Tuesday, August 11, 2009

ஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா?

ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி எங்கு எதை கேட்டாலும், பார்த்தாலும் நின்று கவனித்துவிட்டே செல்வேன். பேச்சை விட செயலுக்கு அதிகம் கவனம் கொடுக்கும் பிரபலங்களுள் ஒருவர் என்பதால் அவர் துறை சார்ந்து மட்டுமில்லாமல் ஒரு மனிதனாகவும் என்னை கவர்ந்தவர்.கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள “ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்” புத்தகத்திற்கு அறிமுகம் கொடுக்கும்விதமாக, ஆஹா எப்.எம்.மில் ஒலிப்பரப்பு செய்யப்பட்ட, பத்திரிக்கையாளர் & எழுத்தாளர் தீனதயாளன் - நூலாசிரியர் சொக்கன் இடையே நடந்த, ஏ.ஆர்.ரஹ்மான் சம்பந்தமான ஒரு மணி நேர உரையாடலை கேட்டேன். பிடித்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

---

ரஹ்மான் பற்றி பேசும்போது இளையராஜாவை தவிர்க்க முடியாதா? தெரியவில்லை. ரஹ்மான் அடைந்த இந்த உயரத்தை, இளையராஜாவால் ஏன் அடைய முடியவில்லை என்ற கேள்விக்கு, இளையராஜா தென்னிந்திய மாநிலங்கள், பிறகு குறிப்பிடும் அளவு ஹிந்தி படங்கள் போன்றவற்றிலே திருப்தி அடைந்து விட்டார் என்றும், பெரிய அளவில் தமிழை தாண்டி செல்லவேண்டும் என்று முயற்சி எடுக்காததே காரணம் என்றும் தனக்கு தோன்றுவதாக சொக்கன் குறிப்பிட்டார்.

யாருக்குமே முன்னோர்கள் படைத்த படைப்புகளின் பாதிப்பு இருக்கும். ஆனால், ரஹ்மானால் எப்படி இளையராஜாவின் இசையை தான் கேட்பதில்லை என்று தடாலடியாக பேட்டி கொடுக்கமுடிந்தது? என்ற கேள்விக்கு, இளையராஜா திரையுலகை அரசாண்ட காலத்தில், அவரை போலவே இசையமைத்த இசையமைப்பாளர்கள் ஏராளம். ஆனால், ரஹ்மான தனக்கான இசை என்ற துடிப்பிலே ஆரம்பம் முதலே இருந்தார். அதற்காக முன்னோர்களை முற்றிலும் நிராகரிக்காமல், தெலுங்கு இசைமைப்பாளர் ராஜ்கோட்டியின் துள்ளல் பாணி இசையை தனது தனித்துவமான ஒலியமைப்பில் கையாண்டுள்ளதாக ரஹ்மானே கூறியுள்ளதாக சொக்கன் பதிலளித்தார். அதேப்போல், பதே அலிகான் பாதிப்பையும் ரஹ்மான் இசையில் காணலாம் என்றார்.

---

ரஹ்மான் ரொம்ப சுலபமாக ஹிந்திக்கு சென்றுவிடவில்லை. அவருக்கு எதிராக ஒரு பெரிய லாபியே அங்கு வேலை செய்து கொண்டிருந்தது. ரோஜா இசை - ஒரு அதிர்ஷ்ட வெற்றியே என்ற பிரச்சாரம் ஹிந்தி தயாரிப்பாளர்களிடம் பிரமாதமாக செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும், ரங்கீலா மூலம் ரஹ்மான் ஹிந்திக்கு நுழைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ராம் கோபால் வர்மா. ரஹ்மானுக்காக, பிடிவாதமாக இருந்து, தயாரிப்பாளர் தன் மேல் வைத்த நிபந்தனையை ரஹ்மானுக்காக ஏற்றுக்கொண்டு, ரங்கீலாவை இயக்கினார் ராம் கோபால் வர்மா.

