Monday, February 2, 2015

சினிமா தயாரிப்பாளர்களே! என் படம் பார்க்கும் பழக்கம் முன்னிட்டு....



படம் பார்க்கும் என் பழக்கம், பலவித மாற்றங்கள் கண்டு, இன்று டெண்ட்கொட்டகையில் வந்து நிற்கிறது. இது ஆன்லைன் டெண்ட்கொட்டா. www.tentkotta.com.

முக்கிய படங்கள், நான் வசிக்கும் ஊரில் திரையிடப்படும் படங்களை இன்னமும் திரையரங்கில் தான் பார்க்கிறேன்.

அப்படி போனவருடம் பார்த்த படங்களை பற்றிய ஒரு வெட்டி ஆய்வு இப்பதிவு. என்னை வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகன் என்று எடுத்துக்கொண்டால், இந்த பதிவு யாருக்காவது உபயோகப்படலாம்.

போன வருடம் (2014), 202 படங்கள் வந்திருப்பதாக தெரிகிறது. அதில் முக்கிய கலைஞர்கள் பங்காற்றிய அல்லது நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்ட படங்களை திரையரங்கிலும், பெரும்பாலும் இணையத்தில் பார்த்திருக்கிறேன். இணையத்தில் பணம் செலுத்தி லீகலாக பார்ப்பதால், எந்த குற்ற உணர்ச்சியும் கிடையாது. இந்த 200+ படங்களில் மொத்தமாக 67 படங்களை இவ்வாறு பார்த்திருக்கிறேன்.

பத்து படங்கள், திரையரங்கில். என்னென்ன படங்கள்? போன வருடம் ஆரம்பத்தில் இந்தியா சென்றிருந்தபோது, தூத்துக்குடியில் ஜில்லாவும், வீரமும் பார்த்தேன். டென்வரில் திரையரங்கில் பார்த்தபடங்கள் - மான் கராத்தே, கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி, ஜிகர்தண்டா. கோச்சடையான், இருமுறைகள் திரையரங்கில் பார்த்தேன். ஆச்சர்யப்படுபவர்களுக்கு - ரஜினிதான் முக்கிய காரணம் என்றாலும், அந்த படம் எனக்கு பிடித்திருந்தது. இரண்டாம் முறை, ஒரு வார நாளில் பிற்பகலில் பார்த்தேன். எங்கள் குடும்பம் மட்டும் திரையரங்கில். (எங்கள் குடும்பம் என்பது நான், என் மனைவி, என் 3 வயது குழந்தை). ஒரு ஆள் இருந்தாலும், இங்கு திரையிடுவார்கள்.

அப்புறம் மின்னியாபொலிஸ் வந்தப்பிறகு, ஒரு பிரச்சினை. தமிழ் படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளின் தொலைவு. கிட்டத்தட்ட 20 மைல்கள். இருந்தாலும், வண்டி கட்டிக்கொண்டு போகிறோம். அப்படி சென்று பார்த்தப்படங்கள் - கத்தி, பூஜை(!), காவியத்தலைவன், லிங்கா.

பூஜையெல்லாமா? என்று இங்கிருப்பவர்கள் கேட்பார்கள். அதனால் ரகசியமாய் போய் பாத்தோம். :-) எல்லாம் ஹரிக்காக தான். அது ஒரு இரவு காட்சி. திரையரங்கில் எங்களைத் தவிர, இன்னொரு குடும்பம் மட்டும் தான். பத்து மணி காட்சி. அதற்கு மேல் பதினைந்து நிமிடங்கள் ஆனாலும் போடவில்லை. 5-6 பேருக்கெல்லாம் படம் போட மாட்டோம் என்று சொல்ல மாட்டார்களே என்று வெளியே சென்று ஒரு திரையரங்கு நிர்வாகியிடம் சென்று கேட்டேன். "ஓ! அப்படியா? ஸாரி, இதோ போடுகிறோம்" என்று போட்டார்கள்.

லிங்கா வந்த அன்று இரவு, ஒரு இன்ஸ்டால் இருந்தது. அதனால் முதலில் இந்த கடமையை முடிப்போம் என்று பிற்பகல் காட்சிக்கு சென்றோம். சொல்லவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அன்று திரையரங்கில் எங்கள் குடும்பம் மட்டும் தான். (சிங்காரவேலன் பார்வையில் இது பட்டுவிடக்கூடாது!!!)

