Thursday, July 1, 2010

அரசுக்கெதிரான ஒரு தனிமனித போராட்டம்

கர்நாடக சட்டசபை கடந்த இரண்டு நாட்களாக அமளிதுமளிபடுகிறது. காரணம், ஒருவருடைய ராஜினாமா கடிதம். அரசு துறைகளில் இருக்கும் லஞ்ச மற்றும் இதர சீர்கேட்டினை விசாரிக்க இருக்கும் அமைப்பின் தலைவருடைய ராஜினாமா கடிதம். பாஜக அரசை தவிர கவர்னர், எதிர்க்கட்சிகள், மக்கள் என அனைவரும் ராஜினாமாவை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளின் இந்த அக்கறைக்கு அரசியல் காரணங்கள் இருப்பினும், நடுநிலையாளர்களின் வருத்தம் - இருக்கும் சொற்ப நம்பிக்கைகளையும் பாழாய் போன அரசியல் காலி செய்கிறதே என்பது தான்.

---

’லோக் அயுக்தா’ என்றொரு அமைப்பை மொரார்ஜி தேசாய், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தினார். அதன் முக்கிய நோக்கம், லஞ்ச முறைக்கேட்டை கண்டறிவது. லோக் அயுக்தா என்றால் ‘மக்கள் தூதுவன்’ என்பது போன்ற அர்த்தம் வரும். இந்த அமைப்புக்கான சட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் ஒரு லோக் அயுக்தாவை நியமிக்க வேண்டும். ஒரு முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி, இதன் தலைவராக இருப்பார். அவரும் ‘லோக் அயுக்தா’ என்று தான் அழைக்கப்படுவார். இவரை நியமிக்கும் அதிகாரம், மாநில ஆளுனருக்கு உண்டு. ஒரு மாநிலத்தின் முதல்வர் முதற்கொண்டு கடைநிலை அரசு ஊழியர்கள் வரை, லோக் அயுக்தாவின் விசாரணை வட்டத்திற்குள் வருவார்கள்.

கேட்க நன்றாக இருந்தாலும், விசாரணை மற்றும் அறிக்கை வரை தான் இவர்களது அதிகாரம். அதற்கு மேல் தண்டிக்கும் அதிகாரமெல்லாம் இவர்களுக்கு கிடையாது.

நான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. பெங்களூர் செய்திதாள்களில் அடிக்கடி இது சம்பந்தமான செய்திகள் வரும். இங்கு லோக் அயுக்தாவாக இருப்பவர், 69 வயதான முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி - சந்தோஷ் ஹெக்டே. மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக திகழும் அளவுக்கு, பல விஷயங்களை செய்திருப்பவர். உதாரணத்திற்கு சில.



---

அந்த அன்னைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணி இரவு 2. அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றால், கண்டுக்கொள்ள யாருமில்லை. ஹெக்டேவுக்கு தொலைபேசி எண்ணை சுழற்றினார். ”அய்யா, நீங்க சொல்லுங்கய்யா... கேப்பாங்க...”. ஹெக்டேவுடைய வேலை இதுவல்ல. ஆனாலும் அந்த மருத்துவமனைக்கு போன் போட்டார். ஒரே போன். அடுத்த சில மணித்துளிகளில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் குடிசைக்கு முன்பு நின்றார்கள்.

ஏதோ அதிகாரமில்லாதவர்களை மட்டும் பிடித்து மிரட்டுபவரல்ல இவர். கோலார் எம்.எல்.ஏ.வையும் லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடித்திருக்கிறது இவருடைய அணி. அவ்வளவு ஏன், போன வருடம் பாராளுமன்றத்தில் 17 முக்கியமான மசோதாக்களை 13 நிமிடத்தில் தாக்கல் செய்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் மீதே கோபக்கனலை வீசினார். காரணம் - லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் கறைப்படிந்த கரங்களை கழுவ வழி ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

---

சமீபத்தில் இவர் வாளை சுழட்ட ஆரம்பித்த இடம் - பெல்லாரி் கனிம சுரங்கத் தொழிலில். பெரிய இடம் தான். ஒரு மாநிலத்தின் ஆட்சியையே தொங்கலில் வைக்கும் அளவுக்குக்கான செல்வாக்கு படைத்தவர்களுக்கு எல்லாமே சட்டவிரோதம் தான். எல்லாவற்றையும் விசாரித்து என்னதான் அறிக்கையை அரசுக்கு அனுப்பினாலும், பலன் தெளிவான பூஜ்யம். திரும்ப திரும்ப விசாரித்து அனுப்பினாலும், பலன் அதே. தவிர, இவருக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கு பலவிதமான நெருக்கடிகள். இவர் தவறு செய்த அரசு அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பினால், சில நாட்களில் சஸ்பென்சன் தடை செய்யப்பட்டு, ஜாலியாக சீட்டில் அமர்ந்திருப்பார் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். இவர் அரசிடம் வைத்த கோரிக்கைகள் எதையும் சட்டை செய்யவில்லை அரசு.