படத்திற்கு இசையமைப்பதோடு நின்று விடாமல், தன் இசை படமாக்கப்படுவதையும் கவனிக்கிறார். சரியாக படமாக்கப்படாத படங்களின் இயக்குனர்களிடம் திரும்ப பணியாற்றுவதில்லை. அதாவது, தான் கஷ்டப்பட்டு அமைத்த தனது இசை சிறப்பாக ரசிகனை வந்தடைவதிலும் கவனம் கொள்கிறார் ரஹ்மான்.

இசையமைக்கும் போது இது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், பாடகர்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அவர்கள் கொடுக்கும் மாற்றங்கள் அழகாக இருக்கும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்கிறார். திருப்தி இல்லாவிட்டால், இன்னமும் தேடல் தொடர்கிறது. அதனால், பாடகர்களே பாடலை சிடியில் கேட்கும்போது புதியதாக உணர்கிறார்கள். ஆனால், சமயங்களில் இதனால் ஒரே பாடலை பலரை பாட வைத்து, எந்த பாடகரின் பெயர் சிடியில் வருகிறதென்று, பாடகருக்கே இசை வெளியிடும் நாளன்று தான் தெரிகிறதாம்.

ரஹ்மான் இசையில் பாடல்வரிகள் அமுக்கப்படுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டை பற்றிய கேள்விக்கு, வைரமுத்து பெற்ற நான்கு தேசிய விருதுகளும் ரஹ்மான் இசையமைத்த பாடல்களுக்கே என்ற செய்தியை சொக்கன் பதிலாக கூறினார்.

---

ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இசையமைக்க எடுத்துக்கொண்ட கால அவகாசம், பொதுவாக அவர் எடுத்துக்கொள்ளும் நேரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. இதுவரை செய்யாத சாதனையை இசையில் செய்தார் என்றும் சொல்லமுடியாது. படத்திற்கு இசையமைத்ததோடு மறந்துவிட்டார். இருந்துமானால், இதுவரை அவருக்கு கிடைத்த அங்கீகாரங்களில் பெரியதான ஆஸ்கர், இதற்கு அவருக்கு கிடைத்தது. இந்த அங்கீகாரத்தை இந்த ஒரு படத்துடன், பட இசையுடன் வைத்து பார்க்காமல், ரஹ்மானின் இத்தனை ஆண்டுகால தனித்துவமான உழைப்பை வைத்து பார்த்தோமானால், ஆஸ்கர் அவர் தகுதிக்கு சிறியது தான்.

---

இந்த கலந்துரையாடலை இங்கு கேட்கலாம். நன்றி - பத்ரி சேஷாத்ரி.ரஹ்மான் ஆரம்பக்காலத்தில் தூர்தர்ஷனுக்கு கொடுத்த பேட்டியை, மேலேயுள்ள படத்தை க்ளிக்கி காணலாம். ரஹ்மானின் ஆஸ்தான சவுண்ட் இன்ஜினியர், மறைந்த ஸ்ரீதர் அவர்களின் பேட்டியும் அதில் உள்ளது.

.

19 comments:

புருனோ Bruno said...

அறிவிப்பாளர் அவர் பெயரையே மாற்றி விட்டார் - அப்துல் ரஹ்மான் என்று !!!

என்ன கொடுமை சார் இது

புருனோ Bruno said...

கொடுமை தொடர்கிறது

டைட்டிலில் கூட பெயர் Abdul Rahman என்றே வருகிறது

Anonymous said...

பேட்டியைக் கேட்டு விரிவாக எழுதியதற்கு நன்றி நண்பரே.

ஒரு சின்ன விளக்கம் - வைரமுத்து பெற்ற ‘சமீபத்திய’ நான்கு தேசிய விருதுகளும் ரஹ்மான் இசையில் என்றுதான் சொல்ல வந்தேன், அது ’அவர் பெற்ற அனைத்து தேசிய விருதுகளும் ரஹ்மான் இசையில்தான்’ என்பதுபோன்ற தவறான அர்த்தத்தில் வந்துவிட்டது - ரஹ்மானுக்கு முன்னால் அவர் இளையராஜா இசையில் ஒரே ஒரு தேசிய விருது பெற்றிருக்கிறார் ('முதல் மரியாதை’க்காக), அந்தப் பேட்டிக்கு அது தேவையில்லாத தகவல் என்பதால் அங்கே சொல்லவில்லை, இங்கே சொல்லிவிடுகிறேன் :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

நரேஷ் said...

