Monday, August 16, 2010

டெல்லி - மெட்ரோவில் ஒரு நகர்வலம்

பாலிகா பஜார் பக்கம், மெட்ரோ ஸ்டேசனுக்கு வழி கேட்டப்போது, பூமிக்குள் கீழிறங்கும் படிக்கட்டை நோக்கி கைக்காட்டினார்கள். நான் ஏதோ சப்வே என்று நினைத்தேன். பார்த்தால், ஸ்டேசன் பூமிக்கடியில் இருக்கிறது. மெட்ரோ ரயிலும் அப்படியே. ஜனசந்தடிமிக்க நகரத்தின் கீழே தொந்தரவில்லாமல் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது. பூமிக்கடியில் இரண்டு அடுக்குகளில் மெட்ரோ வழித்தடங்கள் இருக்கிறது.ஒவ்வொரு வழித்தடத்தையும் ஒரு வண்ணத்தை கொண்டு குறிக்கிறார்கள். நகரத்தின் மையத்திலிருக்கும் ராஜிவ் சவுக் ஸ்டேசனில் இருந்து நொய்டா செல்ல நீல நிறம். நகரத்தை விட்டு வெளியே வரும்போது, பூமிக்கடியில் இருந்து பாலத்திற்கு தாவிவிடுகிறது. நொய்டாவில் நாங்கள் இறங்கியபோது நேரம், ஒன்பது இருக்கும். அங்கிருந்து கிரேட்டர் நொய்டா செல்லவேண்டும். பஸ் எதுவும் இல்லை.

ஆட்டோவில் செல்லலாம் என்று கேட்டால், முன்னூறு ரூபாய் என்றார் ஆட்டோக்காரர். எங்களுக்கும் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. உடன் வந்த நண்பர், வழக்கம்போல் பேரம் பேசினார். ”அதுலாம் கிடையாது. இங்கதானே இருக்குது. இருநூறு ரூபாய் தான்”. ஆட்டோக்காரர் ஒத்துக்கொள்ளவில்லை. அவருக்கு நாங்கள் சொன்ன ஹோட்டலும் தெரியவில்லை. வழி சொல்லவும், பேரம் பேசவும் ரிசப்ஷனுக்கு போன் போட்டு, அவரிடம் கொடுத்தோம். வழி தெரிந்துக்கொண்டு, பெரிய மனது செய்து 20 ரூபாய் குறைத்தார்!

போகிறோம். போகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஹோட்டல் வந்து சேர்ந்தோம். நாங்கள் 300 கொடுக்க, அவர் திருப்பி 20 கொடுக்க, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று பேசிய பேரத்தை நாங்களே தூரத்தை கண்டு வாபஸ் செய்தோம்.

----

அடுத்த தினம் எனக்கு மட்டும் வேலை ரொம்ப சீக்கிரமே முடிந்தது. மற்றவர்கள் அனைவரும் ரொம்ப பிசியாக இருந்தார்கள். காத்திருந்து பார்த்து, அலுவலகத்தில் இருக்க சலித்துப்போய், ஹோட்டல் திரும்பினேன். ஒரு பத்து நிமிடம் இருந்திருப்பேன். அங்கும் போர் அடித்தது. வெளியே டெல்லிக்கு செல்லலாம் என்று தோன்றியது. ஆனால் தனியாகவா?

அவனவன் எந்த நாட்டிலோ இருந்து வந்து, இங்கு தனியாக சுற்றிக்கொண்டிருக்கிறான். அமெரிக்கர்களே தைரியமாக ஈராக், ஆப்கானிஸ்தான் என்று சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நமது நாட்டில் வேறொரு பகுதியில் சுற்ற நாம் ஏன் யோசிக்க வேண்டும்? முந்திய தினம், சீக்கிரம் ஹோட்டல் திரும்ப வேண்டும் என்று ஒரு நண்பர் சொல்ல, இன்னொருவர் இப்படி பதிலளித்தார்.

“ஏங்க பயப்படுறீங்க? எவ்வளவு நேரமானாலும் ஹோட்டலுக்கு போய்டலாம். ஆம்பளப்பசங்க தானே? (ஆணாதிக்கவாதியோ!) மோசமான சூழல் என்றானாலும், காசு செலவாகும். அவ்வளவுதானே?”

