Saturday, September 15, 2012

இளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்


நான் எல்லா இசையமைப்பாளர்கள் பாடலையும் கேட்பேன். எண்பதுகளில் இருந்து தற்போதைய காலக்கட்ட பாடல்கள் வரை எந்த குறையும் சொல்லாமல், எல்லா பாடல்களையும் கலந்து கேட்பேன்.

இதில் பெருவாரியாக இருப்பது, இளையராஜாவின் பாடல்கள் தான். சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. சில சமயங்களில், சில பாடல்கள் ரொம்ப பிடித்து போய், அதே பாடலை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன். அவை இளையராஜா பாடலாகத்தான் இருக்கும். எனக்கு மட்டுமல்ல, தமிழ் மொழி தெரியாதவர்களையும் இப்படி கவர்பவை, இளையராஜாவின் பாடல்கள். அந்த வகையில் தமிழர்களின் பெருமை, இளையராஜா.

ஆனால், அதே சமயம், இளையராஜா தலைகனம் பிடித்தவர், கர்வம் கொண்டவர் என்ற பேச்சும் உண்டு. ஒருவர் உண்மையிலேயே மிக சிறந்த பங்களிப்பை அளிக்கும்போது, அதன் மீது கர்வம் பிறப்பது வாடிக்கை. அதை உள்ளுக்குள் அடக்கும் போது, அல்லது அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் போது, அவருடைய தன்னடக்கம் மீதான மரியாதை பிறக்கிறது. இல்லாவிட்டால், கர்வம் கொண்டவர் என்று ஏச்சு-பேச்சுகள் கிளம்புகிறது.

இளையராஜாவுக்கு தலைகனமா, கர்வமா என்றெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம். அவர் ஜீனியஸ் என்பதில் யாராலும் சந்தேகம் கிளப்ப முடியாது. ஆனால், அவர் பேச ஆரம்பிக்கும் போது தான், அவர் மீதான மரியாதை குலைகிறது.




சமீபத்தில், கவுதம் வாசுதேவ மேனனுடன் சேர்ந்து இளையராஜா அளித்த ஜெயா டிவி பேட்டியில் இளையராஜாவை ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தது. இருந்தாலும், பொதுவாகவே இளையராஜாவுக்கு எதிரில் இருப்பவரை பம்ம வைப்பதில் ஒரு ஆர்வம் இருக்கும். அது இந்த பேட்டியிலும் பளிச்சென்று தெரிந்தது.

சென்ற வார குமுதத்தில் வந்த அவருடைய கேள்வி-பதில் பகுதியான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ பக்கங்களை வாசித்த போது, எழுந்த எண்ணமும் இதுவாகத்தான் இருந்தது. பொதுஜனத்தை நெருங்கவிடாமல், அடித்து விரட்டும் வெறுப்பே பல பதில்களில் தெரிந்தது. டி.எம்.எஸ்., ரஜினி பற்றிய பிரபலங்கள் குறித்த கேள்விகள் தவிர்த்து, மற்ற அனைத்து கேள்விகளுக்கும் ஏதோ கடுப்பில் பதில் சொன்னது போலவே இருந்தது.

உதாரணத்திற்கு சில,

தனக்குரிய பாதை எது என்பதை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதை விட்டு விலகாமல் செல்வது எப்படி?

ஆர்.சிவக்குமார், கோவை

இந்தக் கேள்வியை வந்து என்கிட்டேயா கேட்கறது நீங்க? எனக்குரிய பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதேபோல் உங்களுக்குரிய பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் நானா உங்களுக்கு யோசனை சொல்ல முடியும்?

இந்த படத்திற்கு நாம் இசையமைக்காமலே இருந்திருக்கலாம் என்று எப்போதாவது தோன்றியது உண்டா?

எஸ். விவேகானந்தன், உசிலம்பட்டி

எப்போதாவது என்ன! ஒன்றா இரண்டா எத்தனை படங்களை நான் சொல்வது? நீங்கள் ஒருமுறை பார்த்துவிட்டு ச்சீ... என்ன படமெடுத்திருக்கிறான் என்று சொல்லுகின்ற படத்தை நான் நான்கு ஐந்து முறை பார்த்தாக வேண்டும்.

தேனொழுகும் பாடல்கள் தித்திக்கத் தந்துபுகழ் வானுயரம் கொண்ட இசைஞானி - ஆன்மிகந்தான் தங்களின் வாழ்வில் தங்கிய நிகழ்வெதுவோ? தங்கமே பதிலெமக்குத் தா.

பாரதி மணி, மதுரை

வெண்பா வடிவில் கேள்வி கேட்டிருக்கிறார். இதிலேயே இலக்கணப் பிழை இருக்கு. தங்களின் ‘வாழ்வில்’னு வர்றதால அடுத்து ‘தங்கிய’னு வராது. அது தேமானு முடிந்திருக்கறதால ‘புளிமாங்காய்’ என்று முடிந்திருக்கணும். ‘தங்கிய நிகழ்வெதுவோ’ங்கிறதிலும் தப்பு இருக்கு. தங்கியனு வந்தால் கூவிளம். விளம் முன் நேர் வரணும். இந்த தப்பான வெண்பாவிற்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

(இந்த கேள்வியை கேட்கும் போது, மதுரை பாரதி மணி சரக்கடித்திருந்தாரா என்று தெரியவில்லை. பதிலை படித்துவிட்டு, உடனே டாஸ்மாக் சென்று ஒரு கல்ப் அடித்திருப்பார் என்று அனுமானிக்கிறேன்.)