நல்லதொரு பகிர்வு!!!

சொக்கன் அவர்கள் சொன்ன, அந்தப் பாடல் ஆஸ்கருக்கு தகுதியானதுதானா என்பதற்கான பதில் மிகச் சரியே!!!

உங்க ம்கேந்திரன் ஏஆர்ஆர் பாடல் எதற்காவது பதிவெழுதினால் எப்படியிருக்கும் என்று அறிய ஆவலாய் இருக்கிறது...

Vee said...

Rahman might deserve an Oscar but not definitely this song.

சரவணகுமரன் said...

புருனோ சார், வருகைக்கு நன்றி.

எங்கிருந்து அந்த பேரைப் பிடிச்சாங்களோ?

சரவணகுமரன் said...

விளக்கத்திற்கு நன்றி சொக்கன்...

இளையராஜா பற்றி ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்...

//மகேந்திரன் ஏஆர்ஆர் பாடல் எதற்காவது பதிவெழுதினால் எப்படியிருக்கும் //

பார்க்கலாம். எழுதுகிறாரா என்று.

சரவணகுமரன் said...

நன்றி Vee

Anonymous said...

//இளையராஜா பற்றி ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?//

நிறைய இருக்கிறது. ஆனால் எதுவும் முழுமையாக இல்லை என்பது என் கருத்து :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Unknown said...

ஜெய் ஹோக்கு என்ன குறைச்சல், நல்ல வரி, நல்ல இசை, மொத்ததில் அருமையான பாடல். ரஹ்மான் ஆஸ்கருக்கு முற்றிலும் தகுதியானவர்தான்.

ஆனந்தவிகடனில் ரஹ்மானை பற்றி தொடர் வருகிறது, அதற்ககவே ஆனந்தவிகடன் வாங்கி படிக்கிறேன்.

மொத்தத்தில் ரஹ்மான் ஒரு அற்புதம்.

நல்ல பதிவு. நன்றி. :)

சரவணகுமரன் said...

//நிறைய இருக்கிறது. ஆனால் எதுவும் முழுமையாக இல்லை என்பது என் கருத்து :)//

நீங்க எழுதலாமே?

சரவணகுமரன் said...

நன்றி Mãstän

Anonymous said...

//நீங்க எழுதலாமே?//

என்னுடைய நண்பர் ஒருவர் ராஜாவின் வாழ்க்கையை எழுதவிருக்கிறார் - அவருடைய இசை ரசனையை அறிந்தவன் என்கிற முறையில், அந்த வாழ்க்கை வரலாறு முழுமையானதாக இருக்கும் என நம்புகிறேன்!

- என். சொக்கன்,
பெங்களூர்.

சரவணகுமரன் said...

ஆவலுடன் இருக்கிறேன் - இளையராஜா பற்றிய புத்தகத்திற்காக...

Unknown said...

மறுபடி யாருப்பா பிரச்சனய கிளப்புறது????

Music Composer Vivek Narayan said...

நீங்கள் எழுதியிருப்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அவர் Ustad Nusrat Fateh Ali Khanன் இசையின் பாணியை பயன்படுத்துகிறார் என்பதும் உண்மை.

மிகக் கடினமாக Sufi இசையை எளிமையாக்கி அவர் பல பாடல்களில் தந்திருக்கிறார்.

சரவணகுமரன் said...

பிரச்சனை எல்லாம் இல்லீங்கோ, mastan :-)

சரவணகுமரன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி விவேக் நாராயண்.

இப்பதிவிற்கு ஒரு இசையமைப்பாளராக உங்களது பின்னூட்டம்... பெருமையளிக்கிறது எனக்கு... நன்றி...