Sunday, April 19, 2009

தமிழ் சினிமாவில் செட் (புகைப்பட பதிவு)

தமிழ் சினிமாவில் செட் என்றால் அதை சந்திரலேகா ட்ரம்ஸில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். வாசன் போட்ட பிரமிக்க வைத்த செட் அது, அந்த காலத்தில். கருப்பு வெள்ளை படங்களில் எந்த கலரில் எது இருந்தாலும் கருப்பு வெள்ளையில் தான் தெரிவதால், செட் போட ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. பின்னணியில் உள்ள ஸ்கிரினில் வரைந்து வைத்தால் போதும்.அதன் பின், கலர் படங்கள் வந்த பின்பும் செட்டின் நம்பகத்தன்மை அவசியமாக இருக்கவில்லை. பாடல்காட்சிகளில் தங்கள் கற்பனையை எந்தளவுக்கு காட்ட முடியும் என்பதே முக்கியமாக இருந்தது.

சாதாரணமாக, ஒரு வீட்டில் குடும்பத்தினர் பேசி கொள்ளும் காட்சி என்றாலும், அதை நிஜ வீட்டில் எடுக்காமல், வீடு செட் போட்டு எடுத்தார்கள்.அம்மாதிரி பிரபலமானவை ’வசந்த மாளிகை’ அரண்மனை வீடு, ’சம்சாரம் அது மின்சாரம்’ வீடு. பின்பு, எண்பதுகளில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்து வெளிவந்த படங்களிலும், அதை ஒட்டி அக்காலத்தில் வெளிவந்த மற்ற கமர்ஷியல் படங்களிலும், பாடல் காட்சியில் வரும் முக்கியமான செட் - தரையில் அணைந்து அணைந்து எரியும் கண்ணாடி ஒளி மேடை செட். இந்த செட்டுகள் மூலம் படம் வந்த காலக்கட்டத்தை தெரிந்து கொள்ளலாம் என்று கூறும் அளவுக்கு, இவை அக்காலத்தின் குறியீடுகள்.டி.ராஜேந்தர், பிரமாண்டம் என்ற பெயரில் போடும் செட்டுகள், குழந்தைகளை தான் பெரும் அளவுக்கு கவரும்!. மழலை சிம்பு குட்டி ரயிலில் ஆடும் ஆட்டம் கொடுத்த குதூகலத்தை, உண்மையான ரயிலின் மேல் ஆடிய ஷாருக்கானின் ஆட்டம் கூட குழந்தைகளுக்கு கொடுத்திருக்காது. இது போல், அக்காலத்தில் குழந்தைகளை கவர்ந்த மற்றொரு வாகனம் - ‘பாட்டி சொல்லை தாட்டாதே’ சூப்பர் கார்.செட் போடணும். ஆனா, அது செட்டுன்னு தெரிய கூடாதுன்னு ஒரு மரபை பிரபலமாக கொண்டு வந்தது, தோட்டாதரணி. நாயகன் படத்துக்காக போட்ட தாராவி செட் பரவலாக பாராட்டப்பட்டது. ஆர்ட் டைரக்டர் யார், அவர் பங்கு என்ன என்று ரசிகர்களை கூர்ந்து கவனிக்க வைத்தார். தோட்டாதரணியை தனது சிவாஜி படத்திற்காக ஷங்கர் போடவைத்த செட்டுகள், படத்தின் கதைக்களத்திற்கு உதவியதோ, இல்லையோ, பாடல் காட்சிகளில் படத்தின் பிரம்மாண்டத்தை காட்ட உதவியது. தோட்டதரணியின் கற்பனை பிரம்மாண்டத்தை காட்டியது. இது பற்றி ஒரு புத்தகம் வந்ததாக கூட கேள்விப்பட்டேன்.இயக்குனர் மணிரத்னம், தனது படங்களுக்கு ஆர்ட் டைரக்‌ஷனை சிறப்பாக பயன்படுத்தினார். அபார்ட்மெண்ட் பிரபலமாகாத காலத்தில், ‘அஞ்சலி’ படத்தில் அபார்ட்மெண்ட்டை செட் போட்டு காட்டினார். பிறகு, அந்த மாடலில் நிஜமாகவே அபார்ட்மெண்ட் கட்டியதாக செய்திகள் வந்தது. இந்தியாவில் உள்ள பல அழகான இடங்களை, சிம்பிளான ஆர்ட் டைரக்‌ஷனால் இன்னும் அழகாக காட்டினார். இந்தியாவை சுற்றி சுற்றி ’திருடா திருடா’ எடுத்தார். ஒவ்வொரு ஷாட்டுக்கும் இடையில் நூற்றுக்கணக்கில் கிலோமீட்டர் தூரம் இருந்தது. ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இலங்கையாக காட்டப்பட்ட பல இடங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டவை. பாண்டிச்சேரியை கொழும்புவாக யாரும் சந்தேகப்படாவண்ணம் காட்டினார். வேறு ஒரு உலகத்திற்கு போய் வந்த உணர்வை அவர் படங்கள் கொடுப்பது இதனால் தான்.சரித்திர படமா! கூப்பிடு சாபுசிரிலை என்று சொல்லும் அளவுக்கு சிறைச்சாலை, ஹேராம் என்று பல சரித்திர படங்களில் சாபுசிரில் தனது கலைத்திறமையை காட்டியுள்ளார். அவரை பற்றியும், அவர் போட்ட செட்டுகளையும், இங்கே காணலாம். இயற்கை படத்தில் வரும் கலங்கரை விளக்கம், சாபு சிரில் போட்ட செட் என்றால், கடற்புரத்தில் வாழுபவர்களுக்கே ஆச்சரியத்தை கொடுக்கும்.கமலின் அன்பே சிவம் படத்தை பல முறை பார்க்கலாம். ஒருமுறை பிரபாகரின் ஆர்ட் டைரக்‌ஷனுக்காக பார்க்கலாம். ஒரிஸாவில் வரும் மழை காட்சிகள் அனைத்தும் தண்ணீர் தொட்டி அமைத்து, சென்னையில் எடுக்கப்பட்டது. சிவனுக்குள் கம்யூனிசத்தை வைத்து ஓவியம் வரைந்த அரங்கு, சிலிர்க்க வைக்கும் பேருந்து விபத்து, உண்மை விபத்து என்றெண்ணி மக்களை உதவ வர வைத்த ரயில் விபத்து என்று படமெங்கும் ஆர்ட் டைரக்டர் தன் திறமையை காட்டியிருப்பார்.மரபு ரீதியான தொடர்போ, என்னவோ சிம்புவின் படங்களில் செட் தற்போதைய ட்ரண்டிற்கு ஏற்ப குறிப்பிடத்தக்க அம்சத்தில் இருக்கும். மன்மதன் படத்தில் ராஜீவன் ரொம்ப சிம்பிளாக, அதே சமயம் ரொம்ப அழகாக பாடல்களுக்கு செட் போட்டிருப்பார். இது, வல்லவனிலும் தொடர்ந்தது. மற்றொருவர், கௌதம் மேனன். இவருக்கும் கைக்கொடுப்பவர், ராஜீவன்.வெளிப்புறங்களில் போடப்படும் செட், இயற்கை கொடுக்கும் கூடுதல் அழகால், இன்னும் சிறப்பாக இருக்கும். வானம் கொடுக்கும் வண்ணம், செட்டிற்கு கொடுக்கும் எக்ஸ்ட்ரா சிறப்பை, இந்த புகைப்படங்களில் காணலாம்.

