Wednesday, November 17, 2010

ஹார்லிக்ஸ்

வெள்ளை ஆங்கிலேயர் ஜேம்ஸிற்கு அப்போது தெரிந்திருக்காது. 137 வருடத்திற்கு பிறகு, ஒரு பச்சைத்தமிழன் அவனுடைய வலைப்பூவில் அவரைப் பற்றி எழுதுவான் என்று. ஜேம்ஸ் அறிந்திராத வலைப்பூ, உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது அதைத்தான்.

போதும், மொக்கையைப் போட்டது. சொல்ல வந்த விஷயத்தை சொல்கிறேன்.

ஜேம்ஸின் முழுப்பெயரை சொன்னால், சொல்ல வரும் விஷயம் சூசகமில்லாமல் புரிந்துவிடும். ஜேம்ஸ் ஹார்லிக். இவருடைய தம்பி வில்லியம் ஹார்லிக். ஜேம்ஸ் ஒரு வேதியியல் பார்ட்டி. குழந்தைகளுக்கான உலர்ந்த உணவு தயாரிக்கும் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அப்படி இப்படி என்று எதை எதையோ கலக்க, சில உணவு தயாரிப்புமுறைகளை தெரிந்துக்கொண்டார்.

பிறகு, அமெரிக்காவில் இருந்த தம்பியுடன் சேர்ந்து ஏதாவது செய்யலாம் என்று சென்றார். வில்லியமும் இவரை போல ஒரு ஐடியா மணி தான். ஆரோக்கிய உணவுகளை பற்றிய ஆய்வை செய்துக்கொண்டிருந்தார். சும்மா இல்லாமல் எதையாவது செய்துக்கொண்டிருக்க, நச்சென்று ஒரு ஐட்டம் கிடைத்திருக்கிறது. நமக்கு பால் கிடைத்தால், கட்-அவுட்டுக்கு ஊற்றுவோம். கோதுமை கிடைத்தால், சப்பாத்தி போட்டு சாப்பிடுவோம். அவர் அப்படியில்லாமல், பால், கோதுமை, பார்லி என்ற கோதுமை வகை போன்றவற்றை ஊற வைத்து, கொதிக்க வைத்து, காய வைத்து, கட்டியாக்கி, பொடியாக்கி, முடிவில் கையில் எடுத்துப்பார்த்த போது, மண்டையில் லைட் எரிந்திருக்கிறது.

உடனே ஒரு பேடண்ட் வாங்கிவிட, இன்று கூட நம் வீட்டு குழந்தை குடிக்கும் ‘ஹார்லிக்ஸ்’ எனப்படும் பால் சத்துமாவு உதயமானது. ரெண்டு ஹார்லிக்குகளும் சேர்ந்து தயாரித்ததால், ஹார்லிக்ஸ் ஆனது. முதலில் அமெரிக்காவில் தயாரித்தார்கள். பிறகு, இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில் என உலகம் முழுக்க தயாரிக்கிறார்கள். குடிக்கிறார்கள்.

இவர்கள் வசம் இருந்த ஹார்லிக்ஸ் நிறுவனத்தை, 1969இல் பீச்சம் குரூப் வாங்கினார்கள். பிறகு பீச்சம், ஸ்மீத்க்லைனுடன் இணைய, அது திரும்ப க்ளாக்ஸோவுடன் சேர, இன்று க்ளாக்ஸோ ஸ்மீத்க்லைன் நிறுவனம் வசம் ஹார்லிக்ஸ் இருக்கிறது.

---

முதலில் குழந்தைகளுக்கான ஆரோக்கியப்பானமாக இருந்தது, பிறகு பெரியோர்களும் குடிக்கும் பானமானது. தற்போது, இந்தியாவில் குழந்தைக்களுக்கான பானமாகவே விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கென்றே ஒரு வெரைட்டி கூட விட்டார்கள்.



ஒவ்வொரு நிறுவனத்திற்குமே, அவர்களின் தயாரிப்புகளுக்குமே, மக்களிடம் ஒரு வகையான பிரதிபலிப்பு இருக்கும். ஹார்லிக்ஸிற்கு ஒரு சாத்வீகமான முகம். நம்மூர் மக்கள் தங்களின் அன்பை, ஆறுதலை செலுத்த, ஹார்லிக்ஸை தான் பயன்படுத்துகிறார்கள்.

