Wednesday, October 17, 2012

இங்கிலிஷ் விங்கிலிஷ்

இதுவும் பட விமர்சனமல்ல. படம் பார்த்த அனுபவமுமல்ல. எனக்கு இங்கிலிஷுடனான தொடர்பு பற்றிய பதிவு. படத்தை பற்றி முடிவில் கொஞ்சம்.

நான் படித்தது முழுக்க மெட்ரிக்குலேஷன் என்றாலும், பள்ளியை விட்டு வெளியே வரும் வரை, ஆங்கிலத்தில் உரையாடியதே கிடையாது. மூன்றாம் வகுப்பில் தான், ஏபிசிடியை முழுதாக மனப்பாடம் செய்தேன். எங்கள் பள்ளியிலும் ஆங்கில கண்டிப்பாக பேச வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. அதுவே எங்கள் ஊரில் இருக்கும் ஹோலி க்ராஸ் என்னும் பெண்கள் பள்ளியில் நேரெதிர் சட்டத்திட்டங்கள். ரோட்டில் போகும் போது கூட, ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதனாலேயே, அப்பள்ளியில் படிக்கும் பெண்கள், ஹோலி ஏஞ்சல்ஸ் போல் போய் வந்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படி ஆங்கிலம் பேசாமல் வளர்ந்த வளர்ப்பு, ஆங்கிலம் என்றாலே கசக்க வைத்தது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டில் ஆங்கிலம் ஒரு வகுப்பு இருக்கும். முதல் வகுப்பிலேயே, எங்களுக்கு வந்த ப்ரபசர், ஒரு திட்டம் சொன்னார். அதாவது, ஒவ்வொரு மாணவரும் ஒருநாள் ஒரு தலைப்பில் பேச வேண்டும். முக்கியமாக, ஆங்கிலத்தில் பேச வேண்டும். சீட்டு குலுக்கி போட்டு, ஒரு நம்பர் எடுக்க, முதல் நம்பரே என் ரோல் நம்பர். தலைப்பிற்கு இன்னொரு சீட்டு குலுக்கல். வந்த தலைப்பு - டிஸ்சிப்ளின்.

என்ன பேசினேன் என்று தெரியாது. தத்தக்காபித்தக்காவென்று ஏதோ உளறிக்கொட்டினேன். தயாராக நேரம் கொடுக்காததால், உளறினேன் என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் கொடுத்தாலும், அப்படி தான் உளறியிருப்பேன் என்பது எனக்கு தான் தெரியும்.

முதல் நாளே, எனது முறை முடிந்ததால், அதற்கு பிறகு மற்றவர்கள் படும் பாட்டை ஜாலியாக  பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த தொல்லைக்காகவே, பேப்பர் ப்ரசண்டேஷன் எதற்கும் சென்றது இல்லை. இறுதியாண்டு ப்ராஜக்ட் ப்ரசண்டேஷனில் எங்கள் அணிக்குள் யார் என்ன பேச வேண்டும் என்று பேசி வைத்து, பிறகு அதை பேசி சமாளித்தேன்.

வேலை தேடும் காலத்தில் தான், ஆங்கிலத்தின் அருமை புரிந்தது. நான் போன  முதல் வேலைக்கான தேர்வில் இருந்தே, எழுத்து முறையிலான முதல் கட்ட தேர்வில் தேர்ச்சியடைய தொடங்கினேன். நேர்முக தேர்விலும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துக்கொண்டிருந்தேன். இதிலும் கடைசிக்கட்ட நேர்காணலிலும் பிற கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தான், தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தினால் சொதப்பிக்கொண்டிருந்தேன். ஒரே ஒருமுறை மட்டும், ஒரு நிறுவனத்தில் குரூப் டிஸ்கஷனில் கலந்துக்கொண்டு, ‘யாரடி நீ மோகினி’ தனுஷ் போல் ‘ஆ... ஊ...’ என்று நான் ஏதாவது சொல்ல தொடங்க, மற்றவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் சண்டைப்போட்டு கொண்டு இருந்தார்கள். எனக்கு இப்படி அடித்துக்கொள்வது பிடிக்காததால் விட்டுவிட்டேன்!!!

அதன் பிறகு, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதை கற்க தொடங்கினேன். பள்ளியில் படித்த போது வாங்கிய ரென் & மார்ட்டின் என்னும் புத்தகம், அப்படியே புதிதாக இருக்க, அதில் அடிப்படைகளை (இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்) வாசித்து ரிப்ரெஷ் செய்தேன். ஆங்கில பத்திரிக்கைகளை எப்போதுமே ஒரு பார்வை பார்ப்பேன் என்றாலும், அப்போது கூர்ந்து வாசிக்க தொடங்கினேன். ’டைம்ஸ் ஆப் இந்தியா’ என்னும் குஜால் பத்திரிக்கையை படித்தால் நல்ல ஆங்கிலம் தெரிந்துக்கொள்ள முடியாது. ஹிந்து ஓகே என்று பலர் சொன்னார்கள் அப்போது.

