Wednesday, November 18, 2009

லைப்ரரி - 2

லைப்ரரி - 1

அங்கு வைத்திருந்த வார பத்திரிக்கைகள் ஒன்றையும் இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை. நூலகத்திற்காகவே அச்சிடுவார்களோ?தினசரிகள் படிக்க, டீக்கடைக்கு வருவது போல் சில ரெகுலர் வாடிக்கையாளர்கள் வருவார்கள் போல் இருந்தது. இந்த நூலகத்தில் இன்னும் சில வசதிகளை கண்டேன். படிக்கும் புத்தகங்களில் இருந்து பக்கங்களை ஜெராக்ஸ் எடுக்க ஒரு ஜெராக்ஸ் மெஷின் வைத்திருந்தார்கள். ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய். பிரவுசிங் பண்ண ஒரு கம்ப்யூட்டரும் வைத்திருந்தார்கள். ஒரு மணி நேரத்திற்கு பதினைந்து ரூபாய்.

அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்க்க தொடங்கினேன். புத்தகங்களை எடுத்து படிப்பதைவிட, எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக இருந்தது. தற்போதைய ஆர்வத்தின்படி, வரலாற்று புத்தகங்களின் மீது பார்வையை ஓட்டினேன். அண்ணா, காமராஜர் பற்றி நிறைய புத்தகங்கள் இருந்தது. ராஜாஜி பற்றி படிக்கவேண்டும் என்று கொஞ்சம் நாட்களாகவே நினைத்துகொண்டிருந்ததால், ராஜாஜியை தேடினேன். உடனே சிக்கினார்.

புத்தகத்தை எழுதியவரும் பெரிய ஆள் தான். மா.பொ.சி. கொஞ்சம் நேரம் வாசித்தேன். ராஜாஜி பற்றி பலரும் தவறாக புரிந்துகொள்வதற்கு, அவருடைய வெளிப்படையான பேச்சு தான் காரணம் என்று கூறியிருந்தார். என்னால் ரொம்ப நேரம் வாசிக்க முடியவில்லை. பின்னால இருந்த எண்ணற்ற புத்தகங்கள், காந்தம் போல் இழுக்க தொடங்கியது.

கதை, கவிதை, வரலாறு என்று எல்லாவற்றையும் சுற்றி வந்தேன். கமலா தியேட்டர் உரிமையாளரும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலராக இருந்த வி.என்.சிதம்பரம் எழுதிய “நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்” என்ற புத்தகத்தை புரட்டினேன். அரசியல், சினிமா, ஆன்மிக பிரபலங்களிடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்து அவர் ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம் அது. நல்லாத்தான் இருந்தது.

பிறகு, ஜெயமோகன் எழுதிய பேய்கதைகளின் தொகுப்பை பார்த்தேன். இதுவரை எந்த ஜெயமோகனின் புத்தகத்தையும் தொட்டதில்லை. அதற்காகவே, அதை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். முன்னுரையே, பேயறைந்ததுபோல் இருந்ததால், எடுத்த வேகத்தில் வைத்துவிட்டேன்.

நான் தெரிந்து கொள்ள விரும்பிய இன்னொருவர் - ஜீவா. ஜோதிபாரதி என்பவர் எழுதிய ஜீவா பற்றிய புத்தகத்தை வாசிக்கலாம் என்று புரட்டினேன். அந்த புத்தகம் எப்படிபட்டதென்றால், ஜீவாவை தமிழகத்தின் மற்ற அரசியல் தலைவர்களிடன் ஒப்பிட்டு எழுதிய புத்தகம். ஜீவாவை தூக்கிபிடிக்க, அண்ணா, பெரியார், காமராஜர் என்று மற்றவர்களை வாரியடித்திருந்தார். படிக்கவே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது.

இப்படியே பார்த்துக்கொண்டிருந்து நேரம் ஓடியிருந்ததால், மழை திரும்பவும் பெய்யபோவது போல் இருந்ததால் கிளம்பினேன். நூலகரிடம், நூலகத்திற்கு புத்தகம் வழங்கலாமா? அதற்கென ஏதேனும் முறை இருக்கிறதா? என்று கேட்க நினைத்திருந்தேன். அவசரத்தில் மறந்து கிளம்பி விட்டேன். அடுத்த முறை கேட்க வேண்டும். தெரிந்தவர்கள் சொல்லவும்.

---

நூலகத்தோட அருமை நூலகம் பக்கத்தில் இல்லாதபோது தான் தெரியும். அதனால், நூலகம் பக்கத்தில் இருந்தும் போகாதவர்கள், போயிட்டு வந்துடுங்க.

தகவல் தொழில்நுட்பத்தின் பலனாக, இப்பொழுதெல்லாம் ஆன்-லைன் லைப்ரரிகளும் வந்துவிட்டன.

http://www.librarywala.com
http://www.easylib.com

நூலகத்தினுள் நுழையும்போது உங்கள் நாசியை தாக்கும் புத்தக வாசனையிலிருந்தே இதில் வேறுபாடுகள் தொடங்குகிறது. அதனால், ஆன்-லைன் நூலகம் என்பது அதற்கு மாற்றாக அமையமுடியாது. ஒரு கூடுதல் வசதி. அவ்வளவுதான்.

எனக்கு உள்ள ஆசைகளில் ஒன்று. வீடு கட்டும் போது, அது இருக்கணும், இது இருக்கணும் என்று ஏகப்பட்ட கனவுகள் சிறுவயதில் உண்டு. அமைதியாகவும், அதே சமயம் ஆர்பாட்டமாகவும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பாட்டு கேட்கும் வகையில் ஒரு அறை இருக்கணும். கிட்டத்தட்ட தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் ஹோம் தியேட்டர் கொண்ட ஹால் இருக்கணும். இப்படி எக்கச்சக்கமா இருந்தது. இருக்கிறது. கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், கனவு காணவேண்டும் அல்லவா?

ஆனால், இப்படி எதுவுமே இல்லையென்றாலும் குறைந்தபட்சம் புத்தகங்களை அழகாக அடுக்கி வைப்பதற்கும், உட்கார்ந்து படிப்பதற்கும் ஏற்ற வசதி இருக்க வேண்டும். இது ஈஸி தான் என்று நினைக்கிறேன். வீட்டில் நூலகம் அமைப்பதன் மூலம், வீட்டிற்கான ஆன்மா வந்தடையும் என்று யாரோ பெரிய மனுஷன் சொல்லியிருக்கிறார்.

மனிதனின் நல்ல நண்பன், புத்தகங்கள். நல்ல நண்பர்கள் எப்போதும் அருகில் இருந்தால், இருக்கும் இடம் சொர்க்கம் தானே?

(முற்றும்)

.

4 comments:

ஜெட்லி... said...

நான் நூலகத்துக்கு போய் மூன்று வருடம் ஆச்சி நண்பா...
ஒரு நாள் போகணும்

ரோஸ்விக் said...

எனக்கும் புத்தகங்கள் நிறைய படிக்க ஆசை நண்பா...சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை என்னையும் ஆக்கிரமித்துவிட்டது :-)

பகிர்விற்கு நன்றிகள். இந்த தளங்களில் சென்று படிக்க முயல்கிறேன்.

நீங்க நல்லா இருக்கணும். :-)

சரவணகுமரன் said...

போயிட்டு வாங்க, ஜெட்லி

சரவணகுமரன் said...

நன்றி ரோஸ்விக்