Monday, February 23, 2009

எல்லா புகழும் ரஹ்மானுக்கே

இன்று காலை எழுந்தவுடன் முதலில் டிவியை தான் போட்டேன். ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்ததா இல்லையா என்று பார்க்க. போன வாரம் லீக்கான ஆஸ்கார் லிஸ்ட்'இல் ரஹ்மான் பெயர் இல்லை. அது உண்மையாக இருக்க கூடாது என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

எட்டு மணி இருக்கும். செய்தி சானல்கள் பார்த்தால் எதிலும் ரஹ்மான் பெயர் இல்லை. அச்சச்சோ என்று இருந்தது. அப்புறம் ஸ்டார் மூவிஸ் பார்த்தால் இன்னும் வழங்கி கொண்டிருந்தார்கள். ஆபிஸுக்கு கிளம்பி கொண்டே அதையும் பார்த்து கொண்டிருந்தேன்.

எதிர்பார்த்தபடியே ரஹ்மான் ஆஸ்காரை வென்றார். மேடையில் தமிழில் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற போது உண்மையிலேயே புல்லரிக்க தான் செய்தது.

ரஹ்மான் வாழ்க்கையில இருந்து நாம எடுத்துக்கிறத்துக்கு இசை மட்டும் இல்லை. இன்னும் நிறைய இருக்கு.

---

அது விளம்பர துறை சம்பந்தமான விருது வழங்கும் விழா. அப்போது தான் தளபதி வெளியாகி இருந்தது. இளையராஜா சொல்லியிருந்த சில வார்த்தைகள், மணிரத்னத்தை யோசிக்க வைத்திருந்தது. விழாவில், சின்ன வயசு பையன் ஒருவனுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கினார்கள். லியோ காபின்னு சொன்னா, இன்னும் காதுல ஒலிக்குமே? அந்த இசைக்கு தான் விருது. பையனை மணிரத்னத்துக்கு அறிமுகப்படுத்த, அவர் அவனின் இசையை கேட்க விரும்பியிருக்கிறார். அவனும் ஸ்டுடியோ வர சொல்லிட்டான்.

அந்நேரம் காவிரி பிரச்சினை நடந்திருந்தது. அப்பிரச்சினை மனதை தொந்தரவு செய்ய, உருவாகியிருந்த இசை அது. மணிரத்னம் வந்திருந்த போது, அந்த ட்யூனைத்தான் போட்டு காட்டினான். கேட்ட அடுத்த நொடி, மணிரத்னம் முடிவு செய்து விட்டார். அடுத்த படத்துக்கு, நீதான்.

பையனை எல்லோருக்கும் தெரியும். உலகத்துக்கே. படம்-ரோஜா. பாடல்- தமிழா தமிழா. அதன் பின் நடந்தது, வரலாறு.

முதல் படத்திற்க்கே, இந்தியாவின் உயர்ந்த தேசிய விருது.

----

நாலு வயதில், கீ-போர்ட்டில் கையை வைத்த திலீப்பின் இளமைக்காலம் துயரங்களிலானது. ஒன்பது வயதில் அவரது அப்பாவை இழந்தார். அன்று, ஆரம்பித்தது அவரது ஓட்டம். அப்ப, அவர் இசையை பார்த்தது, ஒரு சோறு போடும் விஷயமாக மட்டுமே. ஓடிய ஓட்டத்தில் கல்வியை இழந்தார். பள்ளி வாழ்க்கையை இழந்தார். கல்லூரி வாழ்க்கையை இழந்தார். தெரிந்தது ஒன்றுதான். இசை.

இன்னமும் புன்னகை மன்னனுக்கு வெயிட்டை கொடுப்பது, அந்த தீம் மியூசிக். இளையராஜாவின் குழுவில் இருந்த போது, ரஹ்மான் கம்போஸ் செய்தது அது. ரஹ்மானுக்கு இளையராஜா இரண்டு விதங்களில் முன்னுதாரணம். எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாமல் நல்ல இசையை கொடுப்பது. ஆன்மிகம்.