நான் தான் இப்படி. என் தந்தை ஆங்கிலத்தில் பொளந்துக்கட்டுவார். இந்த காலத்திலும் கடிதங்கள் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்கள், அவ்வளவு ப்ரொபஷனலாக இருக்கும். எதற்கெடுத்தாலும், ஒரு லெட்டர் எழுதிவிடுவார். ஹிந்துக்கு வாசகர் கடிதம் போடும் ஆள். பேங்கில் போய் பணம் கட்டினால், அதனுடனேயே ஒரு கடிதம் எழுதி, அதில் மேனேஜர் கையெழுத்தை வாங்கி வைத்துக்கொள்வார். ஏதாவது ஒரு அதிகாரி இதை இப்படி செய்தால் இப்படி ஆகும், அப்படி செய்தால் அப்படி ஆகும் என்று கூறினால், ஒரு உத்தரவாதத்திற்கு, அதையே கடிதமாக எழுதி, அவரை கையெழுத்து போட சொல்வார். அப்படி அவர் எழுதும் கடிதங்களை சுமாராக ஆங்கிலம் தெரிந்தவர்கள், ஒரு டிக்‌ஷனரியுடன் படித்தால் தான் புரியாத சில வார்த்தைகளை புரிந்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தும், நான் ‘பீட்டராக’ இல்லாமல், தமிழ் குமரனாகவே இருந்தேன். (அதற்காக தமிழிலும் புலமை பெற்றவன் என்று சொல்லமுடியாது. ஒற்றுப்பிழைகளைக் கவனிங்கள்!!!)

பிறகு, என்டிடிவி ஆங்கில செய்திகளைத் தினமும் பார்ப்பேன். ப்ரணாய் ராய் வாசிப்பது பிடிக்கும். ரொம்ப கேஷுவலாக சிம்பிள் ஆங்கிலமாக தான் இருக்கும். ஆங்கிலத்தில், நண்பர்களுக்குள் டம்மி இண்டர்வியூக்கள் நடத்திப்பார்த்தோம். இருந்தாலும், ஆங்கிலத்தின் மேலான தயக்கம் அப்படியே இருந்தது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர், ஆங்கிலம் - ஒரு தொடர்புக்கான மொழிதான் - என்று ஒருநாள் கொடுத்த ஊக்கமிக்க பேச்சு, கொஞ்சம் வேலை செய்தது. தப்பாக பேசினாலும், அதை தைரியமாக பேச தொடங்கினேன். வேலையும் சீக்கிரமே கிடைத்தது.

வேலைக்கு போன பிறகு, ஆங்கிலத்தில் பேச வேண்டுமே? முதலில் டீமுடன் அவ்வப்போது ஏதாவது பேச வேண்டுமே? அன்றன்றைக்கு செய்திகளில் வரும் சுவாரஸ்ய செய்தியை வாசித்துவிட்டு போய் புகைய விடுவேன். சமயங்களில் அது பத்திக்கொண்டு எறியும்.

ஆரம்பத்தில் வெளிநாடு போக பெரிதும் ஆர்வமில்லாததற்கு, ஆங்கிலமும் ஒரு காரணமாக இருந்தது. பிறகு வந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வெளிநாடு வந்தாலும், ஆங்கிலம் அப்படியே தான் இருக்கிறது. சரளமாக அரை மணி நேரம் எல்லாம் பேச முடியாது. நடுநடுவில், சில வார்த்தைகள் சரியாக வராமல், மாற்று வார்த்தைகளைப் போட்டு சமாளிப்பேன்.

என்னை பொறுத்தவரை, ஆங்கிலம் ஒரு தொடர்புக்கான மொழி என்பதால், அதை ஸ்டைலாக பேச முயலுவதே இல்லை. ஜஸ்ட் பேசிக் இங்கிலிஷ் தான். சரியாக கம்யூனிகேட் செய்ய வேண்டும் என்பதற்காக, எதையுமே முதலில் டாகுமெண்ட், ஈமெயில் என்று எழுத்தில் கொண்டு வருவேன். ஒரு கோர்வை இருக்க வேண்டும் என்பதற்காக, சரியான தகவல்களுடன் ஆரம்பிக்க, எங்கிருந்தோ ஆரம்பித்து மெனக்கெடுவேன். சொல்ல வந்ததில் பெரும் பகுதியை சுலபமாக சொல்லிவிடலாம் என்பதால், பல படங்களைப் போட்டு தள்ளுவேன்.

இதற்கு மேலே ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஒன்றை எழுதும்போது, யார் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு என்ன கேள்வி எழும் என்று நினைக்க தோன்றும். அதற்கெல்லாம் பதிலை ஆங்காங்கே எழுதிவிட்டு போவேன். இதற்கு பெரிதும் உதவியது, இந்த ப்ளாக் தான்.சாதாரணமாக இங்கே எதையும் எழுதிவிட்டு போய் விட முடியாது. எதை எழுதினாலும் கவனமாக எழுத வேண்டும். அதற்கு பயிற்சியளித்தது, இணையத்தில் எழுதியது தான்.

