Tuesday, February 16, 2010

ட்டுடூர்ர்ர்ர்.....

"ஹலோ... எங்கடா இருக்கீங்க?”

“இதோ கிளம்பிட்டோம்... பாலாவுக்காக வெயிட்டிங்”

“நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன். சீக்கிரம் வாங்கடா... எப்ப பாரு லேட்டா... அவசரம் புரியாம...”

கண்ணன் ஓடி சென்று, ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டே, கிக்கரை மிதித்து, அலுவலக பார்க்கிங்கில் இருந்து வண்டியை கிளப்பி, கேட்டின் அருகே சென்று பாலாவுக்காக வாசல் கதவை பார்த்தப்படி நின்றான்.

வாட்சில் டைம் பார்த்தான். அரை மணி நேரத்தில் சென்று விட முடியுமா? பாவம் அசோக். எவ்ளோ நேரம் தான் தனியாக காத்திருப்பான்?

திரும்பி வாசலை பார்க்க, பாலா ஓடி வந்துக்கொண்டிருந்தான்.

“சீக்கிரம்டா...” கத்திக்கொண்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

பாலா ஓடி வந்து வண்டியில் ஏறிக்கொள்ள, சீறிக்கொண்டு கிளம்பியது.

இரண்டு கிலோமீட்டருக்கு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பிறகு, கண்ணன் திட்ட ஆரம்பித்தான்.

“ஏண்டா! லேட்?”

“நீ முதலேயே சொல்லியிருக்கணும். சரி, லூஸ்ல விடு. வேகமா போ!”

ஆக்ஸிலேட்டர் மேலும் முறுக்கப்பட, சத்தத்தை மேலும் கூட்டிக்கொண்டு, 150 சிசி இஞ்சின் பைக் உறுமலுடன், அருகில் இருந்த மற்ற வாகனங்களை விட்டு விலகி முன்னுக்கு சென்றது.

“டேய்! அங்க பாரு! கிரின் சிக்னல் போட்டுருக்கான்...” - பாலா கத்திக்கொண்டு சொன்னது, காற்றின் பேரிரைச்சலைத்தாண்டி ஹெல்மெட்டுக்குள் இருந்த கண்ணனின் காதில் மெதுவாக கேட்டது.ஆமாம். முன்னூறு மீட்டர் தொலைவில் அந்த சிக்னல். அப்போதே போட்டிருக்க வேண்டும். காத்திருந்த வாகனங்கள் கரைந்திருந்தது. சிக்னலில் மாட்டினால் பத்து நிமிடம் விரயமாகும். தாண்டி விட வேண்டும்.

முன்னால் சென்ற வாகனங்களையும், சிக்னலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே வண்டியை விரட்டினான். வண்டியின் உச்சப்பட்ச சேவை அது.

சிக்னலில் கிட்டத்தட்ட வண்டிகள் எதுவுமில்லை.

சிக்னலை கடக்கும்போது அது நிகழ்ந்தது. கண்ணனின் வண்டிக்கு முன்னால் இடதுப்புறம் சென்றவன், பின்னால் பார்த்துக்கொண்டே வலதுபுறம் மாறினான். சிக்னலில் வலதுபுறம் செல்லும் சாலைக்கு செல்கிறான் அவன். கண்ணன் பைக் வருவதற்கு முன் சென்று விடலாம் என்பது அவன் கணக்கு. தப்பு கணக்கு.

சரியாக சிக்னலின் மையம் அது.

வலதுபுறம் திரும்பிய அந்த நிதானவாதி வண்டியின் முடிவு, கொலைக்கார வேகத்தில் வந்த இவன் வண்டியின் ஆரம்பத்துடன் முத்தமிட...

“யேய்... யேய்ய்....”

வலதுப்புறம் சென்றவன் நலமாக சென்றுவிட, நேராக செல்லவேண்டியவர்களுக்கு நெருக்கடி. வேகத்தை குறைத்தும், சரிவை தடுக்க முடியவில்லை. ரெட் சிக்னல் போட்டுவிட்டார்கள். நேராக இருந்த சாலை, விழுந்ததில் இவர்கள் கண்களுக்கு குறுக்காக கிடந்தது. சிக்னலை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த ட்ராபிக் போலிஸ்காரர்களில் ஒருவர் ஓடி வந்தார். மற்றொருவர், கவிழ்த்த வண்டியை பிடித்தார்.

”பாத்து.. பாத்து... மெதுவா எந்திரிங்க...”

பக்கத்தில் இருந்த கடைக்காரர் ஒருவர் வண்டியை தூக்கிவிட்டார். போலிஸ்காரர் இருவரையும் அழைத்துக்கொண்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தடிக்கு கொண்டு வந்தார்.