----

உலகத்திலேயே, அதிக எண்ணிக்கையில் பாடகர்களை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது ரஹ்மானாகத்தான் இருக்கும். அதற்கு அவர் சொன்ன காரணம். "திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போறப்ப ஏற்படுற வலி எனக்கு தெரியும்".

ரஹ்மான் வருறதுக்கு முன்னாடி இருந்த கேசட்டுகளையும், வந்ததுக்கப்புறம் இருக்குற கேசட்டுகளையும் பார்த்தா, ஒரு விஷயம் கவனிக்கலாம். ரஹ்மான் வந்தபின், ஒரு படத்தின் இசைக்கு பணியாற்றிய அத்தனை பேரின் பெயரும் கேசட்டில் இருக்கும்.

பொதுவாக, ஒரு படத்தின் இசையமைப்பாளரை இயக்குனர் தேர்ந்தெடுப்பார். இயக்குனரை இசையமைப்பாளர் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? மின்சார கனவு படத்தில் முதலில் புக் செய்தது ரஹ்மானை. ரஹ்மானிடம், யாரை இயக்குனராக போடலாம் என்று கேட்ட போது, அவர் சொன்னது, தன்னுடைய ஆரம்ப கால நண்பரும், விளம்பரப்பட இயக்குனருமான ராஜிவ் மேனனை.

இசையில் மட்டும் அல்ல, அவர் டிரெண்ட் செட்டர். மற்றவர்களை ஊக்குவிப்பதிலும், அங்கீகரிப்பதிலும் டிரெண்ட் செட்டர் தான் அவர்.

----

பாலிவுட்டில் ரஹ்மான் நுழைந்த போது, அவரை அமுக்க பலர் நினைத்தார்கள். எதையும் கண்டுக்கொள்ளவில்லையே? அவரது கவனம் முழுக்க வேலையில் தான். இசை. மக்களுக்கு பிடித்த இசை. அவ்வளவுதான். வேறு எதை நினைத்தும் புலம்பவில்லை. அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவின் நம்பர் ஒன்.

அவர் மேல்தான் எத்தனை சர்ச்சை? இசையமைக்க அதிக நாள் எடுக்கிறார். அலைய விடுகிறார். அதிக பணம் கேட்கிறார். மதம் மாற்றுகிறார். தீவிரவாதிகளை ஆதரிக்கிறார். வளர்ப்பு மகன் திருமண வழக்கு. இது அனைத்திற்கும் அவர் பதில் சொன்ன மொழி ஒன்றுதான். இசை.

ஒரு காலத்தில் தமிழ் பாட்டை தமிழன் தான் கேட்டு கொண்டிருந்தான். இப்பவும், சில மாநிலங்களில், ஹிந்தி பாட்டை கேட்பதையும், ஆங்கில பாடலை கேட்பதையுமே மதிப்பிற்குரியதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன்று, தமிழ் பாட்டை, தமிழ் இசையை, இந்தியா மட்டுமில்லாமல், உலகம் முழுக்க கேட்க முடிகிறதென்றால், அதற்கு ஒரே ஆள் தான் காரணம். ரஹ்மான்.

இன்று ரஹ்மானின் இசை காதில் விழாமல் ஒரு தமிழனால், இந்தியனால் ஒரு நாளை கழிக்க முடியாது. சன் டிவியின் டைட்டில் மியூசிக்கும் அவருடையதே. ஏர்டெல்லின் ரிங் டோனும் அவருடையதே.

இசை உலக மக்களை இணைக்குமா? முடியும் என்று நம்பி உழைத்து கொண்டிருப்பவர், ரஹ்மான்.

