Friday, January 25, 2013

விஸ்வரூபம்

நான் விஸ்வரூபம் எங்குமே வெளியிட மாட்டார்கள் என நினைத்திருந்தேன். இரவு 8:30 க்கு தான் ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன். 9 மணிக்கு ப்ரிமீயர் என்று. மனைவி வரவில்லை என்று சொல்ல, தனியே கிளம்பினேன்.

இந்த தியேட்டருக்கு இதற்கு முன்னால் சென்றதில்லை. என் நேரத்திற்கு ஜிபிஎஸ் காட்டிய வழியில் சாலையை மூடி வைத்திருந்தார்கள். திரும்ப வேறொரு வழியை சொல்ல, ஒரு வழியாக தியேட்டர் போய் சேர்வதற்குள், படம் பத்து நிமிடங்கள் ஓடி விட்டது. படத்தில் வரும் ஒரு சேசிங் சீன் போல இருந்தது, என் அனுபவமும்.

---

விஸ்வரூபம் எந்த விளம்பரமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது. 100 கோடி பட்ஜெட் என்று சொன்ன போதும், எனக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியான போது இருந்து ஆரம்பித்த எதிர்பார்ப்பும் கூடவே எதிர்ப்பும் உச்சத்திற்கு சென்று எகிறியடித்தது.

முடிவில் இரண்டு வார தடையுத்தரவும் வந்து சேர, எவ்வளவு செலவு செய்தும் கிடைக்காத ஹைப் படத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

---

கமல் இயக்கம் என்பது தான் என்னளவில் இந்த படத்தின் மீது பெரிய ஆர்வம் கிளம்பாதற்கான காரணம். எப்படியும் ஒரு தடவை பார்த்தால் புரிந்து விடாத மொழியில் படமெடுப்பவர் என்பது அவர் மீதான என் அபிப்ராயம். தியேட்டரில் பார்த்த பிறகு, பின்பு அந்த படத்தைப் பற்றிய கட்டுரை படித்தாலோ, டிவியில் பார்த்தாலோ, சிலாகிக்க விஷயங்கள் வந்து சேர்ந்தாலும், தியேட்டரில் முதல்நாள் கொண்டாடும் விதத்தில் படமெடுக்க மாட்டார் என்பது ‘இயக்குனர் கமல்’ மீதான என் ஆழ்ந்த நம்பிக்கை.

இந்த படத்தில் அந்த நம்பிக்கையை கொஞ்சம் பெயர்த்து எடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ‘இயக்குனர் கமல்’ முதன் முறையாக கமர்ஷியல் படமெடுத்து இருக்கிறார். அம்பி போல இருந்து, திடீரென்று வீராவேசம் காட்டுவது எல்லாம் காலகாலமாக தமிழ் படங்களில் பார்த்தாலும், கமல் இயக்கத்தில் நான் எதிர்பாராதது.

---

கமல், எந்த நம்பிக்கையில் ‘இஸ்லாமியர் இந்த படத்தை பார்த்த பின்பு, எனக்கு பிரியாணி விருந்தளிப்பார்கள்’ என்று சொன்னார் என்பது தெரியவில்லை. மிலாடி நபிக்கு வீட்டில் பிரியாணி செய்திருந்தால் கூட தர மாட்டார்கள்.

அதற்காக அவரை குறை சொல்லவில்லை. தாலிபன் தீவிரவாதிகள், அல்-கொய்தா, பின்லேடன் என்று கதை களன் இருக்க, இப்படி தான் காட்ட முடியும். இல்லாவிட்டால், இந்த கதைக்களனை விட்டுவிட்டு, பாலக்காட்டு சமையல்காரர் கதையைத்தான் எடுக்க வேண்டும்.

நம்மூர் இஸ்லாமிய அமைப்புகள், இந்த படத்திற்கு காட்டும் எதிர்ப்பைப் பார்க்கும் போது, அவர்கள் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. இப்படி அடாவடியாக மிரட்டி, படத்தை தடை செய்திருப்பதே, தீவிரவாத செயலாகத்தான் தெரிகிறது.

---

நடிகர் கமலை பற்றி சொல்ல எதுவும் இல்லை. பெண்மை நளினத்துடன் அவர் நடக்கும் காட்சிகளில், அவரின் நடிப்பை கண்கொட்டாமல் பார்க்கலாம். அவர் புத்திசாலித்தனமாக பேசும் காட்சிகளில் தான் சலிப்பு வருகிறது.

டெக்னிக்கலி சில விஷயங்கள் பாராட்டும்படி இருந்தாலும், சில பல்லிளிக்கும் காட்சிகளும் இருக்கிறது. கமல் (சர்க்கஸ்) சாகசங்கள் பண்ணுவதாக காட்டும் காட்சியில், அவருக்கு பொருத்தமில்லாத உடலில் அவர் தலையை ஒட்டி... நல்லா இல்லை போங்க.... வன்முறை காட்சிகளை (கை துண்டாவது, உடல் இரண்டாக போவது) நல்ல தொழில்நுட்பத்தில் அமைத்திருப்பதை, எப்படி பாராட்டுவது?

மற்றபடி, நம்ம கண்ணுக்கு சுலபத்தில் புலப்படாத வகையில் டெக்னிக்கல் அம்சங்கள் இருப்பது, பாராட்டத்தக்கது.

