Wednesday, June 25, 2008

தமிழ் சினிமாவும் போலீஸும்


தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களை எல்லா விதங்களிலும் பயன்படுத்தி உள்ளார்கள். ஹீரோவாக, வில்லனாக, காமெடியனாக, உப்புக்கு சப்பையாக என்று எதிலும் விட்டு வைக்க வில்லை. என் கணக்குப்படி இதில் அதிகப்படியாக காட்டியது கெட்டவர்களாகத்தான். உண்மையில் சமூகத்தில் அதிகப்படியான போலீசார் அப்படி இருப்பதால் அவ்வாறு காட்டுகிறார்களா? அல்லது அப்படி காட்டுவதால்தான் நாம் அப்படி நினைத்துக் கொண்டுயிருக்கோமா? தெரியவில்லை.

என் நினைவுக்கு தெரிந்து எம்ஜியார், சிவாஜி காலத்தில் இருந்து தான் போலீஸ் கதாபாத்திரங்களைத் திரைப்படங்களில் நான் கண்டு இருக்கிறேன். பாகவதர் காலத்துல போலீஸ் கதை வந்து இருக்கா? தெரிந்தவர்கள் சொல்லலாம். ஆனால் தமிழக போலீஸின் வரலாறு ரொம்ப நீளம். அதை இங்கே காணலாம். டைட்டிலே தப்பா இருக்கும். கண்டுக்காதீங்க... அவங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும்.

எம்ஜியார் நடித்த ரகசிய போலீஸ் மாதிரியான கதைகளை இன்னமும் போக்கிரி வரை எடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த காலத்தில் போலீஸ் கதாநாயகன் அல்லாத கதைகளில், போலீஸ் கடைசி காட்சிகளில் தான் வரும். இது ரொம்ப நாள் தொடர்ந்து "கடைசி சீன் வந்தாச்சு... இன்னமும் போலீஸ் வரல?" என காமெடி டயலாக் பேசும் நிலை வரை வந்தது.


ஒரு நடிகனின் கலையுலக (!) பயணத்துக்கும் போலீஸ் கேரக்டர் ரொம்ப உதவும். எந்த ஒரு நடிகனுக்குமே போலீஸ் வேடம் ஒரு மைல் கல் போன்றது. போலீஸ் வேடம், மாஸ் ஹீரோயிசத்திற்கு கை கொடுக்க கூடியது. இதற்கு காரணமாக, மற்றவரை விட போலீசாருக்கு உள்ள அதிகாரத்தை கூறலாம். மற்ற வேடங்களில் ஒரு ஹீரோ போடும் சண்டையில் எழும் கேள்விகள், போலீஸாக போடும் சண்டையில் ரசிகனுக்கும் வராது.


போலீஸ் ஹீரோ கதாபாத்திரம் மேல் நடிகர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் உள்ள ஆர்வத்திற்கு மற்றுமொரு காரணம், இது தங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்ற செண்டிமெண்ட் தான். பல நடிகர்களுக்கு இது நடந்திருக்கிறது. இது அந்த காலத்திலிருந்து இப்போது காக்க காக்க, சாமி, சத்யம்(?) வரை தொடர்கிறது. இதற்கான அவர்களது மெனகேடலும் அதிகமாகியுள்ளது.


போலீஸை கதாநாயகனாக காட்டும் கதைகளில் "போலீஸ் என்றால் அப்படி... போலீஸ் என்றால் இப்படி..." என்று டயலாக் விடும் திரையுலகினர், மற்ற படங்களில் கேவலமாகவும், கேலியாகவும் தான் சித்தரிக்கின்றனர். இது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு உண்மை. எந்த ஒரு சாதியையோ, அரசியல் கட்சியையோ குறிப்பிட்டு படம் எடுக்க தயங்கும் திரைப்படத்தினர், போலீஸை எப்படி காட்டுவதற்கும் தயங்குவதில்லை. அதேபோல், ஒரு டாக்டரை தப்பாக காட்டினால் டாக்டர்கள் கேஸ் போடுகிறார்கள். ஒரு வக்கீலை தப்பாக காட்டினால் வக்கீல்கள் கேஸ் போடுகிறார்கள். இதுவரை, போலீஸ் கேஸ் போட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. அதேசமயம், நேபாளி படத்தில் போலீஸை ஜட்டியுடன் காட்டியதற்காக அந்த காட்சியை நீக்குமாறு அவர்கள் கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக தான் மென்பொறியாளர்களை திரைப்படங்களில் கதாபாத்திரங்களாக காட்டுகிறார்கள். ஆனால் அதிலேயே, கொஞ்சம் கேலியாகவோ, தவறாகவோ இருந்தால் (உண்மையாகவே இருந்தாலும்) அதற்கு வலையுலகில் (வலையுலகில் தான் பொங்க முடியும்...) கிளம்பும் எதிர்ப்புகள் ஏராளம். இவர்கள் திரையில் போலீஸ் படும் பாட்டை நினைத்து பார்க்க வேண்டும். போலீஸ் போல் (கெட்டவர்களாக இல்லாமல்) கேலிக்குரியவர்களாக காட்டப்படும் மற்றுமொரு துறையினர், ஆசிரியர்கள்.

