Thursday, November 27, 2008

டைட்டில் போட்டாங்கடோய்!!!

ஒரு படத்தின் டைட்டில்தான் அதற்கு முகவரியிலிருந்து ரேஷன் கார்டு வரை. ஒரு படத்தில் எது இல்லாவிட்டாலும் இது இருக்கும். சார்ட் பேப்பரில் எழுதி காட்டிக் கொண்டிருந்த டைட்டில், இன்று லட்சங்கள் செலவழித்து கிராபிக்ஸில் காட்டும் அளவுக்கு மாற்றங்கள் அடைந்துள்ளது.

ஒரு இயக்குனர் தனது புத்திசாலித்தனத்தையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்துவதற்க்கான முதல் சுற்று இடம் இது. ஒரு படத்தில் நடித்தவர்களின் பெயரையும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரையும் காட்டுவதற்கு மட்டும் உதவுவதல்ல டைட்டில். ஒரு படத்தின் தன்மையை பார்வையாளர்களுக்கு உணர்த்தி அவர்களை கதையின் களத்திற்கு தயார்படுத்தவும் உதவுவது டைட்டில்.

வித்தியாசமான டைட்டில்கள் சுவாரஸ்யம் கொடுப்பவை. பாக்யராஜ் படங்களில் இடையில் போடப்படும் டைரக்ஷன் டைட்டில் கார்டு, தியேட்டரில் கலகலப்பையும் சலசலப்பையும் உண்டு பண்ணுபவை. இது கதையின் திருப்பங்களிலும் சுவாரஸ்யங்களிலும் இயக்குனரின் பங்கை பார்ப்பவர்களுக்கு உணர வைக்கும் யுக்தி. ரஜினி ஆரம்பித்து வைத்த சூப்பர் ஸ்டார் வகை டைட்டில்கள், முன்னணி நடிகர்களின் ரசிகர்களிடையே கரகோஷத்தை வர வைப்பவை. (சூப்பர் ஸ்டார் டைட்டிலில் இப்ப பல வகை வந்து விட்டாலும், பட்டையை கிளப்பியது தேவாவின் இசையில் வந்ததுதான்).

எண்பதுகளின் இறுதியில் வந்த காமெடி படங்களில் போடப்படும் கார்ட்டூன் டைட்டில்கள், எனக்கு சிறு வயதில் படத்தால் ஏற்படுத்த முடியாத ஆர்வத்தை கொடுத்தது. கலடைஸ்கோப் டைட்டில்கள், பிலிம் நெகடிவ் டைட்டில்கள் அந்நேரத்தில் பிரபலமானவை. படத்தின் தீமுடன் வந்த ஸ்பைடர்மேன், ஹல்க், பிளப்பர் போன்ற ஆங்கில படங்களின் டைட்டில்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழிலும் இது போன்று முருகதாஸ் கஜினியில் முயன்றிப்பார்.

