Sunday, December 9, 2007

கல்லூரி - விமர்சனம்

காதல் பட வெற்றிக்கு பிறகு பாலாஜி சக்திவேல்-ஷங்கர் காம்பினேசனில் வந்திருக்கும் படம். தமன்னாவை (கேடி, வியாபாரி, சக்தி மசாலாவில் நடித்தவர்) தவிர அனைவரும் புதுமுகங்கள். கல்லூரிக்கால நண்பர்களை பற்றிய கதை. மிகவும் இயல்பாக எடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள். தென் தமிழகத்தில் (சிவகங்கை என்று சொல்கிறார்கள்... ஆனால் திண்டுக்கல்லாம்...) உள்ள ஒரு கல்லூரியில் கதைக்களம் அமைக்கப் பட்டு உள்ளது. மற்ற படங்களில் வருவதை போல் கானா இல்லை... பெண்களை கேலி படுத்தும் பாடல் இல்லை...

நட்பு வட்டத்துக்குள் காதல் வந்தால் நண்பர்களுக்குள் எழும் உணர்ச்சிகளின் கதையே கல்லூரி. முத்து, ஷோபனா, கயல்விழி, ஆதிலட்சுமி, காமாட்சி என்று ஒவ்வொரு கதாபத்திரமும் மிக இயல்பாக வடிவமைக்க பட்டுள்ளது. அதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். உண்மையில் நடிகையான தமன்னாவை விட மற்றவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்துடன் ஒன்றிய நகைச்சுவை காட்சிகள் முதல் பாதி படத்தின் ஓட்டத்திற்கு கை கொடுத்து இருக்கிறது. அதிலும் "ஏங்க... நீங்க சொல்லுங்க" இரட்டையர்கள், கைடு விற்கும் ஆங்கில விரிவுரையாளர், வெட்க படும் காமாட்சி (பையன்தான்), பிடுங்கி சாப்பிடும் ஆதிலட்சுமி, தமன்னாவை டாவடிக்கும் சீனியர் என்று நகைச்சுவை காட்சிகள் படத்தை ஜனரஞ்சகமாக்குகிறது. தமன்னாவை போன்று தங்கள் தந்தைகளை டாடி என்று அழைக்கும் கற்பனை காட்சியும், கல்லூரி கல்சுரல் (கலை சாரல்) மாணவர்கள் ஆடும் வெஸ்டர்ன் நடனமும், பரத நாட்டியமும் அரங்கத்தை அதிர வைக்கிறது.

"பொண்ணை சக மனுஷியாகயும் friend ஆகவும் பாக்குறவனே ஆம்பிளை" வசனம் படத்தில் வரும் அனைத்து பெண்களையும் கண்ணியத்துடன் பார்க்க வைக்கிறது. ஆஸ்பிட்டலில் தமன்னா கோபம் படும் காட்சியில் நட்பை மீறிய காதல் யதார்த்தமாக வெளிப்படுகிறது. அண்ணனுக்காக படிப்பை விடும் குட்டி தங்கை தமன்னாவின் வண்டியில் உட்காராமல் முன்னால் ஓடியே வீட்டிற்கு கூட்டி செல்வது மனதை என்னவோ பண்ணுகிறது. நண்பர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காட்சிகள் கடந்த கால நினைவுகளை நினைவுப்படுத்தும்.

தமன்னா பிர்லா கல்லூரியில் கிடைக்கும் இடத்தை நண்பர்களுக்காக தவிர்ப்பது, எந்த வித அழுத்தமான காரணங்களும் இல்லாமல் வருவதால், ஒரு வித நாடகத் தன்மை ஏற்படுகிறது. "சரியா தவறா" பாடலை தவிர மற்றதெல்லாம் சுமார். தருமபுரி பஸ் எரிப்பை கிளைமாக்சில் பயன்படுத்திய விதம் படம் பார்போரின் மனதை பாரமாக்குகிறது.

ஷங்கர் வழக்கம் போல் தனது தயாரிப்புகளில் காட்டும் பிரமாண்டமான கஞ்சத்தனத்தை இதிலும் காட்டியுள்ளார். அதிகபட்ச செலவு ஒரு பஸ்ஸை எரித்ததே. ஆனாலும் தரமான, யதார்த்தமான படத்தை கொடுத்ததற்கு பாராட்ட வேண்டும். காதல் பட எதிர்பார்ப்பு இல்லாமல் இப்படத்தை கண்டால் ரசிக்கலாம்.

No comments: