Tuesday, August 28, 2012

எனக்கொரு ஆஸ்கர் பார்சல்!!!

சென்ற பதிவின் தொடர்ச்சி.

போன ஞாயிறு-இன் மெயின் ஸ்பாட் - யுனிவர்சல் ஸ்டுடியோ. அது இருப்பது ஹாலிவுட்டில். போகும் வழியில் இன்னும் இரண்டு இடங்களை கவர் செய்து விடலாம் என்பதால், முதலில் நாங்கள் சென்ற இடம் - டால்பி தியேட்டர்.நான் இதுவரை எத்தனை தியேட்டர்கள் சென்றிருந்தாலும், இந்த தியேட்டர் ரொம்ப ஸ்பெஷல். இங்கு படம் எதுவும் போட மாட்டார்கள். ஆனால், இந்த தியேட்டர் திரையுலகத்தினருக்கே படம் காட்டும். ஆமாம், வருடதோறும் ஆஸ்கர் அவார்ட்டுகள் வழங்கப்படுவது, இந்த அரங்கில் தான்.

இங்கு அரை மணி நேர அளவில், உள்ளே அழைத்து சென்று அரங்கின் சிறப்பம்சங்களை விளக்கும் மினி டூர் நடத்துகிறார்கள். அதற்கும் டிக்கெட் தான். நாங்கள் சென்ற போது, ஆறு பேர் எங்களுடன் வந்தார்கள்.

ஒல்லியாக பேட்ரிக் என்றொரு இளைஞன், அரங்கை பற்றி விளக்க வந்தான். உள்ளே அழைத்து சென்று கதவை மூடிகொண்டான். அரங்கை ரொம்ப பாதுகாப்பது தெரிந்தது.

இது முன்பு கோடாக் தியேட்டர் என்றழைக்கப்பட்டது. அதற்காக, வருடத்திற்கு ஒரு பெரும் தொகையை செலுத்திவந்தது. பின்பு, இந்த வருட ஆரம்பத்தில் கோடாக் நிறுவனம் திவாலாக, டால்பி நிறுவனம் பெயருக்கு பொறுப்பெடுத்துக்கொண்டது. 20 வருட ஒப்பந்தம்.
ஆஸ்கர் நிகழ்ச்சியை இங்கு நடத்துவதற்கு 70 வருட ஒப்பந்தம், இந்த அரங்குடன் போட்டிருப்பதாக பேட்ரிக் சொன்னார். பக்கத்திலிருக்கும் சைனீஸ் தியேட்டரிலும் பலகாலம் முன்பு இருமுறை இந்நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது.அரங்கின் முன்பக்கம் நிறைய கடைகள் இருக்கிறது. ஆஸ்கர் நிகழ்ச்சியின் போது, இந்த தெருவையே குத்தகைக்கு எடுத்ததுபோல், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்குமாம்.

ஆங்காங்கே இருக்கும் நிறுவன பெயர்கள், பொருட்கள் பெயர்கள், பேனர்கள் அனைத்தும் சிகப்பு துணியால் மறைக்கப்படுமாம். பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு, டாம் க்ரூஸ் வந்தாலே, அவருடைய ட்ரைவிங் லைசன்ஸ் பார்க்கப்பட்டு, சரியான ஆள்தான் என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுவாராம். ஒருமுறை ஒரு நடிகர் இப்படி அடையாள அட்டை கொண்டு வராமல் போக, அவரால் அவார்ட் வாங்க முடியவில்லையாம்.

இதை அவர் சொல்லும் போது, நாம் நம்மூர் டிவி அவார்டை நினைத்துப் பார்த்தேன். ஆளே வராவிட்டாலும், சுவரேறி குதித்தாவது, அவார்டை கொண்டு போய் கொடுத்துவிடும் பெரிய மனசு புரிந்து பெருமையடைந்தேன். அவர்களை உள்ளே விடாவிட்டாலும், யாரை உள்ளே விடுவார்களோ, அவர்களிடம் கொடுத்து அனுப்பி, ஒரு போட்டோ கிடைத்தால் போதும். அதை வைத்தே விளம்பரம் செய்து, கல்லா கட்டும் திறமை யாருக்கு வரும்?


சரி, டால்பி தியேட்டருக்கு போவோம். உள்ளே நுழைந்ததும், இரு பக்கமும் கடைகள். எதிரில் ஒரு பெரிய அழகிய வண்ணத்துடன் கூடிய படிகட்டுகள். அதற்கு பின்னால், மேலே அரங்கிற்கு செல்ல லிப்ட். ஒன்லி ஃபார் விஐபிகள். (இந்தியாவை தவிர வேறெங்கும் விஐபி என்ற பதம் இல்லை என்கின்ற ஞாநியின் கூற்று உண்மையில்லை போலும்!!!)

 

  


 
இருபக்கமிருந்த தூண்களிலும், இதுவரை சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பெயர்கள், வருடவாரியாக இருந்தன. வருங்காலத்திற்கும் இப்பவே வருட எண்கள் ரெடியாக இருந்தன.இந்த காம்ப்ளக்ஸை மட்டுமே படமெடுக்க முடிந்தது. டால்பி தியேட்டருக்குள் புகைப்படமெடுக்க தடை. பாதுகாப்பு காரணமாம்.

அரங்கின் வெளித்தளத்தில் சில புகைப்படங்களை கருப்பு வெள்ளையில் வைத்திருந்தார்கள். சில கலைஞர்கள் அவார்ட் வாங்கும் புகைப்படங்கள். ஒரு நீள கண்ணாடியில் கருப்பு வெள்ளையில் ப்ரிண்ட் செய்யப்பட்டு, பின்னணியில் வெள்ளை சிலிக்கான் கண்ணாடி திரை, ஒளியூட்டப்பட்டு இருந்தது. இந்த அமைப்பிற்கு என்ன காரணம் என்றால், அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது. அவை அனைத்தையும் ஒரே மாதிரியாக தெரிவதற்கு, இம்மாதிரி செய்யப்பட்டுள்ளதாக பேட்ரிக் விளக்கினார். சிலிக்கான் கண்ணாடி பின்னணிக்கு காரணம், அதுவே ஆரம்ப சினிமா திரையிடலுக்கு பயன்பட்டது என்பதாகுமாம்.

அரங்கிற்கு வெளியே இருந்த, பாரை பார்த்தோம். உலகின் தலைசிறந்த சரக்குகள் இங்கே கிடைக்குமாம். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நிகழ்ச்சி ஆரம்பித்தப்பிறகு, சரக்கு கிடைக்காதாம். இந்த பாரில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. இங்கு ஒரு ரியல் ஆஸ்கர் விருது இருக்கிறது. தங்க ஜொலிப்பில் மின்னிக்கொண்டிருந்தது. தொட்டுப்பார்க்க முடியாதபடி, கண்ணாடி பேழைக்குள் இருந்தது அது.

இந்த விருதின் மகத்துவத்தை விவரித்தார் பேட்ரிக். இந்த விருதை விற்க கூடாது என்று கையெழுத்து வாங்கிக்கொண்டே, இந்த விருதை கொடுப்பார்களாம். அப்படியே விற்க வேண்டி வந்தாலும், அதை முதலில் இதை வழங்கும் அமைப்பிற்கு விற்க சம்மதிக்க வேண்டுமாம். இது தங்கம் உள்ளிட்ட ஐந்து உலோகங்களால் செய்யப்பட்டது. இதை கொடுப்பதற்காக கலைஞர்களிடம் இருந்து எவ்வகையிலும் பணம் பெறப்படுவதில்லை. ஒருமுறை ஆஸ்கர் வாங்கிய ஒருவர் அதை ஒரு ஆக்ஸிடெண்டில் உருக்குலைக்க, அதை வாங்கிக்கொண்டு வேறொரு ஆஸ்கர் கொடுத்தார்களாம். இப்படி நிறைய தகவல்கள் கொடுத்தார் பேட்ரிக். கூட வந்தவர்களும் கேள்விகளைக் கேட்டு, சந்தேகங்களை நிவர்த்திசெய்துக்கொண்டார்கள்.

பிறகு, அரங்கின் உள்ளே அழைத்து சென்றார்கள். யப்பா! எவ்வளவு பெரியது? அரங்கின் உயரம் மிக பெரியது. எங்கு பார்த்தாலும் கலையம்சம் செதுக்கப்பட்டு இருந்தது. மேலே உள்ளே டிசைன் அருமையாக இருந்தது. அந்த டிசைனுக்கும் சில காரணங்களை கூறினார். அதில் ஒன்று, ஒலி ஒளி அமைப்பிற்கு தேவையான ஒயர்கள் யார் பார்வைக்கும் படாமல், அதில் மறைக்கப்பட்டு இருக்குமாம்.

பக்கவாட்டில் இருந்த பால்கனிகள், எனக்கு எங்க ஊர் சார்லஸ் தியேட்டரை நினைவுக்கொண்டு வந்தது. கடந்த முறை ஆஸ்கரின் போது, அது போன்ற ஒரு பால்கனி ஒன்றில் இருந்து தான், ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.தற்சமயம், இந்த அரங்கில் மாலை நேரத்தில் ஒரு நாடக நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாங்கள் சென்ற போது, அதற்கான பொருட்கள் மேடையில் இருந்தன. மேடை, மேலும் கீழும் நகரும்படி லிப்ட் மீது அமைந்து இருக்கிறது.

பிறகு, வெளியே வந்தோம். வெளியில் ஷோகேஸில் இருந்த சில புகைப்படங்களைக் காட்டினார். அவை வெவ்வேறு வருடங்களில், அரங்கின் அலங்காரங்களை காட்டியது. ஒரு வருடம் போல் இன்னொரு வருட அலங்காரம் இருக்காதாம். இந்த அலங்கார வேலைகள், ஆறு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடுமாம். உண்மையிலேயே, சிறப்பான புகைப்படங்களாக இருந்தன அவை.

அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாதது, ஒரு பெரும் குறையாக இருந்தது. எங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில், ஆளுக்கொரு புகைப்படம் கொடுத்து வழியனுப்பினார் பேட்ரிக்.

டால்பி தியேட்டருக்கு வரும் வழியில் இருந்த கடைகளில் சின்ன டம்மி ஆஸ்கர் விருதுகள் கிடைக்கின்றன. Best Husband, Best Wife என்று. ஏற்கனவே ஆளுக்கொன்று வாங்கி வைத்திருந்தோம். அதை இந்த அரங்கின் முன்பு நின்று பிடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஏதோ நம்மால் முடிந்தது!

அரை மணி நேரம் தான் இருந்தாலும், எனக்கு இந்த டால்பி தியேட்டர் விசிட் ரொம்பவும் பிடித்திருந்தது.

.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டால்பி தியேட்டரின் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது...

மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (TM 1)

கோவி said...

அருமையான பதிவு.. 2022 நம்பிக்கையின் அடையாளம்.

சரவணகுமரன் said...

தொடர் பின்னூட்டங்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள், திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!! :-)

சரவணகுமரன் said...

நன்றி கோவி.

அதென்ன 2022 நம்பிக்கையின் அடையாளம்?