பெண் போலீஸ். இவர்களை உயர்வாக காட்டிய படங்கள் ரொம்ப குறைவு. அதில் வைஜெயந்தி IPS குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு அவ்வளவாக வரவில்லை. அஸ்வினி நாச்சப்பா நடித்த சில படங்கள் வந்தன. பிறகு, மும்தாஜ், வினிதா, விந்தியா, நமிதா போன்றவர்களை வைத்து போலீஸ் வேடத்தில் சில படங்கள் பூஜை போடப்பட்ட செய்திகள் வந்தன. இவர்களை வைத்து பூஜை மட்டுமே போடப்பட்டு படம் வெளிவராத மர்மம், பரங்கிமலை... ஸாரி... பழனி மலை முருகனுக்கே வெளிச்சம்.

போலீஸை தவறாகவோ, கேலியாகவோ காட்டக்கூடாது என்பதல்ல என் கருத்து. உண்மைக்கு மாறாக அல்லாமல், எல்லை தாண்டாமல் எடுக்கப்படும் காவல்துறை சார்ந்த காட்சியமைப்புகள், காவல்துறையினர் தங்களை சுய ஆய்வு செய்து கொள்ளவும், மக்கள் காவல்துறையினரின் உண்மை நிலையினை தெரிந்து கொள்ளவும் உதவ வேண்டும். விவேக் டிராபிக் போலீசிடம் கூறும் "As I am suffering from fever..." வசனமாகட்டும், வடிவேலு பிச்சைக்காரனுடன் நின்று லஞ்சம் கேட்கும் காட்சியாகட்டும், இவை அனைத்தும் மிகைபடுத்தபட்டு இருப்பினும், இது காவல்துறையினருக்கு தங்கள் திறமையினை வளர்த்துகொள்ளவும், தங்கள் உடல்நிலையை பணிக்கேற்றார் போல் வைத்து கொள்ளவும், நேர்மை, லஞ்சம் வாங்காமை போன்ற சமூக ஒழுக்கங்களோடு, நாட்டிற்க்கு சேவையாற்ற தூண்டுகோலாக அமைந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

18 comments:

முரளிகண்ணன் said...

பிரிச்சு மேஞ்சுட்டீங்க

Anonymous said...

போலீஸை அதிக அளவில் தவறாக சித்தரிப்பது எழுத்தாளர்களா? அல்லது சினிமாத்துறையினரா?

MyFriend said...

super. :-)

Bee'morgan said...

அதிகம் விவாதிக்கப்படாத தலைப்பு இது.. நல்ல அலசல்..

Sivaram said...

இப்போது சினிமாவில் ,கல்லூரி பேராசிரியர்கள் நிலை கொஞ்சம் பரவாயில்லை என நினைக்கிறேன்..
இருபது வருடங்களுக்கு முன்னால் , ரோமியோ ஜூலியட் பாடத்தையே எல்லா சினிமாவிலும் நடத்திக் கொண்டிருந்தார்கள்..

DHANS said...

நல்ல அலசல் பாராட்டுக்கள்.

கூடுதுறை said...

இப்படியேல்லாம் ஆதரித்து எழுதினால் நல்லவர்கள் ஆகிவிடுவார்களா?

சில பெரியவர்கள் சொல்வார்கள் பாம்பிடமும் ------- இடமும் சினேகிதம் வைத்துக்கொள்ளாதே... கொத்தாமல் விடாது என்பார்கள்...

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

அனானி,

சினிமாவில் தான் போலீஸை அதிக அளவில் தவறாக சித்தரிப்பதாக எனக்கு தோன்றுகிறது. இந்த ஊடகம்தான் பல்வேறு நிலை மக்களை பெரிய அளவில் சென்று அடைவதால் இப்படி தோன்றுகிறதோ, என்னவோ?

சரவணகுமரன் said...

நன்றி மை ஃபிரண்ட்

சரவணகுமரன் said...

நன்றி Bee'morgan.

பெயர் வித்தியாசமாக உள்ளது. ஏதேனும் அர்த்தம் உள்ளதா?

சரவணகுமரன் said...

நன்றி ஜீவன்.

//இப்போது சினிமாவில் ,கல்லூரி பேராசிரியர்கள் நிலை கொஞ்சம் பரவாயில்லை என நினைக்கிறேன்..

ஆமாம் ஜீவன். அதிலும் வெண்ணிற ஆடை மூர்த்தியை கல்லூரி பேராசிரியராக பார்ப்பது வழக்கமென்றாலும் சிரிக்காமல் இருப்பதில்லை.

சரவணகுமரன் said...

நன்றி dhans...

சரவணகுமரன் said...

கூடுதுறை, அது என்ன சென்சார் பண்ணியது போல் புள்ளி வைத்துள்ளீர்கள்?

மங்களூர் சிவா said...

/
சமீப காலமாக தான் மென்பொறியாளர்களை திரைப்படங்களில் கதாபாத்திரங்களாக காட்டுகிறார்கள். ஆனால் அதிலேயே, கொஞ்சம் கேலியாகவோ, தவறாகவோ இருந்தால் (உண்மையாகவே இருந்தாலும்) அதற்கு வலையுலகில் (வலையுலகில் தான் பொங்க முடியும்...) ,

:)))))))))))))))

மங்களூர் சிவா said...

/
வினிதா, விந்தியா, நமிதா போன்றவர்களை வைத்து போலீஸ் வேடத்தில் சில படங்கள் பூஜை போடப்பட்ட செய்திகள் வந்தன. இவர்களை வைத்து பூஜை மட்டுமே போடப்பட்டு படம் வெளிவராத மர்மம், பரங்கிமலை... ஸாரி... பழனி மலை முருகனுக்கே வெளிச்சம்.
/

:))))))))))))))

மங்களூர் சிவா said...

Good Good!!

சரவணகுமரன் said...

மங்களூர் சிவா,

உங்க பேராதரவுக்கு மிக்க நன்றி....