடுக்கிறேன் என்று காசை தேவையில்லாமல் செலவழிப்பதில் ஷங்கர் தான் முன்னணி.

pudugaithendral said...

ஷங்கர் என்றாலே ப்ரம்மாண்டம் தான். ஆனால் ராஜமொளலிக்கு அப்படி இல்லை. காமெடியன் சுனிலை வைத்து மரியாதை ராமன்னா படம் சிம்பிளி சூப்பர். ஹைதையில் இருப்பதால் மட்டுமல்ல ராஜமொளலிக்குதான் என் ஓட்டு. அது அவரது திறமைக்காக.

Naresh Kumar said...

என் ஓட்டு ராஜ்மவுலிக்கே!

மகதீரா, மரியாதைராமண்ணா, விக்கிரம்க்டு ஆகிய படங்கள் எனக்கு தெலுன்ங் தெரியாமலே, இயக்குநரைப் பற்றி அறியாமலே பார்த்து வியந்த படங்கள்! அனித்தும் அல்டிமேட் மசாலாக்கள் என்றாலும், சிம்ப்ளி சூப்பர் கேட்டகிரியில் எளிதில் பொருந்துகின்றன!

எனக்கு ஏனோ சங்கர் படங்களைப் பார்க்கும் போது ஒருவித செயற்கைத்தன்மையாக தோன்றுகின்றன, பாலிவுட்டில், இந்தியாவில் நடக்கும் கதைச் எனச் சொல்லிக் கொண்டு முழுக்க வேறு எங்கோ இருக்கும் உணர்வை கொடுக்குமே அது போன்று...

சரவணகுமரன் said...

நன்றி புதுகைத்தென்றல்.

இதையும் பார்த்துடுங்க.

http://www.youtube.com/watch?v=ONsXC3cynEc

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ். எப்படி இருக்கீங்க?

சரவணகுமரன் said...

எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்களிடமும், தெலுங்கு நண்பர்களிடமும் பேசியதில் என்ன தெரிகிறது என்றால், தமிழர்களுக்கு அதிகமாக ஷங்கரை பிடிப்பதில்லை. தெலுங்கர்களுக்கு அதிகமாக ராஜமௌலியை பிடிப்பதில்லை.

இது இக்கரைக்கு அக்கரை பச்சை மாதிரியா?