”ரெண்டு பேரும் காலை உதறுங்க... ஆங்... அப்படி...”

“இல்ல சார்... ஒண்ணுமில்ல...” இருவரும் சமாளித்தார்கள். போலிஸ் திட்டாதது ஆறுதலாக இருந்தது. பாலா வண்டியை பார்த்தான். வண்டியின் வலதுப்பக்க இண்டிக்கேட்டர் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. கண்ணனின் வலதுகால் முட்டியில் பேண்ட் சிறிது கிழிந்திருந்தது. பாலா தனது காலை பார்த்துக்கொண்டான். மடக்கிப் பார்த்துக்கொண்டான்.

சாலையின் அந்தப்பக்கம், முன்னால் சென்றுக்கொண்டிருந்தவனை, போலிஸ் பிடித்து விசாரித்துக்கொண்டிருந்தது, இருவருக்கும் அந்த நிதானவாதி மேல் பரிதாபத்தையும், குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியது.

உட்கார்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து செல்லுமாறு போலிஸ்காரர் இருவரிடமும் கூறினார். கண்ணன் வாட்ச்சை பார்த்துவிட்டு, பாலாவை பார்க்க,

“இல்ல சார்... பரவாயில்லை... ப்ராப்ளம் ஒண்ணுமில்லை...” என்றவாறே வண்டியில் ஏறி உட்கார்ந்து கிளம்ப, போலிஸ்காரர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

“நல்லவேளை, அவரு நம்மள திட்டலை”

“மிஸ்டேக் நம்ம பக்கம் இல்லடா”

“சரி... சரி... சீக்கிரம் போ... அசோக் வந்து அரைமணி நேரம் ஆச்சு... பாவம், உள்ளயும் போக முடியாம தவிச்சுக்கிட்டு வெளியேவே நிப்பான்...”

அடுத்த பத்து நிமிடத்தில், அந்த காம்ப்ளெக்ஸை நெருங்கிவிட்டார்கள். வாசலிலேயே அசோக் நின்றுக்கொண்டிருந்தான். இருவரையும் பார்த்து கையை அசைத்தான்.

இவர்களும் பதிலுக்கு கையை காட்டிவிட்டு, வண்டியை நிறுத்திவிட்டு, அவனுடன் சேர்ந்து அவசரமாக உள்ளே ஓடினார்கள்.

“போட்டுடான்டா!!!”

ஸ்கிரினில் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. 3 இடியட்ஸ்.

.

15 comments:

ஜமீல் said...

நல்ல விறுவிறுப்பு... எதிர்பார்ப்பும் கூட...

Unknown said...

அனுபவ பதிவோ

Karthick said...

thakaali...(read in rajkiran style) the reaction for the last line...

சரவணகுமரன் said...

நன்றி முகம்மது

சரவணகுமரன் said...

அனுபவம் தான் பேநா மூடி... சம்பவத்தன்னிக்கு ஊர்ல இல்ல, இருந்திருந்தா சொந்த அனுபவமாயிருக்கும்... :-)

சரவணகுமரன் said...

கார்த்திக், அது ஒரு கெட்ட வார்த்தை... யாரை திட்டுறீங்க? :-)

Mohan said...

கதை ரொம்ப நல்லா இருந்ததுங்க!

Naresh Kumar said...

நல்லாயிருக்கு!!!

இதை விட்டுட்டு வேற என்னமோ கதையை தியேட்டருல ஓட்டுறாங்கன்னு கேள்விப்பட்டேனே!!!

Kartheeswaran said...

எதேச்சையாக வலைப்பூவில் உலாவிய போது தங்களின் கதையை படிக்க நேர்ந்தது... என்ன ஒரு விறுவிறுப்பு.... முடிவை நான் எதிர்பார்க்கவில்லை.... கலகிட்டீங்கப்பு!!! வாழ்த்துக்கள் நண்பரே...

சரவணகுமரன் said...

நன்றி மோகன்

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி கார்த்திக்

சரவணகுமரன் said...

ஹி... ஹி... அதானே நரேஷ்!

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமர

அட்டகாசம் 3 இடியட்ஸ் - சூப்பர்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

என்னது நானு யாரா? said...

வலைசரத்தில் சுட்டிக்காட்டிய படி ஒவ்வொருக் கதையும் அருமையாகத் தான் இருக்குது தல!

இனி உங்களையும் தொடர வேண்டியது தான். ஆலமரத்துக்கு கீழே ஒரு செடியா இருந்து நிறையவே உங்ககிட்ட இருந்து கத்துக்கலாம் இல்ல?