உடம்பு சுகமில்லாமலோ அல்லது அடிப்பட்டோ, இல்லை யாருக்கேனும் குழந்தை பிறந்திருக்கிறது என்றாலோ, டவுண் மக்கள் ஆஸ்பத்திரிக்கு கையோடு வாங்கிக்கொண்டு செல்வது ஹார்லிக்ஸைத் தான். முன்பு போல், இப்போது இல்லையென்றாலும், இன்னமும் மருத்துவமனைகளில் இதை காண்கிறேன். ஒரேடியாக காணாமல் போவதற்கு முன்பு, பதிவு செய்யலாம் என்பதற்காகவே இப்பதிவு.

குழந்தைகளை குறி வைத்தே தற்போதைய விளம்பரங்கள் வருவதால், இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

---

இந்தியாவில் ஆடி, ஓடி, விளையாட வைக்கும் பானமாக, குழந்தைகளை வளர வைக்கும் பானமாக விளம்பரப்படுத்தப்படும் ஹார்லிக்ஸ், இங்கிலாந்தில் உறங்க வைக்கும் பானமாக விளம்பரப்படுத்தப்படுகிறது!

சமீபகாலங்களில் நிறைய மாற்றங்களை சந்தித்துவரும் ஹார்லிக்ஸ், ஆரம்ப காலத்தில் ஒரு சிம்பிளான கண்ணாடி பாட்டிலில் வந்தது. பவுடர் காலியான பிறகு, அந்த பாட்டில்கள் தான் வீடுகளில் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாட்டில்களானது. பத்திரமாக பொருட்களை பாதுகாத்து வைக்கும் வீடுகளில், இன்னமும் அந்த பாட்டில்களை காணலாம்.

இதற்கு போட்டியாகத்தான் எத்தனை எத்தனை தயாரிப்புகள் வந்தன? விவா, மால்ட்டோவா, போர்ன்விட்டா, பூஸ்ட், காம்ப்ளான் என பல போட்டிகளை சந்தித்தாலும், இதற்கென்று ஒரு தனியிடம் உள்ளது. கொஞ்ச நாட்கள் முன்பு கூட, காம்ப்ளானுடன் தெருவில் உருண்டு புரண்டு சண்டை போட்டது.

---

ஹார்லிக்ஸ் பலவிதமான சுவைகளில் வருகிறது. ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, ஏலக்காய் சுவையில் வந்தது. சென்னை போன்ற பெருநகரங்களிலேயே அது கிடைத்தது.

தமிழகத்தின் சிறு நகரங்களில் இருந்து, யாரெனும் சென்னை வந்தால், அவர்கள் வாங்கி செல்லும் விசேஷ பொருட்களில், அதுவும் ஒன்றாக இருந்தது. என் பால்ய காலத்தில் ஹார்லிக்ஸ் குடிப்பதைவிட, ’அப்படியே’ சாப்பிடுவதுதான் எனக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது.

அதன் பிறகு, ஏகப்பட்ட மாற்றங்கள். ஆனாலும், ஹார்லிக்ஸ் என்ற பெயரில் எது வந்தாலும், ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

நூடுல்ஸ் மார்க்கெட்டில் முப்பது வருஷங்களாக கோலோச்சிக்கொண்டிருந்த மேக்கியின் சாம்ராஜ்ஜியத்தையே தகர்க்க தொடங்கியிருக்கிறது, ஹார்லிக்ஸ் ஃபூடுல்ஸ்.

---

கடைசியாக ஹார்லிக்ஸ் பற்றிய ஒரு வரலாற்று துணுக்கு.

முதல் பத்தியில் பார்த்த ஹார்லிக்ஸின் நிறுவனர் வில்லியம், காசு சம்பாதித்தப்பிறகு நிறைய விஷயங்களுக்கு செலவழித்து வந்திருக்கிறார். ரிச்சர்ட் என்னும் உலகம் சுற்றும் வாலிபன், அண்டார்டிகா பக்கம் சென்ற போது அவருக்கு நிறைய பணமும், ஹார்லிக்ஸும் கொடுத்தனுப்பினார் வில்லியம்.

ரிச்சர்டுடைய முக்கிய வேலை, புது புது இடங்களை கண்டறிவது. அண்டார்டிகாவில் ஒரு மலையை கண்டுபிடித்தவர், அதற்கு ஹார்லிக்ஸ் என்றே பெயர் வைத்துவிட்டார்.

இன்னமும் ஹார்லிக்ஸ் என்ற மலை இருக்கிறது. ஹார்லிக்ஸ் மலைதான்.

.

