Thursday, February 5, 2015

என்னை அறிந்தால் - கௌதமை அறிந்தவர்களுக்கு...


போன பதிவில் சொன்னது போல், நல்ல கூட்டம் வரும் தியேட்டருக்கு செல்ல, இம்முறை முடிவானது.

புக்கிங் ஓப்பனிங் ஆனதை நண்பர் சொன்னவுடன், புக் செய்தேன். சில நிமிடங்களில், சொன்ன நண்பர் தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றார். வருத்தம் தான்.

பெரிய திரை இல்லை. அதனாலோ என்னவோ, திரையரங்கு நிரம்பியிருந்தது. சலசலவென தமிழர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள், படம் போடுவதற்கு முன்பும், பின்பும்.

தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் இப்படத்தின் ட்ரெய்லரின் போதான ரசிகர்களின் கொண்டாட்டத்தை யூட்பிளில் பார்த்தேன். அடடா! என்னவொரு கொண்டாட்டம்? அதற்காகவே, இப்படி கூட்டத்துடன் பார்க்க, இன்று இன்னமும் ஆசை.

---


இது முழுக்க முழுக்க கௌதம் மேனன் படம். அஜித் கௌதமிடம் 'வேட்டையாடு விளையாடு' போல் ஒரு படம் கேட்டாராம். அப்படியே எடுத்துக்கொடுத்திருக்கிறார்.

இதுவரை கௌதமின் முந்தைய படங்களைப் பார்த்து, பழகி, அப்படியே அவருடைய ரசனைக்கு செட்டாகிவிட்டோம். செட்டாகிவிட்டோமென்றால், இப்படத்தையும் நன்கு ரசிப்போம்.

'வேட்டையாடு விளையாடு'வில் வரும் கமல்-ஜோதிகா உறவைப்போலவே, இதில் அஜித்-த்ரிஷா. படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சிகள், இவர்களுடைய ஜோடி காட்சிகள்.

அஜித்தின் நடிப்பு திறமையை நீண்ட நாள் கழித்து, ஒரு இயக்குனர் வெளிக்கொண்டு வந்துள்ளார். அதிலும் கௌதம் டைப் வசனங்கள், அஜித் பேச கேட்பது, சுவாரஸ்யம். 'அதாரு இதாரு'வில் அஜித்தை நன்கு ஆட வைத்திருக்கிறார் சதீஷ்.

அனுஷ்கா வெயிட்டை காட்ட, படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார் இயக்குனர். நன்கு வலு சேர்த்திருக்கிறார், ஆங்காங்கே வசனங்கள் மூலமாக. (அடையார் சிக்னல் க்ளியர் ஆயிடுச்சா?!)

முன்பு கௌதமின் வசனங்கள், ஓவராக தோன்றும். இப்பொழுது பலமாக தெரிகிறது. நச்சென்று இருக்கிறது. ஆங்காங்கே நகைச்சுவையாக இருக்கிறது (சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்!)

ஆனால் கிளைமாக்ஸில் போனில் அஜித்தும், அருண் விஜய்யும் பேசும் வசனங்கள், சலிப்பை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

அருண் விஜய் சட்டை தெறிக்க, நடிப்பிலும் தெறிக்க விடுகிறார். அவருடைய கேரக்டரும் ஹீரோவுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காக்கி சட்டை கதை, இதில் கொஞ்சம் வந்துள்ளது. போலீஸ், என்கவுண்டர், ஹீரோயின் மரணம், பயணங்கள் என்று இயக்குனரின் வழக்கப்பட்ட திரைக்கதை சம்பிரதாயங்கள் இதிலும் உள்ளது. ஆனால், அவை அனைத்தும் ரசிக்கும்படியே உள்ளது.

யூகிக்க முடிந்த, இழுக்கப்பட்ட கிளைமாக்ஸ் என்பதை தவிர எனக்கு வேறெதுவும் குறையாகப்படவில்லை.

கௌதம், அவருடைய ரசிகர்களையும், அஜித் ரசிகர்களையும் சேர்த்தே திருப்திப்படுத்தியிருக்கிறார்.

என்னை அறிந்தால் - கௌதமை அறிந்தவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

.

1 comment:

Anonymous said...

மொக்க தியேட்டர் காத்து வாங்குது