பொதுவாக, படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாவிட்டால், இரண்டாம் பாகம் என்று முடிப்பார்கள். இதில் நச்சென முடிக்கவில்லை என்ற காரணத்தால், இரண்டாம் பாகம் என்று சொல்லி முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

படத்தில் லாஜிக்கல் தவறுக்கள் பல இருக்கிறது. உதாரணமாக, இந்திய பிரதமர் அவராகவே முடிவெடுப்பதாக ஒரு காட்சியில் காட்டியிருக்கிறார்!!! துரோகம் செய்யும் மனைவி, இறுதியில் கணவன் மீது பாசத்தில், ஒன்றாக சாவோம் என்று சொல்லும் கிளிஷேக்களும் உண்டு. அதே சமயம், செல்போன் இயக்கத்தை தடுக்க மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தும் புத்திசாலித்தனமான காட்சிகளும் உண்டு.

படத்தின் ப்ளஸ் என்று லொக்கேஷன்களை சொல்லலாம். நியுயார்க் நகரம், அதன் வேறொரு மறுபக்கம்,ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களை சொல்லலாம்.

நிஜ உலக சம்பவங்கள், நபர்கள் என்று இணைத்து கதை அமைத்திருப்பது இண்ட்ரஸ்டிங்.

---

மொத்தத்தில், இந்த பாகத்தை இம்ப்ரஸிவாக முடிக்காவிட்டாலும், ’கமர்ஷியல் இயக்குனர்’ கமல், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை என்னுள் கிளப்பி விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ’இந்திய ஜேம்ஸ்பாண்ட்’ ரகத்தில் கமல் என்றால் எதிர்பார்ப்பு இருக்க வேண்டாம்?

.

Sunday, January 20, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 3

அதிகாலையிலேயே கிளம்பியிருந்ததால், அதுவும் லைட்டாகத்தான் சாப்பிட்டு இருந்ததால், எல்லோரும் பசியாக இருந்தார்கள். கைவசம் சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்தாலும், வழியில் ஒரு உணவகத்தைப் பார்த்ததால், வண்டியை அங்கேயே போட்டோம்.

பெரிதாக ஒன்றும் இல்லை. சாலட் வாங்கினோம். ஜில்லென்று இருந்தது. ஒருவழியாக முடித்தோம்.

அங்கே சின்சியராக சாப்பிட்டுக்கொண்டிருந்த மூத்த தம்பதியினர்...


சாப்பிட்டு விட்டு கிளம்பிய வழியில் ’பைசன்’ என்றழைக்கப்படும் அமெரிக்க எருமை மாடுகளைப் பார்த்தோம். கூட்டமாக நின்று மேய்ந்துக்கொண்டிருந்தது. வண்டியை விட்டு இறங்கி, அருகே சென்று பார்த்தோம். பார்க்க சாதுவாகத்தான் இருந்தது. இருந்தாலும், புதுவகை மிருகத்தை முதல்முறையாக நேரில் பார்க்கும்போது, கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. எப்ப, என்ன பண்ணும் என்று யாருக்கு தெரியும்? ரொம்பவும் அருகே சென்றால் தாக்கும் என்றார்கள். அசைவதே டெரராக இருக்கும் போது, தாக்குதலா?


பயணத்தை மேலும் உள்ளே தொடர, தேடி வந்த ஊற்றுகள் ஒவ்வொன்றாக வந்தது.  தேங்கி கிடந்த தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது, நீர் குமிழிகளுடன். விதவித அளவுகளில் சுற்றும் முற்றும் அந்த வட்டாரம் எங்கும் கொதித்துக்கொண்டிருந்தது. சல்பர் வாடை தூக்கலாகவே இருந்ததால், குழந்தைகளை அருகே அழைத்து செல்லவில்லை.


1800களில் இந்த பகுதிகளில் பழங்குடியினர் மட்டுமே புழங்கினர். அமெரிக்கர்கள் நடமாட்டம் கிடையாது. வேட்டையாட செல்லும் சிலர், இது போன்ற ஊற்றுகளை கண்டு, வெளியே வந்து சொல்லும்போது, யாரும் எதையும் நம்பவில்லையாம்.

நினைத்துப் பாருங்கள்... இப்பவே நம்ப முடியவில்லை. குகை போல் சில இடத்தில் இருந்து புகை வருகிறது. களிமண் போன்ற இடங்கள் பொங்குகிறது. இப்பவாவது பரவாயில்லை. ஏதாவது அறிவியல் காரணங்கள் சொல்லுகிறார்கள். முழுமையாக புரியவில்லை என்றாலும் நம்பி தொலைக்க முடிகிறது. இப்படி தானே அறிவியல் படித்தோம்?


இருந்தாலும், எனக்குள்ளே ஒரு டவுட் இருந்துக்கொண்டே தான் இருந்தது. முதன்முறையாக நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்தபோது, நாசா வெளியிட்ட போட்டோக்களை, பல்வேறு காரணங்களை சொல்லி டகால்டி என்பார்களே? அதுபோல், இங்கேயும் சுற்றுலா வருமானத்திற்காக ஏதாவது டகால்டி வேலை செய்கிறார்களோ என்று எனக்குள்ளே டவுட். அப்படியெல்லாம் ஏமாற்ற மாட்டார்கள் என்று பிறகு எனக்கு நானே சமாதானம் செய்துக்கொண்டேன்!!! :-)


சில நேரம் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், தொடர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தால், கொஞ்சம் நேரத்திலேயே சலிப்பு ஏற்பட்டுவிட்டது. பார்த்துக்கொண்டிருப்பதே மட்டும் ஆச்சரியத்தை குறைப்பது இல்லை. எப்படி இது உருவாகிறது என்று தெரிந்துக்கொள்வதும் ஆச்சரியத்தைக்குறைத்து புரிந்துக்கொள்ள உதவும். முன்பே சொன்னது போல், இந்த நிலப்பரப்பின் கீழே உஷ்ணமான ஒரு எரிமலை உறங்கிக்கொண்டு இருக்கிறது. மேலே இருந்து பாறைகளின் இடைவெளி மூலம் உள்ளே செல்லும் நீர், உஷ்ணத்தால் சூடாகி, மேலே எழும்ப, அங்கே உருவாகும் அழுத்ததால், மேலும் வேகத்துடன் பீறிட்டுக்கொண்டு, பூமியின் மேற்பரப்பிற்கு வந்து சேர்கிறது. வரும் வழியில் மண் சேர்ந்துக்கொள்ள, சில இடங்களில் களிமண் கொதிக்கிறது.

அங்கு எடுத்த சில வீடியோக்கள். (முதல் வீடியோவில் சில பெர்சனல் வசனங்களை கட் செய்ய வேண்டி இருந்ததால், ஆங்காங்கே சத்தம் வராது)







இவ்வகை இடங்கள் இயற்கை அதிசயம் மட்டுமே. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், இதை தாண்டி போகும் வழியெங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.


பிறகு, சில அருவிகளைப் பார்த்தோம். சில அருவிகளைப் பார்த்தோம் என்று சொல்வதற்கு பதில், ஒரு அருவியை வெவ்வேறு கோணங்களில் பார்த்தோம் என்று சொல்லலாம். அந்த பாயிண்ட், இந்த பாயிண்ட் என்று சொல்லி வெவ்வேறு இடங்களில் நின்று பார்த்தோம். சில இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டி இருந்ததால், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடக்க வேண்டி இருந்ததால், களைப்பால் அந்த இடங்களுக்கு செல்லும் எண்ணத்தை கழட்டி விட்டோம். பேச்சிலர் கும்பலாக இருந்தால், ஏறி குதித்து அங்கு இங்கு என்று சென்று இருக்கலாம்.


இந்த அருவிதான், யெல்லோஸ்டோனில் அதிகளவில் படமெடுக்கப்படும் லொக்கேஷனில் இரண்டாம் இடத்தில் இருப்பது. முதலிடத்தில் இருப்பதை வரப்போகும் பதிவுகளில் ஒன்றில் பார்ப்போம்.

இதையெல்லாம் பார்த்ததில் மதியம் மணி மூன்றாகிவிட்டது. போகும் வழியில் ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட இடவசதி செய்திருந்தார்கள். நிழல் உள்ளே விழாத அளவுக்கு, வளர்ந்த மரங்களால சூழப்பட்ட இடம். ஆங்காங்கே கரடி வரும் ஜாக்கிரதை என்று எழுதியிருந்தார்கள். கரடி வந்தால், அதற்கு உங்கள் உணவை கொடுக்காதீர்கள் என்று எழுதிவைத்து இருந்தார்கள். ’நாங்க ஏன்யா அதுக்கு கொடுக்க போறோம்?’ என்று நினைத்துக்கொண்டோம்.

இந்த வனாந்திர சூழலை, உள்ளே வரும் மனிதர்கள் கெடுத்து வைக்க கூடாது என்பதற்காக பல ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்கள். உதாரணத்திற்கு, இந்த உணவருந்தும் இடத்திற்கு பக்கத்தில் பெரிய இரும்பு கண்டெயினர்களை வைத்திருந்தார்கள். மிச்சமாகும் உணவு, சாப்பிட்ட ப்ளேட்டுகள், குடித்து முடித்த தண்ணீர் பாட்டில்களைப் போட்டு வைப்பதற்கு. மேல்பக்கமாக திறந்து டைட்டாக மூடும் வகையில் இந்த பெரிய குப்பைத்தொட்டிகள் இருந்தது. அதாவது காட்டு மிருகங்களால், திறக்க முடியாதபடி, உணவு வாசம் வெளியே வராதபடி.

அடுத்ததாக, மாலை நேரத்தில் மம்மொத் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் என்னும் இடத்திற்கு சென்று சேர்ந்தோம். வென்னீர் ஊற்றில் வெளியேறிய நீர் குளிரில் காய்ந்து, கால்சியமாக அடுக்காக ஒருவகை வெளீர் நிறத்தில் இருந்தது. முதலில் பார்த்தபோது, விஷால் நடித்த ’சத்யம்’ படத்தில் ’என் அன்பே’ பாடலில் நயன்தாரா ஆடும் இடம் போல் இருந்தது. ஆனால், அது அடுக்கடுக்காக இருக்கும் ஐஸ் என்று நினைக்கிறேன். இங்கு அதேப்போல் ஆனால் வெப்பத்தால் புகை வந்துக்கொண்டு இருந்தது. இந்த அடுக்குகளின் மேல் ஏறி நடந்து சென்று பார்ப்பதற்கு வசதியாக மரப்பலகைகளால் வழி ஏற்படுத்தி வைத்து இருந்தார்கள். ஒரு ரவுண்ட் சென்று வர ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால், திரும்பவும் களைப்பை நினைத்து அங்கிருந்தே பார்த்துவிட்டு கிளம்பினோம். குடும்பஸ்தனாலே எவ்வளவு கஷ்டம்ப்பா...!!!



