Friday, January 25, 2013

விஸ்வரூபம்

நான் விஸ்வரூபம் எங்குமே வெளியிட மாட்டார்கள் என நினைத்திருந்தேன். இரவு 8:30 க்கு தான் ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன். 9 மணிக்கு ப்ரிமீயர் என்று. மனைவி வரவில்லை என்று சொல்ல, தனியே கிளம்பினேன்.

இந்த தியேட்டருக்கு இதற்கு முன்னால் சென்றதில்லை. என் நேரத்திற்கு ஜிபிஎஸ் காட்டிய வழியில் சாலையை மூடி வைத்திருந்தார்கள். திரும்ப வேறொரு வழியை சொல்ல, ஒரு வழியாக தியேட்டர் போய் சேர்வதற்குள், படம் பத்து நிமிடங்கள் ஓடி விட்டது. படத்தில் வரும் ஒரு சேசிங் சீன் போல இருந்தது, என் அனுபவமும்.

---

விஸ்வரூபம் எந்த விளம்பரமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது. 100 கோடி பட்ஜெட் என்று சொன்ன போதும், எனக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியான போது இருந்து ஆரம்பித்த எதிர்பார்ப்பும் கூடவே எதிர்ப்பும் உச்சத்திற்கு சென்று எகிறியடித்தது.

முடிவில் இரண்டு வார தடையுத்தரவும் வந்து சேர, எவ்வளவு செலவு செய்தும் கிடைக்காத ஹைப் படத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

---

கமல் இயக்கம் என்பது தான் என்னளவில் இந்த படத்தின் மீது பெரிய ஆர்வம் கிளம்பாதற்கான காரணம். எப்படியும் ஒரு தடவை பார்த்தால் புரிந்து விடாத மொழியில் படமெடுப்பவர் என்பது அவர் மீதான என் அபிப்ராயம். தியேட்டரில் பார்த்த பிறகு, பின்பு அந்த படத்தைப் பற்றிய கட்டுரை படித்தாலோ, டிவியில் பார்த்தாலோ, சிலாகிக்க விஷயங்கள் வந்து சேர்ந்தாலும், தியேட்டரில் முதல்நாள் கொண்டாடும் விதத்தில் படமெடுக்க மாட்டார் என்பது ‘இயக்குனர் கமல்’ மீதான என் ஆழ்ந்த நம்பிக்கை.

இந்த படத்தில் அந்த நம்பிக்கையை கொஞ்சம் பெயர்த்து எடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ‘இயக்குனர் கமல்’ முதன் முறையாக கமர்ஷியல் படமெடுத்து இருக்கிறார். அம்பி போல இருந்து, திடீரென்று வீராவேசம் காட்டுவது எல்லாம் காலகாலமாக தமிழ் படங்களில் பார்த்தாலும், கமல் இயக்கத்தில் நான் எதிர்பாராதது.

---

கமல், எந்த நம்பிக்கையில் ‘இஸ்லாமியர் இந்த படத்தை பார்த்த பின்பு, எனக்கு பிரியாணி விருந்தளிப்பார்கள்’ என்று சொன்னார் என்பது தெரியவில்லை. மிலாடி நபிக்கு வீட்டில் பிரியாணி செய்திருந்தால் கூட தர மாட்டார்கள்.

அதற்காக அவரை குறை சொல்லவில்லை. தாலிபன் தீவிரவாதிகள், அல்-கொய்தா, பின்லேடன் என்று கதை களன் இருக்க, இப்படி தான் காட்ட முடியும். இல்லாவிட்டால், இந்த கதைக்களனை விட்டுவிட்டு, பாலக்காட்டு சமையல்காரர் கதையைத்தான் எடுக்க வேண்டும்.

நம்மூர் இஸ்லாமிய அமைப்புகள், இந்த படத்திற்கு காட்டும் எதிர்ப்பைப் பார்க்கும் போது, அவர்கள் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. இப்படி அடாவடியாக மிரட்டி, படத்தை தடை செய்திருப்பதே, தீவிரவாத செயலாகத்தான் தெரிகிறது.

---

நடிகர் கமலை பற்றி சொல்ல எதுவும் இல்லை. பெண்மை நளினத்துடன் அவர் நடக்கும் காட்சிகளில், அவரின் நடிப்பை கண்கொட்டாமல் பார்க்கலாம். அவர் புத்திசாலித்தனமாக பேசும் காட்சிகளில் தான் சலிப்பு வருகிறது.

டெக்னிக்கலி சில விஷயங்கள் பாராட்டும்படி இருந்தாலும், சில பல்லிளிக்கும் காட்சிகளும் இருக்கிறது. கமல் (சர்க்கஸ்) சாகசங்கள் பண்ணுவதாக காட்டும் காட்சியில், அவருக்கு பொருத்தமில்லாத உடலில் அவர் தலையை ஒட்டி... நல்லா இல்லை போங்க.... வன்முறை காட்சிகளை (கை துண்டாவது, உடல் இரண்டாக போவது) நல்ல தொழில்நுட்பத்தில் அமைத்திருப்பதை, எப்படி பாராட்டுவது?

மற்றபடி, நம்ம கண்ணுக்கு சுலபத்தில் புலப்படாத வகையில் டெக்னிக்கல் அம்சங்கள் இருப்பது, பாராட்டத்தக்கது.

பொதுவாக, படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாவிட்டால், இரண்டாம் பாகம் என்று முடிப்பார்கள். இதில் நச்சென முடிக்கவில்லை என்ற காரணத்தால், இரண்டாம் பாகம் என்று சொல்லி முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

படத்தில் லாஜிக்கல் தவறுக்கள் பல இருக்கிறது. உதாரணமாக, இந்திய பிரதமர் அவராகவே முடிவெடுப்பதாக ஒரு காட்சியில் காட்டியிருக்கிறார்!!! துரோகம் செய்யும் மனைவி, இறுதியில் கணவன் மீது பாசத்தில், ஒன்றாக சாவோம் என்று சொல்லும் கிளிஷேக்களும் உண்டு. அதே சமயம், செல்போன் இயக்கத்தை தடுக்க மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தும் புத்திசாலித்தனமான காட்சிகளும் உண்டு.

படத்தின் ப்ளஸ் என்று லொக்கேஷன்களை சொல்லலாம். நியுயார்க் நகரம், அதன் வேறொரு மறுபக்கம்,ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களை சொல்லலாம்.

நிஜ உலக சம்பவங்கள், நபர்கள் என்று இணைத்து கதை அமைத்திருப்பது இண்ட்ரஸ்டிங்.

---

மொத்தத்தில், இந்த பாகத்தை இம்ப்ரஸிவாக முடிக்காவிட்டாலும், ’கமர்ஷியல் இயக்குனர்’ கமல், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை என்னுள் கிளப்பி விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ’இந்திய ஜேம்ஸ்பாண்ட்’ ரகத்தில் கமல் என்றால் எதிர்பார்ப்பு இருக்க வேண்டாம்?

.

9 comments:

DiaryAtoZ.com said...

Thanks Good Review. Your review encourages me to see this movie.

kumaru said...


<< கமல், எந்த நம்பிக்கையில் ‘இஸ்லாமியர் இந்த படத்தை பார்த்த பின்பு, எனக்கு பிரியாணி விருந்தளிப்பார்கள்’ என்று சொன்னார் என்பது தெரியவில்லை. மிலாடி நபிக்கு வீட்டில் பிரியாணி செய்திருந்தால் கூட தர மாட்டார்கள்.


<< நம்மூர் இஸ்லாமிய அமைப்புகள், இந்த படத்திற்கு காட்டும் எதிர்ப்பைப் பார்க்கும் போது, அவர்கள் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது. இப்படி அடாவடியாக மிரட்டி, படத்தை தடை செய்திருப்பதே, தீவிரவாத செயலாகத்தான் தெரிகிறது.

நீங்க மேல சொன்ன ரெண்டு விசயத்தையும் யோசிச்சேன்.

இங்குள்ள இஸ்லாமியர்கள் நிச்சயம் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக எனக்கு தோணவில்லை.
அதே நேரத்தில், USன் போக்கு அவர்களக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால், US சப்போர்ட் பண்ற இந்த படத்தை பிடிக்காமல்
போயிருக்கலாம்.

I think it is bit complicated.It is not that they support muslim terrorism. BUT they hate to see showing muslims as terrorists.

BUT, total ban is very bad idea. kamal made a mistake by showing this show to them prior. Otherwise, He might have managed like thuppakki.

சேலம் தேவா said...

நச் பாயிண்ட்களுடன் சூப்பர் பதிவு.

PUTHIYATHENRAL said...

இஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! சரியா?
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_25.html

விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_2139.html

PUTHIYATHENRAL said...

இஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! சரியா?
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_25.html

விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_2139.html

சரவணகுமரன் said...

நன்றி DiaryAtoZ.com

சரவணகுமரன் said...

kumaru,

கண்டிப்பாக பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், படத்தை பார்த்தப்பிறகு, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகளைப் நினைத்து பார்க்கும் போது, இவர்கள் ஆப்கன் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஏனெனில், ஆப்கன் தீவிரவாதிகளைப் பற்றியது தானே?

சரவணகுமரன் said...

நன்றி சேலம் தேவா

சரவணகுமரன் said...

தொடுப்புகளுக்கு நன்றி புதிய தென்றல்