22 comments:

ELIYAVAN said...

Once the market share of Horlicks was 87%. All other brands tried their best to survive in the remaining 13% market share. After the year 1990, the wholething has changed. Horlicks market share is now below 35%.

துளசி கோபால் said...

நல்ல தகவல். நன்றி

நான்கூட இந்தியா வந்தபின் ஹார்லிக்ஸ்க்கு மாறிட்டேன். இப்பெல்லாம் மாலையில் குடிப்பது சாயா இல்லை.

ஹார்லிக்ஸ் பாட்டில் மூடிக்குக் கூட அப்படி ஒரு புகழ் ஒருகாலத்தில் இருந்துச்சு. ஜவ்வரிசி வடாம் ஒரே அளவில் போட, தட்டை செய்யும்போது ஒரே அளவில் வெட்ட இப்படி.

ஒரிஜனல் மூடி சீக்கிரம் உடைஞ்சு போகுதுன்னு எவர்சில்வர் மூடிகள் பாத்திரக்கடையில் வித்துக்கிட்டு இருந்தாங்க!!!!!

பொன் மாலை பொழுது said...

அனேகமாக எல்லோருக்கும் ஹார்லிக்ஸ் என்றால் இதே போன்ற உணர்வுதான் இருக்கிறது.
சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.
// கொஞ்ச நாட்கள் முன்பு கூட, காம்ப்ளானுடன் தெருவில் உருண்டு புரண்டுசண்டை போட்டது.//

இந்த அக்கப்போரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

Prathap Kumar S. said...

ஹார்லிக்ஸ் நம் மக்களின் அன்புக்கு ஒரு அடையாளம்.

எப்படி காருன்னா மாருதி காரோ, பவுடர்னா பான்ட்ஸ் பவுடரோ அதுமாதிரி இந்த ஹார்லிக்ஸ்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துல ஆஸ்பத்திரி காட்சிகளின் ஹார்லிக்ஸ் இருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். அதைவிட இவ்வளவு பழமையானது என இப்போதுதான் தெரிகிறது,

Prathap Kumar S. said...

//இந்த அக்கப்போரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.//

இந்த அக்கப்போரை விளம்பரத்தில் பார்த்ததில்லையா சார்.
காம்ப்ளான் விளம்பரத்துல ரெண்டு டப்பாவை கவுத்து ஒண்ணுமேல H ன்னு எழுதி, இன்னொன்னு C ன்னு எழுதி,
ஹார்லிக்ஸை பகிரங்கமா இன்சல்ட் பண்ணுவானுங்களே....

Unknown said...

என்ன சார் பிராண்ட் ப்ரோமோ மாதிரி தெரியுது. அதுல வேல ஏதாவது பார்க்கறீங்ளா?. எப்படியோ நல்லா இருக்கு.

மாணவன் said...

//என் பால்ய காலத்தில் ஹார்லிக்ஸ் குடிப்பதைவிட, ’அப்படியே’ சாப்பிடுவதுதான் எனக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது.//

அதே அதேதான் நமக்கும் மிகவும் பிடிக்கும்

"ஹார்லிக்ஸ்" பற்றி மிக தெளிவாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அற்புதம்...

”இன்னமும் ஹார்லிக்ஸ் என்ற மலை இருக்கிறது. ஹார்லிக்ஸ் மலைதான்”

செம பஞ்ச்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

GEETHA ACHAL said...

தெரியாத விஷயம்...ஹார்லிக்ஸ் பற்றி தெரிந்து கொண்டேன்..நன்றி..

BalHanuman said...

அன்புள்ள குமரன்,

அருமையான பதிவு வழக்கம்போல் கலக்கலான உங்கள் நடையில்.

On a related note,
முகில் கூறுகிறார்..... (http://www.writermugil.com)

எந்த ஒரு விஷயம் குழந்தைகளிடம் முதலில் சென்றடைகிறதோ, அது நிச்சயம் வெற்றியடையும் என்பது உலகமறிந்த விஷயம். (விஜய் ஆண்டனி கதறடிக்கும் பாடல்களும், விஜய் ஆடும் பாடல்களும் அதிவேகமாக, அநாவசியமாகச் சென்றடைவது நான் வெறுக்கும் விஷயம்.)

பொருள்களுக்கான விளம்பரங்களும் அப்படித்தான். இன்றைய தேதியில் குழந்தைகளைச் சட்டென சென்றடைந்துள்ள ஒரு ப்ராடெக்ட் ‘Foodles’. ஹார்லிக்ஸ் நிறுவனம் Maggiக்குப் போட்டியாக களமிறக்கியுள்ள புதிய நூடுல்ஸ். தனது 25வது வருடத்தைக் கொண்டாடும் மாகிக்கு Foodles நிச்சயமாக கடுமையான சவாலைக் கொடுக்க இருப்பது உறுதி.

‘எனக்கு இனிமே நூடுல்ஸ் வேண்டாம். ஃபுடுல்ஸ்தான் வேணும். இன்னைக்கே வாங்கிட்டு வா’ -’தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து எனது அக்கா குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட் சென்றேன். விற்பனைக்கு வந்திருக்குமா என்ற சந்தேகத்துடன்தான் உள்ளே நுழைந்தேன். அழகாக, பிரத்யேகமாக மூன்று சுவைகளில் Foodles (பத்து ரூபாய்) பாக்கெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொருள்கள் வாங்க வந்திருந்த அநேக பேர், Foodlesஐ எடுக்கத் தவறவில்லை.

நான் ஜாக்கிரதையாக Foodles, Maggi இரண்டுமே வாங்கி வந்தேன். ஒருவேளை Foodles சுவை குட்டீஸ்க்குப் பிடிக்கவில்லை என்றால்?

அக்கா இரண்டையுமே செய்து கொடுத்தாள். குட்டீஸ், சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள். ‘எனக்கு ஃப்டுல்ஸ் மட்டுமே போதும். இனிமே நூடுல்ஸ் வேண்டாம்.’ மாகி பரிதாபமாக ஒதுக்கப்பட்டது. குழந்தை சொன்ன இன்னொரு கமெண்ட் ரொம்ப முக்கியமானது. ‘இது உரப்பு ஹார்லிக்ஸ் சாப்பிடுற மாதிரியே இருக்குது.’

Foodles – என்ற பெயரே அழகானது. பாதி வெற்றி அதில் கிட்டிவிட்டது. ஹார்லிக்ஸ் அறியாத குழந்தைகள் இல்லை. அதிலிருந்து குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு ப்ராடெக்ட். அதுவும் குழந்தைகள் கொண்டாடுவதுபோல ஒரு விளம்பரம். Foodles – குழந்தைகளிடையே 100% வெற்றி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

***

அலைகள் பாலா said...

once my mother had a surgery. on that time we had received more than 30 bottles.. i ate most of them. that was a sweet memory

சரவணகுமரன் said...

சமீபத்தில் மதுரைப்பக்கம் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருடுப்போன ஒரு அரசியல் சமாச்சாரத்தை எழுத நினைத்தேன். மறந்துவிட்டேன்.

சரவணகுமரன் said...

சரிதான் எளியவன். ஆனாலும் மக்களின் மனதில் இதை போல் இடம் பிடித்த வேறு ப்ராண்ட் இல்லையே!

சரவணகுமரன் said...

சூப்பருங்க துளசிம்மா

சரவணகுமரன் said...

கக்கு மாணிக்கம்,

அதை பற்றிய தகவலுக்கு, அங்கேயே லிங்க் கொடுத்திருக்கேனே?

சரவணகுமரன் said...

வாங்க நாஞ்சில் பிரதாப்... பேருக்கு மேல ட்ரேடுமார்க் மின்னுது :-)

சரவணகுமரன் said...

அப்படியெல்லாம் இல்லீங்க இனியவன். அதை பற்றி வாசித்தேன். அதான், பகிரலாம் என்று.

சரவணகுமரன் said...

நன்றி கீதா

சரவணகுமரன் said...

நன்றி BalHanuman... :-)

சரவணகுமரன் said...

பாலா,

முப்பது பாட்டில் ஹார்லிக்ஸ் சாப்பிட்டா, ஸ்வீட் மெமரிதான். :-)

sathish kovai said...

thats not true friend. horlicks was named after the botanical name of barley . barley is called hordium vulgare, so horlicks made from barley. may be a coincidence that the founder name was horlic.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம். இன்றைக்கு (24.10.2016) நான் வெளியிட்டுள்ள ” ஹார்லிக்ஸ் நினைவுகள் http://tthamizhelango.blogspot.com/2016/10/blog-post_24.html என்ற எனது வலைப்பதிவினில் உங்களுடைய இந்த பதிவினை மேற்கோளாக சுட்டியுள்ளேன். நன்றி.

சரவணகுமரன் said...

நன்றி தமிழ் இளங்கோ