இந்த இடத்தின் சுற்றுவட்டாரம், ஒரு சின்ன அதேசமயம் செழிப்பான ஊர் போல இருந்தது. இங்கு இருக்கும் அலுவலகர்களுக்கான தொகுப்பு வீடுகள் இங்கே கட்டப்பட்டிருந்தன. இடமும் ரம்மியமாக இருந்தது. ஆங்காங்கே மான்கள் மேய்ந்துக்கொண்டிருக்க, இங்கே வசிப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டோம். அவர்கள் என்ன நினைத்து வாழ்கிறார்களோ?


இந்த இடம் வடக்கு நுழைவுவாயிலுக்கு அருகே உள்ளது. வடக்கு நுழைவுவாயில் இருப்பது, பக்கத்து மாநிலமான மொன்டானாவில். வாயிலின் அருகிலேயே இருக்கும் கார்டினர் என்னும் ஊரில் இரவு தங்குவதற்கு இரு வீடுகளை ஆன்லைனில் புக் செய்திருந்தோம். (குவிஸ் கேள்வி - கார்டினர் பக்கத்தில் நம்மூர் நடிகர் பெயரில் ஒரு ஊர் இருக்கிறது. யார் அந்த நடிகர்? பதில் - லிவிங்ஸ்டன்!!!)

இங்கிருந்து அந்த இடத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், சுடு நீரும், குளிர் நீரும் அந்த ஆற்றில் ஒரு இடத்தில் கலக்கிறது. அந்த இடத்தில் போய் நின்றோம் என்றால், நமது உடலில் ஒரு பக்கம் சுடும், இன்னொரு பக்கம் குளிரும். எப்பூடி?

இருட்டி விட்டதென்றால், நாங்கள் அங்கே குளிக்கவில்லை. நாங்கள் சென்ற அதேசமயம், அங்கு சென்ற, எங்களுக்கு தெரிந்த சில பேச்சிலர்கள் அதில் குளித்து வந்த அனுபவத்தை கூறினார்கள்.

கார்டினர் சென்று சேர இரவாகிவிட்டது. நாங்கள் புக் செய்திருந்த அறைகளைச் சென்று பார்த்தால், நான்கு குடும்பங்கள் அங்கு தங்குவதற்கு வசதியாக இல்லை. ரொம்ப பழையதாகவும் இருந்தது. அதனால், திரும்ப லாட்ஜ் தேட, நல்ல வேளையாக ஒரு இடத்தில் கிடைத்தது.

முன்பு அபார்ட்மெண்ட் வீடாக இருந்ததை விடுதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், ஒரு கிச்சன், ஹால் என்று இரு குடும்பங்கள் தங்குவதற்கு ரொம்ப வசதியாக இருந்தது. அன்றைய தினம் தங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகள் சொதப்பினாலும், ஏதோ நல்ல நேரத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்க, நிம்மதியுடன் தூங்கினோம். ஆன்லைனில் புக் செய்யும் போது, இனி கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவம் அந்த தினம் கிடைத்தது.

.

Monday, January 7, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 2


முந்திய தினம் டென்வரில் இருந்து அதிகாலையிலேயே கிளம்பலாம் என்று ஒரு நண்பர் சொன்னார். ஆனால், அவரை தவிர நாங்கள் அனைவருமே கிளம்ப நேரமாகிவிட்டதால், அந்த நண்பருக்கு எங்கள் மீது கோபம். அவரை சமாதானப்படுத்தும்விதமாக, கோடி லாட்ஜில் இருந்து "காலையில சீக்கிரமே கிளம்புறோம்” என்று நைட்டே வாக்குறுதி கொடுத்துவிட்டு தூங்கியிருந்ததால், நான் காலையிலேயே எழுந்து உலாத்திக்கொண்டிருந்தேன்.

இங்கிருக்கும் லாட்ஜ்களில் காலை பிரெக்பாஸ்ட் இலவசம் என்று சொல்லி பிரெட், பன் போன்ற இனிப்பு வகையறாக்கள் கொடுப்பார்கள். எனக்கு காலங்கார்த்தால, இப்படி இனிப்பு சாப்பிடுவது பிடிக்காது என்றாலும், எதையாவது வயித்துக்கு கொடுக்கணும் என்பதால் மஃப்பின் என்னும் கப் கேக் சாப்பிட்டேன். அதற்கு முன் காபி. இந்த காபியும் அதை இங்கு போடுவதற்கு நான் படும் பாட்டையும் இன்னொரு சமயம் சொல்கிறேன்.



அந்த லாட்ஜ், பழமையானது போல இருந்தது. காட்டுக்கு அருகே இருப்பதால், அந்த ஸ்டைலிலேயே வடிவமைத்து இருந்தார்கள். ஆங்காங்கே மான் தலை, கரடி தலை, மான் கொம்பு வைத்து கிலியை கிளப்பினார்கள். அவர்களுக்கு அது அழகுணர்ச்சி!!!



ஆறு மணிக்கு கிளம்பிவிட்டோம். அப்போதே சூரியன் வெளிச்சத்துடன் வந்துவிட்டார். யெல்லோஸ்டோன் கிழக்கு நுழைவுவாயிலுக்கு அங்கிருந்து ஒரு மணி நேர பயணம்.



போகும் வழியெங்கும் ரம்மியம். மலைகள், நீர்நிலைகள், வளைந்து செல்லும் சாலைகள், ஆங்காங்கே மலையை குடைந்து அமைத்திருந்த Tunnel வழிகள் என காலையிலேயே கண் கொள்ளா காட்சிகள். இதற்கு மேல் மலைகளுக்கு மேல் படர்ந்திருந்த மேகங்கள், கொள்ளை அழகு.



கிழக்கு நுழைவுவாயிலை சென்று சேர்ந்த போது, மணி ஏழேகால் இருக்கும். நுழைவு கட்டணம், ஒரு காருக்கு இருபத்தைந்து டாலர்கள். ஒருமுறை வாங்கிவிட்டால் போதும். ஏழு நாட்களுக்கு இந்த வனத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் சுற்றிக்கொள்ளலாம்.



இந்த கிழக்கு நுழைவுவாயில் போல, திசைக்கு ஒன்று என இன்னும் மூன்று நுழைவுவாயில்கள் இருக்கின்றது. கிழக்கு மற்றும் தெற்கு நுழைவுவாயில்கள், நாங்கள் இருக்கும் கொலராடோ மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான வயொமிங் மாநிலத்தில் இருக்கின்றது. மற்ற இரண்டு நுழைவுகளும் வேறு இரு மாநிலங்களில் இருக்கின்றது. இப்படி இந்த யெல்லோஸ்டோன் தேசியப்பூங்கா, மூன்று மாநிலங்களிடையே பரந்துவிரிந்து இருக்கிறது.



நுழைவு வாயில் இருந்த சாலையில் பனி படர்ந்து, சூரிய ஒளியில் பட்டாசாக இருந்தது. ‘சிலு சிலு வென குளிர் அடிக்குது அடிக்குது’ என பாட தூண்டும் லொக்கேஷன். சில நிமிடங்களில், உள்ளே பயணப்பட தொடங்கினோம்.



இந்த பூங்காவிற்குள் ஏரிகள், ஆறுகள், அருவிகள், மலை தொடர்கள், வென்னீர் நீரூற்றுகள் என வெரைட்டிக்கு குறைச்சலே இல்லை.



முதலில் ஒரு சின்ன ஏரியைப் பார்த்தோம். அதற்கு பிறகு ஒரு பெரிய ஏரி. குளிர் பரவாயில்லை. விதவிதமாக போஸ் கொடுத்து, ஃபேஸ்புக்கிற்கு போட்டோ எடுத்துக்கொண்டோம்!!!



இந்த ஏரியின் பெயர், யெல்லோஸ்டோன் ஏரி. இதற்கு தண்ணீர் வரும் ஆற்றின் பெயரும் யெல்லோஸ்டோனே. இந்த ஆறு கடந்து வரும் பள்ளத்தாக்கில் இருக்கும் மஞ்சள் நிறத்திலான பாறைகளே, இந்த பெயரை ஆறுக்கும், பிறகு ஏரிக்கும், மொத்தத்தில் இந்த பூங்காவிற்கும் சூட்ட காரணம். கடல் மட்டத்தில் இருந்து 2 கி.மீ.க்கு அதிக உயரத்தில் இருப்பதால், வட அமெரிக்காவிலேயே அதிக உயரத்தில் இருக்கும் ஏரி இது என்பது இதன் சிறப்பம்சம்.

யெல்லோஸ்டோனில் ஆச்சரியத்தைக்கொடுக்கும் விஷயம் - இங்கிருக்கும் வென்னீர் நீரூற்றுகள். உலகில் இருக்கும் வெந்நீர் நீரூற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு, இந்த தேசிய பூங்காவிற்குள் இருக்கிறது. இதை இயற்கை அதிசயம் எனலாம். ஏரி பக்கம் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பும் போது, நாங்கள் கண்டதை ஒரு மினி ட்ரெய்லர் எனலாம்.





















ஏரியின் பக்கவாட்டில் இருந்து புகை வந்துக்கொண்டு இருந்தது. நம்மூர் என்றால் புரிந்துக்கொள்ளலாம். ஏதாவது குப்பையை எரித்துக்கொண்டு இருப்பார்கள் என்று. இது விசித்திர பூமி என்கிறார்களே!!! ஏதாவது வித்தியாசமாக இருக்குமோ என்று இறங்கி பார்த்தோம்.




புகை தொடர்ந்து அங்கே இங்கே என்று வந்துக்கொண்டிருந்தது. அருகே சென்றால், ஏதோ ரசாயன வாடை.

இந்த யெல்லோஸ்டோன் நிலப்பரப்பே, ஒரு பெரிய எரிமலை வெடிப்பின் விளைவு என்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு பெரிய எரிமலை இந்த பூங்காவின் அடியில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது, அது விடும் குறட்டை சத்தம் தான், மேலே சில அறிவியல் வித்தைகளைக் காட்டிக்கொண்டு இருக்கிறது.  அவ்வப்போது, அது உள்ளே அசைவது தான், மேலே சிறு நிலநடுக்கங்களாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. 6,40,000 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆட்டத்தை காட்டிவிட்டு, தூக்கத்திற்கு சென்ற இந்த ராட்சத எரிமலை, அதற்கு  பிறகு எழவில்லை. எழுந்தால், அடுத்த நாள் பாதி வட அமெரிக்கா இருக்காது என்கிறார்கள். உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது, இந்த யெல்லோஸ்டோன் எரிமலை. ஆனால், அதற்கு வாய்ப்புகள் ரொம்ப கம்மி என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது சரி, அவர்களிடம் கேட்டா எரிமலைகள் வேலை பார்க்கிறது?!!!

இப்படியெல்லாம் கிலி ஏற்படுத்தும் அம்சங்கள், இந்த மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும், வெளியே அது வேறொரு உலகம். கணினி, வேலை, ரிலீஸ், டெட்லைன், இஸ்யூ, பொல்யூசன், கரப்ஷன், பவர்கட், டெரரிஸ்டுகள், ரெப்பிஸ்ட்டுகள் என்று டென்ஷன் கொடுக்கும் உலகிற்கு நேரெதிர் உலகம்.  

பயணத்தை தொடருவோம்.

.

Saturday, January 5, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 1



லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வந்து இரண்டு வாரத்தில் ஒரு நாள் இரவு, அபார்ட்மெண்ட்டில் இருக்கும் இந்திய நண்பர்களுடன் குடும்பத்துடன் ஒரு மீட்டிங். அது ஒரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்து வரும் திங்கள்கிழமையன்று அரசு விடுமுறை. உழைப்பாளர் தினம். ஒரு ட்ரிப் போடலாம் என்று ப்ளான் போட்டார்கள். ரொம்ப லேட் ப்ளான். பேச்சிலர்ஸ் கூட இப்படி ப்ளான் பண்ண மாட்டார்கள்.

ஒரு வட இந்திய நண்பர் வீட்டில் குழுமியிருந்தோம். அந்த அன்பரின் மனைவி, இட்லி சுட்டு அடுக்கினார். சாம்பார், சட்னி வேறு வைத்திருந்தார். வட இந்தியர்கள் என்பதால், எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. ஏதோ சுமாராக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஒரு வாய் வைத்தவுடன், என் அவநம்பிக்கை தவிடுபொடியானது. கர்னாடகத்தினர், தெலுங்கர் போல் ரவை அரிசியில் இட்லி சுட்டிருந்தாலும், சுவை அபாரம்.  இட்லி தான் இப்படி ஆச்சரியத்தை கொடுத்தது என்றால், ஒவ்வொருத்தர் சொன்ன ஐடியாக்கள் வியப்பைக் கொடுத்தது.

யெல்லோஸ்டோன் (Yellowstone) போகலாம் என்றார்கள். வாரயிறுதிக்கு ஒருநாள் தான் இருந்தது. டென்வரில் இருந்து கிட்டதட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள். வாடகை கார் எடுத்து போய்விட்டு வந்துவிடலாம் என்றார்கள். பாப்பா அப்போது எட்டு மாதம். எனக்கு இந்த ட்ரிப் கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும், போய்விட வேண்டும் என்று தான் தோன்றியது. இந்த மாதிரி கூட்டணி அமைவதும், அதற்கு நேரம் அமைவதும், முக்கியமாக இப்படி அனைவருக்கும் மனது அமைவதும் பெரிதாக தெரிந்தது.

போகிறோம் என்று முடிவெடுத்துவிட்டோம்.

---

சனிக்கிழமையன்று காலையில் கிளம்புவதாக ப்ளான். அதற்கு முந்திய தினமான வெள்ளிக்கிழமை தான் கார் தேடினோம். நீண்ட வாரயிறுதி என்பதால், கார் கிடைக்க சிரமமாக இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக வெள்ளி மாலையில் இரண்டு மினி வேன்கள் கிடைத்தது. நான்கு குடும்பங்கள். குடும்பத்திற்கு ஒரு குட்டிஸ் என்று குடும்பத்தில் மொத்தம் 3 பேர்கள். ஆக மொத்தம் 12 பேர்கள். இரண்டு மினி வேன்கள் என்பது இங்கு சரியாக இருக்கும்.

அமெரிக்காவில் எவ்வளவு சிறு குழந்தை என்றாலும், வாகனத்தில் பயணம் செய்யும் போது அவர்களுக்கு என்று கார் சீட் இருக்க வேண்டும். அது பிறந்த குழந்தை என்றாலும். ரொம்ப நல்ல விஷயம் என்றாலும், குழந்தைகளுக்கு விவரம் புரிந்து, அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள தெரியும் வரை, பெற்றோர்களுக்கு இது கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். நாங்கள் எடுத்திருந்த மினி வேனில் ஏழு சீட்களும் அதற்கு பின்னால் லக்கேஜ் வைக்க இடமும் இருந்ததால் வசதியாக இருந்தது.

நான்கு தின பயணம் என்பதால், மூன்று தினங்கள் லாட்ஜில் தங்க வேண்டி இருந்தது. முதல் இரண்டு தினங்களுக்கு மட்டும் இரு வேறு லாட்ஜில் புக் செய்தோம். மூன்றாம் தினத்திற்கு அங்கு போய் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துக்கொண்டோம். போவது ஒரு இடம் என்றாலும், ஏன் இப்படி மூன்று இடங்களில் தங்க வேண்டும்? போகும் இடம் அப்படிப்பட்டது.

யெல்லோஸ்டோனில் என்ன இருக்கிறது? யெல்லோஸ்டோன் என்பது அமெரிக்காவின் ஒரு தேசியப்பூங்கா. பூங்கா என்றவுடன் அதிகப்பட்சம் ஒரு கிலோமீட்டர் அளவில் மரம் செடி கொடிகளுடன் ஒரு இடம் மன திரையில் வருகிறதா? அழித்துவிடுங்கள். இது கிட்டத்தட்ட 9000 சதுர கிலோமீட்டர் அளவிலான இயற்கை வனம். மிக பழமையானது. ஒரு விசித்திர காடு எனலாம். 2012 படத்தில் யெல்லோஸ்டோனில் இருந்து தான் படம் ஆரம்பிக்கும். உலகம் அழிய ஆரம்பிப்பது இங்கு இருந்து தான் என்று காட்டியிருப்பார்கள்.

