Tuesday, August 17, 2010

பயணங்களின் மைல்கல் - தாஜ்மஹால்

நான் இருபது வருடங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருக்கிறேன். ஒரு பெரும் உறவு கும்பலுடன். அப்போது டெல்லியிலிருந்து ஆக்ரா செல்ல, தலைக்கு நூறு ரூபாய் ஆகும் என்றதால், எங்கப்பா கூட்டி செல்லவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஆயிரம் ரூபாய் ஆகுமோ என்று நினைத்தேன். அப்படியெல்லாம் ஆகவில்லை.



டெல்லியில் இருந்து போபாலுக்கு ஒரு அதிவேக ரயில் ஆக்ரா வழியாக ஓடுகிறது. காலை ஆறே காலுக்கு கிளம்பி, எட்டேக்காலுக்கு போய் சேர்ந்துவிடுகிறது. 200 கிலோமீட்டர் - 2 மணி நேரத்தில். டிக்கெட் முன்னூத்தி சொச்சம் தான். இதுவே இந்தியாவின் வேகமான ரயில். இந்தியாவின் முதல் சதாப்தி. இங்கே படித்து தெரிந்துக்கொண்டேன்.



வெளிநாட்டினர் நிறைய பேர் வந்திருந்தார்கள். ஒருமுறை அலுவலகத்தில் எங்களது ப்ராஜக்ட்டுக்கான கிளையண்ட், யூ.எஸில் இருந்து வந்திருந்தார். வந்தவர் முதலில் தாஜ்மஹால் சென்று விட்டு தான், பிறகு அலுவலகத்துக்கு வந்தார். சும்மா பேசிக்கொண்டிருக்கும் போது, எங்களிடம் ”யாரெல்லாம் தாஜ்மஹால் சென்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ரெண்டே ரெண்டு பேர்தான் சென்றிருந்தார்கள். அவர்களும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். பக்கத்தில் இருப்பதால் பார்த்திருக்கிறார்கள்.

இப்படிதான் நாம் பார்க்காத நம்மூர் விஷயங்களை, நம்மவர்களை விட வெளிநாட்டினர் அதிகம் பார்த்திருக்கிறார்கள். இன்னொரு கிளையண்ட் சென்ற வருடம், ராஜஸ்தானில் நடக்கும் ஒட்டகக்கண்காட்சியை பார்ப்பதற்காக வந்து சென்றார். போட்டோ காட்டினார். அசத்தலாக இருந்தது. அவர்களது பயணத்திட்டங்கள் பொறாமை வரவழைக்கும்.

---

ஆக்ரா ரயில்வே ஸ்டேஷன் வெளிவந்ததும், ஆட்டோகாரர்களும், கைடுகளும் முற்றுகையிட்டார்கள். நான் ப்ரீபெய்டு கார் புக் செய்தேன். காரை ஓட்டிய டிரைவர் நன்றாக ஆங்கிலம் பேசினார். பேசினான். சின்ன பையன். பி.ஏ. முடித்திருக்கிறான். பெங்களூரில் வேலை கிடைக்க ஆசைப்பட்டான். பேசிக்கொண்டே வந்தான். பல விஷயங்கள் சொன்னான்.

நான் தாஜ்மஹால் கேட்டுக்கு சென்ற போது, ஒன்பது மணி இருக்கும். கூட்டம் இல்லை. ஓட்டக வண்டி, ரிக்‌ஷா, பேட்டரி கார் போன்றவை உள்ளே அழைத்து செல்ல இருக்கிறது. டிரைவர் நடந்தே போக சொன்னான்.



நம்மூரில் சில சாதாரண விஷயத்திற்கெல்லாம் நுழைவு கட்டணம் கன்னாபின்னாவென்று வைப்பார்கள். கேமரா எடுத்து சென்றால், இன்னும் கன்னாபின்னாவென்று பிடுங்குவார்கள். தாஜ்மஹாலில் பத்து ரூபாய்தான். தாஜ்மஹால் போல் செட் போட்டே, இதைவிட அதிகம் வசூலிப்பார்கள். ஆனால், ஒரிஜினல் தாஜ்மஹாலுக்கு கம்மிதான்.



---

காலை வெளிச்சத்தில் மினுமினுத்துக்கொண்டிருந்தது தாஜ்மஹால். ரொம்ப நாள் பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருந்ததை, பார்த்துவிட்டேன். எத்தனை வருடமாக புகைப்படங்களில், படங்களில் காணுகிறோம். இதோ நேரில். நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டிருந்தேன்.



சின்ன வயதில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஸ்டில். இதோ நானும் எடுத்துவிட்டேன். அப்படியே தான் இருக்கிறது. ஆனாலும், ரொம்ப மகிழ்வாக இருக்கிறது. அடித்து தள்ளினேன். எப்படி எடுத்தாலும், அழகாக இருந்தது. அங்கு மட்டுமே நூறு போட்டோக்கள் எடுத்திருப்பேன்.



இந்தியர்கள் அனைவருக்கும் தாஜ்மஹால் தெரிந்திருக்கும். ஷாஜகான் - மும்தாஜ் கதை தெரிந்திருக்கும். ஒரு ராஜாவின் உணர்வு, கட்டிடமாய் பிரமாண்டமாய் நிற்கிறது. ராஜாவின் காதலென்பதால், காலம் தாண்டி தெரிகிறது. மூணாவது மனைவி பதினாலாவது குழந்தையை பெற்றெடுக்கும்போது செத்து போனாலும், காதல் காதல்தான்.



