Monday, August 13, 2012

ஐக்கியாவில் கொஞ்சம் ஐக்கியமாகலாம், வாங்க!

நான் டென்வர் வந்த புதிதில், அலுவலகம் செல்லும் வழியில், ஒரு பிரமாண்ட கட்டிடம் தயாராகிக்கொண்டிருந்தது. இந்த தேதியில் திறக்கப்போகிறோம் என்ற அறிவிப்புடன். எனக்கு அது என்ன கடை என்பதில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. எப்படி ஆறு மாதங்களுக்கு முன்பே, சொல்லிவைத்து ஒரு தேதியில் அவ்வளவு பெரிய கடையை தீர்மானமாக திறக்கப்போகிறார்கள் என்பதில் தான் ஆர்வம்.

ஆனால், சொல்லிவைத்த மாதிரியே திறந்தார்கள். அந்த கடை, ஐக்கியா (IKEA).

இங்குள்ள சாலைகளில், மின்னணு அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே இருக்கும். எங்காவது விபத்து ஏற்பட்டிருந்தாலோ, போக்குவரத்து நெரிசல் இருந்தாலோ அது பற்றிய தகவல்கள் வந்துக்கொண்டிருக்கும். (ஓசோன் பற்றிய ஒரு சுவாரஸ்ய அறிவிப்பை இன்னொரு பதிவில் சொல்லுகிறேன்).

அச்சமயம், ஐக்கியா திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே, அதில் அறிவிப்புகள் தொடங்கிவிட்டன.  நாளை ஐக்கியா திறக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கபடுவதால், வேறு வழிகளை பரிசீலிக்கவும் என்று அறிவிப்பு ஓடுகிறது. எனக்கு இது ஓவராகப்பட்டது. ஏனென்றால், அது ஸ்டேட் ஹைவே.  ஒரு வழி பாதையிலேயே, ஆறு லேன்கள் இருக்கும். இந்த கடை திறப்பதால், இவ்வளவு பெரிய சாலை நெரிசலாகுமா? என்று கேள்வி எழுந்தது.

ஆனால், உடன் வந்த நண்பருக்கு அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ட்ராபிக் இருக்கும் என்றார். இருந்தது.

---

என்னுடைய மேனேஜர் ஸ்வீடனை சேர்ந்தவர். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஐக்கியா நிறுவனம் மீது அவருக்கு பெரிய பெருமை இருந்தது. கடை திறந்த அன்று, நான் அலுவலகம் வர போவதில்லை என்றார்.

அவராவது பரவாயில்லை. வேறு நாட்டை சேர்ந்த சில அலுவலக உறுப்பினர்களும், அன்று அலுவலகம் வரவில்லை. சிலர் லேட்டாக வந்தார்கள்.

முதல் நாள் என்பதால், நிறைய டிஸ்கவுண்ட் கொடுப்பார்களாம். என்னடா இது, நம்மூரில் தான் டிஸ்கவுண்ட்டுக்கு டிமாண்ட் என்றால், இங்குமா? என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே, ஒரு பெரிய கேட்லாக் புத்தகம், ஊரில் இருந்த அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார்கள். சும்மா சொல்லக்கூடாது. புத்தகத்தின் தரம், அபாரம். வீட்டிற்கு அறை வடிவமைப்பு செய்ய உதவும் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.

---

இவ்வளவு பில்டப் இருந்தாலும், எனக்கு அந்த கடைக்கு செல்ல பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. ஏனென்றால், நான் அது கட்டில், அலமாரி போன்ற பெரிய பொருட்கள் விற்கும் கடை என்றே நினைத்து வைத்திருந்தேன்.

புதுகை தென்றல் அவர்கள் ஒரு பதிவில் ஐக்கியா பற்றி எழுதியிருந்தார்கள். அப்பொழுது தான், எனக்கு அந்த கடை மேல் ஒரு ஆர்வமே வந்தது.

அதன் பிறகு, அச்சமயம் நண்பருடன் ஒருமுறையும், சமீபத்தில் மனைவி, குழந்தையுடன் ஒருமுறையும் சென்று வந்துள்ளேன்.