இந்த இடத்தை பற்றி மேலும் பல தகவல்களை வரும் பதிவுகளில் காணலாம்.

---

ஆளாளுக்கு சாப்பாடுக்கென்று ஒவ்வொரு ஐட்டம் செய்து எடுத்துக்கொண்டோம். சப்பாத்தி, வெங்காய தக்காளி குருமா, புளி சாதம், தயிர் சாதம் என்று இருந்தது மெனு. யெல்லோஸ்டோன் வனப்பகுதிக்குள் நுழைந்துவிட்டால், விதவிதமாக சாப்பிட எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்ததால், எல்லாமே ஓரளவுக்கு நிறையவே எடுத்துக்கொண்டோம். உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுகள் கெட்டுப்போய்விடாமல் இருப்பதற்காக ஐஸ் டப்பாவும் அதில் ஐஸ் கட்டிகளும் எடுத்துக்கொண்டார்கள். இதெல்லாம் எனக்கு புதுசு.

காலையில் கிளம்ப ஆறு ஏழாகிவிட்டது. ஒவ்வொரு வேனிலும் இரு குடும்பங்கள் என்பதால், இரு டிரைவர்கள். நெடுதூர பயணமும் புதிது, அதில் இப்படி ட்ரைவ் செய்வதும் எனக்கு புதிது. அதனால் நண்பர் முதலில் வண்டியை எடுத்தார்.

எங்களுக்கு கிடைத்த இரு வேன்களும் ரொம்பவும் புதுசு. ஆயிரத்திற்கு குறைவான மைல்களே ஓடியிருந்தன. நம்ம வழக்கப்படி ஒரு சாமி பாட்டை போட்டபடி காரை கிளப்பினோம். அப்புறம் இளையராஜா, ரஹ்மான்...


அமெரிக்காவில் கார் ஓட்டுவது சுலபம். வண்டியில் கியர் இருக்காது. பொருட்காட்சி கார் போல, சும்மா ஆக்சிலேட்டரை அழுத்தினால் போதும். அவ்வப்போது ப்ரேக்கை, மானே தேனே என்பது போல் போட்டுக்கொள்ள வேண்டும். ஹாரன் - ம்ஹூம். அமெரிக்காவில் அதிகம் உபயோகிக்கப்படாத கார் உபகரணம், ஹாரனாகத்தான் இருக்கும். யாராவது நம் முன்னால் சும்மா காரை நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் கனவுலகிற்கு சென்று விட்டால், அவரை பழையபடி நிகழுலகத்திற்கு கொண்டு வர மட்டுமே, ஹாரனை பயன்படுத்த வேண்டும். அதேப்போல் இங்கே பைக் வைத்திருப்பதும், ஓட்டுவதும், காரை விட பெரிய சமாச்சாரம்.


இப்படி கார் ஓட்டுவதும் சுலபம், சாலை வசதிகளும் நன்றாக இருந்து, அனைவரும் சாலை விதிகளை பெருமளவு கடைப்பிடிப்பதால், அதிக தூரத்தை வேகமாக கடந்து சீக்கிரம் சென்று சேர்ந்துவிடலாம். ஆயிரம் கிலோமீட்டரை 9 - 10 மணி நேரத்தில் கடக்கலாம் என்று தான் கூகிள் மேப்ஸ், ஜிபிஎஸ் என அனைத்தும் பரிந்துரைக்கும்.


சில நூறு மைல்கள் ஒன்றாக இரு வேன்களில் சென்று கொண்டிருந்தோம். அதற்கு பிறகு, கொஞ்ச நேரத்திற்கு இன்னொரு வேனைக் காணவில்லை. ஒரு இடத்தில் நிறுத்தி போன் செய்து விசாரிக்க, அந்த வேனை ஹைவே போலீஸ் பிடித்தது தெரியவந்தது. அந்த ஹைவேயில் அதிகபட்சம் 75 மைலில் செல்லலாம். மீட்டருக்கு மேல் ஐந்து மைல்கள் அன்-அபிஸியலாக செல்லாம். 90-100 மைல் என்று சென்றால், எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது, சரியாக வந்து நிறுத்தி, புன்சிரிப்புடன் வந்து, கெட்ட வார்த்தையில் திட்டாமல், அமைதியாக பைன் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள். 150 டாலர்கள் அவருக்கு அபராதம் விதிக்க, அதற்கு பிறகு அவர் மட்டுமல்ல, நாங்களும் எண்பது மைல்களுக்கு மேல் ஓட்டவில்லை.

வண்டியில் க்ரூஸ் கண்ட்ரோல் வேறு இருக்க, ஆக்ஸிலேட்டரை அழுத்தும் வேலையும் இல்லை. ப்ரேக்கில் மட்டும் காலை வைத்துக்கொண்டால் போதும். பாருங்க, எந்தளவுக்கு மனிதனை சோம்பேறியாக்குகிறார்கள் என்று!!! இப்படி இருந்தால், எங்கிருந்து களைப்பு வர?

