Tuesday, November 3, 2009

பிரபாகரன் - வாழ்வும் மரணமும்

பிரபாகரன் இறந்த அதே மாதத்தில் அசுர வேகத்தில் அவரை பற்றிய இந்த புத்தகத்தை வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். போன வரியில் ‘இறந்த’ என்ற சொல்லை எழுத இன்னமும் எனக்கு தயக்கம் இருக்கும் நிலையில், ‘பிரபாகரன் - வாழ்வும் மரணமும்’ என உறுதியாக புத்தகத்தை எழுதியிருக்கிறார், பா.ராகவன். புத்தகத்தின் இந்த வேகத்திற்கு, ஆசிரியர் அந்நேரம் குமுதத்திலும், ரிப்போர்ட்டரிலும் எழுதிக்கொண்டிருந்த தொடருக்கான உழைப்பு உறுதுணையாக இருந்திருக்கிறது.பிரபாகரன், விடுதலை புலிகள், தமிழ் ஈழ போராட்டம் என இவை எல்லாவற்றின் தற்போதைய நிலையின் காரணமாக, ஆரம்பமாக ஆசிரியர் சுட்டிக்காட்டுவது - ராஜீவ் படுகொலை. அது நிகழாமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்? இலங்கைக்கான அண்மைகால இந்திய ராணுவ உதவி, பழி வாங்குவதற்கான மூர்க்க சக்தி வாய்ந்ததாக இருந்திருக்காது. தமிழக காங்கிரஸ் கொண்டிருக்கும் புலி எதிர்ப்பும் இருந்திருக்காது. ஆனால், ராஜீவ் படுகொலை நிகழாமல் இருந்திருந்தால்? ராஜீவ், புலிகளுக்கு எதிரான நிலையை கொண்டிருந்தாலும், அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பல பிரச்சினைகளால், இலங்கை உடன்பாடு என்பதெல்லாம் அவருக்கு பெரிய முக்கியத்துவம் பெறாமலே போயிருக்கலாம்.

சரி. ராஜிவை கொல்ல ஏன் முடிவெடுத்தார்கள்? இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்காத விஷயத்தை, எளிமையாக, புலிகள் பக்க நியாயம் புரியும்வண்ணம் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். எங்கும் பதிந்திருக்காத அந்நேரத்திய ராஜிவ் எண்ணங்களை, இந்த புத்தகம் மூலம் கண்டிப்பாக புரிந்துக்கொள்ளலாம்.

மாத்தையாவை பற்றி விலாவரியாக சொல்லியிருக்கும் ஆசிரியர், கருணாவை அவ்வளவாக கண்டுக்கொள்ளவில்லை. மாத்தையா, புலிகள் இயக்கத்தில் கமாண்டர் பொறுப்பில் இருந்தவர். புலிகளுக்காக உண்மையாக போரிட்டவர்தான். ஆனால், இறுதி வரை இல்லை. இந்திய அதிகாரிகளுடன் மறைமுகமாக தொடர்பு வைத்திருந்து, புலிகளுக்கு துரோகம் செய்துகொண்டு இருந்தார். ஆசிரியரின் வார்த்தைகளில், மாத்தையாவைக் காட்டிலும் பிரபாகரனை மிகப்பெரிய மனநெருக்கடிக்கு உண்டாக்கிய நபர் வேறு யாருமில்லை. அவருக்கு பிரபாகரன் வைத்த சோதனை, அவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்கள், கொடுத்த இறுதி தண்டனை - எல்லாமும் விரிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பிரச்சினை மிகவும் தீவிரமானதே, அமைதி உடன்பாட்டுக்கு பிறகுதான் என்பது எப்பேர்பட்ட முரண். அதற்கு முன்பெல்லாம் பிரபாகரன் வேதாரண்யம், மைலாப்பூர், திருவான்மியூர் என்று சுற்றி திரிந்திருக்கிறார். பாண்டி பஜாரில் துப்பாக்கி சூடு நடத்தி, தமிழக போலீஸாரிடம் கைதாகி இருக்கிறார். தமிழக மக்களுக்கு விடுதலை புலிகள் பற்றி தெரிய வந்தது அப்போது தான்.

அந்நேரம் எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு செய்த உதவிகள் ஏராளம். கைதான பிரபாகரனை, இலங்கைக்கு அனுப்ப சொல்லி அதிபர் ஜெயவர்த்தனே கேட்டபோது மறுத்தார். இரண்டு கோடியை கைக்காசில் இருந்து எடுத்து கொடுத்தார். சென்னைக்கு வந்த ஆயுத கப்பலில் இருந்து ஆயுதங்களை பிரச்சினை இல்லாமல் இறக்க உதவினார். இது சரியா தவறா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், தன் அதிகாரத்தை மீறி ஒரு தமிழக முதலமைச்சர் புலிகளுக்கு உதவியது வரலாற்று ஆச்சரியம் தான். அந்த நேரத்திலும், எம்ஜிஆர் சந்திப்புக்கு அழைத்த முந்திய தினம் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, பிரபாகரனுக்கு தர்மசங்கடம் உருவாக்கியிருக்கிறார் கலைஞர்.

புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் சொல்லியிருப்பது.

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒரு போராளி இயக்கத்தின் தலைவராக இருந்து படைகளையும் மக்களையும் வழிநடத்திக்கொண்டிருந்த ஒரு மனிதரைப் பற்றி முழுமையானதொரு பதிவை இன்னொருவர் ஒருக்காலும் எழுத இயலாது. ஒன்று அவரே எழுதியிருக்கவேண்டும். அல்லது நிழல்போல் அவருடனேயே இருப்பவர் யாராவது எழுதவேண்டும்.

