Tuesday, November 24, 2009

ரஹ்மான் - இன்றைய ரோல் மாடல்

வீட்டின் ஒரே ஆண் பிள்ளை. பதினோரு வயது தான். தலைவனை இழந்த குடும்பத்தை தாங்கும் வயதா அது? இப்படி ஒரு குடும்பத்தை தூக்கி நிறுத்துவதே எவ்வளவு பெரிய சாதனை? ஆனால், அந்த சிறுவன் அதோடு நிறுத்தினானா? முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினான். இந்திய இசையமைப்பாளர்கள் அனைவரையும் டிஜிட்டல் இசை நோக்கி செல்ல வைத்தான். உலக இசையை இந்தியா கொண்டு வந்தான். இந்திய இசையை உலகமெங்கும் கொண்டு சென்றான். தமிழகமும் இந்தியாவும் வருட வருடம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்கரை, இதோ இந்த வருடத்தில் கை நிறைய வாங்கி கொண்டு வந்தான்.

ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மான் இசை ஆட்டம் போட வைத்திருக்கிறது. தூங்க வைத்திருக்கிறது. அவரின் ஒலி நுட்பங்கள் ஏதேதோ உணர வைத்திருக்கிறது. இசை மட்டுமில்லை. அவருடைய வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. தன்னம்பிக்கை. விடாமுயற்சி. புதுமை. அடக்கம். தொடர் தேடல். சொல்லிக்கொண்டே போகலாம்.



என்.சொக்கன் எழுதி வெளிவந்திருக்கும் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ புத்தகம், ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரின் இசை வாழ்க்கையில் தொடங்கி ஆஸ்கார் வரையிலான ரஹ்மானின் இசைப்பயணத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ரஹ்மானை இசையை, ரஹ்மான் பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்து வருபவன் என்பதால், எனக்கு ரஹ்மான் லைம்லைட்டிற்கு வருவதற்கு முன்னால் நடந்தவைகளை தெரிந்துக்கொள்ளவே ஆர்வம். பதினான்கு அத்தியாயங்கள் உள்ள இப்புத்தகத்தில், ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசையமைப்பது பற்றி சொல்லியிருப்பது ஏழாவது அத்தியாயத்தில் தான். அதனால், கிட்டத்தட்ட பாதி அளவிற்கு ரஹ்மானின் சினிமாவிற்கு முந்தைய வாழ்வை பற்றியே ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

புத்தகத்தில் இருந்து சில சுவாரஸ்ய தகவல்கள்.

ரஹ்மானின் முதல் சினிமா பாடல் எது? சின்ன சின்ன ஆசையா? இல்லை. 1975 இல் வெளிவந்த ‘பென்படா’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘வெள்ளித்தேன் கிண்ணம் போல்’ என்ற பாடல். இந்த படத்திற்கு இசை, அவரின் தந்தை ஆர்.கே.சேகர். பாடல் ரெகார்டிங்கின் போது, ஒன்பது வயது திலீப் விளையாட்டாக ஹார்மோனியத்தில் ஏதோ வாசித்துக்காட்ட, அது அங்கிருந்த எல்லோருக்கும் பிடித்துவிட, அந்த மெட்டே பாடலாகியது. அப்புறம், இன்னொரு விஷயம். ரஹ்மான் தந்தை இசையமைத்த முதல் படத்தின் பெயர் - பழசிராஜா.

தந்தை இறந்த பிறகு, ஸ்டூடியோ ஸ்டூடியோவாக வேலைக்கு சென்றதால், திலீப்பால் பள்ளிக்கு ஒழுங்காக செல்ல முடியவில்லை. பள்ளி நிர்வாகம், அவரின் அம்மாவிடம் பையன் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கவனிக்க சொன்னார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கும் செல்லவேண்டும். பிறகு, பள்ளிக்கும் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது? அடுத்த நாள், ஸ்டூடியோவில் இருந்து நேரடியாக பள்ளிக்கு வர சொன்னார் அவரின் அம்மா. அங்கு வாசலில் காத்திருந்த அவர், திலீப்பிற்கு அங்கேயே உடை மாற்றி, உணவளித்து பள்ளிக்கு உள்ளே அனுப்பி வைத்தார்.



அந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பாளர்களிடம் திலீப் இசையமைத்திருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் தொடங்கி டி.ராஜேந்தர், ராஜ்-கோட்டி என்று இளையராஜா வரை நிறைய இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றிருக்கிறார். ராஜ்-கோட்டியிடம் துள்ளல் இசை, இளையராஜாவிடம் ஒழுக்கம் என.

ரஹ்மானுக்கு இசையை தவிர வேறு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. ஒரு நேரத்தில், எதிர்காலத்தின் மீது பயமேற்பட்டு, இசைத்துறையில் வேலையில்லாமல் போனால் என்ன செய்வது என்று ஒரு கட்டத்தில் திகைத்து போய், கார் ஓட்ட கற்றுக்கொண்டாராம். சினிமாவில் பிரச்சினை ஆகிவிட்டால், டிரைவர் ஆகி விடலாம் என்று நினைத்திருக்கிறார்!

