Tuesday, September 23, 2008

குமரி – காமராஜர் மணிமண்டபம் (புகைப்பட பதிவு)

காமராஜர், சத்தியமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலுடன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சுதந்திரத்திற்கு பிறகு, முதல்வராகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, நாட்டுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.



படிப்பறிவில்லாத மக்கள் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதை அறிந்து, தமிழகமெங்கும், ஐம்பதாயிரம் பள்ளிக்கூடங்கள் திறந்து, இலவசமாக கல்வியை வழங்கிய முன்னோடி.



ஒரு கிராமம் வழியாக செல்லும் போது, இரு சிறுவர்கள் ஒரு பெரியவருடன் சேர்ந்து வயல்வெளியில் வேலை செய்வதை கண்டு, பெரியவரிடம் "ஏன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை?" என்று கேட்கிறார். அதற்கு, அவர் "அனுப்பிட்டு சாப்பாட்டுக்கு என்ன செய்வது?" என்று பதில் கேட்கிறார். ஒன்றும் சொல்லாமல் திரும்பும் காமராஜர், அதிகாரிகளிடம் கேட்டது, "பள்ளியில் மதியம் உணவு வழங்கினால் என்ன?".



அதற்கு அதிகாரிகள், "ஏற்கனவே, இலவச கல்வி திட்டத்தால் நிதிசுமை அதிகமாகி உள்ளதாகவும், மதிய உணவு வழங்க வேண்டுமானால், மக்களுக்கு வரி விதிக்க வேண்டிவரும்" எனவும், "அவ்வாறு வரி விதித்தால் அது அடுத்த தேர்தலில் கட்சியை பாதிக்கும்" எனவும் கூறுகிறார்கள். இதற்கு காமராஜர் கூறியது, "எதையையும் vote bank பத்தி யோசிச்சே செய்ய கூடாது. மக்களுக்கு கிடைக்கிற நன்மையை பார்த்துதான் செய்யணும்".



மழை பெய்தும், விவசாயத்திற்கு பயன்படாமல் போகும் நீரை சேமிக்க, விவசாயிகள் நன்மை பெரும் வண்ணம், அணைகள் கட்டினார்.



முதல்வராக இருந்தபோது, நேருவை சந்தித்து, கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் ஆட்சி பணிகளில் இருந்து தங்களை விடுவித்து, கட்சி பணியில் ஈடுபடவேண்டும் என்று யோசனை கூறி, அதற்க்கு முன்னுதாரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.



அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, இந்தியாவின் பிரதமராக யார் வர வேண்டும் என்று முடிவெடுத்தவர், இந்த தமிழ் நாட்டு கிங் மேக்கர்.



இந்திராவை பிரதமராக்கி, பின்பு அவராலேயே "யார் அந்த காமராஜர்?" என்று வாங்கி கட்டி கொண்டவர்.



அண்ணா தலைமையில் போட்டியிட்ட திமுக, தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது, "திருமணமாகாத இவருக்கு, நாட்டின் விலைவாசி உயர்வு எங்கே தெரிய போகிறது?"



விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த காமராஜரை சந்தித்த தொண்டர்கள், "அவர்கள் கள்ள ஒட்டு போட்டதால்தான் தோற்தோம் " என்றதற்கு, "இது மக்கள் தீர்ப்பு. நாம தோத்ததால கள்ள ஓட்டுன்னு சொல்ல கூடாது. அடுத்த ஆறு மாசத்துக்கு அவர்கள் ஆட்சியை, யாரும் விமர்சிக்க கூடாது." என்று கட்டளை இட்டார்.



எனக்கு காமராஜரை பற்றிய ஒரு வருத்தம். என்னதான் நாடு முக்கியம் என்றாலும், வீட்டையும் கவனிக்க வேண்டும் அல்லவா? தன் தாய் ஒரு மின் விசிறியும், கம்பளியும் கேட்டதற்கு, "குளிருக்கு கம்பளி போட்டுட்டு, அப்புறம் எதுக்கு பேனு?" என்று கேட்டு, "இப்ப கம்பளி மட்டும் வாங்கிக்க, பேனு அப்புறம் பார்க்கலாம்"ன்னு சொன்னவர் காமராஜர். விருதுநகரில் உள்ள தன் வீட்டில், யாரும் கேட்காமல், தண்ணீர் குழாய் வைத்த அதிகாரியுடன், "இன்னைக்கு எங்க வீட்ல வச்சா, நாளைக்கு ஒவ்வொரு தலைவரும், அதிகாரியும் அவங்கவுங்க வீட்ல வைப்பாங்க. நாடு என்னத்துக்கு ஆகுறது?" என்று ஒரு பிடி பிடித்து விட்டு உடனே அதை கழற்றி போக செய்தார். என்னை பொறுத்தவரை, தனக்கு சம்பளமாக வந்த பணத்தில்லாவது தன் குடும்பத்திற்கு குறைந்தபட்ச வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம்.

அப்புறம், இன்னொரு விஷயம், "காமராஜ்" படத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய "நாடு பார்த்ததுண்டா" என்ற பாடல், கவனிக்கப்படாமல் போன ஒரு அருமையான இளையராஜாவின் மெலடி பாடல். இந்த படத்தில், இயக்குனர் மகேந்திரன் ஒரு காட்சியில் நடித்து உள்ளார்.

காமராஜர் பற்றிய பல தகவல்களும், புகைப்படங்களும், காமராஜரின் உறவினரின் தளமான இங்கே காணலாம்.

4 comments:

rapp said...

ரொம்ப அருமையானப் பதிவு. ரொம்ப ரொம்ப நன்றி. அந்தத் தளத்திற்கு சென்று மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்கிறேன்:):):)

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி rapp

அமுதா said...

அருமையான பதிவு. இவர் போல் ஒரு தலைவரை மீண்டும் என்று காணப் போகிறோம்?

சரவணகுமரன் said...

நன்றி அமுதா.

தற்போது உள்ள சூழ்நிலையில் இவரை போன்று இருந்தால் அரசியலில் காணாமல் போக செய்து விடுவார்கள்.