டைட்டில் உருவாக்கத்தில் யாருடைய குறுக்கீடும் அதிகம் இல்லாமல் இயக்குனரின் முழுமையான பங்கு இருக்கும் சூழ்நிலையில் ஹீரோவின் பெயருக்கு அடுத்தப்படியாக இயக்குனரின் பெயரை ஸ்பெஷலாக காட்ட வாய்ப்புகள் உண்டு. சில இயக்குனர்கள் சிறப்பான முக்கியமான காட்சிகளின் பின்னணியில் தங்களது பெயரை போடுவார்கள். உதாரணத்திற்கு, முத்து, படையப்பாவில் ரஜினி ஜெயிக்கும்போது போடப்படும் கே.எஸ்.ரவிக்குமார் பெயரையும், தில், கில்லியில் விக்ரம், விஜய் வெற்றியின் போது போடப்படும் தரணியின் பெயரையும் குறிப்பிடலாம். பேரரசு கொடுக்கும் அலப்பரையை பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்தி முதல்வன் ‘நாயக்’கில் டைட்டிலின் போது டிவி ஷூட்டிங் ஸ்பாட்டை காட்டுவார்கள். முடிவில் டைரக்டர் சீட்டைக் காட்டி ஒரு கவுண்டவுன் போட்டு, ஒன்று என்று வரும்போது ஷங்கர் பெயரை போடுவார்கள். நம்பர் ஒன் டைரக்டராம். படம் வெற்றி பெற்றிந்தால் ஆளை கையில் பிடித்திருக்க முடியாது. டூயட் எடுக்க போகிறேன் என்று சந்திராயனில் நிலவுக்கு சென்றிருப்பார். முதல்வன் படத்தில் வரும் சேனல்கள் பலவற்றை காட்டும் டைட்டில், சத்தத்துடன் வரும் எழுத்தை காட்டும் அந்நியன் டைட்டில், பழைய ஸ்டைலில் இருந்து புதிய ஸ்டைலுக்கு மாறும் சிவாஜி டைட்டில் என்று இவர் படத்து டைட்டில்கள் கவனம் பெறுபவை. எல்லாவற்றிலும் மெனகேடுபவர், இதையா விடுவார்?

சிம்பிளாக கவனத்தை பெறுவதற்க்கான வழி, இயக்குனரின் பெயரை மட்டும் கருப்பு பின்னணியில் எவ்விதமான ஒலியும் இல்லாமல் போடுவது. பெருவாரியான சீரியல்களில் கடைப்பிடிக்க படுவது இந்த முறைதான்.

படங்களில் காட்டப்படும் நடிகர்களின் பெயர் வரிசை முறை, எத்தனை வருடம் ஆனாலும் ஒரே மாதிரியானதுதான். முதலில் கதாநாயகன், பின்பு கதாநாயகி, நகைச்சுவை நடிகர்கள், வில்லன், குணச்சித்திர நடிகர்கள், கடைசியில் துணை நடிகர்கள் என்று ஏதோ கல்யாண பந்தியில் போடும் உணவு வகை போல் மாற்றாமல் இருக்கிறார்கள். அது ஏன்தான் தெரியல, கதாநாயகி கேரக்டர் எவ்ளோ மொக்கையா இருந்தாலும், வில்லன்/வில்லி அல்லது ஏதோ குணசித்திர கதாபாத்திரம் ஸ்ட்ராங்'ஆ இருந்தாலும் கதாநாயகி பேருக்கு அப்புறம் தான் மத்தது எல்லாம்.

கடந்த சில வருடங்களாக ஒரு படத்தின் தயாரிப்பில் உழைக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும் நிலையில், முக்கியமானவர்கள் தவிர மற்ற அனைவரின் பெயர்களையும் படத்தின் கடைசியில் சின்னதாக போடுவார்கள். இதை தியேட்டரில் யாரும் பார்ப்பதில்லை. ஆப்பரேட்டரும் போடுவதில்லை. அது கூட பரவாயில்லை. தமிழ் சேனல்களிலும் போடுவதில்லை. தக்குனுண்டு காட்டும் அந்த நொடிக்கு காத்திருப்பது எத்தனை உள்ளங்களோ? சரோஜாவில் ஆப்பரேட்டர் ப்ரொஜக்டரை அணைக்கும்வரை இழுத்து வைத்திருந்தார், வெங்கட் பிரபு.

சமநிலையில் உள்ள இரு ஹீரோக்கள் படம் என்றால், யார் பேரை முதலில் போடுவது என்ற குழப்பம் வரும். ஆரம்பத்திலேயே இப்படி என்றால், மூணு மணி நேரம் முடிவதற்குள் அவ்வளவுதான். இதனால்தான், தமிழில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இல்லையோ? பிதாமகனில், விக்ரம் பெயர் தான் முதலில் வரும். சீனியாரிட்டி இல்லையா? சிவாஜி கடைசியாக நடித்த படங்களில் அவர் பெயர்தான் முதலில் வரும். படையப்பாவில்? ரஜினி பெயர்தான்.