மின்னியாபொலிஸில் இரு திரையரங்குகளில் தமிழ் படங்கள் வெளியாகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம். ரெண்டுமே தூரம் என்றாலும், கொஞ்சமாக தொலைவில் இருக்கும் திரையரங்கிற்கு செல்கிறோம். ஆனால், அந்த திரையரங்கிற்கு பெரும்பாலோர் வரமாட்டார்கள் போலும். இங்கு ப்ரியாக இருக்கும். மற்றொரு திரையரங்கிற்கு சென்றவர்கள், டிக்கெட் கிடைக்கவில்லை என்பார்கள்.

தூரமாக இருந்தாலும், டிக்கெட் கிடைக்காமல் போகும் ரிஸ்க் இருந்தாலும், இனி அந்த திரையரங்கிற்கு தான் செல்ல வேண்டும். கூட்டமாக பார்த்தால் தான், படம் பார்த்த திருப்தி. அப்புறம் எதற்கு தியேட்டரில் பார்க்கிறோம்?

மிச்ச 50+ படங்கள் பார்த்தது, இணையம் மூலமாக டிவியில். துல்லியமான குவாலிட்டி என்றாலும் குறை என்னவென்றால், ஒரிரண்டு வாரங்கள் கழித்து தான் பார்க்க முடியும். எனக்கு சுடச்சுட பார்க்க வேண்டும். படம் நல்லா இருக்கோ இல்லையோ, எவ்வித அபிப்ராயம் இல்லாமல் பார்க்க வேண்டும். சில வாரங்கள் கழித்து பார்க்கும் போது, அது ஆறிப்போயிருக்கும். படத்தை பற்றிய பல கருத்துக்கள், மண்டையில் ஏறியிருக்கும். வேறென்ன செய்ய? சில படங்கள் பார்க்கமுடியாமலே போகிறது. அதற்கு இது பரவாயில்லை.

---

சினிமா துறை என்ன செய்ய வேண்டும்?

tentkotta, silkker என்று இணைய வழி வினியோகம் தொடங்கியிருக்கிறது. இவர்கள் தயாரிப்பாளர்களுக்கு பணம் செலுத்தி, பார்வையாளர்களிடம் சந்தா வாங்கி படம் காட்டுகிறார்கள். இவர்கள் தளங்களில் இருந்து திருடி, சில திருட்டு தளங்களில் இலவசமாக காட்டுவதாக தெரிகிறது. இதற்கு தயாரிப்பாளர்கள் பயப்படக்கூடாது.

சேரனின் C2H லிலும் இது போன்ற இணைய வெளியீடும் இருப்பது போல் தெரிகிறது. தவிர, பொதுவாகவே சேரனின் திட்டத்திற்கு சினிமாத்துறையில் ஒருவித தயக்கம் இருப்பதாக தெரிகிறது. அது தேவையற்றதாக தெரிகிறது. (திரையரங்கு உரிமையாளர்கள் தயங்கினார்கள். அது புரிந்துக்கொள்ள கூடியது)

லீகல் இணையதளங்கள் பற்றிய விழிப்புணர்வு பெருகும் போது, பார்வையாளர்கள் கூடுவார்கள். அப்பொழுது அந்த பலனை பெற தயாரிப்பாளர்கள் முயல வேண்டும். இணைய ப்ரிமியர் காட்சி போன்றவற்றை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

---

மேலே கூறியது போல், பார்க்க வேண்டும் என்று நினைக்கும் படங்களை, எங்கிருந்தாலும் தியேட்டர் சென்று பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பணம் செலுத்தி, இணையத்தில் பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், படத்தை காட்ட தான் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். நன்றாக இருப்பதாக கூறப்பட்ட சில படங்களை, நான் இன்னமும் பார்க்காமல் இருக்கிறேன். அவை இங்கு திரையரங்கிற்கும் வரவில்லை. லீகல் இணையத்தளங்களிலும் வரவில்லை. திருட்டு தளங்களில் இருக்கலாம். அதை உட்கார்ந்து தேட வேண்டும். அப்படிப்பட்ட சில தளங்களில் வைரஸ் பிரச்சினைகள் உண்டு. HD குவாலிட்டி இருக்காது. அதை டிவியில் பார்க்க, இன்னமும் மெனக்கெட வேண்டும். இவ்வளவு மெனக்கெட, எனக்கு நேரமும் இருப்பதில்லை. பார்ப்பதுமில்லை.

என்னைப் போன்ற ரசிகர்களுக்காகவது, தயாரிப்பாளர்கள் தங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு புதிய வினியோக வழிமுறைகளை யோசிக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களே, நீங்கள் சம்பாதிப்பதற்கு எவ்வளவு பேர் கெஞ்ச வேண்டி இருக்கிறது?

.

No comments: