Wednesday, October 1, 2014

பணியிடத்து ஃபன்

ஆன்சைட் வேலையின் சிறப்பம்சங்கள் (சம்பளத்தை விடுங்க!!) - நேரடியாக க்ளையண்ட் எனப்படும் மென்பொருள் பயனர்களுடமும், நிர்வாகிகளுடமும் இணைந்து பணியாற்றலாம் , அவர்களின் எதிர்ப்பார்ப்பைப்  புரிந்து கொள்ளலாம், எழுதிய மென்கோடுகள் பயனில் இருப்பதை காணலாம், எழுதிய தவறுகள் ஏற்படுத்தும் பாதிப்பைப் பார்க்கலாம், பாதிப்பை ரியல்டைமில் சரி செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

அப்படி கிடைத்த அனுபவம் ஒன்று இது.

அது ஒரு வெப் அப்ளிகேஷன். அதை பயன்படுத்தும் குழு, சில தேவைகளை கூறியிருந்தார்கள். நாங்களும் அதை செய்து முடித்துவிட்டோம். என்ன செய்தோம்? (மென்பொருள் அனுபவஸ்தர்கள் அடுத்த பாரா செல்லலாம்.)

Development, Testing, Production - என்று ஒரு மென்பொருள் பல சூழலில் ஓடிக்கொண்டிருக்கும். இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். Local, preproduction என்று இன்னும் பல அடுக்குகள் இருக்கும். வேறு வேறு பெயர்கள் இருக்கும். மாற்றங்களை முதலில் local அல்லது development சூழலில் செய்வார்கள். பிறகு, சோதனை செய்ய testing  சூழலுக்கு கொண்டு செல்வார்கள். முழுமையான பரிசோதனைக்கு பிறகு, production செல்லும். Productionஇல் போடும்போது இன்னும் சில பல பரிசோதனைகள் இருக்கும். இது பெரும்பாலும் பயனர்கள் யாரும் இல்லாத சாயங்கால, இரவு நேரங்களில் நடைபெறும்.

அப்படி ஒரு பொன் மாலை பொழுது. அப்படிபட்ட நாட்களில் கொஞ்சம் கிறுகிறுன்னு தான் இருக்கும். ஏதாச்சும் தப்பாச்சுனா, அடுத்த நாள் அலுவலகத்தில் பிரபலமாகிடுவோமே? அன்று எங்கள் அணியில் இருந்த ஒருவன், அடுத்த நாளில் இந்தியா கிளம்புவதாக இருந்ததால், உடன் பணிபுரியும் இன்னொரு குடும்பஸ்தன், இரவு உணவிற்கு அழைத்திருந்தான். அப்போது மனைவி, குழந்தை இந்தியாவில் இருந்ததால், நான் தற்காலிக பேச்சிலராக இருந்தேன். இந்த மாதிரி யாரும் சாப்பிட கூப்பிடும்போது, மகிழ்ச்சியுடன் அப்பாயின்மெண்ட் கொடுத்துவிடுவேன்.

இன்ஸ்டால், 6:30க்கு . சாப்பாடு அப்பாயிண்ட்மெண்ட் 7-8 மணிக்கு செல்லலாம் என்றிருந்தேன்.

இன்ஸ்டால் ஆரம்பித்தது.

1. அது ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன். அதை முதலில் நிறுத்த வேண்டும். நிறுத்தியாச்சு.

2. பொதுவாக ஓடிக்கொண்டிருக்கும் வெர்சனின் நகல் இருக்கும். இல்லாவிட்டால் நகல் எடுக்க ஸ்க்ரிப்ட் இருக்கும்.ஸ்க்ரிப்ட்டை ஓட்டியாச்சு.

3. நாங்கள் மாற்றி எழுதியிருந்த மென்பொருளை, அடுத்து போட வேண்டும். போட்டாச்சு.

4. போட்டது ஒழுங்க ஓடுதா என்று சோதனை செய்ய வேண்டும். சோதிக்கும் பயனாளி, அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு காரணத்தால், அவருக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் வசதி இல்லை.

சோதிக்கும்போது, ஒரு பிரச்சினை வந்தது. அந்த பிரச்சினை உடனே சரி செய்ய முடியாத பிரச்சினை.ஒவ்வொரு சூழல் ஒவ்வொரு மாதிரி இருப்பதால், இது முன்னமே கண்டுப்பிடிக்கப்படவில்லை. தப்புதான். என்ன செய்ய?

சரி. இன்று முடியாது. பிரச்சினையை சரி செய்து விட்டு வேறொரு நாள் production வரலாம் என்று முடிவெடுத்தோம்.

இப்பொழுதே நேரமாகிவிட்டது. சாப்பிட அழைப்பு வந்துக்கொண்டு இருக்கிறது. நான் உள்பட, சாப்பிட செல்ல வேண்டிய விருந்தினர்கள் அனைவரும் இன்ஸ்டால் லைனில் இருக்கிறோம். வரமுடியாது என்றும் சொல்ல முடியாத சூழ்நிலை. அடுத்த நாள், அந்த பையன் இந்தியா செல்கிறான். இப்போது முடிந்து விடும், இப்போது முடிந்து விடும் என்று நினைத்துக்கொண்டு, வருகிறோம், வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

தப்பான ப்ரோகிராமை எடுத்து விட்டு முன்பு ஓடிக்கொண்டிருந்த சரியான வெர்ஷனை நிறுவ வேண்டும்.

நிறுவினோம். நிறுவினால் அதுவும் சரியாக ஓடவில்லை. சரியாக ஓடிக்கொண்டிருந்தது தானே? என்ன ஆச்சு?

இரண்டாம் ஸ்டெப்பில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. என்னவென்று ஆராய நேரம் இல்லை. சரி செய்தாக வேண்டும்.

ஓடிக்கொண்டிருந்த நல்ல வெர்ஷனும் இல்லாத நிலை இப்போது. உள்ளதும் போச்சு. என்ன செய்யலாம்?

(தொடரும்)

2 comments:

Saravanakumar said...

ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டீங்கன்னு பார்த்தா தொடர் கதை எழுதுறீங்களே ? இது நியாயமா ??

சரவணகுமரன் said...

தொடர் எழுதணும்ன்னு பிளான் கிடையாது. பதிவு பெருசா போனதால், நேரம் இழுத்ததால் 'தொடரும்'!!! :-)