நேரத்தை வீணாக்க கூடாது என்று கிளம்பிவிட்டேன்.

---

பக்கமிருக்கும் மெட்ரோ ஸ்டேசனுக்கு போய், அங்கிருந்து டெல்லிக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றதால், ஒரு பஸ் பிடித்து நொய்டா செக்டர் 36க்கு சென்றேன். ஒவ்வொரு ஏரியாவுக்கும் பேர் வைக்காமல், நம்பர் கொடுத்துவிட்டார்கள். பஸ் முதல் எல்லாமுமே, கேஸில் தான் ஓடுகிறது. தேங்காயை கீறி ஒரு தட்டில் போட்டு, ஒரு சிறுவன் ஓடும் பஸ்ஸில் விற்றுக்கொண்டிருந்தான். 20 ரூபாய்க்கு முக்கால் மணி நேரம் பஸ் ஓடியது.வயல்வெளிகளை அழித்து, கட்டிடமாக கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பெரிய பெரிய சாலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய கட்டிடங்கள். நடுவே எங்கும் வயல்வெளிகள். எல்லாம் நல்ல விவசாயநிலமாக தெரிந்தது. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவோம் என்றும் தெரிந்தது.

இரவு திரும்பும்போது, இந்த பிரமாண்ட சாலைகளின் ஓரத்தில் தான் சில மக்கள் படுத்துறங்கிக்கொண்டிருந்தார்கள்.

---

மெட்ரோ ஸ்டேசன் போய்விட்டேன். அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியவில்லை. ரெட் போர்ட், குதுப் மினார். எது எங்கிருக்கிறது என்று தெரியாததால், ரெட் போர்ட் எங்கிருக்கிறது என்று ஒருவரிடம் கேட்டேன். முழித்தார். ஒகே என்று நேற்று சென்ற ராஜீவ் சவுக் சென்றேன். பிறகு, பக்கத்தில் என்ன இருக்கிறது என்று மெட்ரோ வழித்தடத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, சாந்தினி சவுக் என்ற பெயர் கவர்ந்தது, ஏற்கனவே கேட்ட பெயராக இருந்ததால். ரொம்ப பழையகாலத்து மார்க்கெட்.பொதுவாக சீக்கியர்கள் என்றால் வாட்டசாட்டமான உருவத்துடன், தாடி, கொண்டையுடன் பார்த்திருப்போம். இங்கு விதவிதமான சீக்கியர்களை பார்த்தேன். குட்டி குழந்தை சிங்கில் இருந்து பழம்பெரும் வயதான சிங் வரை. சில நோஞ்சான் சிங்குகளையும் பார்த்தேன். சீக்கிய சாமியார்களின் உடை, காவி நிற பாவாடையுடன் வித்தியாசமாக இருந்தது.ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தது. இங்கு ரிக்‌ஷாவில் இன்னமும் மக்கள் பயணிக்கிறார்கள். அப்படியே பார்த்துக்கொண்டு, நடந்துக்கொண்டிருந்த போது தூரத்தில் சிகப்பாக ஏதோ தெரிந்தது. அட, ரெட் போர்ட்.சும்மா பார்க்க நினைத்தது அருகில், ஏதேச்சையாகவே வந்து விட்டேனே என்று ஆச்சரியம். பார்த்தேன். எங்க ஏரியா (!) கடைசி பஸ்ஸை பிடிக்க வேண்டுமானால், சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டேன்.

---

டெல்லியை சுற்றிப்பார்க்க மெட்ரோ ரயில் ரொம்பவும் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். 8 ரூபாயில் இருந்து 23 ரூபாய் வரை தான் டிக்கெட் விலை. ஒரு டோக்கன் கொடுக்கிறார்கள். ஸ்வைப் செய்து விட்டு, போய்க்கொண்டே இருக்கலாம். தினம் செல்பவர்கள், ஸ்மார்ட் கார்டு வைத்து ஸ்வைப்புகிறார்கள்.அதிக நேரம் காத்திருக்க வேவையில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒன்று என வந்துக்கொண்டே இருக்கிறது. அடுத்து வரும் ரயில் எத்தனை நிமிடத்தில் வரும் என்று டிஜிட்டலில் கவுண்ட்டவுன் பக்கத்திலேயே ஒளிர்கிறது.

