Tuesday, November 10, 2009

அறிவுமதியின் முத்தமிழ்

மகேந்திரனிடமிருந்து...

---

நினைந்து கொள்ள நனைந்து கொள்ள
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மழை..!!

-அறிவுமதி

கடந்த சில நாட்களாய் தொடரும் ஓயாப்பெருமழையில் நனைந்து கொண்டே அலுவலகம் வருவது, என் நாட்களின் இனிய துவக்கமாக இருக்கிறது. மழை கொடுக்கும் ஞாபகங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

ஊருக்கெல்லாம் ஒரே மழை எனினும் ஒவ்வொருவருக்கும் அது கொடுக்கும் அனுபவம் வேறுபடுகிறது. இன்று காலை கண்விழிக்கும் போதே மழையின் தரிசனம், மற்றுமோர் அற்புத தினத்தை துவக்கி வைத்தது.

1997 ம் வருடத்தின் இதே போன்ற ஒரு மழை நாள். மந்தாரமான வானம் ஓயாமல் தூறிக்கொண்டிருந்த, வெளிச்சமில்லாத ஒரு காலை, பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து கல்லூரிக்கு பயணித்தபோது நான் இந்த பாடலை முதல் முறை கேட்டேன்.

ராஜா அலை சற்றே ஓய்ந்து எல்லோர் வாயிலும் ரஹ்மான் தவழ்ந்த காலை. அப்போது வெளியாகியிருந்த ராஜாவின் ஒரு படம். வழக்கமான ராஜா இசையிலிருந்து சற்றே நவீனப்படுத்தப்பட்ட இசை வாகு.

இணக்கமான ஒருவருடன் மலைப்பாதையில் பயணிக்கும் சுகமளிக்கும் மெட்டு. அறிவுமதியின் காதல் ததும்பும் வரிகள்.பாடல் "முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன?". இடம் பெற்ற படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான "ராமன் அப்துல்லா". எப்போதுமே 80களின் ராஜா பாடல்களிலேயே ஊறிக்கிடந்த எனக்கு அது மிக வித்தியாசமான இசையாகப்பட்டது.

கரண் மற்றும் அஸ்வினி (எனக்கு தெரிந்து இவர் தமிழில் மூன்றாவது அஸ்வினி) நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கும் மழைக்கும் ஒரு தொடர்பும் இல்லை எனினும், எனக்கு ஏனோ மழையை ஞாபகப்படுத்தும். நிஜமாகவா அல்லது என் அதீத கற்பனையா தெரியவில்லை... எஸ்.பி.பி, சித்ரா இருவருமே வழக்கமான குரலில் இல்லாமல் சற்றே கரகரப்பாக பாடியிருப்பது போல என் காதுக்கு ஒலிக்கும்.

பல்லவி முழுவதுமே ஆண் குரலில் ஒலிக்கும். அனுபல்லவியின் முதல்வரி "மனம் வேகுது மோகத்திலே" எனும்போதே தபேலா இசை நடை மாற எத்தனிக்கும்.. அடுத்த வரி "வேகுது தாபத்திலே” எனும்போது இன்னுமொருமுறை நடை மாறும்.

பாடலின் interlude களில் குழலிசை தொடரும். அருண்மொழி எனும் குழலிசை கலைஞர் ராஜாவின் ராஜாங்கத்தில் எப்போதுமே ஆஸ்தான வித்வான். நல்ல பாடகரும் கூட. இதே படத்தில் "என் வீட்டு ஜன்னல் எட்டி" என்ற பாடலை பவதாரிணியுடன் பாடியிருப்பார்.

அறிவுமதி ராஜாவுடன் இணைந்த முதல் பாடலிது. தெரியாத யாரையேனும் சந்திக்க சென்றால் இன்னார் அனுப்பினார்களென்று சொல்வது போல " உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்" என்று அவள் சொல்வது, நான் உறங்கியபின் வரப்போகும் கனவு இப்போதே வந்து காத்திருக்கிறது, தூங்க இன்னும் மடி கிடைக்கவில்லை என்பதெல்லாம் உச்சபட்ச பிரமிப்பு எனக்கு.