ஒரு நல்ல சினிமா ரசிகன் டைட்டிலை தவற விட விரும்ப மாட்டான். புதியதாக சினிமாவில் நுழைபவர்கள் தங்கள் பெயர் டைட்டிலில் வருவதற்காக காத்திருந்து, ஆர்வமுடன் எதிர்பார்த்து, அப்படி அது வந்து, முதல் முறை தங்கள் பெயரையே திரையில் பார்க்கும்போது அவர்களுக்கு எழும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அதுவே சாதிக்க துடிக்கும், புகழடைய விரும்பும் கலைஞன், தன் பெயர் போடும்போது தியேட்டரில் கைத்தட்டல் எழுவதற்காக ஏங்குவான். இது ஒரு மனிதன் சினிமாவுடன் கொண்டிருக்கிற பலவகை தொடர்பை காட்டுகிறது. ஒரு காலத்தில் நடிகர்களுக்கு மட்டும் கை தட்டி கொண்டிருந்த ரசிகர்கள், இன்று டைரக்டர், இசையமைப்பாளர் ஆகியோருக்கும் தனது ஆதரவை, ரசனையை கைதட்டி வெளிகாட்டி கொண்டிருக்கிறார்கள். கைத்தட்டல் வாங்கும் துறைகள் அதிகமாகுவது, சினிமாவின் வளர்ச்சியை காட்டும்.

நீங்களும் சுவையான டைட்டில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்?

27 comments:

கிரி said...

//பாக்யராஜ் படங்களில் இடையில் போடப்படும் டைரக்ஷன் டைட்டில் கார்டு//

நம்ம டி ஆர் ஐ விட்டுட்டீங்களே ..கதை திரைகதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் என்று ரணகள படுத்துவாரே (முக்கியமான காட்சியில்) :-)))))))))) அந்த காட்சியில அவர் கலக்கி இருக்காறாமா!! :-)

//பேரரசு கொடுக்கும் அலப்பரையை பற்றி சொல்லவே வேண்டாம்.//

ஹா ஹா ஹா

அதை விட அவர் க்ளோஸ் அப் ல வந்து ஒரு லுக் விடுவாரு அது தான் பயமா இருக்கும்.

//நம்பர் ஒன் டைரக்டராம். படம் வெற்றி பெற்றிந்தால் ஆளை கையில் பிடித்திருக்க முடியாது. டூயட் எடுக்க போகிறேன் என்று சந்திராயனில் நிலவுக்கு சென்றிருப்பார்//

:-)))

//தக்குனுண்டு காட்டும் அந்த நொடிக்கு காத்திருப்பது எத்தனை உள்ளங்களோ//

உண்மை. ஒரு அங்கீகாரம் தான்.

//சிவாஜி கடைசியாக நடித்த படங்களில் அவர் பெயர்தான் முதலில் வரும். படையப்பாவில்? ரஜினி பெயர்தான்//

வழக்கமான (சொய்ங் சொய்ங் னு வருமே) டைட்டில் மட்டும் ரஜினி வரும்..முதலில் சிவாஜி பெயர் பிறகு தான் ரஜினி பெயர் வரும்.

//ஒரு நல்ல சினிமா ரசிகன் டைட்டிலை தவற விட விரும்ப மாட்டான்//

எனக்கெல்லாம் படம் டைட்டில் ல இருந்து பார்த்தா தான் படம் பார்த்த மாதிரியே இருக்கும் :-)

//முதல் முறை தங்கள் பெயரையே திரையில் பார்க்கும்போது அவர்களுக்கு எழும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது//

வழிமொழிகிறேன்

பதிவு நல்ல சுவாராசியமா இருந்தது சரவணகுமரன்.

சரவணகுமரன் said...

விரிவான பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி கிரி

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு. மிக சுவராசியமாக படித்தேன்.