ரஹ்மான் விளம்பரத்துறையில் இருந்த போது, அவரின் இசை இந்தியாவெங்கும் கொடிக்கட்டி பறந்தது. உதாரணத்திற்கு, டைட்டன் விளம்பரத்தில் வரும் கீ-போர்டு இசை, அரவிந்த்சாமி வரும் லியோ காபியின் வீணை இசை, ஏசியன் பெயிண்ட்ஸ் பொங்கல் விளம்பரம், சிந்தால் சோப், பிரிமியர் குக்கர், கார்டன் சாரிஸ் விளம்பரங்களின் இசை இவையெல்லாம் அந்நேரத்தில் ரஹ்மான் பற்றி அறியாமலே, எல்லோரையும் கவர்ந்திருந்த விளம்பரங்கள். அந்த இசை துணுக்குகளை இப்போது கேட்டாலும் சொல்வோம், என்ன விளம்பரம் என்று.

எந்த சினிமாவையும் வேலை நேரத்தில் விரும்பி பார்க்காத ரஹ்மான், ஏதோ தோன்றி, ஒரு நண்பருடன் ப்ரிவ்யூ சென்று பார்த்த படம் - தளபதி. இளையராஜா-மணிரத்னம் கூட்டணியின் கடைசி படம். படம் முடிந்த பிறகு, வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் அதிக நேரம் ரஹ்மானுடன் மணிரத்னம் பேசியிருக்கிறார். சந்திப்புக்கள் தொடர, ரோஜாவிற்காக ஒப்பந்தமானார் ரஹ்மான்.

இப்படி நிறைய சுவாரஸ்ய தகவல்களை இந்த புத்தகத்தில் ஆசிரியர் தொகுத்தளித்திருக்கிறார். நடுவே ரஹ்மான் வெவ்வேறு இயக்குனர்களிடம், வெவ்வேறு படங்களில் பணியாற்றியதை பற்றி குறிப்பிடும் போது, பாடல்கள், பாடிய பாடகர்கள் பற்றி நிறைய சொல்லியிருப்பது கொஞ்சம் சலிப்பை வரவழைத்தது.

மற்றபடி, அவர் தேடி தேடி கற்றுக்கொண்ட பலவகை இசை வடிவங்கள், அவருடன் இணைந்த தமிழின், இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள், அவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள் பற்றிய தகவல்கள் - ரஹ்மானின் திறமையை, பெருமையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. அவர் வாங்கிய விருதுகள் பற்றி வாசிப்பதே நமக்கு திகட்டுகிறது. ரஹ்மான் துல்லியமான இசையுடன் உலகமெங்கும் நடத்தும் மேடை கச்சேரிகள், இரவில் கம்போஸிங் செய்வதின் காரணங்கள், அவர் தொடங்கிய இசைக்கல்லூரி பற்றி பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஆஸ்கரை நெருங்கியது எப்படி என்பதை தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, இந்திய ஆல்பம், லண்டன் மேடை நாடகம், ஆங்கில சினிமா என்று சென்ற அவரின் இசைப்பயணத்தை வாசித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். புதுசாக ஏதாவது செய்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை இவரை கவனிப்பவர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் இவருடைய வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம்.

ஏ.ஆர்.ரஹ்மான்
176 பக்கங்கள்
என். சொக்கன்
கிழக்கு பதிப்பகம்
ரூபாய் 80


இப்புத்தகத்தை பற்றி ஏற்கனவே எழுதிய ஒரு பதிவு இங்கே.
ரஹ்மான் விவேக் பேட்டி பற்றிய பதிவு.
ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய போது எழுதிய பதிவு இங்கே.

.

8 comments:

Unknown said...

நன்றி சரவணகுமரன். உங்களது விமர்சனம் மிகவும் நல்லாருந்துச்சு, ரஹ்மானை பற்றிய புத்தகம் கண்டிப்பா வாங்கி படுச்சுடுவேன். இந்த புத்தகத்தை சீங்கிறமாவே வாங்கிடுறேன்.

<<<
விளம்பரத்தில் வரும் கீ-போர்டு இசை, அரவிந்த்சாமி வரும் லியோ காபியின் வீணை இசை, சிந்தால் சோப், பிரிமியர் குக்கர், கார்டன் சாரிஸ் விளம்பரங்களின் இசை
>>>
ரஹ்மானை பற்றிய ஒவ்வொரு தகவலும் அருமை. அதுவும் அவரின் விளம்பர படத்திற்கான யுடூப்பின் லிங்க் ரெம்ப நல்லருந்துச்சு.

பகிர்ந்தமைக்கு நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

ரஹ்மானை பற்றி பல புதிய விசயங்கள் சொன்னதற்கு

நன்றி சரவணக்குமார்...............

Karthick said...

Jai Ho AR RAHMAN....

சரவணகுமரன் said...

நன்றி Mastan...

சரவணகுமரன் said...

நன்றி சங்கவி

சரவணகுமரன் said...

வாங்க கார்த்திக்... ஜெய் ஹோ!

தமிழ்பையன் said...

நான் வாங்க வேண்டுமென நினைக்கிறேன்... உதவ முடியுமா... நான் குவைத் ல் இருக்கிறேன்

சரவணகுமரன் said...

இங்கே தொடர்புக்கொள்ளவும்

http://www.nhm.in/shop/9788184931877.html
http://www.noolulagam.com/product/?pid=2417