கவிஞர் அறிவுமதியை ஒருமுறை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது இந்த வரிகளை அவரிடம் சொன்னபோது கிடைத்த பதில் ஒரு புன்னகை. தீவிர இனமானவாதி. ஆங்கிலக்கலப்பில்லாத பாடல்களை மட்டுமே எழுதிய (இப்போது திரையிசையிலிருந்து விலகியிருக்கிறார்) கொள்கைவாதி. அதுபற்றிய கேள்விக்கு "அன்னையை விற்றா பிள்ளைகளுக்கு உணவளிப்பது?" என்றவர். ராஜாவுடன் அவரின் முதல் பாடல் இது எனினும் சிறைச்சாலை பாடல்கள் முதலில் வெளிவந்தன. (கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமா?, ஆசைக்கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி..).

மென்மையாக துவங்கும் கிடார் இசை பாடலைத்துவக்கும். பாடல் முழுவதுமே தபேலா இசை பிரதானமாக இருந்தாலும் பின்னணியில் மிக மெலிதான வயலின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த பின்னணி வயலின் மட்டுமே கவனித்தால் அது நிகரில்லாததாயிருக்கும்.

பாடலின் முடிவில் எஸ்.பி.பி "முத்தமிழே" எனும்போது சித்ரா "என்ன ?" என்று கொஞ்சுவார். அந்த வரியை எஸ்.பி.பி முடிக்கும் போது ஒரு overlap உடன் அடுத்த வரியை சித்ரா தொடர்வார்.

ராஜாவின் கடந்து போன எத்தனையோ நாட்களில் இந்த பாடலும் ஒன்றாக இருக்கலாம்... ஆனால் எனக்கு அதுவே இன்னும் கடக்க முடியாத கடலாக இருக்கிறது..!!முத்தமிழே முத்தமிழே
முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன?
முத்தத்தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன?
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன?
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன?
மனம் வேகுது மோகத்திலே..
நோகுது தாபத்திலே..

காதல்வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை..
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை..
தாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே..
மோகம் வந்து குடைபிடிக்க கைவளையல் சிரிக்கிறதே..
உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்..
முத்தம் சிந்தச்சிந்த ஆனந்தம் தான்..

கனவுவந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா?
ஆசை இங்கு பசித்திருக்கு, இளமைக்கென்ன விருந்திருக்கா?
பூவைக்கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ள தூண்டுகிறாய்..
மச்சம் தொடும் தோரணையில் முத்தம் தர தீண்டுகிறாய்..
மின்னல் சிந்தி சிரித்தாய் கண்ணில் என்னை குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்..

முத்தமிழே முத்தமிழே
முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன?
முத்தத்தமிழ் வித்தகரே..
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன?
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன?
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன?
மனம் வேகுது மோகத்திலே..
நோகுது தாபத்திலே..


-மகேந்திரன்.

.

4 comments:

Karthick said...

Nice One...Infact one more song in that album is too good. En Veetu Jannal Etti Yen Paakura..Ila nenja thottu thottu nee thakura...Bavatharani voice...

And this Song is my fav on rainy days....

Enakku Pidtha Padal Athu Unnakum pirikkume - July Ganapathi...

Mudinja Atha pathiyum sollunga mahendran...

Apuram Oru vendokol....ethavathu oru AR Rahman song review pannungalen pls...

ரோஸ்விக் said...

அருமையான தாலாட்டும் இசை...தழுவும் பாடல் வரிகள். நான் கேட்டு கேட்டு மகிழ்ந்ததில் இதுவும் ஒன்று.

பகிவிற்கு நன்றி நண்பரே!

நரேஷ் said...

அருமை மகேந்திரன்.....

பதிவைப் படித்தவுடன், பாட்டு கேட்டுக் கொண்டே மீண்டும் ஒரு முறை படித்தேன்...

அதிலும் நீங்கள் சொன்ன கடைசியில் சித்ரா கொஞ்சும் ‘என்ன’ என்னை உன்மத்தம் கொள்ளச் செய்தவை....

அருமை!!!

Anonymous said...

Amiable post and this fill someone in on helped me alot in my college assignement. Gratefulness you seeking your information.