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

Bee'morgan said...

நல்ல பதிவு.. யாரும் இதுவரை இது பற்றி எழுதியதில்லை என நினைக்கிறேன்.. புதுமையான பதிவிற்கு வாழ்த்துகள்..

சரவணகுமரன் said...

நன்றி Bee'morgan

அருண்மொழிவர்மன் said...

மணிரத்னம் அழகாக, மிகவும் எளிமையானமுறையில் டைட்டில் இடுவார். பெரும்பாலும் ஆங்கில எழுத்துகள் சின்ன எழுத்துகளில் அமையும். மேலும் நடிகர்களுக்கு எவ்வித பட்டத்தையும் போடமாட்டார்

சரவணகுமரன் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி, அருண்மொழிவர்மன்.

அவரது படங்களின் டைட்டிலில் வரும் எழுத்து வடிவமைப்பு வித்தியாசமாக அழகாக இருக்கும்.

Indian said...

ஹாலிவுட் திரைப்படங்களில் முதலில் படத்தை விநியோகிக்கும் பெரும் ஸ்டுடியோவின் பெயர் வரும். பின்னர் இன்னாரின் தயாரிப்பு என்று தயாரிப்பாளரின் பெயர் வரும் (an abc production). பின்னர் இன்னாரின் படைப்பு என்று இயக்குநரின் பெயர் வரும்(an abc creation). பின்னர் படத்தில் சூப்பர் ஸ்டார்கள் இருந்தால் அவர்கள் பெயர் வரும்(அது புகழ் பெற்ற நடிகர்களுக்கு அளிக்கப்படும் கௌரவம்). அதற்குப் பின்னரே படத்தின் பெயர் வரும். அதனைத் தொடர்ந்து முக்கிய நடிகர்களின் பெயர் அகர வரிசையில் வரும். பின்னர் முக்கியத் தொழில் நுட்பக் கலைஞர்களின் பெயர் வரும்.

டைட்டிலில் நிறையப் புதுமைகளைப் புகுத்தியிருப்பர்கள்.

சரவணகுமரன் said...

ஆங்கில படங்களில் போடப்படும் டைட்டில் பற்றி அழகாக விவரித்து இருக்கிறீர்கள்.

நன்றி indian

நாடோடி இலக்கியன் said...

பாக்யராஜ் படங்களில் எதாவது டச்சிங்காண சீனிலோ அல்லது அவரோட டிரேட் மார்க் சமாச்சாரங்கள் வரும் இடங்களில்தான் அவருடைய பெயர் போடுவார்.பாக்யராஜ் படம் பார்க்கும் போதெல்லாம் எந்த இடத்திலே பெயர் வருமென கவனித்துக்கொண்டே இருப்பேன்,அந்த வகையில் பிடித்தது
ராசுக்குட்டி படம்.

புது விதமான பதிவுக்கு வாழ்துக்கள்.

சரவணகுமரன் said...

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, நாடோடி இலக்கியன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பேசரது நானு. பேசவைக்கிறது அவரு. எ.வீ. வேலன் காலத்து அலப்பரைகள் பேபேபேரரசு வகையை சேர்ந்தவை

நாஞ்சில் பிரதாப் said...

80களில் வந்த நகைச்சுவைப்படங்களில் கார்ட்டூன் படம்போட்டு டைட்டில் போடுவார்கள்.சின்ன வயசில் எனக்கு அது ரொம்ப பிடிக்கும். உதாராணமாக பாட்டிசொல்லைத்தட்டாதே படத்தில் வரும் டைட்டில்.

நானும் டைட்டிலை கவனமாகப் படிப்பேன். சில படங்களில் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே டைட்டிலும் போட்டுக்கொண்டிருப்பார்கள். அது எரிச்சலைக் கொடுக்கும். படத்தையும் ஒழுங்காக பார்க்க முடியாது. டைட்டிலையும் வாசிக்கமுடியாது.