----

ரஹ்மானுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சிறு வயதில், அவரை சுழற்றியடித்த துன்பங்களிலிருந்து விடுபட, இறை பக்திக்கு தன்னை முழுமையாக அர்பணித்தார். கடவுளையும் இசை வடிவாக பார்க்கிறவர். அன்பையையும் இசை வடிவாக பார்க்கிறவர். தன்னுடைய எந்த ஒரு சாதனையையும், இறைவனுக்குக்கே அர்பணிக்கிறவர். இன்னமும் எளிமையாக, வெட்கப்படும் இளைஞனாகவே இருக்கிறார். எதற்கும் காரணமாக அவர் சொல்லுவது, “எல்லா புகழும் இறைவனுக்கே”. அது அவருடைய நம்பிக்கை.

இன்று ரஹ்மானின் சாதனையால் பெருமைப்பட்டு கொண்டிருப்பவர்கள், தமிழர்கள். இந்தியர்கள். நாம்.

நாம் சொல்லுவோம், "எல்லா புகழும் ரஹ்மானுக்கே".

12 comments:

ராஜ நடராஜன் said...

முதலில் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.மறுபடியும் வருகிறேன்.

சரவணகுமரன் said...

ராஜ நடராஜன், வாங்க வாங்க

எட்வின் said...

ரஹ்மானால் தமிழுக்கும் இந்தியாவிற்கும் பெருமை... ARR Rocks the west.It's quite unbelivable to listen to an Indian song on an american show that too in OSCARS... and to watch the dancers in Indian costumes is amazing. MANY THANKS TO DANNY BOYLE for this huge platform and to the Novelist VIKAS SWARUP.God Bless India.

வினோத் கெளதம் said...

//ரஹ்மானுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சிறு வயதில், அவரை சுழற்றியடித்த துன்பங்களிலிருந்து விடுபட, இறை பக்திக்கு தன்னை முழுமையாக அர்பணித்தார். கடவுளையும் இசை வடிவாக பார்க்கிறவர். அன்பையையும் இசை வடிவாக பார்க்கிறவர். தன்னுடைய எந்த ஒரு சாதனையையும், இறைவனுக்குக்கே அர்பணிக்கிறவர். இன்னமும் எளிமையாக, வெட்கப்படும் இளைஞனாகவே இருக்கிறார். எதற்கும் காரணமாக அவர் சொல்லுவது, “எல்லா புகழும் இறைவனுக்கே”. அது அவருடைய நம்பிக்கை.

இன்று ரஹ்மானின் சாதனையால் பெருமைப்பட்டு கொண்டிருப்பவர்கள், தமிழர்கள். இந்தியர்கள். நாம்.

நாம் சொல்லுவோம், "எல்லா புகழும் ரஹ்மானுக்கே".//

வைர வரிகள் ..

காலைல இருந்து கையும் ஓடுல காலும் அதுல ஒரே படபடப்பு..இன்னும் தீரல..

Hats off to AR.Rehmann
God of Music.

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி எட்வின்

சரவணகுமரன் said...

நன்றி வினோத் கௌதம்...

அதான் வாங்கியாச்சில்ல... இனி ஜாலியா இருங்க...

சுரேகா.. said...

மிக அருமையாக, இதுவரை தெரியாத சில தகவல்களுடன் அழகாகக் கொடுத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!

எல்லாப்புகழும் குமரன் குடிலுக்கே!

goma said...

எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் ஆஸ்கார் மேடையில் அறிவித்துத் தமிழன்னையைப் பெருமைப் பட வைத்துவிட்டார்.

சரவணகுமரன் said...

நன்றி சுரேகா

சரவணகுமரன் said...

நன்றி goma

SENTHILKUMARAN said...

மிக தவறான தகவல். புன்னகை மன்னன் தீம் மியூசிக் ரஹ்மான் கம்போஸ் பண்ணவில்லை. அவர் keyboard player மட்டுமே.

SENTHILKUMARAN said...

மிக தவறான தகவல். புன்னகை மன்னன் தீம் மியூசிக் ரஹ்மான் கம்போஸ் பண்ணவில்லை. அவர் keyboard player மட்டுமே.