இந்த புகைப்படங்களில் உள்ளவை அனைத்தும் விஷால், ஸ்ரேயா நடித்து வெளிவரவிருக்கும் ’தோரணை’ படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக போடப்பட்ட செட்’டில் நான் எடுத்தது. இடம் : முட்டுக்காடு, சென்னை.

6 comments:

Suresh said...

நல்ல பகிர்தல் தலைவா

ஆயில்யன் said...

தமிழ் சினிமாக்களில் இந்த “செட்” விசயம் பல ஆச்சர்யங்களை இன்னமும் சினிமா ரசிகர்களுக்கு தந்துகொண்டுதான் இருக்கிறது.பார்க்கும் காட்சிகளில் நிஜமா அல்லது செட் ஆ என்று பார்த்து ஏமாந்து போகும் அளவுக்கு தத்ரூபமாய் காட்சி அளிக்கும் வகையில் தம் கைவண்ணத்தினை காட்டும் இந்த ஆர்ட் டைரக்டர்கள் தான் கனவு தொழிற்சாலையின் கடின உழைப்பாளிகள் !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஜாலியா இருக்கு தல....

சரவணகுமரன் said...

நன்றி Suresh

சரவணகுமரன் said...

நன்றி ஆயில்யன்

சரவணகுமரன் said...

நன்றி SUREஷ்