Monday, August 27, 2012

இரவு நேர டிஸ்னிலேண்ட்

முந்திய பதிவின் தொடர்ச்சி.

ஆறு மணிக்கு அந்த படகு, நியூலேண்ட் பீச்சில் இருந்து கிளம்பும். டிஸ்னிலேண்ட்டில் இருந்து அந்த இடத்திற்கு செல்ல, அரை மணி நேரத்திற்குள்ளாக தான் ஆகும் என்று கூகிள் மேப்ஸ் சொல்லியது. இருந்தாலும், நாங்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே கிளம்பினோம்.

கொஞ்சம் தூரம் தான், வேகமாக செல்ல முடிந்தது. அதற்கு பிறகு, வரிசையாக டிராபிக் சிக்னல் இடைஞ்சல்கள். பிறகு, சாலை சிறிதாக மாற, வேகம் மேலும் குறைந்தது.

ஐந்தேமுக்காலுக்கு தான், அந்த ஏரியாவுக்கே சென்று சேர முடிந்தது. பிறகு, பார்க்கிங் பிரச்சினை. சுற்றி சுற்றி வந்து, எங்கும் இடம் கிடைக்காமல், பிறகு தற்காலிகமாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, நான் மட்டும் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றேன். அங்கு அவர்கள் ’இங்கிருந்து கிளம்பும் படகில் இடமில்லை. கொஞ்சம் தூரம் சென்றால், அங்கிருந்து இன்னொரு படகு கிளம்பும். அதில் சென்று கேளுங்கள்’ என்று சொன்னார்கள். ஆனால், அதுவும் ஆறு மணிக்கே கிளம்புமாம். மணியை பார்த்தேன். இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தது.

மேலும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. திரும்பவும் டிஸ்னிலேண்டே செல்ல முடிவெடுத்தேன். அங்கிருந்து கிளம்பும் போதே, கேட்டுவிட்டு தான் வந்திருந்தேன். நான் எடுத்திருந்த ஒருநாள் டிக்கெட் மூலம், இரவு பனிரெண்டு மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், அங்கு வந்து செல்லலாம் என்று சொல்லியிருந்தார்கள். ஹோட்டல் செல்லவும் அது தான் வழி என்பதால், வண்டியை திரும்ப அங்கே விட்டோம். கணிப்பு தவறியது, கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது.

போகும் வழியில் பசிக்க, அப்போது தான் மதியம் ஏதும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. காலையில் சாப்பிட, ஹோட்டலிலேயே ப்ரெக்பாஸ்ட் கொடுத்தார்கள். காபி, ப்ரெட், இனிப்பு பன், முட்டை, கெலாக்ஸ், ஓட்ஸ் இப்படிதான். அதை சாப்பிட்டுவிட்டு, பிறகு டிஸ்னிலேண்ட்டில் ஜூஸ் போன்றவை தான் குடித்திருந்தோம்.

அதனால் திரும்பவும், பர்கர், பிஸ்ஸா போன்றவற்றை சாப்பிடும் விரும்பமில்லை. ஏதேனும் சைனீஸ் ரெஸ்டாரெண்டிற்கு சென்றால், ரைஸ் சாப்பிடலாம் என்பதால், போகும்போதே, மொபைலில் ‘பாண்டா எக்ஸ்பிரஸ்’ என்று தேட, பக்கத்திலேயே காட்டியது. அங்கு சென்று சாப்பிட்டு விட்டு, திரும்பவும் டிஸ்னிலேண்ட் வந்து சேர்ந்தோம்.

இம்முறை டிஸ்னிலேண்ட் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.

கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை. இன்னும் பிசியாக இருந்தது. ஒவ்வொரு கடைக்குள்ளாக சென்று வந்தோம். ஒரு கடையில் ஆப்பிள் கேண்டி செய்வதை நின்று பார்த்தோம்.

மத்தியில் இருக்கும் டிஸ்னி மாளிகையின் முன்பு கூட்டம் சேர தொடங்கியது. நாங்களும் அங்கிருக்கும் சாலையோரத்தில் உட்கார்ந்தோம். பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள், பாப்பாவுக்கு நட்பானார்கள்.
ஒன்பது மணிவாக்கில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, வாண வேடிக்கையை தொடங்கினார்கள். ஒரு கதையை சொல்லிக்கொண்டு, அதற்கேற்ற இசையுடன் வானத்தில் ஒளி விளையாடியது. ஒளி சிதறல்கள் கொஞ்சம் கூட சலிக்கவில்லை. கூட்டம் அதற்கு மயங்கி அவ்வப்போது கைத்தட்டியது. உச்சக்கட்டத்தில் இசையை மீறியவாறு, ஒளி வெள்ளம் பல மடங்காக வானில் பெருகி நின்றது.


இந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு, கூட்டம் கலைய தொடங்கியது. ஆங்காங்கே கிடந்த குப்பைகளை, டிஸ்னி பணியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ள தொடங்கினார்கள். எப்போதும் டிஸ்னிலேண்ட் பளிச்சென்று இருக்க, இவர்கள் தான் காரணம்.நாங்கள் இன்னொரு ரவுண்ட் கிளம்பினோம். அப்படியே, எனக்கு சோர்வில் தூக்கம் வர தொடங்கியது. தூங்காமல் ஒழுங்காக கார் ஓட்டிவிடுவேனா என்றொரு குழப்பம் வேறு வர, கிளம்பலாம் என்று முடிவெடுத்தோம்.
காரில் ஏறி உட்கார்ந்தவுடன், வந்த தூக்கம் பறந்தோடியது. ரூமிற்கு சென்று சேர, இரவு பனிரெண்டரை ஆகிவிட்டது. லேட்டாக சாப்பிட்டிருந்ததால், வேறு எதுவும் உண்ணவில்லை. அடுத்த நாள், யுனிவர்சல் ஸ்டுடியோஸ் செல்வதாக திட்டம். அதற்கு முன்பு, இன்னும் இரண்டு இடத்திற்கு செல்லவும் திட்டமிருந்தது.

சீக்கிரம் எழ வேண்டியிருந்ததால், அசதியில் சீக்கிரமே உறங்கி போனோம்.

.

6 comments:

துளசி கோபால் said...

அங்கே குளக்கரையில் ஒரு லேஸர் ஷோ நடக்குமே அதைப் பார்த்தீர்களா?

பரேடு எப்படி இருந்துச்சு? அருமை இல்லே!!!!

இராஜராஜேஸ்வரி said...

டிஸ்னிலேண்ட் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.

ஒரு கதையை சொல்லிக்கொண்டு, அதற்கேற்ற இசையுடன் வானத்தில் ஒளி விளையாடியது. ஒளி சிதறல்கள் கொஞ்சம் கூட சலிக்கவில்லை.

சலிக்காத அருமையான பகிர்வுகளும் படங்களும்.. பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும், விளக்கங்களும் மிகவும் அருமை...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...(TM 1)

சரவணகுமரன் said...

குளக்கரை லேஸர் ஷோ பார்க்கவில்லை. அது அட்வெஞ்சர் பார்க்கில் தானே?

பரேடு நன்றாக இருந்தது.

சரவணகுமரன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி

bandhu said...

Fast Pass உபயோகித்தீர்களா? very useful!