Tuesday, June 24, 2008

துண்டு சீட்டு

"டேய்! சேகர், கிளம்பிட்டியாட..." என்று கூவியவாறு சண்முகம் கையில் ஹிந்து பேப்பருடன் வீட்டினுள் நுழைந்தார். "சாப்டுட்டு இருக்கான்க" என்றவாறு நெற்றியில் வழிந்தோடும் வியர்வையை துடைத்தபடி ஹாலுக்கு வந்தாள் சண்முகத்தின் மனைவி.

ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்க்கும் சண்முகத்தின் மகன் சேகர் இன்று வீட்டில் இருந்து தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேருகிறான். ஸ்கூல் பஸ்ஸில் தான் செல்கிறான் என்றாலும் சண்முகத்திற்கு மனதில் ஒரு பயம்.

"டேய்... வெளிய எங்கேயும் போகாம ஸ்கூல் முடிஞ்சதும் ஒழுங்க பஸ்ல ஏறி வீட்டுக்கு வா"

"சரிப்பா"

புது புத்தககங்கள் பிரௌன் கவர் போடப்பட்டு, ஸ்டிக்கருடன் சேகருடைய புது பேக்கில் அணிவகுத்திருந்தன. செக்சன் மட்டும் தான் நிரப்பவில்லை. ஸ்கூல் போனால்தான் எந்த செக்சன் என்று தெரியும்.

சேகர் பையை தூக்கி தோளில் போட அது நியூட்டனின் இரண்டாம் விதியை பலமாக நிருபித்தது. ஷூவை போட்டவன், வாசல் படியில் இருந்து "அம்மா... போயிட்டு வாரேன்" என்றான்.

தெருவில் காலை வைக்க இருந்தவனை அப்பாவின் குரல் தடுத்தது. "சேகர்... ஒரு நிமிஷம் இருடா". கையில் துண்டு பேப்பருடன் வந்தவர், "இந்தாடா... இத சட்ட பையில வச்சிக்க" என்றார்.

பேப்பரில் அப்பா பெயருடன் வீட்டு நம்பரும் அலுவலக நம்பரும் இருந்தது.

"எதுக்கு இது?"

"எங்கயாவது தெரியாம போயிட்டனா? அதுக்குதான்"

"எப்பா... நான் என்ன சின்ன பையனா?" என்று எரிச்சலுடன் பேப்பரை கசக்கி எறிந்தவாறு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான் சேகர்.

ம்பது வருடங்களுக்கு பிறகு ஒருநாள்...

டேபிளில் இருந்த போன் அலறியது.

"ஹலோ"

"சார், சேகர்ங்கிறது உங்க அப்பாவா?"

"ஆமாம்"

"உங்க அப்பா பீச்சுல மயங்கி கிடந்திருக்காரு. அந்த பக்கமா போனவங்க வந்து அட்மிட் பண்ணியிருக்காங்க" என்றாள் வீனஸ் ஆஸ்பிட்டல் ஊழியை.

ப்பா பெட்டில் படுத்திருக்க, சுற்றி சேகரின் மனைவியும் மருமகளும் உட்கார்ந்திருந்தார்கள்.

"என்னப்பா ஆச்சு?"

"சுகர் அதிகமாயிடுச்சு போல... சாயந்தரம் வாக்கிங் கிளம்பும் போதே லேசா தல சுத்தின மாதிரி இருந்திச்சு... நல்லவேளை... ஜாக்கிரதையா உன் நம்பரையும் வீட்டு நம்பரையும் ஒரு பேப்பருல எழுதி பையில வச்சு இருந்தேன்." என்ற சேகரின் கண்களில் நிம்மதி. மனம் அப்பாவை நினைத்துக்கொண்டது.

4 comments:

சின்னப் பையன் said...

சூப்பரா இருக்கு கதை..

மங்களூர் சிவா said...

நல்லா இருந்தது கதை. சண்முகம் என்பதற்கு பதில் சேகரின் அப்பா என போட்டிருக்கலாமே!!

சரவணகுமரன் said...

நன்றி ச்சின்னப் பையன்

சரவணகுமரன் said...

நன்றி மங்களூர் சிவா

//சண்முகம் என்பதற்கு பதில் சேகரின் அப்பா என போட்டிருக்கலாமே!!

அப்படியா சொல்றீங்க? மாத்திட்டா போச்சு... :-)