---

இனி கடை பற்றி சில விஷயங்களும், பல புகைப்படங்களும்.

இரண்டே தளங்கள் தான், இந்த கடையில்.

ஒரு தளத்தில் ஷோரூம். இன்னொரு தளத்தில், பொருட் சந்தை.








ஷோரூம் தளத்தில், வீட்டின் அறைகளை விதவிதமாக வடிவமைத்து, பார்வைக்கு வைத்திருந்தார்கள். பார்த்து, தொட்டு, உட்கார்ந்து, படுத்து, ஒவ்வொரு பொருட்களையும் உணர்ந்து, பிறகு, கீழே இருக்கும் தளத்தில் சென்று அப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.





விலை உயர்ந்த படுக்கைகளை, வாங்க முடிகிறதோ, இல்லையோ, படுத்து பார்த்து அனுபவம் பெற்றுக்கொள்ளலாம்.



இப்படி, படுக்கை அறை, சமையலறை, படிக்கும் அறை, ஹால் என்று ஒவ்வொரு அறையையும், விதவிதமான வடிவமைப்பில் காண முடிந்தது.







எங்கே என்ன பார்க்கிறோம், எதை வாங்கலாம் என்று எண்ணுகிறோமோ, அதை பேப்பரில் எழுதி கொள்ளலாம். ஆங்காங்கே, பேப்பர், பென்சில் வைத்திருக்கிறார்கள்.




இது தவிர, பொருட்களை தேட, ஆங்காங்கே கணினிகள் இருக்கிறது.





கடையின் மேப்பும் ஆங்காங்கே இருக்கிறது. பேப்பர் மேப் தவிர, கூகிள் மேப்பில், இண்டோர் மேப் ஐக்கியாவிற்கு இருக்கிறது. மேலும், தகவலுக்கு இது.



நாங்கள், சில கிச்சன் ஐட்டங்கள் வாங்கினோம். பாப்பாவுக்கு சில பொம்மைகள் வாங்கினோம். வீட்டில் இருக்கும் ப்ளக் பாயிண்ட்களை அடைப்பதற்கு, ப்ளாஸ்டிக் அடைப்பான்கள் வாங்கினோம்.








விலை ரொம்பவும் மலிவு என்று சொல்ல முடியாது. ஐக்கியாவின் தரத்தை பார்த்தோமானால், விலை அதிகமில்லை என்று சொல்லலாம்.




வீட்டிற்கு தேவையான பொருட்கள் மட்டுமில்லாமல், ஒரு உணவகமும் இருக்கிறது. இங்கே ஸ்வீடன் ஸ்பெஷல் ஐட்டங்கள் கிடைக்கிறது. நேரமில்லாததால், என்னால் அங்கே செல்ல முடியவில்லை.

---

எதற்கு ஒரு கடையைப் பற்றிய பதிவு என்றால், ஒன்று ஒரு அனுபவ பகிர்விற்கு. இன்னொன்று, நம்மூர் கடை முதலாளிகளுக்கு, இம்மாதிரி கடைகளில் எம்மாதிரி சேவைகள் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுக்கவே, ஐக்கியா பற்றிய இப்பதிவு.

.

7 comments:

வடுவூர் குமார் said...

கூடிய விரைவில் இங்கும் (இந்தியாவுக்கும்) வரப்போகிறது.சிங்கை,துபாயிலும் இவர்கள் கடையை பார்த்திருக்கேன்.வடிவமைப்பு தான் என்னை கவர்ந்தது அதோடில்லாமல் DIY இருப்பதால் நாமே அமைத்துக்கொள்ளலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அசர வைக்கின்றன...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 1)

pudugaithendral said...

ரொம்ப சந்தோஷம்,

என் பதிவை படிச்சிட்டு ஐக்கியா போய் வந்து தங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

:)

Easy (EZ) Editorial Calendar said...

படங்கள் மிக நல்ல இருக்கு



நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சரவணகுமரன் said...

நன்றி வடுவூர் குமார்

சரவணகுமரன் said...

நன்றி புதுகைத் தென்றல்

சரவணகுமரன் said...

நன்றி ஜோசப்