இளையராஜாவை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், அவர் இசையமைத்த பாடல்களை தவிர்த்து, அவரை பத்திரிக்கை, பேட்டி என்று வேறெதிலும் தொடர கூடாது போலும்.

----

‘நீதானே என் பொன் வசந்தம்’த்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனக்குள்ளேயேயும். காரணம் - இளையராஜா, இன்றைய இளம் இயக்குனர்களுடன் இணைந்து இசையமைப்பது குறைவு.  அப்படியே இசையமைக்கிறார் என்றால் அது யாரோ பெயர் தெரியாத இயக்குனர், தன் பெயர் வெளியே தெரிய, இளையராஜாவை நாடியிருக்கிறார் என்றே இருக்கும். பிரபல இயக்குனர்கள் என்றால் பாலா, சுசிந்தீரன், மிஷ்கின், பிரகாஷ்ராஜ் ஆகியோரைச் சொல்லலாம். இதில் இளைஞர்களுக்கான இளமை துள்ளும் கதையுடன் யாரும் இளையராஜாவைத் தேடி செல்லவில்லை. எனக்கு திரும்பவும் ‘அக்னி நட்சத்திர’ இளையராஜாவை கேட்க ஆசை. கவுதம் மேனன், இளையராஜாவுடன் இணைகிறார் என்றவுடன், எனக்கு என் ஆசை நிறைவேறிவிடுமோ என்று தோன்றியது. அதனாலேயே இந்த எதிர்பார்ப்பு.

எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தவிர, இனி எதிர்பார்க்கவும் கூடாது என்பதை உணர்த்தியது.

(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டுவிட்டு கூறிய ஒரு வரி விமர்சனம் - தங்க திருவோடு் பழமொழியை தான்)

அதற்காக, நான் பாடல்கள் மோசம் என்று சொல்ல மாட்டேன். ‘சாய்ந்து சாய்ந்து’, ‘என்னோடு வா வா’, ’காற்றைக் கொஞ்சம்’ பாடல்களை தினமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், நான் எதிர்பார்த்த இளையராஜாவை கேட்க முடியவில்லை.

அவருடைய சாயலை, இனி இளம் இசையமைப்பாளர்களிடம் கேட்டு ரசிக்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு, கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்லலாம். இந்த இமான் பாடலில் இளையராஜா இருக்கிறார். நீதானே என் பொன் வசந்தம் ஆல்பத்தில் இருக்கும் எந்த பாடலை விடவும், கும்கியின் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்கு காரணமும், இளையராஜா தான். இளையராஜாவின் பிண்ணனி இசையை கேட்கும் போது அடையும் உணர்ச்சியை, இந்த பாடலின் இசை அளிக்கிறது. அதனால், இனி, நான் எதிர்பார்த்த இளையராஜாவை இளம் இசையமைப்பாளர்களிடம் தான் தேட போகிறேன்.

.

20 comments:

shabi said...

கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்லலாம். இந்த இமான் பாடலில் இளையராஜா இருக்கிறார்//// repeat இப்ப அடிக்கடி கேட்கும் பாடல் இதுதான்

Anonymous said...

giriblog.com padichuparunga...same blood...

Unknown said...

பாடல்களில் இல்லாத எதிர்பார்த்த இளையராஜா பின்னணி இசையிலாவது பின்னி இருக்கிறாரா என்று பொறுத்திருந்துதான் கேட்கவேண்டும்.

காரிகன் said...

இசையை ரசிக்கலாமே ஒழிய அதை கொடுத்தவனை கொண்டாடகூடாது என்ற தொனியில் உங்கல் பதிவு இருந்தாலும் இளையராஜா பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.இதையேதான் திரு அமுதவன் என்பவரும் சில நாட்களுக்கு முன்பு தன் பக்கத்தில் சொல்லி இருந்தார். உங்களுக்கு தோன்றியதே எனக்கும் தோன்றியது. இளையராஜாவின் காலம் இருபது வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.இன்னும் இது அவருக்கு தெரியவில்லை போலிருக்கிறது.

Krubhakaran said...

இளையராஜவின் காலம் 20ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருந்தால்,இன்றும் இளம் இயக்குனர்கள் அவரை நாடுவது ஏன்?

manjoorraja said...

இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்ற அளவில் நாம் அவரை போற்றலாம். அதைத் தாண்டி அவரை போற்றும் அளவிற்கு அவரது குணநலன்கள் இல்லையென்பது கசப்பான உண்மை.

Anonymous said...