ஆகவே நல்ல பதிவு.

சரவணகுமரன் said...

நன்றி SUREஷ் :-)

சரவணகுமரன் said...

எனக்கும் பாட்டிசொல்லைத்தட்டாதே டைட்டில் ஞாபகம் உள்ளது. நானும் சின்ன வயதில் இது போன்ற டைட்டில்களை ரசித்திருக்கிறேன். நன்றி நாஞ்சில் பிரதாப்

Unknown said...

படத்தின் டைட்டில்கள் இப்போதெலாம் ட்ரைலர் போட பெரிதும் உதவுவதால் அதற்காக மெனக்கெடுகிறார்கள்..

ஜெட்லி... said...

சுவாரசியமான பதிவு....
நானும் முடிந்தவரையில் எந்த படத்திலும் டைட்டில்
மிஸ் பண்ணமாட்டேன்....
இதில் எனக்கு ஜாக்கி சானின் யுக்தி மிகவும் பிடிக்கும்...
சொதிப்பின ஷார்ட் மட்டும் போடாமல் அனைத்து யூனிட்
டைரக்டர் மற்றும் அனைவரது பெயரும் வரும்....
பாட்டி சொல்லை தட்டாதே கார்ட்டூன் டைட்டிலை
சிறு வயதில் ரசித்து பார்த்து இருக்கிறேன்....

ஷாஜி said...

I liked the title of 'GURU' (tamil and Hindi)film. Mani has done it very well.

பருப்பு (a) Phantom Mohan said...

என்ன தல,நான் ரொம்ப நாளா இத ஐடியா பண்ணி, கொஞ்சம் படம் செலக்ட் பண்ணி வச்சிருந்தேன்...ஆனா நீங்க சூப்பரா எழுதிட்டீங்க! இருந்தாலும் உங்களை முறியடிக்க ட்ரை பண்ணுறேன்!

பட் நான் செலக்ட் பண்ணிருந்த படங்களை நீங்க போடல, அதுவரை சந்தோசம். நான் எழுதும் பொது நீங்க சொன்னவங்களையும் பத்தி கொஞ்சம் எழுதுவேன், வேற வழி இல்ல! :)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

டைட்டில் போடுவதில் மிகப்பெரிய சாதனையை படைத்தவர்... அப்படி ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் திரு.பாக்யராஜ் தான். இதை நீங்கள் மிக சரியாக புரிந்துக் கொண்டு அவரைப் பற்றி எழுதி இருப்பது உங்கள் உயர்ந்த ரசனையைக் காட்டுகிறது! நன்றி.
- எஸ்.எஸ்.பூங்கதிர்

சரவணகுமரன் said...

ஆமாம் செந்தில்

சரவணகுமரன் said...

ஜெட்லீ, ஜாக்கிசானின் கடைசி ‘சொதப்பிய காட்சி’ டைட்டில் எனக்கும் ரொம்ப பிடிக்கும். தமிழிலும் இதை காப்பியடித்து வரும் படங்களையும் காண தவறுவதில்லை. சமீபத்தில் கூட ஏதோ ஒரு படத்தில் பார்த்தேனே?!!!

சரவணகுமரன் said...

ஷாஜி, மணிரத்னத்தின் டைட்டில் பாண்ட்கள் ஒவ்வொன்றும் ரொம்ப சூப்பராக இருக்கும்.

சரவணகுமரன் said...

மோகன், இது ரொம்ப நாள் முன்னாடி எழுதியது. இப்ப படிக்குறவுங்களுக்காக திரும்ப தமிழிஷில் போட்டேன். உங்களுடைய பதிவுக்காக ஆவலுடன் இருக்கிறேன். :-)

சரவணகுமரன் said...

நன்றி பூங்கதிர்

ரிஷபன்Meena said...

சுவாரஸ்யாம் குறையாமல் எழுதியிருகிறீர்கள்.