பொறுத்தார். பார்த்தார். ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டார்.

“என் பேச்சுக்கு கட்டுப்பட்டு, நேர்மையுடன் எனக்கு கீழே வேலைப்பார்க்கும் அதிகாரிகளை என்னால் காப்பாற்ற முடியாவிட்டால், அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்க நான் தகுதியானவன் அல்ல. அரசு வீட்டுக்காகவும், சிகப்பு விளக்கு பொருத்திய காருக்காகவும் மட்டும் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன்.”

பதவியில் இருந்து விலகினாலும், தனது சமூக பணிகள் தொடரும் என்கிறார் ஹெக்டே.

இவர் பிரஸ் மீட் வைத்ததை பார்த்து தலைமறைவான முதல்வர் எடியுரப்பா, அடுத்த நாள்தான் வெளியே வந்தார். ”ராஜினாமா முடிவை பரிசீலனை செய்ய கேட்பீர்களா?” என்ற கேள்விக்கு, முதல்வரின் பதில் - “நான் அவருடைய முடிவை மதிக்கிறேன்.”

நல்லா மதிச்சீங்க!

---

மக்கள் பிரச்சனைகளை உடனே தீர்த்துவைப்பது போல் ஒரு படம் அமைந்தாலே, அதை பேண்டஸி என வகைப்படுத்திவிடுகிறோம். அந்த அளவில் தான், தீர்வுகளை நோக்கிய நம் நம்பிக்கை இருக்கிறது. எப்பொழுதாவது சின்னதாக ஒரு நம்பிக்கை பூக்கும். அதையும் பூத்து மலர்வதற்கு முன்பே பிடுங்கி ஏறிய சிலர் தயாராக இருக்கும் வரை, நமக்கு உடனடி நியாய தீர்வென்பது பேண்டஸி தான் போலும்.

.

11 comments:

Unknown said...

இங்கு நேர்மை, நியாயம் எல்லாம் செல்லாக் காசாகி ரொம்ப நாளாச்சு நண்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நேர்மையா இருந்தாலே கஷ்டம்தான் பாஸ். நானும் ரொம்ப கஷ்டப்படுறேன்

Mohan said...

மக்கள் வெளியே வந்து போராடதவரை இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினம்தான். சில மாதங்களுக்கு முன்பு மைசூர் ஐஜியை அரசாங்கம் மாற்ற நினைத்தபோது,மைசூர் மக்களின் போராட்டத்தால் அது கைவிடப்பட்டது.இந்த விசயத்திலும் மக்கள் போராடினால் நல்ல தீர்வு கிடைக்குமென நம்புகிறேன்.

Joseph said...

I agree with Mohan. Unless we people care and show that we care, we will be taken for a ride.

You are doing one way of showing that you care - at least blogging about it. Voting is another.

We leave our right to vote and then take up the right to complain!

Joseph

Anonymous said...

http://www.commondreams.org/headline/2010/07/02-6
The difference between the rich and poor is way beyond comprehension and even the politicians are just pawns in the hands of corporates.I am not supporting what the politicians are doing but the main problem is capitalism.

உமாப‌தி said...

அந்த தலைவனுக்கு தலை வணங்கும் அதே நேரத்தில் சில அரசியல் மற்றும் அரசு நடவடிக்கைகள் இப்போது எந்த திசை நோக்கி செல்கிறது, நேர்மைக்கு விலை கேட்கும் நிலைமையினை அறிய முடிகிறது

சரவணகுமரன் said...

ராஜினாமாவுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சரவணகுமரன் said...

ரமேஷ், நீங்களும் நேர்மையா? என்ன, ஹமாம் சோப்பு போட்டு குளிக்குறீங்களா?

சரவணகுமரன் said...

சரிதான் மோகன்.

சரவணகுமரன் said...

நன்றி ஜோசப்

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி உமாபதி