திருவாசகம் சிம்ஃபொனி இசைஅமைத்தல், இசைக்கோர்ப்பு, வினியோகம் விடயங்களில் இளையராஜா பண்ணிய தரம்கெட்ட நடவடிக்கைகள் ஈசனுக்கே அடுக்காது ! அதனைப்பற்றிப் பேசுவதே அருவருப்பை கிளறுவதாய்விடும் என அது சம்பந்தப்பட்டோர் சொன்னதைக் கேட்டேன்.

காரிகன் said...

இன்றைக்கு கவுதம் மேனன் தன்னுடைய பட விளம்பரத்திற்காக இளையராஜாவை புகழ்வதும் அவரை வைத்துக்கொண்டு பேட்டிகள் கொடுப்பதும் சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அவர் ஒருவரை வைத்துக்கொண்டு இன்றைய இளம் இயக்குனர்கள் இளையராஜாவுக்கென வரிசை கட்டி நிற்பது என்று பேசுவது கொடுமை. இதற்கு முன் இளையராஜா இசை அமைத்த நந்தலாலா நான் கடவுள் தோனி மயிலு (தவறாக படிக்க வேண்டாம்)போன்ற படங்களின் பாடல்கள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கேட்டனவோ? ரகுமானின் வருகைக்கு பிறகு இளையராஜா இசை அமைத்த காதலுக்கு மரியாதை என்ற படத்தோடு அவர் காலாவதி ஆகிவிட்டார். நீதானே என் பொன் வசந்தம் படத்தின் பாடல்கள் பெருவாரியான இளையராஜா விசில்களுக்கே பிடிக்கவில்லை என்பது கண்கூடு. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "புடிக்கல மாமு" இதுவும் அதே படத்தில் உள்ள ஒரு பாடல்தான். இளையராஜா சரியாகத்தான் பாடல் வரியை தேர்வு செய்திருக்கிறார்.

sakthipriya said...

unmaiyeleye raja music raja than athil entha santhegamum illai. but avar pesarathu epavume perumpalanorukku pidipathilai. avar music-la SPB& Janaki voice oh God solla varthaikal ellai. greatttttttttt

Naresh Kumar said...

//(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டுவிட்டு கூறிய ஒரு வரி விமர்சனம் - தங்க திருவோடு் பழமொழியை தான்)//

மகேந்திரன்?

அந்த பழமொழி என்ன?

Azhagan said...

NEPV songs are different in orchestration, something new to us. It is because we were expecting his usual style, we feel they are not good. In fact at least three songs in NEPV are really nice. Listen to them in your headphones, you will certainly like them. BTW, saying Imaan and other such so called music directors are producing better songs is a highly laughable statement, no way!

சரவணகுமரன் said...

நன்றி Shabi

சரவணகுமரன் said...

பார்க்கலாம், Bay Area Bakoda

சரவணகுமரன் said...

//இசையை ரசிக்கலாமே ஒழிய அதை கொடுத்தவனை கொண்டாடகூடாது//

அப்படி சொல்லவில்லை, காரிகன். ராஜாவும் கொண்டாடப்பட வேண்டியவர் தான். அவருடைய பழைய பட இசைக்காக.

சரவணகுமரன் said...

Krubhakaran,

20 ஆண்டுக்கு முந்திய இளையராஜாவை தேடியா?

சரவணகுமரன் said...

கரெக்ட் சக்திப்ரியா

சரவணகுமரன் said...

நரேஷ், மகேந்திரன் இல்லை.

ஒரு பிச்சை எடுப்பவரை கூப்பிட்டு லட்சம் ரூபாய் கொடுத்தாலும், அவர் தங்கத்தில் திருவோடு செய்து பிச்சையெடுத்தாராம். அவ்வளவுதான்.

சரவணகுமரன் said...

அனானி,

நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் சுத்தமாக நன்றாக இல்லை என்று சொல்லவில்லை. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொன்னேன்.

அதேபோல், இமாம் இளையராஜாவைவிட சிறப்பாக இசையமைப்பவர் என்று சொல்லவில்லை. இமாம் போன்ற இளம் இசையமைப்பாளர்களின் இசையில் நான் எதிர்பார்க்கும் இளையராஜாவை காண்கிறேன் என்று தான் சொன்னேன்.

pugazh said...

ungal pathivin mel iruntha mariyathaiye poiduchu... d.iman songa raaja siroda cmpare pannathe rmba thappu.. raaja raaja than

Vaasi engira Sivakumar said...

திரு.மகேந்திரன், உங்கள் எழுத்தை ரசிக்கும் ஓர் வாசகன்...ஒரு தமிழக பிதாமகன் பற்றி பேசும் போது நீங்கள் பாடலை ஆராய்தது போல் அவரை ஆராய வேண்டும் ...தயை கூர்ந்து அவரின் ரமணர் பற்றிய எழுத்துக்கள்,பால் நிலாப்பாதை,உள்ளது உள்ளபடி,...படியுங்கள்...அவர் பற்றி தெரியும்....சுருக்கமாக அவர் சித்தர் குண மனிதன் போல்...