மற்ற ரயில் நிலையத்திற்கும், இதற்கும் பெருத்த வித்தியாசம். கொஞ்சமே கொஞ்சம் தான் துப்பிவைத்திருக்கிறார்கள். இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் இருக்கும் தண்டவாளத்தை பார்க்கும் தைரியம் எனக்கு அவ்வளவு இல்லை. இங்கு தைரியமாக பார்க்க முடிந்தது.

பகல் வேளைகளில் வெளியே அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கவே, இந்த ஏசி மெட்ரோ கோச்களில் தஞ்சம் அடையலாம். ஆனால், ஏறி இறங்கும் கூட்டம் இருக்கிறதே! கொஞ்ச நஞ்சமாக இருக்காது. நான் விடுமுறை தினங்களில் தான் பயணித்தேன். மற்ற நாட்களில், கஷ்டமாகத்தான் இருக்கும்.

மற்றபடி, ஒரு மேப்பும் நிறைய நேரமும் இருந்தால், ஜாலியாக குறைந்த செலவில் டெல்லியை சுற்றி சுற்றி வரலாம்.

---ஹிந்தி தெரியாதது ஒன்றும் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆங்கிலத்தை வைத்து சமாளித்தேன். எல்லாரிடமும் போய் ஆங்கிலத்தில் பேச முடியாது. அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.

உலகமயமாக்கம் உருவத்தில், தோற்றத்தில் தெரிந்தால் தாராளமாக போய் ஆங்கிலத்தில் பேசலாம். இதற்கு அவர்களிடம் சில விஷயங்கள் கவனிக்க வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்திருக்க வேண்டும். அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். ஜீன்ஸ் விஷயம் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்றால் கூடுதலாக கொஞ்சம் தொப்பை இருக்கிறதா என்றும் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இரவு பஸ்ஸில் ஹோட்டல் திரும்பும் போது, எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று தெரியவில்லை. இப்படி தெரிந்தவர்களிடம் கேட்டு தான், கண்டக்டரிடம் சொன்னேன்.

---

இரவு ரூமுக்கு சென்றபோது, ரூம் மேட் அடுத்த நாள் ஊர் திரும்ப தயாராகிக்கொண்டிருந்தார். நான் டிவி போட, கலர் டிவியில் (டிவி பேருங்க!) ராவண் கிளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்க நினைத்தது. படத்தை கவனித்த ரூம்மேட், “இப்ப நீ இதை மாத்தலைன்னா, இப்பவே ஊருக்கு போயிருவேன்” என்று சொல்ல, டிவியை அணைத்து விட்டு படுத்தேன். இவனை மணிரத்னம் எவ்வளவு பாதிச்சிருக்காரு?!

அடுத்த நாள் அதிகாலையிலேயே ஆக்ராவுக்கு கிளம்ப வேண்டும் என்பதால், மொபைலிலும், மூளையிலும் அலாரம் வைத்துவிட்டு படுத்தேன். பெரும்பாலும், மூளை சீக்கிரமே முழித்திருந்து மொபைல் ஆலாரத்திற்காக காத்திருக்கும். அன்றும் அப்படியே.

(தொடரும்)

.

9 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

photo super

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டில்லி வந்திருந்தீங்களா.. மெட்ரோ மிக வசதியானது உண்மையாகவே.

ஆறுமுகம் said...

ரொம்ப சரளமான நடை. சுவாரசியமான விசயங்கள்.

ஆறுமுகம்
ஹைதராபாத்

Anonymous said...

http://ta.wikipedia.org/wiki/எம்.டி.ஆர்_தொடருந்து_சேவை/

பார்க்கவும். 18++ களில் இங்கிலாந்தில் அறிமுகமானது. 1979 ஆம் ஆண்டுகளிலேயே ஹாங்காங்கில் வந்துவிட்டது. ஆனால் இதன் வசதிகள் டில்லியைவிடவும் சிறப்பாக உள்ளன. இதற்கு பயன்படுத்தும் செலவட்டை முறை (Octopus Card) டில்லியிலும் உள்ளனவா?

sakthipriya said...

Superb....

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்

சரவணகுமரன் said...

ஆமாங்க முத்துலெட்சுமி

சரவணகுமரன் said...

நன்றி ஆறுமுகம்

சரவணகுமரன் said...

நன்றி சக்திப்ரியா