இதற்காகவே, என்னைப்பொறுத்தவரை என் ஆங்கிலம் நொண்டியடிப்பதாக எனக்கு தோன்றினாலும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த க்ளையண்டுகள் உள்பட, பலர் எனக்கு நல்ல கம்யூனிகேஷன் என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள். அப்படியே பொழப்ப ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.

சிலர் நவீனமாக பேசுகிறேன் என்று வாயை ‘நாணி கோணி’ பேசும்போது, போலியாக தோன்றும். அது அவரவர் ஸ்டைல் என்று நினைத்துக்கொண்டு, ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடுவேன்.

பேசும் விஷயத்தில் ஸ்ட்ராங்காக இருந்தோமானால், ஆங்கிலம் ஒன்றுமே இல்லை என்பது தான் இதுவரை நான் கற்றுக்கொண்டது.

...

இனி லைட்டா படம் பார்த்த கதை.



இங்கு சண்டே மலிவு விலை டிக்கெட் என்பதாலும், படம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டியது என்று பலர் கூற கேட்டதாலும், போன வாரம் சண்டே ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ சென்றேன்.

படத்தைப் பற்றி கூற வேண்டுமானால், எல்லோரும் கூறியது தான். பீல் குட் பிலிம். விதவிதமான சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் உள்ள க்ளாஸ் என்பதால், நல்ல டைம் பாஸ். செண்டிமெண்ட், குடும்பத்திற்கான நீதி போதனை போன்றவை இருப்பதால், நல்ல படம் பார்த்த உணர்வும் கிடைக்கிறது. குடும்பத்தில் லவ்வும், ரெஸ்பெக்ட்டும் முக்கியம் என்று கதையின் நாயகி ஸ்ரீதேவி முடிவில் கூறுகிறார். இதற்கு அடிப்படையான ’அண்டர்ஸ்டாண்டிங்’கும் முக்கியம் என்பதையும் இயக்குனர் சொல்லியிருக்கலாம். (இது ஒரு புது வியாதி. டைரக்டர் ஒரு மாதிரி எடுத்தால், அதை அப்படி எடுத்திருக்கலாம். நான் வேறு மாதிரி எடுப்பேன் என்று சொல்வது!!!)

ஏன் இந்த படத்தை பற்றி யாரும் இன்னமும், ஆணாதிக்கம், பெண்ணடிமை, அமெரிக்க கோர முகம், இந்திய அடிமைத்தனம் என்றெல்லாம் எழுதவில்லை என்று தெரியவில்லை. யாராவது எழுதியிருந்தால் சொல்லவும். படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்!!!

 இந்தி பதிப்பில் ஸ்ரீதேவி அமிதாப்புடன் ப்ளைட்டில் ஒயின் குடிக்கிறார். தமிழில் இல்லை. அஜித் வாழ்க!

இந்த படத்தில் நடித்த பல பேரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எந்தெந்த படங்களில் என்று தான் தெரியவில்லை.

சப் டைட்டில் இல்லாவிட்டாலே, இந்த படம் புரியும் என்றாலும், சப் டைட்டிலுடன் திரையிட்டதால், வரி தவறாமல் படத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதே நிலை தொடருமானால், ஹிந்தி படங்களின் விமர்சனங்களை இந்த தளத்தில் நீங்கள் காணும் அபாயம் நேரலாம்.

.

4 comments:

sakthipriya said...

athe same than
pesarathu oralvuku purinjalum answer panarathu rommmmba kastam pa entha english

priyamudanprabu said...

ஆம்,ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழிதான் என்ற நினைப்பு வந்தால் மட்டுமே நம்மால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தை சரியாக பேசமுடியும்.. நல்ல பதிவு.. சிங்கபூரில் தனி ஆங்கிலம்..இங்கே பொதுவாக தாய்மொழி தவிர மற்ற மொழிகளை தொடர்புமொழியாய் மட்டுமே மக்கள் பார்ப்பதால் எந்த சிக்கலும் இல்லை

ஹாலிவுட்ரசிகன் said...

ஹாலிவுட்ரசிகன்னு பெயர் இருந்தததுக்கு நானும் ஒண்ணும் பீட்டர் இல்ல. பேசும் போது நமக்கும் கொஞ்சம் ரைட் லெஃப்ட் வாங்கும்.

நானும் அந்தப் படம் பற்றி எழுதியிருக்கேன். முடிஞ்சா வாசிச்சுட்டு கருத்தைச் சொல்லுங்க தல. :)

http://hollywoodrasigan.blogspot.com/2012/10/english-vinglish-2012.html

Anonymous said...

ஆங்கிலத்துடன் உங்கள் போராட்டம் சுவையாக இருந்தது. உங்கள் பார்வைக்கு இதோ இந்தப் படத்தைப் பற்றிய இன்னொரு விமர்சனம்...

http://solvanam.com/?p=22482