காலை உணவை ‘பர்கர் கிங்’ என்னும் சாலையோர உணவகத்தை சாப்பிட்டோம். மதிய உணவிற்கு, ஒரு சிறு ஊரில் நிறுத்தினோம். பெட்ரோல் போட்டுவிட்டு, பக்கமிருந்த சாலையோர இளைப்பாறல் நிலையத்தில் கொண்டுவந்திருந்த உணவை சாப்பிட்டோம். சாலையோரத்தில் ஆங்காங்கே இந்த மாதிரி இளைப்பாறுவதற்கு வசதி செய்து வைத்திருக்கிறார்கள். இரண்டு-மூன்று டேபிள்களும் அதை சுற்றி சேர்களும், குடிநீர் வசதி, பிறகு கழிப்பிட வசதி என சிம்பிளாக ஒரளவு சுத்தமாக இருந்தது. நமக்கு இது போதாது? சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.

ஒரு சமயம், நாங்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில் சென்று கொண்டு இருந்தோம். நாங்கள் சென்ற வழி, மலைகளுக்கிடையே, ஒரு நதியோரமாக செல்ல, கண்ணுக்கு குளிர்ச்சி. ஒரு இடத்தில் நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.


காலையில் கிளம்பிய பயணம், நடுவில் காலை உணவு, மதிய உணவு என்று நிறுத்தி, மாலையில் கோடி (Cody) என்ற ஊருக்கு சென்று சேர்ந்தோம். அந்த தினத்திற்கு வேறு எந்த திட்டமும் கிடையாது. ரெஸ்ட் மட்டுமே. அங்கிருந்த லாட்ஜில் ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்தோம். நான் மட்டும் லைட்டாக வெளியே ஒரு வாக் சென்று வந்தேன். சின்ன ஊர். இருட்டிவிட்டதால், ஊரின் அழகு தெரியவில்லை.

அந்த லாட்ஜில் இருந்த ஹாலில் நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு இரவு உணவை உண்டோம். அடுத்த நாள் காலை, யெல்லோஸ்டோனின் கிழக்கு நுழைவுவாயில் வழியாக உள்ளே செல்லலாம் என்று முடிவெடுத்துக்கொண்டு உறங்கக்கிளம்பினோம்.

.

Wednesday, January 2, 2013

2012

2012இல் எழுதியது ரொம்ப குறைவு. அதற்காக சமூக வலைத்தளங்களுக்கு வராமலில்லை. இன்னமும் அவை கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. பங்கேற்பவனாக இல்லாமல், பார்வையாளனாக.

ஒரு காரணமாக குடும்பத்தை சொல்லலாம். இவ்வருட மத்தியில் குழந்தையுடன் மனைவி அமெரிக்கா திரும்பினார். அதன்பிறகு, பெருமளவு நேரம் குழந்தையுடன் செலவிடுவதால் வருத்தமில்லை.

சென்ற மாதம், பாப்பாவின் முதல் பிறந்தநாள் வந்தது. ஒரளவுக்கு நண்பர்கள் நிறைய இருப்பதால், கொஞ்சம் விமர்சயாக அனைவரையும் அழைத்து கொண்டாட வாய்ப்பு கிடைத்தது. நிறைய நண்பர்களின் உதவியால் நிகழ்ச்சி சிறப்பாக நிகழ்ந்தது. தவிர, நம்ம கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுத்தது.

பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு ஒரு ப்ரொஜக்டரும் திரையும் நல்ல ஸ்பிக்கர் சிஸ்டமும் இருந்ததால், சில வீடியோக்களை ரெடி செய்திருந்தேன். பிறந்தததில் இருந்து தற்போது வரைக்குமான மாற்றங்களை வெளிப்படுத்தும்விதமான வீடியோவும், கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த சில தருணங்களின் தொகுப்பான மற்றொரு வீடியோவும் நிறைய பாராட்டைக் கொடுத்தது. மொத்தத்தில் இந்த பிறந்தநாள் தினம் மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது.

---

இந்த வருட தொடக்கத்தில் பயணங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க நினைத்திருந்தேன். குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ், ஆஸ்பென், க்ளன்வுட் ஸ்ப்ரிங்ஸ், யெல்லோ ஸ்டோன் போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் பற்றி மட்டுமே பதிவிட்டுள்ளேன். மற்றவைகளையும் இட வேண்டும்.

போஸ்ட் கார்ட் போல சில இடங்களை புகைப்படம் எடுத்தது இவ்வருட அனுபவம்.

---

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த ஆண்டின் மத்தியில் வரை நளபாகத்தில் தான் கொஞ்சம் நிபுணத்துவம் பெற முடிந்தது. தொழில்நிமித்தமாக, எந்த துறையில், எந்த புதிய தொழில்நுட்பத்தில் கவனத்தை செலுத்தலாம், என்ற குழப்பத்திலேயே ஆண்டு ஓடோடிவிட்டது. இருக்கிற வேலையை சிறப்பாக செய்தாலும், Status quoவை மெயிண்டெயின் செய்யவேண்டியதாகிவிட்டது. வருட கடைசியில் சில வாய்ப்புகள் சில யோசனைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது. பார்க்கலாம்.

---

அபார்ட்மெண்டில் இருக்கும் சில இந்திய குடும்பங்களுடன் இணைந்து இவ்வருட புத்தாண்டைக்கொண்டாடினோம். ஒரு கேக் வாங்கி அதில் நம் கைவண்ணத்தில் 2013 என்று சாஸ் வைத்து எழுதி, குழந்தைகளை வைத்து வெட்டி, புது வருடத்தை வரவேற்றோம்.


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! நினைப்பவை இனிதே நடந்தேறட்டும்!!!

.