உண்மைதான். ஆனால், பாரா சம்பவங்களையும் நிகழ்வுகளையும் வெறுமனே புத்தகத்தில் அடுக்கிக்கொண்டு போகவில்லை. ஒவ்வொரு முடிவுக்கும், விளைவுக்கும் காரணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார். நார்வே அமைதி முயற்சிகளின்போது கை ஓங்கியிருந்த புலிகளுக்கு, இறுதி யுத்தம் என்று ராஜபக்‌ஷே வருணித்த போரில் தோல்வியை சந்தித்ததின் காரணக்கூறுகள் எவை? பிரபாகரனுடன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வம் போன்ற வழிக்காட்டிகள் இல்லாதது, இந்திய அரசின் அனைத்து வழி உதவிகள், இயக்கத்தின் அனைத்து ரகசியங்கள் அறிந்த கருணா அரசின் கைப்பாவை ஆனது போன்றவற்றை ஆசிரியர் சுட்டிக்காட்டுக்கிறார்.

மீண்டும் சொல்லலாம். பிரபாகரன் தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய பிழை, ராஜிவ் படுகொலை. அதன் இரு தரப்பு நியாய அநியாயங்களை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டுச் சிந்தித்தாலும் அது ஒரு சரியான ராஜதந்திர நடவடிக்கை அல்ல. பிராந்திய வல்லரசு பதினெட்டு ஆண்டுகள் கழித்தும் பழி வாங்கும்.

பொதுவாகவே கிழக்கு பதிப்பகம் வெளியிடும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், ஒரு பக்க சார்பாக சம்பந்தப்பட்டவரை தூக்கி நிறுத்துபவையாகவே இருக்கும் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இந்த புத்தகம் எப்படி? பிரபாகரனுக்கு ஆதரவானதா, இல்லை எதிரானதா? என்று கேட்டால், கண்டிப்பாக ஆதரவானதுதான். உண்மை அதுவாகவே இருக்கலாம். இருந்தாலும், பிரபாகரன் செய்த தவறுகளை ஆசிரியர் சுட்டிக்காட்ட தவறவில்லை. பிரபாகரன் தரப்பு நியாயங்களையும் அதற்கு எடுத்துரைத்திருக்கிறார். சர்வாதிகாரி, இயக்கத்தில் சிறுவர்கள் சேர்ப்பு, மனித கேடயமாக மக்கள் போன்ற குற்றசாட்டுகளுக்காகவே ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆரம்பத்திலேயே சொன்னது போல், இன்னமும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வாதம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கு சாதகமான அவர்கள் கூறும் எல்லா சந்தேகங்களையும் பட்டியலிட்டு இருக்கும் ஆசிரியர், என்ன நடந்திருக்கும் என்பதை ஒரு சில விஷயங்களை வைத்து விளக்கியிருக்கிறார். பிரபாகரன் மரணத்தைப் பொறுத்தவரை முழு உண்மை என்ற ஒன்று கிடையாது என்பது உறுதி என்றும், அதனால் இருளில் உறுப்பு தடவித்தேடி யானையைச் சமைக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

இறுதியாக நூலை பற்றிய ஒன்று. நூலிருந்து.

நோக்கம், விளைவு என்னும் இரு எல்லைகளுக்கு நடுவே செயல்பாடு என்னும் மிக நீண்ட ஒருவழிப் பாதை ஒன்றுண்டு அல்லவா? இந்த நூல், பிரபாகரனின் செயல்பாடுகளைத்தான் மறைமுகமாக ஆராய்கிறது. சரியான முடிவுகளும் தவறான கணிப்புகளும் இல்லாத மனித வாழ்க்கை இல்லை. நமது சரியான முடிவுகளும் தவறான கணிப்புகளும் நம்மை மட்டுமே பெரும்பாலும் பாதிக்கின்றன. பிரபாகரனைப் பொருத்தவரை, அது ஈழத் தமிழர்கள் அத்தனை பேரையும் பாதித்துவிட்டது. அதுதான். அது ஒன்றுதான் வித்தியாசம். அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.

ஆசிரியரே சொல்வது போல், பிரபாகரன் போன்ற ஒரு போராளியின் வாழ்வை முழுமையாக பதிவு செய்வது கடினம். ஆனால், இருக்கும் தகவல்களைக் கொண்டு, எளிமையான நடையில் வந்திருக்கும் இந்த புத்தகம், பிரபாகரனை புரிந்து கொள்ள கண்டிப்பாக உதவும்.

பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
203 பக்கங்கள்
ரூபாய் 100
கிழக்கு பதிப்பகம்

புத்தகம் வாங்க இங்கு க்ளிக்கவும்.


.

4 comments:

Karthick said...

Kizhakku Pathipagam Viduthalai Puligal puthagam padichirrukkan..Unga review paatha piragu...intha puthagam vangi padikkanumnu thonuthu...Nice one...PaRa voda matha puthaganga review pannunga

சரவணகுமரன் said...

நன்றி கார்த்திக்...

மற்ற புத்தகங்களையும் பண்ணுகிறேன்.

Anonymous said...

//அந்த நேரத்திலும், எம்ஜிஆர் சந்திப்புக்கு அழைத்த முந்திய தினம் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, பிரபாகரனுக்கு தர்மசங்கடம் உருவாக்கியிருக்கிறார் கலைஞர்.//


அந்த ஜென்மத்த எல்லாம் ஏன்தான் புத்தகத்துல சேர்த்து கொள்கிறார்கள்.

Anand said...

இந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை. நான் படித்தது இதே பதிபகத்தில் வெளி வந்த பிரபாகரன்: ஒரு வாழ்க்கை, நூலை படித்திருக்கிறேன். நல்ல நூல். ஆசிரியர்: செல்லமுத்து குப்புசாமி.