என்னதான் பல வருடமாக, புகைப்படங்களில் பார்த்துவந்தாலும், எனக்கு புதிதாக இருந்தது. இஸ்லாமிய புராதன இடங்களுக்கு சென்றதில்லை. தாஜ்மஹாலுக்கு பக்கத்திலேயே மசூதியொன்று இருந்தது. ஏதும் வழக்கம் தெரியாமல் தவறு செய்து விட கூடாதென்று கவனமாய் இருந்தேன்.



மார்பிளாலேயே செதுக்கியிருக்கிறார்கள். சின்னதாய் புகைப்படங்களில் பார்த்த விஷயங்கள், பிரமாண்டமாய் முன்னால் நிற்கிறது.



நான் நம்மூர் கோவிலுக்கு போகும் போதே, கோவிலை கட்டிய ராஜா இங்கேதானே சென்றிருப்பார்? அவரும் இங்கே நின்றுதானே சாமி கும்பிட்டு இருப்பார்? கோவிலை கட்டிய நம் முன்னோர், மதிய உணவு இடைவேளையின் போது, இங்கு உட்கார்ந்து சாப்பிட்டு இருப்பார்களோ? என்றெல்லாம் எண்ணுவதுண்டு. அதையே தாஜ்மஹால் முன்பு நின்று கொண்டு நினைத்துக்கொண்டு இருந்தேன். சிலிர்க்கணும் அல்லவா? சிலிர்த்தது.

---

தாஜ்மஹால் முன்பு ஒரு மார்பிள் பெஞ்ச் உண்டு. உலகமெங்கும் இருந்து வரும் பிரமுகர்கள், அதில் ஜோடியாக உட்கார்ந்து போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அடுத்த நாள் பேப்பரில் அது வரும்.

எனக்கும் அப்படி ஒரு போஸில் எடுக்க ஆசை இருந்தது. பக்கத்தில் உட்கார ஜோடி இல்லாததால், எடுக்கவில்லை.



தவிர, மொக்கை லொக்கேஷனிலேயே, ஒரு கேங்காக சென்றால், வளைத்து வளைத்து போட்டோ எடுப்போம். சோலோ, குரூப் என்று மாற்றி மாற்றி அடித்து தள்ளுவோம். தனியாக சென்றதால், அதற்கு வாய்பில்லாமல் போனது. ஒரிரு போட்டோக்கள், அங்கு வந்திருந்தவர்களிடம் கொடுத்து எடுத்துக்கொண்டேன்.



போட்டோ எடுப்பவர்களை பார்ப்பதே, நல்ல எண்டர்டெயின்மெண்டாக இருந்தது. வந்திருந்த வெளிநாட்டினர் தாஜ்மஹாலுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட, நம்மவர்களில் சிலர் அந்த வெளிநாட்டினருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். பட்டையும், ருத்திராட்ச கொட்டையுமாக சிலரும், பெரிய நாமத்துடன் ஒரு குடும்பமும் தாஜ்மஹால் முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டதை பார்த்த போது, யோசனையாக இருந்தது. இவ்வளவு அலங்காரங்களுடன் இந்த ஆச்சாரமானவர்கள், இப்படி ஒரு கல்லறை முன்பு நின்று போட்டோ எடுத்து கொள்கிறார்களே என்று.



---

வரவே மனமில்லாமல் தான் வெளியே வந்தேன். எனக்காக டிரைவர் காத்திருந்தார். நன்றாக ஆங்கிலம் பேசியதால், இந்த காரிலேயே செல்லலாம் என்று காத்திருக்க சொன்னேன். என்னுடைய ப்ளான் ஆக்ராவில் ‘தாஜ்மஹால்’ மட்டும் தான். அதனால் தான், காலையில் கிளம்பியவன் மதியமே திரும்ப திட்டமிட்டிருந்தேன். இப்ப, இன்னும் நேரமிருந்ததால் டிரைவரிடம் கேட்டேன்.

“அடுத்து எங்க?”

“ஆக்ரா கோட்டை போலாம்.”

ஓ! போலாமே...

(தொடரும்)

.

9 comments:

ஆறுமுகம் said...

அண்ணெ
உங்களின் ரசனை மற்றும் பகிர்தல் மகிழ்ச்சியையும் பொறாமையையும் ஒரு
சேர ஏர்ப்படுத்துகிரது. நன்றி

ஆறுமுகம்
ஹைதராபாத்

sakthipriya said...

Superoooooooooo
super
nangalum ennamum photo le than parthutu erukom.

சரவணகுமரன் said...

நன்றி ஆறுமுகம்

சரவணகுமரன் said...

போயிட்டு வந்துருங்க, சக்திப்ரியா

ஆனந்த் said...

டெல்லி பயண குறிப்புக்கள் நல்லா இருக்கு. எனக்கும் சில நேரங்கள்ள தனியா சுத்தி பார்க்க போறது பிடிக்கும்.I enjoy it.

btw, இதுதான் உங்களுக்கு என்னோட முதல் பின்னூட்டம்.

நன்றி,
ஆனந்த்,
ஷாம்பர்க்,சிகாகோ

சரவணகுமரன் said...

நன்றி ஆனந்த்

இனியா said...

Good one!

சண்முகம் said...

Hai ur blog is nice. Which camera u r using take photos ? photos are good clarity.

துளசி கோபால் said...

படங்களில் நல்ல துல்லியம்!

எப்படி மனுசத்தலைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கு என்பது ஆச்சரியமே!

கூட்டத்தின் பகுதி இல்லாம தாஜ்மஹலைஒரு படம் எடுக்கணுமுன்னு எவ்வளவோ முயன்றும் ஒரு ஃப்ரேம்கூட தனியா வரலை:(

ஒன்னே ஒன்னு மட்டும் கோபாலை வேறொரு பகுதியில் உக்காரவச்சு எடுத்தேன்.

என் விஸிட் இங்கே.

http://thulasidhalam.blogspot.co.nz/2010/12/blog-post_23.html